செம்பியன் மாதேவி (கதைமாந்தர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செம்பியன் மாதேவி
பொன்னியின் செல்வனின் கதை மாந்தர்
செம்பியன் மாதேவியார்
உருவாக்கியவர் கல்கி
வரைந்தவர்(கள்) மணியம், வினு, மணியம் செல்வன்
தகவல்
பிற பெயர்மகாதேவியார் செம்பியன் மாதேவி. பெரிய பிராட்டி
தொழில்பட்டத்து மகாராணி
குடும்பம் சுந்தர சோழன், கண்டராதித்தர். சேந்தன் அமுதன்
பிள்ளைகள் மதுராந்தகன்
மதம்சைவம்
தேசிய இனம்சோழ நாடு

செம்பியன் மாதேவி கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற சோழ மன்னர் கண்டராதித்தரின் பட்டத்து மகாராணி ஆவார். வரலாற்றில் இடம்பெற்ற செம்பியன் மாதேவியைச் சற்று புனைவுடன் இணைத்து கதாபாத்திரமாக வடிவமைத்துள்ளார் கல்கி.

பிறப்பும் வளப்பும்[தொகு]

சிற்றரசராக இருந்த மழவரையர் வம்சத்தில் செம்பியன் மாதேவியார் பிறந்தார். சிறுவயதிலிருந்தே சிவ பெருமான் மீது பற்றுடன் இருந்தார். பக்தி மிகுந்து சிவனையே கணவனாக அடைய பார்வதிதேவி, தாட்சாயனி போல எப்போதுமே கோவிலில் தவம் செய்கிறாள். மங்கை பருவம் அடைந்த பின்னும் சிவ சிந்தனை மிகுந்து தன் எண்ணத்தில் தளராமல் வாழ்கிறார்.

கண்டராதித்தருடன் திருமணம்[தொகு]

செம்பியன் மாதேவியைப் போலவே சற்றும் குறையாமல் சிவசிந்தனையில் இருப்பவர் கண்டராதித்த சோழர். போர், ஆயுதம், அரசியல் இவற்றில் விருப்பம் கொள்ளாமல் சிவ வழிபாட்டிலேயே காலம் கழிக்கின்றார். ஒரு நாள் மழவரையருடன் வரும் போது சிவாலயத்தில் தவத்தில் மூழ்கியிருக்கும் செம்பியன் மாதேவியை பார்க்கின்றார். மழவரையர் முதலியோருடன் அவள் அருகில் சென்று யார் இந்த பெண்ணென வினவுகிறார். தவம் கலைந்து எழுந்திருக்கும் செம்பியன் மாதேவி சிவனே காட்சிதருவதாக எண்ணி மனமுருகி வணங்கி, கண்களில் நீர் கோர்க்க நிற்கின்றாள். பின்பு தன் முன்னே இருப்பது சிவனல்ல அரசன் என்பதை அறிந்து ஓடிவிடுகிறாள். தன்னைப்போலவே சிவசிந்தனையில் இருக்கும் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள கண்டராதித்தர் விரும்புகிறார். செம்பியன் மாதேவியும் சிவபக்தரான கண்டராதித்தரை ஏற்றுக் கொள்கிறாள். [1]


மதுராந்தகத் தேவன்[தொகு]

இருவரும் நெடுங்காலம் பிள்ளைபேறு வேண்டாமென இருக்கிறார்கள். ஆனால் மற்ற பெண்கள் எல்லோரும் குழந்தையுடன் மகிழ்வதை கண்டு செம்பியன் மாதேவியின் தாய்மையுணர்வு விழித்துக் கொள்கிறது. அதன்படியே மதுராந்தகத் தேவனும் பிறக்கிறார். சிவபக்தனாக மதுராந்தகத் தேவனை இருவரும் வளர்க்கின்றார்கள். இதற்கிடையே போர்களில் ஈடுபடும் ஆர்வமுடைய அரிஞ்சய சோழரும், அவருடைய மகன்களும் சிம்மாசனத்திற்கு உரியவர்கள் என்று கண்டராதித்தர் தந்தை பராந்தகச் சக்கரவர்த்தி எண்ணுகிறார். அதன் படியே நடப்பதாகக் கண்டராதித்தரும் வாக்குத் தருகிறார். அவருக்கு பின் சோழப் பேரரசின் பட்டம் அரிஞ்சய சோழனுக்கு வருகிறது. அரிஞ்சய சோழனுக்குப் பிறகு சுந்தர சோழர் ஆட்சியில் இருக்கும் போது, மதுராந்தகன் பெரியவனாகி விடுகிறான். பழுவூர் இளையராணி நந்தினியின் சதியால், சிவபக்தனாக இருந்த மதுராந்தகன், அரசாள ஆசை கொள்கிறான். பழுவூர் சிற்றரசர்கள், செம்பியன் மாதேவி சகோதரர் மழவரையர் போன்ற சிற்றரசர்களை ஒருங்கிணைத்து சோழ சாம்ராச்சியத்தினை ஆள்வதற்கு முயற்சி செய்கிறான். ஆனால் செம்பியன் மாதேவியோ தனது கணவரின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டுத் தன் மகன் மதுராந்தகனின் அரசுரிமை ஆசைக்குத் தடையாக இருக்கிறார்.

அநிருத்த பிரம்மராயரின் பிராத்தனை[தொகு]

மதுராந்தகத் தேவனுக்கு அரசாளும் ஆசைவந்தமையால், சுந்தர சோழர் மதுராந்தக தேவனுக்கு பட்டம் சூட்டிவிட்டு ஓய்வெடுக்க எண்ணினார். இந்த செய்தியை தெரிவித்து செம்பியன் மாதேவியிடம் சம்மதம் வாங்கிவர அநிருத்த பிரம்மராயரை பழையாறைக்கு அனுப்பினார். இளவரசர் அருள்மொழிவர்மன் புயலில் சிக்கி இறந்துவிட்டான் என்ற வதந்தியால் நாடே கலவரத்திற்கு உள்ளாகி கிடந்தது. செம்பியன் மாதேவி இச்செய்தியை கேட்டு கண்ணீர் வடித்தார். முதல் மந்திரி அநிருத்தர் சோழர் ஆட்சியின் நன்மைக்காக மதுராந்தகனை மன்னன் ஆக்க சம்மதிக்க வேண்டும் என்று கூறுகிறார். சோழர் ஆட்சியின் நன்மையை சிவபெருமான் பார்த்துக் கொள்வார் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் செம்பியன் மாதேவி. வடநாட்டில் கோவில்களை இடித்து தரைமட்டமாக்கும் கொள்கை கொண்டோர் படையெடுப்பதாகவும், அதனை வடநாட்டில் இருக்கும் அரசர்களால் தடுக்க இயலவில்லை என்றும், அதனால் பெரும் கோவில்கள் அழிவு நிலைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்.

உண்மை புதல்வன்[தொகு]

சேந்தன் அமுதன் உடல்நிலை குறைவாக இருப்பதால் அவனைக் காண வாணியம்மை வீட்டிற்குச் சென்று திரும்புகிறார். அங்கு சற்று தாமதித்து வருவதாக கூறிய மதுராந்தகனை அதன் பின் காணாமல் தவிக்கிறார். இந்த விசயத்தினை சுந்தர சோழரிடம் கூறி மகனை கண்டுபிடித்து தர வேண்டுகிறார். அப்போது முதன் மந்திரி அநிருத்தர், சேந்தன் அமுதனை அழைக்கின்றார். அகமகிழ்ந்து 'மகனே !' என்று அழைத்துவிடுகிறார் செம்பியன் மாதேவி. அவையிலிருந்தவர்களுக்கு வாணியம்மையின் மகனாக இருந்த சேந்தன் அமுதன், செம்பியன் மாதேவியின் மகன் என்பதை அறிந்து வியப்பு ஏற்படுகிறது. சேந்தன் அமுதன் தனக்கு அரசுரிமை வேண்டாமெனக் கூறி, பூங்குழலியுடன் சிவபக்தியில் ஈடுபட விரும்புவதாக கூறுகிறார். செம்பியன் மாதேவியும் மகனின் விருப்பம் தன்னுடைய விருப்பத்தினை ஒத்து இருப்பதை அறிந்து இன்புருகிறார். [2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]