சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்
சோழன் நலங்கிள்ளி சங்ககாலச் சோழ மன்னன். இவன் தம்பி மாவளத்தான். தாமப்பல் கண்ணனார் நலங்கிள்ளியின் அவைக்களப் புலவர். இவர் பார்ப்பார். புலவரும் மாவளத்தானும் வட்டு விளையாடினர். புலவர் விளையாட்டுக் காயைக் கையில் மறைத்து மாவளத்தானை ஏமாற்றினார். இதனைக் கண்டுகொண்ட மாவளத்தான் புலவரை வட்டுக்காயால் அடித்தான். புலவர் தன் பாடலில் இந்த நிகழ்வைக் குறிப்பிடுகிறார். மாவளத்தான் அண்ணனை இவர் ‘தேர்வண் கிள்ளி’ எனக் குறிப்பிடுகிறார். பருந்துக்குப் பயந்து தன் மடியில் விழுந்த புறாவைக் காப்பாற்றவேண்டி, தன்னையே புறாவின் எடைக்கு எடையாகத் துலாக்கோலில் நிறுத்துக் கழுகுக்கு இரையாக வழங்கிய முன்னோனின் (சிபிச் சக்கரவர்த்தி) வழியில் வந்தவர்கள் இவர்கள் ஆதலால் பார்ப்பார் நோவன செய்யார் என்று குறிப்பிட்டார். அது கேட்ட மாவளத்தான் தான் வட்டாலடித்த செயலுக்காக நாணினான். பிழை செய்ததற்காக நாணவேண்டியது தானாக இருக்கையில், அடித்ததற்காக நாணும் மாவளத்தானின் மாண்பை வியந்து பாராட்டுகிறார். [1]
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ புறநானூறு 43