தோனூர்ப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோனூர்ப் போர்
சாளுக்கியர்-சோழர் போர்கள் பகுதி
நாள் 1007
இடம் தோனூர்
  • மேலைச் சாளுக்கியர் வெற்றி
  • சோழரின் இரட்டைப்பாடி முன்னேற்றம் தடுக்கப்பட்டது
  • கங்கபாடியும் நுளம்பபாடியும் சோழரிடமே இருந்தது
பிரிவினர்
மேலைச் சாளுக்கியர் சோழப் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
சத்யாசிரேயன் முதலாம் இராஜராஜ சோழன், இராசேந்திர சோழன்
பலம்
தெரியாது 900,000

தோனூர்ப் போர் முதலாம் இராஜராஜ சோழன் தலைமையிலான சோழர் படைக்கும் மேலைச் சாளுக்கிய அரசன் சத்தியாசிரேயனுக்கும் இடையில் கருநாடகத்தின் பீசப்பூர் மாவட்டத்திலுள்ள தோனூரில் 1007 இல் நடைபெற்ற போராகும்.

சம்பவங்கள்[தொகு]

தார்வாட் கல்வெட்டுக்கள் "தமிழர்களைக் கொல்பவனான சத்யாசிரேயன் முடிக்குரிய இளவரசன் இராசேந்திர சோழனால் நடத்தப்பட்ட பிரதான சோழர் படையைத் தோற்கடித்து, அவர்களைப் பின்வாங்கும்படி செய்தான்" என்று கூறுகின்றது. தோனூர் சோழப் பேரரசின் தொலைதூர வடக்கு எல்லையாக மாறியது.

மேலைச் சாளுக்கியர்-சத்யாசிரயனுடன் போர்[தொகு]

சாளுக்கிய மன்னன் இரண்டாம் தைலப்பனுக்குப் பின்னர் அவனுடைய மகன் சத்தியாசிரயன் சாளுக்கிய மன்னனானான். சத்தியாசிரயனை எதிர்த்துப் போர் புரிந்து வெற்றியடைந்து, அவனிடமிருந்த செல்வத்தில் ஒரு பங்கைத் தஞ்சை பெரிய கோயிலுக்கு செலவழித்தான் என்று இராஜராஜன் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. மாளவ நாட்டு பாரமாரர் இதே சமயம் சாளுக்கியர்களை வடக்கிலிருந்து தாக்கினர். மேலைச் சாளுக்கியர் இருபெரும் பகைவரை ஒரே நேரத்தில் எதிர்த்துப் போரிட்டுச் சமாளிக்க முடியாமல் திணறினர். ஏறக்குறைய கி.பி 1003ம் ஆண்டைச் சேர்ந்த இராஜராஜ சோழனின் கல்வெட்டுகள் ‘இரட்டப்பாடி’ ஏழரை இலட்சம் என்ற நாட்டைப் படையெடுத்து அதைக் கைப்பற்றினான் என்று கூறுகின்றன. ஆனால் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் சத்தியாசிரயன் இராஜராஜனது கடல் போன்ற பெரும்படையக் கண்டு அஞ்சிப் போர்க்களத்தை விட்டு ஓடிவிட்டான் என்று கூறுகின்றன.

இராஜேந்திரன் தலைமை[தொகு]

தார்வார் மாவட்டம் ஹொட்டூரில் சத்தியாசிரேயனின் கல்வெட்டு ஒன்று, ’சோழ குலத்திற்கு அணியாக விளங்கியவனும் இராஜராஜ நித்தியாவிநோதனின் மகனுமாகிய, நூர்மடிச் சோழ இராஜேந்திர வித்தியாதரன் என்பவன், ஒன்பது லட்சம் வீரர்கள் அடங்கிய பெரும்படையுடன் பீஜப்பூர் மாவட்டத்திலுள்ள தோனூர் வரையில் வந்து, பெரும்போர் புரிந்து நாட்டைச் சூறையாடிப் பாழ்படுத்தியும் நகரங்களைக் கொளுத்தியும், இளங்குழவிகள், அந்தணர் என்றும் பாராமல் அவர்களைக் கொன்றும், கன்னியரைக் கைப்பற்றி மனைவியராக்கியும், அந்தச் சாதியை அழித்தும் அளவற்ற பொருள்களைக் கவர்ந்து கொண்டு தன்நாட்டுக்குத் திரும்பிச் சென்றான்” என்று கூறுகிறது. இதன் பிறகு, ”தமிழரைக் கொன்று (திருள-மாரி) சத்தியாசிரயன் சோழரை விரட்டியடித்து, அவரிடமிருந்து தன் வஸ்து-வாகனத்தை மீட்டு தென் பகுதியையும் கைப்பற்றினான் ” என்று இதே கல்வெட்டு மேலும் கூறுகிறது. இதனால் இராஜேந்திரன் மேலைச் சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்று இரட்டபாடியை வென்றான் என்ற செய்தி உறுதிப்படுத்தப்படுகிறது.

சாளுக்கியப் போரின் விளைவுகள்[தொகு]

சோழர்களின் வடமேற்குப் படையெடுப்பின் மூலம் மைசூரில் கங்கர்களும் நுளம்பர்களும் ஆண்ட பகுதிகளோடு ஏறக்குறைய இப்போதையை பெல்லாரி மாவட்டம் முழுவதும் சோழ நாட்டுடன் இணைக்கப்பட்டது. இராஜராஜனின் கல்வெட்டோ அல்லது இக்காலச் சாளுக்கிய மன்னரது கல்வெட்டுக்களோ பெல்லாரியில் இதுவரை அகப்படவில்லை. ஆனால் பொதுவாக, சோழ நாட்டின் தொலைவெல்லைப் பகுதிகளில் அவர்களுடைய கல்வெட்டுகள் பெரிதும் காணப்படுவதில்லை. கங்கை, வேங்கி மண்டலங்களுக்கென்றே ஒரு மாதண்ட நாயகனை இராஜராஜன் தன் ஆட்சியின் இறுதியில் அமர்த்தியிருந்தான் என்பதே இவ்விரு மண்டலங்களும் ஒன்றோடொன்று இணைந்திருந்ததோடு சோழநாட்டுடன் சேர்ந்திருந்தன என்பதற்கும் போதுமான சான்றாகும்.

உசாத்துணை நூல்கள்[தொகு]

  • K. A. Nilakanta Sastri (2000) [1935]. The Cōlas. Madras: University of Madras. பக். 176–177. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோனூர்ப்_போர்&oldid=3840794" இலிருந்து மீள்விக்கப்பட்டது