மூன்றாம் கிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மூன்றாம் கிருஷ்ணன் (Krishna III, கிபி 939 – 967 ) ஒரு இராஷ்டிரகூட மன்னன். இராஷ்டிரகூட மன்னர்களிலே இவன் ஒரு சிறந்த வீரனாகவும் திறமையான ஆட்சியாளனாகவும் விளங்கினான். கன்னடத்தில் இவனது பெயர் கன்னரன் ஆகும். நலிந்து போன இராஷ்டிரகூட வம்சத்தை மீண்டும் நிலைநிறுத்தினான். இதற்காக இவன் நிகழ்த்திய போர்கள் பல. இவனது முயற்சிகளால்தான் இராஷ்டிரகூடர்களின் ஆட்சி மீண்டும் வலுப்பெற்றது. இவன் புகழ்பெற்ற கன்னடப் புலவர்கள் பலரை ஆதரித்து ஊக்கமளித்தான். இவனால் ஆதரிக்கப்பட்ட புலவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் சாந்தி புராணம் எழுதிய ஸ்ரீ பொன்னர், கஜன்குஷன் (அல்லது நாராயணன்) மற்றும் மகாபுராணம் எழுதிய புஷ்பதந்தர் ஆகியோர் ஆவர்.[1][2][3] சேதி நாட்டின் இளவரசியை மணந்து கொண்ட இவன் தனது மகளை மேற்கு கங்க இளவரசனுக்கு மணமுடித்துக் கொடுத்தான். தனது ஆட்சிக்காலத்தில் அகாலவர்ஷன், மகாராஜாதிராஜன், பரமேஷ்வரன், பரமமகேஷ்வரன், ஸ்ரீபிரிதிவிவல்லபன் என்றெல்லாம் சிறப்பு பட்டப்பெயர்களைப் பெற்று விளங்கினான்.[4] இவனது ஆட்சியின் உச்சக் காலத்தில் இராஷ்டிரகூட இராச்சியம் வடக்கே நர்மதை ஆற்றிலிருந்து தெற்கே காவிரி டெல்டா வரை பரந்திருந்தது. தானா நாட்டு அரசன் ஷிலகரனால் பொறிக்கப்பட்ட 993 மானியச் செப்பேடு, வடக்கில் இமயமலை முதல் தெற்கே இலங்கை வரையும் கிழக்குக் கடலிருந்து மேற்குக் கடல் வரையும் இராஷ்டிரகூட இராச்சியம் பரந்து விரிந்திருந்ததாகத் தெரிவிக்கிறது. மேலும் இச்செப்பேடு மூன்றாம் கிருஷ்ணன் படையெடுத்து வருகிறான் என்றால் சோழ, வங்காள, கன்னோசிய, ஆந்திர மற்றும் பாண்டிய தேசங்கள் எல்லாம் நடுங்கினதாகவும் குறிப்பிடுகிறது.[5]

தெற்குப் படையெடுப்பு[தொகு]

மூன்றாம் கிருஷ்ணன், மேற்கு கங்க அரசன் இரண்டாம் ரசமல்லனைக் கொன்றுவிட்டு அவனது உறவினனான இரண்டாம் பூதுகன் கங்கவாடிப் பிரதேசத்துக்கு அரசனாக்கினான். கூர்ஜர பிரதிகாராப் பேரரசின் சித்திரக்கூடத்தையும் கலிஞ்சரத்தையும் கைப்பற்றினான். தெற்குத் தக்காணத்தின் மீது படையெடுத்துச் சென்று கோலாரையும் தர்மபுரியையும் பாணர்களிடமிருந்தும் வைதும்பர்களிடமிருந்தும் மீட்டான். ஆரம்பத்தில் சில தோல்விகளைச் சந்தித்தாலும் 944 இல் தொண்டைமண்டலம் அவன் ஆட்சியின் கீழ் வந்தது. சித்தலிங்கமடம் தகடுகள் (944), இவன் சோழர்களை வென்று காஞ்சியையும் தஞ்சாவூரையும் கைப்பற்றியதாகவும் கூறுகின்றன.[6] 949 இல் வட ஆர்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த தக்கோலம் என்னுமிடத்தில் நடந்த பெரும்போரில் சோழர்களைத் தோற்கடித்தான்.[7] மேற்கு கங்க மன்னன் இரண்டாம் பூதுகன் இப்போரில் இவனுக்கு உதவினான். இப்போரில் சோழ மன்னன் இராஜாதித்திய சோழன் யானை மேல் அமர்ந்திருந்தபடியே எதிரியின் அம்புக்கு இரையாகி மரணமடைந்தான். இந்த வெற்றிக்குப் பூதுகன் செய்த உதவிக்குப் பரிசாக அவனுக்கு இரட்டை நாட்டுப் பகுதிகளைப் பரிசாக அளித்தான்.[8][4] பின்னர் கேரளப் பகுதியை ஆண்ட பாண்டியர்களை வென்றான். இலங்கை மன்னனைச் சரணடையச் செய்தான். தனது வெற்றிக்கு அடையாளமாக இராமேஸ்வரத்தில் ஒரு தூண் எழுப்பினான்.[7][9] இவ்வெற்றியைப் பற்றி 959 இல் சோமதேவனால் எழுதப்பட்ட யாஷடிலகா சாம்புவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.[10] எனினும் இவனது கல்வெட்டுக்கள் தற்போதைய தமிழ் நாட்டின் தெற்குப்பகுதியில் காணப்படாததாலும் கிடைக்கப்பட்ட கல்வெட்டுகள் அமைந்துள்ள இடங்களைக் கொண்டும் தொண்டைமண்டலம் (வட தமிழ் நாடு) மட்டுமே மூன்றாம் கிருஷ்ணனின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்திருக்க வேண்டும் என்ற விவாதமும் உள்ளது.[11] இந்த வெற்றிகளுக்குப் பின்னர் காஞ்சியையும் தஞ்சையையும் வென்றவன் என தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டான்.[12] வேங்கிநாட்டின் மீதும் அவனது ஆதிக்கம் நீண்டிருந்தது.

வடக்குப் படையெடுப்பு[தொகு]

மூன்றாம் கிருஷ்ணன் தக்காணப் படையெடுப்பில் தன் கவனத்தைச் செலுத்தியிருந்த போது சந்தேளர்கள் சித்திரக்கூடத்தையும் கலிஞ்சரத்தையும் கைப்பற்றிக் கொண்டனர். இதற்கு பதிலடியாக கிருஷ்ணன், அப்போது இவனுக்குக் கட்டுப்பட்டு மேற்கு கங்கத்தை ஆண்டு வந்த மன்னன் மாறசிம்மனை (இரண்டாம் பூதுகனின் மகன்) மீண்டும் அப்பகுதிகளைக் கைப்பற்ற அனுப்பினான். மாறவர்மன் கூர்ஜர பிரதிகாராவையும் மாளுவ நாட்டுப்பகுதியான ஹர்ஷ சியாகாவை ஆண்ட பரமாறனையும் தோற்கடித்தான். இராஷ்டிரகூடர்களைப் பற்றிக் கூறும் கன்னடக் கல்வெட்டு தற்போதைய மத்திய பிரதேசத்திலுள்ள ஜபல்பூருக்கு அருகில் கிடைத்துள்ள ஜூரா கல்வெட்டாகும். இக்கல்வெட்டின் காலம் 964 ஆகக் கருதப்படுகிறது.[6]

கிருஷ்ணனின் ஆட்சியின் உச்சகாலத்தில் அவனது இராச்சியம் வடக்கில் நர்மதை ஆற்றிலிருந்து தெற்கே இப்போதைய தமிழ் நாட்டின் பெரும்பாலான வடபகுதிகளை உள்ளடக்கியிருந்தது. பிரதிகாரா (Prathihara), பரமாரா (Paramara), செவுனா (Seuna), வடக்குக் கலச்சுரி (Kalachuri) ஆகியவை வட தக்கணத்தில் இவன் ஆட்சிக்குப்பட்ட அரசுகளாகும்.[13]

வடக்குக் கலச்சுரியுடனான பகைமை இராஷ்டிரகூடர்களின் ஆட்சியின் வீழ்ச்சிக்குக் முக்கிய காரணமாயிற்று. கிருஷ்ணன் தன் கீழிருந்த தளபதிகளுக்கு ஆள்வதற்காக பகுதிகளைக் தானமாகக் கொடுத்ததில் செய்துவிட்ட கவனப்பிசகுகளும் அவனது வீழ்ச்சிக்கு வழிவகுத்தன. இராஷ்டிரகூடப் பேரரசின் முக்கியப் பகுதியில் அமைந்த தார்தவாடிப் பகுதியைத் (தற்போது: கர்நாடகாவின் பீஜப்பூர் மாவட்டம்) தன்கீழ் ஆண்ட சாளுக்கிய சிற்றரசன் இரண்டாம் தைலபாவிற்கு (965 இக்கு முன்னர்) அளித்தது இராஷ்டிரகூடர்களின் அழிவிற்கு இடமளித்தது.

குறிப்புகள்[தொகு]

 1. Kamath (2001), p84, p90
 2. Sastri (1955), p356
 3. Reu (1933), p86
 4. 4.0 4.1 Reu (1933), p82
 5. Reu (1933), p43
 6. 6.0 6.1 Kamath (2001), p83
 7. 7.0 7.1 From the Karhad record of 949 (Kamath 2001, p83)
 8. From the Atakur inscriptions (Kamath 2001, p83)
 9. From the Sholapur copper plate inscriptions of 958 (Reu 1933, p84, p85)
 10. Krishna III is described as the conqueror of Chola, Chera, Pandya and Simhala (Ceylon) (Reu 1933, p86
 11. Sathianath Ayer in Kamath 2001, p83
 12. from the Tirukkalukkunram and Lakshmeshvara inscriptions (Reu 1933, p83, p85)
 13. Deoli inscriptions claim the Rashtrakuta control extended from the Himalayas in the north to Ceylon in the south and from the eastern sea to the western sea (Reu 1933, p83, p84)

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

முன்னர்
மூன்றாம் அமோகவர்ஷன்
இராஷ்டிரகூட வம்ச மன்னன்
939–967
பின்னர்
கோட்டிக அமோகவர்ஷன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_கிருஷ்ணன்&oldid=2487935" இருந்து மீள்விக்கப்பட்டது