ஆதித்த கரிகாலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆதித்த கரிகாலன்
வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி வர்மன்
சோழப் பேரரசின் இணை ஆட்சியாளர்
ஆட்சிக்காலம்பொ.ஊ. 966–971
பேரரசர்சுந்தர சோழன்
முன்னையவர்சுந்தர சோழன்
பின்னையவர்உத்தம சோழன்
பிறப்புஆதித்த கரிகாலன்
திருக்கோயிலூர், சோழர் (தற்கால தமிழ்நாடு, இந்தியா)
இறப்புபொ.ஊ. 971 (29 வயதில்)
மேலக்கடம்பூர், சோழ நாடு
துணைவர்இலாத மாதேவியார்
குழந்தைகளின்
பெயர்கள்
கரிகால கண்ணன்
அரசமரபுசோழர்
தந்தைசுந்தர சோழன்
தாய்வானவன் மாதேவி
மதம்சைவ சமயம்

ஆதித்த கரிகாலன் (Aditha Karikalan) சோழரது புகழ் பெற்ற மன்னருள் ஒருவனான முதலாம் இராசராசனின் தமையனும் சுந்தர சோழரின், வானவன் மாதேவி மகனுமாவான்.

ஆதித்தன் சிறுவனாய் இருந்த பொழுதே சிங்கம் யானையுடம் போரிடுவதைப் போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட செய்த கண்டராதித்தனின் முயற்சிகளைத் தகர்த்து தன்னுரிமையுடன் வாழ்ந்து வந்த வீரபாண்டியனுடன் போரிட்டதாக லெய்டன் பட்டயங்கள் புகழ்கின்றன. புதுக்கோட்டையின் தென் எல்லையில் உள்ள, சேவலி மலைகளுக்குத் தெற்கேயுள்ள, சேவூர்ப்போர்க்களத்தில் ஆதித்த கரிகாலனது வீரம் வெளிப்பட்டதோடு, வீரபாண்டியன் தலைகொண்ட என்று கூறிக்கொள்ளவும் இவனுக்கு வாய்ப்பைக் கொடுத்தது. வீரபாண்டியன் ஆதித்தனால் கொல்லப்பட்டதாகத் திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன.

இரண்டாம் ஆதித்தன் கொலை[தொகு]

குடும்ப வாழ்வில் ஏற்பட்ட பேரிழப்பால், சுந்தரசோழன் தன் இறுதிநாட்களில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான் என்றும் 'பாண்டியன் தலைகொண்ட கரிகாலச்சோழனை' கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்து விற்கும் பணியினை மன்னன் கட்டளைப்படி திருவீர நாராயண சதுர்வேத மங்கலச் சபை மேற்கொண்டதாகவும், இராசகேசரி இரண்டாம் ஆண்டு உடையார்குடிக் கல்வெட்டு கூறுகிறது. மேலும் உடையார்குடி கல்வெட்டில் இவ்விளவரசனைக் கொன்றோர் யார் என்பதை உணர்துகிறது. அவர்கள் சோமன், ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன்,பரமேசுவரனான இருமுடிச்சோழ பிரமாதிராஜன்,மலையனூரானான ரேவதாசக் கிரமவித்தன் என்பவர்கள்.[1] அவர்கள் நால்வரும் உடன்பிறந்தோர் என்பதும் அக்கல்வெட்டில் அறியமுடிகிறது.அவர்களுள் இருவர்,பஞ்சவன் பிரமாதிராஜன் இருமுடி சோழ பிரமாதிராஜன் என்ற உயர் பட்டங்களை பெற்றிருப்பதால் அவர்கள் அரசாங்க பதவியில் இருந்த அந்தணர் என அறியப்படுகிறது.[2] இரண்டாம் ஆதித்தன் ஒரு சதியின் மூலம் கொலை செய்யப்பட்டான் என்பது இந்தக் கல்வெட்டால் தெளிவாகிறது. இந்த இராசகேசரி கல்வெட்டு, சுந்தர சோழனுக்கும், ஆதித்தனின் தம்பியும் உத்தம சோழனுக்குப் பின் பட்டத்திற்கு வந்தவனான இராசராச சோழனுக்கும் பொருந்தும். இரண்டாம் ஆதித்தனின் கல்வெட்டுகள் 5-ம் ஆண்டு வரை கிடைத்திருப்பதாலும், ஆதித்தன் தன் தந்தைக்கு முன்பே ஆட்சி செய்ததாகக் கூற முடியாததாலும் இக்கல்வெட்டு இராசராச சோழனுடையது என்பது தெளிவாகிறது.

உத்தம சோழன் ஆட்சி செலுத்திய பதினாறு ஆண்டுகளில் இரண்டாம் ஆதித்தனைக் கொலை செய்தவர்கள் பழிவாங்கப்படவில்லை என்பது உண்மையே. மகனை இழந்த சுந்தரசோழன், ஒன்று மனம் நொந்து இறந்தான் அல்லது தன் மகனைக் கொன்றவர்களைத் தண்டிக்க இயலாதவாறு செய்யப்பட்ட சூழ்ச்சிகளைக் கண்டு மனம் வருந்தி இறந்தான்.

சூழ்நிலைகளை உற்று நோக்கும் போது உத்தமசோழனுக்கு இந்தக் கொலையில் தொடர்பு இல்லையென்று கூறுவதற்கில்லை. உத்தமசோழனுக்கு, அரியணை ஏற வேண்டும் என்ற ஆசை இருந்தது. மன்னர் பதவி தவிர, அதற்குக் கீழ்ப்பட்ட எப்பதவியையும் அவன் ஏற்க விரும்பவில்லை, அரச குடும்பத்தின் மூத்த கிளை என்று அவன் கருதினான். தன் ஒன்று விட்ட சகோதரனும் அவன் மக்களும் அரியணையைத் தன்னிடமிருந்து பறித்துக் கொண்டதாகக் கருதினான். தனக்கு ஆதரவாக ஆட்களைத்திரட்டி இரண்டாம் ஆதித்தனைக் கொன்று தன்னை இளவரசனாக்குமாறு சுந்தர சோழனை வற்புறுத்தினான். வேறுவழியின்றி சுந்தர சோழன் இதற்கு இசைந்தான். திருவாலங்காட்டுப் பட்டயங்களிலும் உடையார்க்குடிக் கல்வெட்டுகளிலும் காணப்படும் குறிப்புக்களை இணைத்துபார்க்கும் பொழுது இந்த நிகழ்ச்சிகள் உண்மையாக இருக்கக்கூடும் என்பது புலனாகிறது.[3]

திருவாலங்காட்டுச் செப்பேடுகள்,

விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான் (காணாமற் போனான்) கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் க்ஷத்ர தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி அரசபதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரச பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி அரசபதவியை மறுத்துவிட்டான்.

என்று தெரிவிக்கின்றன.

கல்வெட்டு ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன், "டாக்டர் க. த. திருநாவுக்கரசு அவர்கள் அருண்மொழி ஆய்வுத்தொகுதி எனும் கட்டுரைத் தொகுப்பு நூலொன்றில் உத்தம சோழனுக்கு எந்த விதத்திலும் இக்கொலையில் தொடர்பு இல்லை என்றும் கொலையாளிகளைக் கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டு இராசராசனின் இரண்டாம் ஆட்சியாண்டில்தான் கண்டுபிடிக்க இயன்றது என்றும் கொலையாளிகள் பிராமணர்கள் தாம்" என்றும் பல சான்றுகளின் அடிப்படையில் எழுதியிருப்பதை எடுத்துக்காட்டுகிறார். [4]

இரண்டாம் ஆதித்தன் பற்றிய வரலாற்று சர்ச்சை[தொகு]

இரண்டாம் ஆதித்தனைத் தவிர, மேலும் இருவர், வீரபாண்டியனை வெற்றிகண்டதாகக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இவரில் ஒருவன், பார்த்திவேந்திர வர்மன்.

வட ஆற்காடு தென் ஆற்காடு, செங்கற்பட்டு மாவட்டங்களில் கிடைக்கும் கல்வெட்டுகளில் காணப்படும் பார்த்திவேந்திரவர்மன் என்பவன் யார்? என்று தெளிவாக அறிய முடியவில்லை. இவன் பராந்தகனுக்குக் கட்டுப்பட்டிருந்த கங்க மன்னன் இரண்டாம் பிரதிவீபதியே என்று கருத்து நிலவுகிறது. இக்கருத்து பிரதிவீபதி, பார்த்திவேந்திரவர்மன் என்ற இரு பெயர்களுக்கு இடையே இருப்பதாக நம்பப்படும் ஒற்றுமையின் அடிப்படையில் ஏற்பட்டதாகும்.

இரண்டாம் ஆதித்தன் மற்றும் பார்த்திவேந்திரவர்மன் ஆகியோரது கல்வெட்டுக்களை ஆராய்ந்த கிருட்டிணசாத்திரி கீழ்கண்ட முடிவுகளுக்கு வந்துள்ளார்.

"இவ்விரு மன்னருமே, 'பாண்டியன் தலைகொண்ட' அல்லது வீரபாண்டிய தலை கொண்ட பரகேசரிவர்மன் என்ற விருதுகளைப் பெற்றனர். இரண்டாம் பராந்தக சுந்தர சோழ மன்னனுடன் போரிட்ட பாண்டிய மன்னனே இவ்வாறு குறுப்பிடப்படுகிறான். இரண்டாம் ஆதித்தனின் கல்வெட்டுகள் மிகக்குறைவே. தென்பகுதியில் மட்டுமே கிடைக்கும் இக்கல்வெட்டுகள். இவனுடைய 5-ம் ஆட்சி ஆண்டுமுதல் ஏற்பட்டன.

பார்த்திவேந்திர வர்மனின் கல்வெட்டுகள் ஏராளமாகத் தொண்டை மண்டலத்தில் காணப்படுகின்றன. இவை 13-ம் ஆண்டு முதல் ஆனவை. பார்த்திவேந்திர ஆதித்த வர்மன், அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசனாக இருந்து, தொண்டை மண்டலத்தின் பிரதநிதியாக இருந்திருக்கக்கூடும். ஆதித்த கரிகாலனே உண்மையில் அரியணை ஏறியவனாக தோன்றுகிறது."

பாண்டியன் தலைகொண்ட பரகேசரியின் கல்வெட்டுகள் மிகக்குறைவு என்று கூற முடியாது. அதோடு அவை தெற்கே மட்டுமே, அதாவது தொண்டை மண்டலத்திற்கு வெளியே தென்பகுதியில் மட்டுமின்றி, பிற பகுதிகளிலும் கிடைக்கின்றன. பார்த்திவேந்திர வர்மனின் கல்வெட்டுக்கள் ஆதித்தனின் கல்வெட்டுகளிலிருந்து, அவை கிடக்கும் இடங்களைப்பொறுத்து மட்டுமே வேறுபடுகின்றன.

இவனது மூன்றாம் ஆண்டு கல்வெட்டில் பார்த்திவேந்திர ஆதித்த பருமர் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறான். இவனது பட்டத்தரசியார் உடையார் தேவியார் வில்லவன் மாதேவியார், பெருமானடிகள் தேவியார், தன்மப் பொன்னார் ஆகிய திரைலோக்கிய தேவியார் போன்ற பட்டங்களைப் பெற்றவராவார். கரிகாலக்கண்ணன் எனப் பெயருடையவன், இரண்டாம் ஆதித்தனின் மகனாய் இருக்கலாம், இராசராசனின் கல்வெட்டுக்கள் மூலம் அப்படியொருவன் இருந்ததாய் தெரிகிறது.[5][6]

எனவே இவன் சோழர் அதிகாரத்திற்கு உட்பட்ட மன்னனாக இராமல், இவனே ஒரு சோழ மன்னனாக இருத்தல் கூடும். ஆதித்தன் என்ற பெயரும் பரகேசரி என்ற விருதும் பெற்ற இம்மன்னனே, ஆதித்த கரிகால பரகேசரி என்பதைத் தெளிவாக்குகிறது. பார்த்திவேந்திர ஆதித்திய வர்மன் என்ற பட்டமும், சில சிறு மாற்றங்களுடன் இவனது கல்வெட்டுக்களில் காணப்படும் இவனது கல்வெட்டுக்களில் காணப்படும் பட்டமும், இவன் பார்த்திவேந்திரவர்மன் என்ற பட்டத்தை ஏற்றதைக்காட்டுகின்றன.

சோழர்கள் புகழ்ச்சியான பட்டங்களை விரும்பி ஏற்றனர். மேலும் ஒவ்வொரு மன்னனும் பல பட்டங்களையும் சூடிக்கொண்டனர். இவனது கல்வெடுகள் 13ம் ஆண்டிலிருந்தே தொடங்குவதால் இவன் தந்தை சுந்தர சோழன் அரியணை ஏறியதும் இவன் இளவரசனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். சிறுவனாக இருந்தபோதே வெற்றியுடன், வீரபாண்டியனைத் தாக்கியவன் என்று லெய்டன் பட்டயம் புகழ்வதால், இது உண்மை என்று தெரிகிது இதற்குப்பின்னர், சோழ நாட்டின் வடபகுதியை ஆட்சி செய்யும் பொறுப்பை இவன் ஏற்றான். தந்தையின் வாழ்நாளிலேயே இவன் மரணமடையவே, இவனுக்கு பதிலாக பரகேசரி உத்தமசோழன் இளவரசன் ஆனான்.

இந்தக் காலத்தின் வரலாற்றைச் சொல்லுமுன் இதுவரை தெரிவித்ததின் முடிவுகள்.

மன்னர் காலம்
இராசகேசரி கண்டராதித்தன் பொ.ஊ. 949/50 - 957
பரகேசரி அரிஞ்சயன் பொ.ஊ. 956 - 957
இராசகேசரி சுந்தரசோழன் பொ.ஊ. 956 - 73
இரண்டாம் ஆதித்த பரகேசரி பார்த்திவேந்திர கரிகாலன் பொ.ஊ. 956 - 969.

பரந்தூர்க் கல்வெட்டு[தொகு]

பார்த்திவேந்திர வர்மனின் 15ம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு செங்கற்பட்டு மாவட்டத்தில் கிடைத்துள்ளது. இக்கல்வெட்டு அழிந்திருப்பதாலும், இதைக் கூர்ந்து ஆராயும் பொழுது இரு விவரங்கள் உறுதிப்படுகின்றன. இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள் ஆண்டு பதினைந்து, இதில் காணப்படும் எழுத்துக்கள் நன்கு செதுக்கப்பட்டிருந்தாலும், இவை எழுதப்பட்டுள்ள கல் பாழ்பட்டுள்ளது.

அக்கால எழுத்து வடிவங்களுடனான இக்கல்வெட்டின் உண்மையை சந்தேகிப்பதற்கான காரணம் ஒன்றும் இல்லை. 15-ம் ஆண்டு என்று ஒப்புக்கொள்வோமேயானால் இரண்டாம் ஆதித்தனே, பார்த்திவேந்திர வர்மன் என்ற அடிப்படையில் நாம் மேலே கொடுத்திருக்கும் அட்டவணை பெரும் மாற்றத்திற்குள்ளாகும். உத்தமசோழன் வருவதற்கு முன்னும் 15 ஆண்டுகளைக் கணக்கிட இயலாது 13 ஆண்டுகளைக் கணக்கிட்டாலே கால வரையறையை மீறுவதால், சுந்தர சோழன் தன் ஆட்சி தொடக்கத்திலேயே ஆதித்தனையும் உடன் வைத்துக் கொண்டு அவனுடன் ஆட்சிப் பொறுப்புக்களைப் பகிர்ந்து கொண்டான் என்ற கருத்தை ஏற்கச் செய்துள்ளது. அதே சமயம் பரந்தூர்க் கல்வெட்டு மட்டுமே, பார்த்திவேந்திரனுக்கு 13க்கு மேற்பட்ட ஆட்சி ஆண்டைத் தருகிறது. 13ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் பல இருந்தாலும் 14ம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றேனும் இல்லை. 15-ம் ஆண்டுக் கல்வெட்டு இது ஒன்றே.

எனவே மேலே குறிப்பிட்ட முடிவுக்குத்தான் வர இயலும் பார்த்திவேந்திரந்தான் ஆதித்தன் என்று ஏற்காவிடில், இவ்விருவரிடையே கண்ட பல ஒற்றுமைகளை நாம் அறவே ஒதுக்கிவிட முடியாது. இவ்வொற்றுமைகள் அனைத்துமே எதிர்பாரா வகையில் காணப்படுபவை அல்ல.

ஆகையால் பரந்தூர்க் கல்வெட்டில் காணப்படும் ஆட்சி ஆண்டில் "இ" என்று இரண்டாவது எண் தவறாக பொறிக்கப்பட்டுள்ளது என்ற கருத்தை ஏற்கலாம். 13-ம் ஆட்சி ஆண்டிற்கு மேற்பட்ட வேறு கல்வெட்டுகள் இனிக் கிடைக்கும் வரை, இக்கல்வெட்டை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை இல்லை. ஆதித்தனும் பார்த்திவேந்திரனும் ஒருவரே என்று ஏற்காவிடில், ஆதித்தனின் வீரபாண்டிய பரகேசரி கல்வெட்டுகளில் மிக அதிகமானது பொ.ஊ. 969 உத்தம சோழன் அரியணையில் அமருவதற்கு முன்பாக இந்த ஐந்தாண்டுகள் என்று நாம் கருத வேண்டும். இந்த அடிப்படையில் ஆதித்தனுடைய ஆட்சி ஏறக்குறைய பொ.ஊ. 964 - 965ல் தொடங்கியிருக்க வேண்டும்.

இதுவே மேலே கொடுக்கப்பட்ட கால அட்டவணைப்படி சுந்தர சோழனின் 8 அல்லது 9 வது ஆண்டாகும். தன் ஆட்சியின் 7-ம் ஆண்டிற்கு முன்பே பாண்டியனுடனான போரில் பெரும் வெற்றி பெற்றான் என்ற விவரமும் இப்போரில் செவ்வூர் என்னுமிடத்தில் நடைபெற்ற தாக்குதலில் சிறுவனான ஆதித்த கரிகாலன் பங்கேற்றான் என்று லெய்டன் கூறுவதிலிருந்து. சுந்தரசோழனின் ஆட்சித் தொடக்கத்திலேயே, ஆதித்தன் துணை அரசனாக விளங்கினான் என்ற கருத்தை வலியுறுத்துகின்றன. ஆயினும் இதை முழுக்க முழுக்க நம்ப முடியாது. ஏனெனில் துணை அரசனாக இல்லாமலேயே ஆதித்தன் இந்தப் போரில் பங்கேற்றிருக்க முடியும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. E.p. Ind. Vol XXI,NO.27.
  2. பிற்காலச் சோழர் வரலாறு (மூன்று பகுதிகளும் அடங்கிய முழுப்பதிப்பு) ஆசிரியர்:தி.வை.சதாசிவ பண்டாரத்தார் வெளியீடு:அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பக்கம்:63
  3. சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி. பாகம் ஒன்று பக்கம் 211.
  4. "உடையார்குடி கல்வெட்டு - ஒரு மீள்பர்வை".
  5. சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி - பாகம் ஒன்று. பக்கம் 221.
  6. ISI.ii, பக்460-ம் N.2-ம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதித்த_கரிகாலன்&oldid=3844350" இலிருந்து மீள்விக்கப்பட்டது