பொன்னியின் செல்வன்
பாகம் 1 | |
நூலாசிரியர் | கல்கி கிருஷ்ணமூர்த்தி |
---|---|
பட வரைஞர் | மணியம் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
வகை | வரலாற்றுப் புதினம் |
வெளியீட்டாளர் | கல்கி |
வெளியிடப்பட்ட நாள் | 1950கள் |
பக்கங்கள் | கிட்டத்தட்ட 2600 பக்கங்கள் |
பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய புகழ் பெற்ற வரலாற்றில் உள்ள பல உண்மை கதாபாத்திரங்களையும் சில கற்பனை கதாபாத்திரங்களையும் வைத்து கற்பனையாக உருவாக்கிய தமிழ் புதினமாகும். 1950 – 1955-ஆம் ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. [சான்று தேவை] இப்புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000-ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. பொன்னியின் செல்வன், பல்வேறு நாடகக் குழுக்களால் நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டுள்ளது.[1]
இப்புதினம் புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 293க்கு மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்டது.
கதாபாத்திரங்கள்
[தொகு]- வாணர்குலத்து வல்லவரையன் வந்தியத்தேவன்
- பொன்னியின் செல்வன் என்கிற அருண்மொழி வர்மன்
- ஆழ்வார்க்கடியான் நம்பி என்கிற திருமலையப்பன்
- குந்தவை பிராட்டியார் (சுந்தரசோழரின் மகள்)
- பெரிய பழுவேட்டரையர்
- நந்தினி
- சின்ன பழுவேட்டரையர்
- ஆதித்த கரிகாலர்
- வானமா தேவி
- சுந்தர சோழர்
- செம்பியன் மாதேவி
- கண்டராதித்தர்
- கடம்பூர் சம்புவரையர்
- சேந்தன் அமுதன்
- பூங்குழலி
- வீர பாண்டியன்
- குடந்தை சோதிடர்
- வானதி
- மந்திரவாதி இரவிதாசன் (பாண்டியனுடைய ஆபத்துதவிகளின் தலைவன்)
- கந்தமாறன் (சம்புவரையர் மகன்)
- கொடும்பாளூர் வேளார்
- மணிமேகலை (சம்புவரையர் மகள்)
- அநிருத்த பிரம்மராயர்
- மதுராந்தக சோழர்
- தியாக விடங்கர்: பூங்குழலியின் தந்தை மற்றும் கோடிக்கரையிலுள்ள கலங்கரை விளக்கத்தின் காவலர். மந்தாகினி தேவி மற்றும் வாணி அம்மாளின் தமையனும் ஆவார்.
கதையின் வரலாற்றுப் பின்னணி
[தொகு]பொன்னியின் செல்வன் புதினம் கற்பனையோடு கலந்து எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம்; என்றாலும் பொன்னியின் செல்வன் நிகழும் காலகட்டத்தில் வாழ்ந்த நிகழ்கால வரலாற்றுக் கதாப்பாத்திரங்களைச் சுற்றி சுழல்வதாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல், பொன்னியின் செல்வன் கதையில் பல விதமான கதை மாந்தர்கள் இருந்தனர்.
விசயாலய சோழன் (கி.பி 847 – 871) பல்லவர்களும் பாண்டியர்களும் பலமாக இருந்த காலத்தில் அவர்களை வென்று சோழர்களின் பொற்கால ஆட்சியை தோற்றுவித்த பெருமைக்குரியவர். அவருடைய மகன் ஆதித்த சோழனும் பல்லவர்களையும் கொங்கு நாட்டையும் வென்று விசயாலய சோழன் தோற்றுவித்த சோழர் பேரரசை விரிவாக்கினார். அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஆதித்த சோழனின் மகன் முதலாம் பராந்தக சோழன்(கி.பி 907 – 955) ஈழத்திலும் பாண்டிய நாட்டிலும் பெற்ற வெற்றிகளே, பிற்காலச் சோழ மன்னர்களின் புகழ்பெற்றவர்கள் இராசராச சோழனுக்கு, இராசேந்திர சோழனுக்கும், முதலாம் குலோத்துங்க சோழனுக்கு சோழ சாம்ராச்சியத்தை தென்னிந்தியாவின் முதல் பேரரசாக விரிவுபடுத்த பெரிதும் உதவியது.
முதலாம் பராந்தக சோழன் தன்னுடைய இறப்பிற்கு முன்னால் பெற்ற வெற்றிகளையும் அதனால் விரிவடைந்த சோழ சாம்ராச்சியத்தைப் பற்றிய விவரங்களும் தெளிவாக கல்வெட்டுக்கள் மூலம் கிடைக்கின்றன. முதலாம் பராந்தக சோழனின் ஆட்சிக்காலத்தின் இறுதியில் மூன்றாம் கிருட்டிணன் தலைமையிலான இராட்டிரகூடர்களுடனான போரில் சோழ இளவரசன் இராசாதித்தன் தக்கோலத்தில் இறந்ததோடு மட்டுமல்லாது தொண்டை நாட்டையும் இராட்டிரகூடர்கள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தனர். இதன் காரணமாக சோழர்களின் அரசின் வட எல்லை தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி அளவிலேயே நின்றது.
இந்தக் காலகட்டத்திற்குப் பிறகான சோழ மன்னர்கள் ஐந்து பேரின் பெயர்கள் தெளிவாகக் கிடைக்கின்றன ஆனால் அவர்களது ஆட்சிக்காலம் அவர்களைப் பற்றிய குறிப்புக்கள் தெளிவாக இல்லை. கண்டராதித்தர், அரிஞ்சய சோழர், இரண்டாம் பராந்தக சோழர், ஆதித்த கரிகாலன், மதுராந்தக சோழர் ஆகிய ஐவரே அந்த சோழ அரசர்கள். இதில் மதுராந்த சோழர் என்ற உத்தம சோழரைப் பற்றிய வரலாறு மட்டும் கிடைக்கிறது. இதில் ஆதித்த கரிகாலன் இராட்டிரகூடர்கள் முதலாம் பராந்தகனின் கடைசிக் காலத்தில் கைப்பற்றிய தொண்டை மண்டலத்தை மீண்டும் போரிட்டு கைப்பற்றினான் என்று தெரிகிறது. இரண்டாம் பராந்தகனின் இறப்பிற்குப் பின்னோ அல்லது ஆதித்த கரிகாலனின் இறப்பிற்குப் பின்னோ சோழ நாட்டில் அடுத்த பட்டத்திற்கான மன்னரைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம் இருந்திருக்கிறது. ஆதித்த கரிகாலன் கடம்பூரில் கொல்லப்பட்ட இடம் தற்போது மேலக்கடம்பூர் என அழைக்கப்படுகிறது. (காட்டுமன்னார்கோயில் அருகில்)
திருவாலங்காட்டுச் செப்பேடுகள்,
"விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான் (காணாமற் போனான்) கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் சத்திரிய தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி அரசபதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரச பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி அரசபதவியை மறுத்துவிட்டான் என்று தெரிவிக்கின்றன.
இந்தக் காலகட்டத்தைத்தான் கல்கி தன்னுடைய பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்திற்கான கதைக்களமாகத் தேர்ந்தெடுத்தார். பொன்னியின் செல்வன் என்பது இராசராச சோழனுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர்களுள் ஒன்று, அருள்மொழிவர்மருடைய பெயராக கல்வெட்டுக்களில் காணப்படுவது இராசகேசரி வர்மன் அல்லது மும்முடி சோழ தேவன் என்பது. பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தின் கதாநாயகனாக வாணர் குல வீரன் வல்லவரையன் வந்தியத்தேவனைக் கல்கி அவர்கள் தேர்ந்தெடுத்தார்; வந்தியத்தேவனைப் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் தஞ்சைப் பெரிய கோயில் கிடைக்கின்றன. இராசராச சோழரின் தமக்கையும் வல்லவரையர் வந்தியத்தேவரின் மனைவியுமான ஆழ்வார் பராந்தகை குந்தவையார் என்று கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. கல்கி மேலும் கே.ஏ. நீலகண்ட சாத்திரியின் சோழர்கள் புத்தகத்தையும், தி.வி. சதாசிவப் பண்டாரத்தாரின் பிற்காலச் சோழர் சரித்திரத்தையும் மையமாக வைத்து பொன்னியின் செல்வனை எழுதினார். [சான்று தேவை] இதில் பிற்காலச் சோழர் சரித்திரத்தில் வந்தியத்தேவனைப் பற்றிய ஐந்து வரிகள் காணப்படுகின்றன. இதனை மையமாக வைத்தே வந்தியத்தேவனை பொன்னியின் செல்வனின் கதாநாயகனாக கல்கி வைத்தார்.
பகுதி 1: புது வெள்ளம்
[தொகு]ஆடித்திருநாள் அத்தியாயம் தொடங்கி மாய மோகினி வரை 57 அத்தியாயங்களை உள்ளடக்கியது. முதல் பகுதியான புதுவெள்ளம் வரலாற்றுப் புகழ் பெற்ற வீர நாராயண (வீராணம்) ஏரியில் துவங்குகிறது. இந்த ஏரி சுந்தர சோழரின் பெரியப்பா இராசாதித்தரால் எழுப்பப்பட்டது. இந்த ஏரி 74 கணவாய்களை உடையது. வடதிசை மாதண்ட நாயகராக திகழும் ஆதித்த கரிகாலர் தனது அன்பு தங்கைக்கும், தந்தைக்கும் ஓலை கொடுத்து வர வந்தியத்தேவனை அனுப்புகிறார். வடதிசையில் இருந்து தஞ்சை செல்லும் வழியில் வீரநாராயண ஏரியில் வந்திய தேவன் சென்றுகொண்டிருக்கும் போது ஆடி திருநாள் கொண்டாட்டத்தை இரசித்தவாறு செல்வதாக முதல் பகுதி துவங்கி, பிறகு செல்லும் வழியில் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் தங்கும் போது சோழப் பேரரசின் மணி மகுடத்திற்கு பெரும் சூழ்ச்சி நடப்பதை காண்கிறான். பிறகு பல தடங்கல்களையும் மீறி சுந்தர சோழரை சந்தித்து ஓலை தந்தவுடன் ஆதித்த கரிகாலரின் தமக்கை இளையபிராட்டி குந்தவை தேவியைக் காண பழையாறை செல்கிறான். அங்கேயே இளைய பிராட்டியை (குந்தவை) சந்தித்து அவர் தனது இளைய தம்பியான அருண்மொழி வர்மருக்கு ஓலை கொடுத்து அனுப்ப அதற்காக கடல் பிரயாணம் செய்ய துவங்கும் வரை இப்பகுதி நீள்கிறது.
பகுதி 2: சுழற்காற்று
[தொகு]அத்தியாயம் பூங்குழலியில் தொடங்கி அபய கீதம் வரை 53 அத்தியாயங்களை உள்ளடக்கியது இரண்டாம் பகுதியான சுழற்காற்று. கோடிக்கரையில் வந்தியத்தேவன் பூங்குழலியை சந்தித்து, ஈழத்திற்கு பூங்குழலியின் படகில் செல்கிறான். ஈழத்திலிருக்கும் இளவரசர் அருள்மொழிவர்மனை சந்தித்து குந்தவை பழையாறைக்கு அவரை அழைத்துக் கொண்டு வர கட்டளையிட்டதை கூறுகிறான். பார்த்திபேந்திரன் காஞ்சிக்கு இளவரசரை ஆதித்த கரிகாலன் அழைத்திருப்பதாகக் கூறுகிறான். வந்தியத்தேவனை இளவரசரிடம் அழைத்துவந்த ஆழ்வார்க்கடியான் ஈழத்தில் தங்குவதே சிறந்தது என்று முதல் மந்திரி அநிருத்தர் கூறியதை சொல்கிறான். இதற்கிடையே இளவரசரை சிறைசெய்து அழைத்து செல்ல பழுவேட்டரையர் வீரர்கள் இரண்டு கப்பல்களில் வருகின்றார்கள். அதிலொன்றில் ரவிதாசன், தேவராளனும் தஞ்சைக்கு திரும்புகிறார்கள். இளவரசர் அதில் செல்கிறார் என்று நினைத்து வந்தியத்தேவன் அக்கப்பலில் எதிரிகளிடம் மாட்டிக் கொள்கிறான். அருள்மொழிவர்மன் வந்தியத்தேவனை காப்பாற்ற பார்த்திபேந்தரன் கப்பலில் பின்தொடர்கிறார். இரு கப்பல்களும் பெரும் புயல்காற்றில் மாட்டிக் கொள்கின்றன. கடலில் மிதந்து கொண்டிருக்கும் இளவரசரையும், வந்தியத்தேவனையும் பூங்குழலி காப்பாற்றி கோடிக்கரையின் சதுப்பு நிலக் காட்டில் சேர்க்கின்றாள்.
பகுதி 4: மணிமகுடம்
[தொகு]அத்தியாயம் கெடிலக் கரையில் தொடங்கி படகு நகர்ந்தது! வரை 46 அத்தியாயங்களை உள்ளடக்கியது நான்காம் பகுதியான மணிமகுடம். வந்தியத்தேவன், ஆதித்தர் கடம்பூர் மாளிகைக்கு செல்லவிடாமல் தடுக்கப் பார்க்கிறான். இருந்தும் இளவரசர் ஆதித்த கரிகாலர், பார்த்திபேந்திர பல்லவன், வந்தியதேவன், கந்தமாறன் ஆகியோர் கடம்பூர் சம்பூவரையன் மாளிகைக்கு வருகிறார்கள். திருக்கோவிலூர் மலையமான் பாதி தூரம் வரை வந்து வழியனுப்புகிறார். இதே நேரத்தில் தஞ்சாவூரில் முதன்மந்திரி அநிருத்தர், வைத்தியர் மகன் பினாகபாணியின் மூலம் கோடிக்கரையிலிருந்து மந்தாகினி அம்மையாரை பழுவூர் இளையராணியின் பல்லக்கில் கடத்தி வர செய்கிறார். வரும் வழியில் புயலின் காரணமாக பினாகபாணியின் மேல் மரம் ஒன்று முறிந்து விழுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் பூங்குழலி மந்தாகினி அம்மையாருக்கு பதிலாக பல்லக்கில் ஏறிக்கொள்கிறாள். பாண்டிய ஆபத்துதவிகளை பின்தொடர்ந்து மந்தாகினி அம்மையார் பெரிய பழுவேட்டரையரின் நிலவறைக்கு வருகிறாள். மந்தாகினி சக்கரவர்த்தியைப் பார்க்கிறார். அதே நேரத்தில் ஆதித்த கரிகாலர் நந்தினியை பார்க்கிறார்.
பகுதி 5: தியாகச் சிகரம்
[தொகு]அத்தியாயம் மூன்று குரல்களில் தொடங்கி மலர் உதிர்ந்தது வரை 91 அத்தியாயங்களை உள்ளடக்கியது ஐந்தாம் பகுதியான தியாக சிகரம். இராசராச சோழன் அருள்மொழிவர்மன் மக்களின் ஆதரவு தனக்கு இருந்தும் சிம்மாசனத்தை தன் சிற்றப்பனுக்கு வழங்கினான். அருள்மொழிவர்மனின் சரித்திரத்தில் இந்த நிகழ்ச்சி பெரிதும் போற்றப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை மையமாக வைத்து இந்த பாகத்தை எழுதியதால் இதற்கு தியாக சிகரம் என பெயர் வைத்ததாய் நூல் ஆசிரியர் குறிப்பிடுகிறார். பெரிய பழுவேட்டரையருக்கு பாண்டிய ஆபத்துதவிகளின் சதித்திட்டம் தெரிய வருகிறது. அவர்கள் ஒரே நாளில் இளவரசர் அருள்மொழிவர்மன், சக்கரவத்தி சுந்தர சோழர் மற்றும் இளவரசர் ஆதித்த கரிகாலர் மூவரையும் கொலை செய்ய திட்டம் தீட்டுகின்றனர். இளவரசர் அருள்மொழிவர்மனும், சக்கரவத்தி சுந்தர சோழரும் காப்பாற்றப்படுகின்றனர். சக்கரவத்தி சுந்தர சோழரை காப்பாற்றும் முயற்சியில் மந்தாகினி தேவி உயிரிழக்கிறார். பெரிய பழுவேட்டரையர் வருவதற்குள் இளவரசர் ஆதித்தர் இறந்துவிடுகிறார். பழி வந்தியதேவன் மேல் விழுகிறது. நாட்டு மக்கள், போர் வீரர்கள் அனைவரும் அருள்மொழிவர்மனுக்கு ஆதரவாய் இருக்கின்றனர். அருள்மொழிவர்மனுக்கு பட்டாபிசேகம் நடைபெறுகிறது. வந்தியதேவன் எப்படி காப்பாற்றப்படுகிறான். அருள்மொழிவர்மர் அரியணை எறுகிறாரா? இவ்வாறு ஐந்தாம் பாகம் செல்கிறது.
முக்கிய பாத்திரங்கள்
[தொகு]வரலாற்றில் முக்கிய இடம்பெறுவோர்
[தொகு]ஏனைய சில பாத்திரங்கள்
[தொகு]- நந்தினி - ஆதித்த கரிகாலனை காதலித்தவள், பின் வீரபாண்டியன் தனது தந்தை என அறிகிறாள். ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனை கொன்ற பின்பு, பெரிய பழுவேட்டரையரின் மனைவியாகி பழுவூர் இளைய அரசியாகிறாள். சோழ பேரரசின் பெரும் அரசியாக ஆவதற்காக ஆதித்த கரிகாலன், சுந்தர சோழர், அருள்மொழி வர்மன் ஆகிய மூவரையும் கொலை செய்ய சதி திட்டம் தீட்டுகிறாள். பார்த்தவுடன் மோகம் கொள்ள வைக்கும் அழகுடையவளாக வலம் வருகிறாள்.
- ஆழ்வார்க்கடியான் நம்பி - கதையின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை பயணிப்பவர். ஆயினும் ஆரம்பத்தில் இக்கதாபாத்திரம் ஒரு சோழ அரசின் ஒற்றன் என்பதை கூறாமல் கதையை நகர்த்தியமை கதைக்கு சுவை ஊட்டுகின்றது.
- அநிருத்தப் பிரம்மராயர் - சுந்தர சோழரின் முதன் மந்திரியாக இவர் கதையில் இடம் பெறுகிறார்.
- வானதி - கொடும்பாளுர் இளவரசி வானதி, இளவரசர் அருள்மொழிவர்மரை நேசிக்கும் பெண்ணாக இதில் காட்டப்பட்டிருப்பாள். வானதி அருள்மொழி வர்மரை திருமணம் முடித்த பின் ஒரிரு வருடங்களுக்குள் காலமாகி விட்டார்.
- பெரிய பழுவேட்டரையர் - இவர் மிகவும் வலிமைமிக்க கதாபாத்திரமாகக் காட்டப்பட்டுள்ளார். இறுதியில் மரணம் அடைவதுமாக மிக்க துக்கம் தருவதாக அமைகிறது.
- சின்னப் பழுவேட்டரையர் - தஞ்சை நகரத்தின் காவல் அதிகாரியாகவும், சோழர்களின் நல விரும்பியாகவும் இருக்கிறார். பெரிய பழுவேட்டரையரின் மனைவி நந்தினியின் சோழப் பேரரசுக்கு எதிரான சதியை தொடக்கத்திலிருந்தே கடுமையாக எதிர்ப்பவராகவும், பெரிய பழுவேட்டரையரின் மீதான அதீத அன்பினால் அவரை அவ்வப்போது எச்சரிக்கை செய்வதுமாக இருக்கிறார்.
- செம்பியன் மாதேவி - இவர் மழவராயர் குடும்பத்தில் பிறந்தவர். தில்லைச் சிற்றம்பலத்துக்குப் பொன் கூரை வேய்ந்த பராந்தகச் சோழனின் இரண்டாவது மகன் கண்டராதித்தனின் மனைவியாவர். கி.பி 957ல் கண்டராதித்த சோழன் மரணம் அடைந்த பிறகு மகன்களை வளர்க்கும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். மேலும் கணவர் இறந்த பிறகு சிவ வழிபாடு, ஆலயத்திருப்பணிகள், தர்ம காரியங்கள் என வாழ் நாளை கழித்த செம்பியன் மாதேவியார் சுமார் 90 ஆண்டுகள் (கி.பி 910 – 1001) வாழ்ந்து ஆறு சோழமாமன்னர்களின் ஆட்சியைக் கண்டவர்.
- ஆதித்த கரிகாலன் – சுந்தர சோழரின் மகனாகவும், அருள்மொழிவர்மன் மற்றும் குந்தவை தேவியின் மூத்த சகோதரராகவும், பட்டத்து இளவரசராகவும் ஆதித்த கரிகாலன் வருகிறார். சிறுவயதிலேயே போர்புரியும் குணம் கொண்டவராகவும், எதிரிகளைத் தன்னந்தனியே எதிர்த்து நிற்கின்ற வீரராகவும், முன்கோபம் கொண்டவராகவும் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
- மதுராந்தக தேவர்
- வீரபாண்டியன்
- பார்த்திபேந்திர பல்லவன்
- மந்தாகினி
- வாணி அம்மை
தமிழ்ப் புதின வரலாற்றில் இதன் பங்கு
[தொகு]இந்த நூல் தமிழில் வரலாற்று புதினங்களுக்கு ஒரு முன்னோடியாகவே அமைந்தது. இக்கதையின் முடிவுரையில், கல்கி குறிப்பிட்டு இருப்பது போல், விக்ரமன், சாண்டில்யன் போன்றவர்கள் தமிழ் வரலாற்றை புதினங்களாக்கிக் கொடுக்க முயன்று இருக்கிறார்கள். டாக்டர் எல். கைலாசம் பொன்னியின் செல்வனுக்கு முன் நடந்த நிகழ்வுகளை தனது புதினமான மலர்ச்சோலை மங்கையில் கொடுத்துள்ளார். எனினும் பொன்னியின் செல்வனுக்கு இணையாக இன்று வரை ஒரு புதினமும் சிறப்பாக வரவில்லை என்ற பரவலான அபிப்பிராயம் உள்ளது.[சான்று தேவை]
"உயர்நிலைப்பள்ளியில் மாணவனாக பொன்னியின் செல்வனைப் படித்தாலும், கல்கி ஆசிரியர் மறைந்த பின்னர் மீண்டும் அது இருமுறை தொடர்கதையாகவே அற்புத ஓவியங்களோடு வெளிவந்த காலத்தில் மீண்டும் வாரவாரம் எண்ணற்ற முறையில் படித்து இருக்கிறேன். சோழ நாட்டுக்கு உள்ளே உலவுவதைப்போன்ற அந்த உணர்வை, எந்த எழுத்தாளனாலும் படைக்க முடியாது என்பது என் கருத்து" என்று வைகோ பொன்னியின் செல்வன் திறனாய்வில் குறிப்பிடுகிறார்.[2]
திரைப்படம்
[தொகு]மணிரத்னம் இயக்கத்தில் மதராசு தாக்கீசு, லைக்கா தயாரிப்பகம் தயாரிப்பில் 2022 இல் பொன்னியின் செல்வன் 1 திரைப்படமும், 2023 இல் பொன்னியின் செல்வன் 2 திரைப்படமும் வெளிவந்துள்ளன. [3] இவ்விரு திரைப்படங்களும் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தினை மையமாக வைத்து சில மாற்றங்களுடன் வெளிவந்தன.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- பொன்னியின் செல்வன் இதுவரை மூன்று முறை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. (மொழிபெயர்ப்பாளர்கள்: இந்திரா நீலமேகம்[4] சிவி கார்த்திக் நாராயணன், பவித்ரா ஸ்ரீநிவாசன்.)
- சமசுகிருதத்தில் 'பொன்னியின் செல்வன்' என்ற தலைப்பில் திருமதி ராஜலட்சுமி ஸ்ரீநிவாசன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு மத்திய சமசுகிருதப் பல்கலைக்கழகம் பதிப்பில் ஐந்து பகுதிகளாக 2015ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "பொன்னியின் செல்வன்: நாவலும், நாடக வடிவமும்". The Hindu Tamil. பார்க்கப்பட்ட நாள் 25 September 2022.
- ↑ "பொன்னியின் செல்வன் திறனாய்வு - வைகோ". Archived from the original on 2012-09-14. பார்க்கப்பட்ட நாள் 2012-09-26.
- ↑ https://cinema.vikatan.com/kollywood/ponniyin-selvan-novel-characters-full-detail
- ↑ "Ponniyin Selvan". Archived from the original on 2012-06-06. பார்க்கப்பட்ட நாள் 2012-01-24.