பெரிப்ளசு
பெரிப்ளசு (பெரிப்ளஸ்) (Periplus) என்பது "கடல் வழிப்பயணம்" (கடல் வழிக்கையேடு, கடல் பயண விவரிப்பு) என்னும் பொருள் தருகின்ற பண்டைய கிரேக்கச் சொல் ஆகும்.
பெயர் விளக்கம்
[தொகு]கிரேக்கத்தில் περίπλους (periplous) என்றுள்ள இச்சொல் periploos என்பதன் சுருக்கவடிவம். அதிலிருந்து periplus என்னும் இலத்தீன் வடிவம் தோன்றியது. அதுவே வழக்கத்தில் உள்ளது.
இச்சொல்லுக்கு கடல் வழிப்பயணம் என்னும் பொதுப் பொருள் இருந்தாலும், அச்சொல்லின் பகுதிகளாகிய peri என்பதும் plous என்பதும் தனித்தனியே பொருள்தரும் சொற்களாகவும் மாறின.
பெரிப்ளசு என்னும் சொல் கடல் வழிப்பயணம் என்பதோடு, அப்பயணத்திற்கான கையேடு என்னும் பொருளையும், அப்பயண விவரிப்பு என்னும் பொருளையும் பெற்றது. நடைமுறையில், கடல் வழிப்பயணம் மேற்கொள்வோர் எந்தெந்த கடற்கரையில் எந்தெந்த பட்டினங்களைச் சந்திப்பார்கள், அப்பட்டினங்களுக்கு இடையே உள்ள தூரம் என்ன, அங்கு என்னென்ன பொருள்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படுகின்றன, அப்பகுதிகளில் மக்களின் வாழ்க்கை முறை என்ன, அங்கு காணப்படும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் யாவை போன்ற விளக்கங்கள் "பெரிப்ளசு" என்னும் நூலில் தரப்படுவது வழக்கம்.
பண்டைக்கால பெனீசியர்கள், கிரேக்கர்கள் மற்றும் உரோமையர்கள் மேற்கூறிய பொருளில் "பெரிப்ளசு" என்பதைப் புரிந்துகொண்டார்கள்.[1]
உரோமையர்கள் தரைவழிப் பயணக் கையேடுகள் (itinerarium) உருவாக்கியது போலவே கிரேக்கர்கள் கடல்வழிப் பயணக் கையேடுகளை உருவாக்கினர். ஆனால் தம் கையேடுகளில் நிலவியல் சார்ந்த பல குறிப்புகளையும் அவர்கள் சேர்த்துக் கொண்டனர்.
கடல் வழிக்கையேடு வரலாறு
[தொகு]கிரேக்க நாட்டு வரலாற்று ஆசிரியர்களுள் மிக முந்தியவராகக் கருதப்படுகின்ற மிலேத்து நகர ஹெக்காட்டேயஸ் (Hecataeus of Miletus) (கி.மு. 6ஆம்-5ஆம் நூற்றாண்டு)என்பவரே முதன்முதலில் பெரிப்ளசு வகை பயணநூல் எழுதினார். அவருக்குப் பின் வந்த ஹெரோடோட்டஸ் மற்றும் துசீடிடெஸ் போன்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர்களும் பெரிப்ளசு வகை வரலாற்று நூல்களைப் பின்பற்றி தம் நூல்களைப் படைத்தார்கள் என்று தெரிகிறது.[2]
பாரசீக வளைகுடா
[தொகு]பாரசீகக் கடல் பயணிகளும் பண்டைக்காலம் தொட்டே ஒரு வகையான கடல் பயணக் கையேடுகளை உருவாக்கினர். அவை "ரானாமா" (Rahnāmag) என்று பாரசீக மொழியில் அழைக்கப்பட்டன ('Rahnāmeh' = رهنامه )[3] இவ்வகை நூல்கள் கடலோரமாக அமைந்த துறைமுகங்கள் மற்றும் நிலப்பகுதிகளைக் குறிப்பிட்டு, அவற்றிற்கிடையிலான தூரத்தையும் கணித்துக் கூறின.
12ஆம் நூற்றாண்டளவில் உருவான இந்நூல்களில் இந்தியப் பெருங்கடல் "தப்பிப் பிழைப்பதற்குக் கடினமான கடல்" என்று விவரிக்கப்படுகிறது.[4]
இன்று கிடைக்கின்ற பெரிப்ளசு வகைப் பயணக் கையேடுகள்
[தொகு]பண்டைக் காலத்தில் எழுதப்பட்ட பெரிப்ளசு வகைப் பயணக் கையேடுகள் பலவற்றின் படிகள் உள்ளன. அவற்றுள் முக்கியமான சில:
- கடற்பயணி ஹான்னோ (Hanno the Navigator) என்பவர் கி.மு. 6ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர். அவர் எழுதிய பெரிப்ளசு கையேடு ஆப்பிரிக்க கடற்கரையை விவரிக்கின்றது. இன்றைய மரோக்கோ பகுதியிலிருந்து கினி வளைகுடா (Gulf of Guinea) வரையிலான பகுதி பற்றிய குறிப்புகள் அதில் உள்ளன. ஹான்னோ கார்த்தேஜ் நகரைச் சார்ந்த ஆய்வுப் பயணி.
- "மர்சேய் பெரிப்ளசு" (Massaliote Periplus) என்னும் கடற்பயண நூல் தெற்கு ஐரோப்பாவுக்கும் வடக்கு ஐரோப்பாவுக்கும் இடையே நிகழ்ந்த கடல்வழி வணிகத்தை விவரிக்கிறது. இது கி.மு. 6ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம்.
- கி.மு. 4ஆம் நூற்றாண்டைச் சார்ந்த மசீலியா பித்தேயாஸ் என்பவர் எழுதிய "கடல் நூல்" (On the Ocean -Περί του Ωκεανού) என்னும் நூல் கிடைக்கவில்லை. ஆனால் பிற்கால ஆசிரியர்கள் அந்நூலிலிருந்து காட்டிய மேற்கோள் பகுதிகள் கிடைத்துள்ளன.
- போலி ஸ்கைலாக்சின் பெரிப்ளசு (Periplus of Pseudo-Scylax) என்னும் பயண நூல் கி.மு. 4ஆம்-3ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.
- கியோஸ் நகர ஸ்கிம்னுஸ் என்பவரின் பெரிப்ளசு கி.மு. 110ஆம் ஆண்டுக் காலத்தைச் சார்ந்தது.
- எரித்திரேய கடல் வழிப்பயணக் கையேடு என்னும் பெரிப்ளசை எழுதியவரின் பெயர் தெரியவில்லை. ஆனால் அவர் எகிப்தின் அலெக்சாந்திரியா நகரத்தில் வாழ்ந்த கிரேக்கராக இருக்க வேண்டும். அவரது காலம் கி.பி. முதல் நூற்றாண்டு. இக்கையேடு விவரிக்கும் பயணம் எகிப்து நாட்டின் தென்பகுதியில் செங்கடல் கரையோரத்தில் அமைந்த பெரெனீசு (Berenice) என்னும் துறைமுகத்தில் தொடங்குகிறது. தொடர்ந்து அக்கையேடு செங்கடலுக்கு அப்பால் இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் அமைந்திருந்த வணிகத் தளங்களை விவரிக்கிறது. கேரளம் மற்றும் தமிழகக் கடற்கரை வணிக நகரங்கள் பல, மற்றும் கங்கை நதி ஆகியவை பற்றி குறிப்பிடுகின்றன. ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரை "அசானியா" (Azania) என்று குறிப்பிடப்படுகிறது.
- ஆரியான் என்பவர் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் எழுதிய கையேடு போன்டி யூக்சீனி பெரிப்ளசு (Periplus Ponti Euxini) என்று அழைக்கப்படுகிறது. இது கருங்கடலின் கரையோர வணிகத் தளங்களை விவரிக்கிறது.
கடலில் முற்றுகைத் தாக்குதல்
[தொகு]பெரிப்ளசு என்னும் சொல், கப்பல்கள் பிற கப்பல்களைக் கடலில் முற்றுகையிட்டுப் பின்னிருந்து தாக்குகின்ற உத்தியையும் குறிக்கிறது.
மேலும் காண்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ Kish, George (1978). A Source Book in Geography. Cambridge: Harvard University Press. p. 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-82270-2.
- ↑ Shahar, Yuval (2004). Josephus Geographicus: The Classical Context of Geography in Josephus. Mohr Siebeck. p. 40. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-16-148256-4.
- ↑ Dehkhoda, Ali Akbar, and Mohammad Moʻin. 1958. Loghat-namehʻi Dehkhoda. Tehran: Tehran University Press: Rahnāma.
- ↑ Civilizations[தொடர்பிழந்த இணைப்பு]: Culture, Ambition, and the Transformation of Nature - culture, ambition, and the transformation of nature. By Felipe Fernandez-Armesto. Free Press (2001)