உத்தம சோழன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உத்தம சோழன், கி.பி 969 முதல் கி.பி 985 வரை சோழ நாட்டை ஆண்ட கண்டராதித்த சோழனின் மகனாவார். கண்டராதித்தர் இறந்ததும் முறைப்படி பதவிக்கு வரவேண்டிய இவர் பதவிக்கு வரவில்லை, பதிலாக இரண்டாம் பராந்தகன் என அழைக்கப்பட்ட சுந்தர சோழன் பதவிக்கு வந்தார். 16 ஆண்டுகள் ஆட்சி புரிந்த பராந்தகனின் இறப்புக்குப் பின் உத்தம சோழனுக்கு ஆட்சி கிட்டியது. இவர் 15 ஆண்டுகள் சோழநாட்டை ஆட்சி புரிந்தார். இவரைத் தொடர்ந்தே புகழ் பெற்ற சோழ அரசன் இராஜராஜ சோழன் அரியணை ஏறினார். இவருக்கு மதுராந்தகன் என்று மற்றொரு பெயரிலும் அழைக்கப்பட்டார்.

இவர் அரசு கட்டில் ஏறுவதற்கு முன்பே காஞ்சி வரையுள்ள தொண்டைமண்டலம் சோழர் ஆட்சிக்குட்பட்டு விட்டது. ஆதித்த கரிகாலனுடைய கல்வெட்டுகள் உத்தரமேரூர், காஞ்சிபுரம், தக்கோலம், திருவண்ணாமலை முதலிய இடங்களில் மிகுதியாகக் கிடைத்துள்ளன. இக் கல்வெட்டுகள் நிலவிற்பனை, அறச்செயல், திருப்பணி, அரசியல் தொடர்பானவையாகக் காணக்கிடத்தலின், ஆதித்தன் காலத்திலேயே தொண்டை நாட்டில் அமைதி உண்டாகி விட்டதென்பதை அறியலாம். உத்தம சோழன் காலத்திய கல்வெட்டுகள் பலவும் செப்பேடு ஒரு தொகுதியும் கிடைத்துள்ளன. இவர் பரகேசரி என்னும் பட்டம் பெற்றவர். பெயரின்றிப் ‘பரகேசரி’ என்பது மட்டுமே கொண்டுள்ள கல்வெட்டுகள் எல்லாம் இவர் காலத்தனவே என்று சில சான்றுகள் கொண்டு ஆராய்ச்சியாளர் துணிகின்றனர்.[1] சோழர் நாணயங்களில் இவன் காலத்ததுவே பழைமையானதாகும். இவன் காலத்ததான பொற்காசு ஒன்று கிடைத்தது. அதன் இருபுறங்களும் ஒருபடித்தாகவே இருக்கின்றன, நடுவில் ஒரு புலி உட்கார்ந்து கொண்டு வலப்புறமுள்ள மீனை நோக்குகிறது. நாணயத்தைச் சுற்றிலும் உத்தம சோழன் பெயர் கிரந்த எழுத்துகளிற் குறிக்கப்பட்டுள்ளது. அப்பொற்காசு 40 முதல் 60 குன்றிமணி நிறையுள்ளது என்று நாணய ஆராய்ச்சியாளரான எலியட் கூறியுள்ளார்.[2]

கொங்குமண்டலத்தில் படைத்தலைவன்[தொகு]

கொங்கு நாட்டில் இவருக்குப் படைத்தலைவனாக விளங்கிய ஒருவருக்கு இந்த வேந்தன் தன் பெயரை விருதுப் பெயராக அணிந்துகொள்ள ஒப்புதல் வழங்கினார். மேலும் பட்டவர்த்தனன் என்னும் பட்டப்பெயரையும் வழங்கினார். இதனால் இப் படைத்தலைவன் பெயர் பட்டவர்த்தனன் உத்தமச்சோழன் என வழங்கப்படலாயிற்று.[3][4]

இறப்பு[தொகு]

உத்தம சோழன் கி.பி. 985ஆம் இறந்தார். அவருக்கு குறைந்தபட்சம் ஒரு மகனாவது (மதுராந்தகன் கண்டராதித்தன்) இருந்தார். இருந்தாலும் ஆட்சி உரிமை இரண்டாம் பராந்தக சோழன் குடும்பத்திற்கு சென்று விட்டது. உத்தம சோழனுக்குப் பின்னர் ராஜ ராஜ சோழன் அரசன் ஆனார். மதுராந்தக கண்டராதித்தர் ராஜராஜ சோழன் அவையில் அதிகாரியாக பணி செய்தார்.

கதைகள்[தொகு]

இவரது கதாபாத்திரத்தைக் கொண்ட கதைகளில் புகழ் பெற்றவை பொன்னியின் செல்வன்.

மேற்கோள்[தொகு]

  1. "4. பராந்தகன் மரபினர்". சோழர் வரலாறு. 1947. https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D. 
  2. Vide his ‘coins of Southern India’ p. 132, No. 151.
  3. இத்தரை மீதினில் சேனாபதியாய் இருந்து வெற்றி
    ஒத்து வரப்பெற்றதற்காத் தனக்கு இங்குறு பெயராம்
    உத்தமச்சோழன் என்று அன்பாத் தரப்பெறும் ஓங்கு பட்ட
    வர்த்தனன் வாழ்வுறும் ஆணூர் திகழ் கொங்கு மண்டலமே. 87

  4. கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம், சாரதா பதிப்பகம், 2008, முனைவர் ந. ஆனந்தி தெளிவுரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்தம_சோழன்&oldid=3038302" இருந்து மீள்விக்கப்பட்டது