உள்ளடக்கத்துக்குச் செல்

முதலாம் அமோகவர்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதலாம் அமோகவர்சன் அல்லது முதலாம் அமோகவர்ச நிருபதுங்கன் (கன்னடத்தில்: ಅಮೋಘವರ್ಷ ನೃಪತುಂಗ) (800-878 ) என்பவன் ஒரு புகழ் பெற்ற இராஷ்டிரகூடப் பேரரசனாவான். இவன் 64 ஆண்டுகள் ஆட்சிபுரிந்து சாதனைப்படைத்தவன். பல கன்னட மற்றும் சமஸ்கிருத அறிஞர்கள் இவனால் ஆதரிக்கப்பட்டனர் அவர்களில் சிலர், அக்கால இந்தியக் கணிதவியலாளரும், கணித சார சம்கரகா என்ற நூலின் ஆசிரியருமான, மகாவைரச்சார்யா, ஜினேசன , விரசினா , ஷகடயான், ஸ்ரீ விஜயா (ஒரு கன்னட மொழி கோட்பாட்டாளர்) ஆகியோர் ஆவர்.[1] முதலாம் அமோகவர்சன் ஒரு திறமையான கவிஞனாகவும், அறிஞனாகவும் இருந்துள்ளான். கவிராஜமார்க என்னும் பழங்கன்னட நூலை இவன் (தனியாகவோ அல்லது கூட்டாகவோ) எழுதியுள்ளான்.[2][3] மேலும் சமஸ்கிருதத்தில் பிரஷநோடர ரத்ணமாலிகா என்ற சமய நூலும் எழுதியதாகக் கருதப்படுகிறது. இவன் நிருபதுங்க, அதிசதவள, வீரநாராயணன், ரட்டமார்தண்ட, சிறீவல்லபன் போன்ற பட்டங்களைச் சூடிக்கொண்டிருந்தான். இவன் இராஷ்டிரகூடர்களின் தலைநகரை தற்கால கர்நாடகத்தின் பீதர் மாவட்டத்தில் உள்ள மயூர்கண்டியிலிருந்து குல்பர்கா மாவட்டத்தின் மன்யகட்டா என்ற இடத்திற்கு மாற்றினான். இந்தத் தலைநகரம் சிறந்த முறையில் திட்டமிட்டு இந்திரனின் நகரைப் போன்று சிறப்பானதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வடிவமைக்கப்பட்டது.[4] அராபிய பயணியான சுலைமான் உலகின் நான்கு பெரிய மன்னர்களுள் ஒருவரானாக அமோகவர்சனை விவரித்துள்ளார். மேலும் அமோகவர்சன் முஸ்லிம்களை மதித்துத் தனது நகரங்களில் மசூதிகள் கட்ட அனுமதித்தான் என்று எழுதியுள்ளார் [5] இவனது சமயநோக்கு, கலை இலக்கிய ஆர்வம் மற்றும் சமாதானத்தை விரும்பும் இயல்பால், புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் பஞ்சமுகி அவரைப் பேரரசர் அசோகருடன் ஒப்பிட்டு "தென்னிந்திய அசோகர்" என்று குறிப்பிடுகிறார்.[6] மொழி, இலக்கியம், பண்பாடு, ஆகியவற்றின் மீது அமோகவர்சன் கொண்ட ஆர்வமும் ஈடுபாடும் அவனது ஆக்கமான கவிராஜமார்க்க நூலினால் தெரிகிறது.[7]

ஆரம்ப காலம்

[தொகு]

அமோகவர்சன் (இயற்பெயர் ஷர்வா) [8][9] கி.பி.800-ல் நர்மதை ஆற்றங்கரையில் உள்ள சிறீபவன் என்ற இடத்தில் அவரது தந்தை, பேரரசர் மூன்றாம் கோவிந்தன் வடஇந்தியாவை வெற்றிகொண்டு திரும்பி வரும்போது போது பிறந்ததாக கி.பி. 803 ஆண்டைய மண்ணே கல்வெட்டு மற்றும் 871 ஆண்டைய சஞ்சன் செப்புத் தகடுகள் கூறுகின்றன[8]. மேலும் சிருர் செப்புத்தகடுகள் வழியாக இவன் தனது 14வது வயதில் இவனது தந்தை இறந்தபின்பு 814இல் அரியணை ஏறினான் என்று தெரியவருகிறது.[8][10] அவனது ஆரம்ப காலங்களில் அவனது பாதுகாவலராகக் குஜராத் கிளை இராஷ்டிரகூட அரசை ஆண்டுவந்த இவனின் தாயதியான கருக சுவர்ணவர்சன் இருந்தான். இவன் அரசனானபிறகு இவனது உறவினர்கள் சிலர் கூட்டு சேர்ந்துகொண்டு திடீர் புரட்சியில் இறங்கினார்கள். இதனால் நாட்டில் குழப்ப நிலை ஏற்பட்டு கி.பி. 821இல் அமோகவர்சன் தன்னை நிலைநிறுத்திக்கொண்டான் என்ற செய்திகள் சூரத் பதிவுகள் மற்றும் கி.பி.835 ஆண்டைய பரோடா செப்புத்தகடுகள் வழியாகத் தெரிகிறது.[11][12] முதல் புரட்சிக்குத் துணையாக இருந்த மேற்கு கங்க மன்னனான இரண்டாம் சிவமாறன் தலைமையிலான படைகளுடன் போர்கள் நடந்தன. தொடர்ந்து நடந்த அந்தப் போர்களில் இரண்டாம் சிவமாறன் கி.பி.816இல் கொல்லப்பட்டான். ஆனால் அமோகவர்சனுக்கு அடுத்த கங்கா அரசனான இராசமல்லனால் தொந்தரவுகள் தொடர்ந்தது.[13] இந்தப் பகையை முடிவுக்குக் கொண்டுவர மேலைக் கங்கர்களிடம் முதலாம் அமோகவர்சன் சமரசம் செய்துகொண்டான். மேலும் இவன் மேற்கு கங்க மன்னர் குடும்பத்தினருடன் திருமண உறவை ஏற்படுத்திக்கொண்டான். இதன் பிறகும் 818 மற்றும் 820 இடையே ஏற்பட்ட குழப்பங்களை 821வாக்கில் முதலாம் அமோகவர்சன் சமாளித்து, அதன்பிறகு ஆட்சியை உறுதிபடுத்திக்கொண்டு நிலையான ஆட்சியைத் தந்தான்.[13]

குறிப்புகள்

[தொகு]
  1. Kamath (2001), p79
  2. Narasimhachraya (1988), p2,p12,p17
  3. Sastri (1955), p. 355.
  4. Sastri (1955), p. 146.
  5. The Shaping of Modern Gujarat: Plurality, Hindutva, and Beyond; Acyuta Yājñika, Suchitra Sheth, Penguins Books, (2005), p.42, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14400-038-8
  6. Panchamukhi in Kamath (2001), p80
  7. M. V. Krishna Rao (1936), The Gangas of Talkad: A Monograph on the History of Mysore from the Fourth to the Close of the Eleventh Century, p.80
  8. 8.0 8.1 8.2 Kamath (2001), p77
  9. It has been claimed that Sharva may be a title (Reu 1933, p66)
  10. Reu (1933), p68
  11. Kamath (2001), p78
  12. Reu 1933, p66
  13. 13.0 13.1 From the Hiregundagal records (Kamath 2001, p78)

உசாத்துணை

[தொகு]
  • Sastri, Nilakanta K.A. (2002) [1955]. A history of South India from prehistoric times to the fall of Vijayanagar. New Delhi: Indian Branch, Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-560686-8.
  • Kamath, Suryanath U. (2001) [1980]. A concise history of Karnataka : from pre-historic times to the present. Bangalore: Jupiter books. LCCN 80905179. இணையக் கணினி நூலக மைய எண் 7796041.
  • Narasimhacharya, R (1988) [1988]. History of Kannada Literature. New Delhi, Madras: Asian Educational Services. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-206-0303-6.
  • Reu, Pandit Bisheshwar Nath (1997) [1933]. History of The Rashtrakutas (Rathodas). Jaipur: Publication scheme. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-86782-12-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_அமோகவர்சன்&oldid=3581114" இலிருந்து மீள்விக்கப்பட்டது