உள்ளடக்கத்துக்குச் செல்

கரிகால் சோழன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரிகாலன்


கரிகாலனின் ஆட்சிப்பகுதிகள்
ஆட்சிக்காலம் பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டு
பட்டம் பெருவளத்தான்
திருமாவளவன்
கரிகாற் பெருவளத்தான்
மாவளத்தான்
இயல்தேர் வளவன்
கரிகாலன்
தலைநகரம் காவிரிப்பூம்பட்டினம்
உறையூர்
அரசி நாங்கூர் வேளின் மகள்
பிள்ளைகள் ஆதிமந்தி
முன்னவன் இளஞ்சேட்சென்னி
பின்னவன் உறுதியாகக் கூற இயலவில்லை
தந்தை இளஞ்சேட்சென்னி
பிறப்பு அறியப்படவில்லை
இறப்பு அறியப்படவில்லை

கரிகால் சோழன் சங்க காலத்தைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவார். இவர் தந்தையின் பெயர் இளஞ்சேட்சென்னி. கரிகால் சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு. தனக்கு ஒப்பாரும் இல்லை, தனக்கு மிக்காரும் இல்லை எனப் புகழ் பெற்றவன்.

சோழர்களில் மிக முக்கியமானதொரு மன்னன் ஆவான்.சோழகுலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான். பிற்காலசோழகுலத்தை, தன் முன்னோர்கள் ஆண்ட ஆட்சிப் பகுதியிலிருந்து விரிவு படுத்தினான்.

கரிகாலன், அழகான போருக்குரிய தேர்களைப் பெற்றிருந்த இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான். கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவருக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவருக்கு வழங்கலாயிற்று.

கரிகாலன் பற்றிய குறிப்புகள்

பட்டினப்பாலை, பொருநராற்றுப்படை, கலிங்கத்துப் பரணி, பழமொழி நானூறு முதலான நூல்கள் இவரைப் பற்றிய சில குறிப்புகளைத் தருகின்றன.

பழமொழி நானூறு தரும் செய்தி

சோழன் மகன் கரிகாலன் பகைவரால் சுடப்பட்ட இல்லத்திலிருந்து பிழைத்து மறைவாக வாழ்ந்தார். "பிடர்த்தலை" என்னும் பெயர் பெற்ற பட்டத்து யானையால் அடையாளம் கண்டு மாலை சூட்டப்பட்டு அரியணை ஏறிச் செங்கோல் செலுத்தினார். எனவே உயிர் பிழைத்திருந்தால் எதையும் செய்யலாம்.[1]

பட்டினப்பாலை தரும் செய்தி

புலிக் குகை போன்ற பகைவர் சிறையில் வளர்ந்த யானை வளர்ச்சி பெற்ற பின்னர் தான் விழுந்திருந்த பகைவரின் பொய்குழியின் கரை இடியுமாறு குத்தி மேலேறி தன் பெண் யானையுடன் சேர்ந்தது போலக் கரிகாலன் அரியணை ஏறினாராம்.[2] திண்ணிய காப்புச் சிறையில் இருந்த கரிகாலன் பிறர் கண்டு அஞ்சத் தக்க தாயமாகிய ஆட்சியை ஊழ் வலிமையால் பெற்று நாடாண்டார். இவ்வாறு பெற்றதனால் நிறைவடையாமல் நாட்டை விரிவுபடுத்தினார்.[3][4]

பட்டினப்பாலை நூலுக்குத் தரப்பட்டுள்ள தனிப்பாடல் தரும் செய்தி

கரிகாலன் காலில் தீ பட்டு அவரது கால் கருகிப் போயிற்று.[5] அதனால் அவர் கரிகாலன் என்னும் பெயர் பெற்றானோ என எண்ணுமாறு இந்தப் பாடல் அமைந்துள்ளது.

வெண்ணிப் போர்

இவரது ஆட்சியில் நடைபெற்ற முதல் பெரும் போர் வெண்ணிப்போர். சோழ அரியணையைக் கரிகாலன் நிலையாகப் பெறுமாறு செய்ததும், தமிழகத்தின் முடியுடைய மூவேந்தர்க்குத் தலைவனாக விளங்குமாறு செய்ததும் இப்போரே. ஏனெனில் இவ்வெற்றியின் மூலம் தனக்கெதிராக அமைக்கப்பட்டிருந்த ஒரு பெரும் கூட்டணியை அவர் முறியடித்துவிட்டார். இப்போரில் முதுகில் புண்பட்ட சேரமான் பெருஞ்சேரலாதன், தனக்கு பெரும் அவமானம் ஏற்பட்டதாகக் கருதி வடக்கிருந்து உயிர் நீத்தார். இதை கரிகாலனின் நண்பரும் வெண்ணியில் வாழ்ந்து போரை நேரில் கண்டவருமான வெண்ணிக் குயத்தியார் என்னும் புறநானுற்றுப் புலவர் விளக்குகிறார்.

இவரது படை பலத்தைப் பயன்படுத்தவும் வெளிப்படுத்தவும் வேறு வாய்ப்புகள் வாய்க்காமல் போகவில்லை. வாகைப் பெருந்தலை என்னுமிடத்தில் ஒன்பது குறுநில மன்னர்களின் கூட்டணியை இவர் முறியடித்தார். கரிகாலனின் படைகள் அவரது பகைவர்களின் இராச்சியங்களை அழித்த விவரங்களையும் அவர்கள் காட்டிய வீரத்தையும் பட்டினப் பாலையின் ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் மிக விளக்கமாக வர்ணிக்கிறார்.

சொந்த வாழ்க்கை

கரிகாலனின் சொந்த வாழ்க்கையைப்பற்றி நமக்குப் பேரளவிற்கு ஒரு விவரமும் கிடைக்கவில்லை. இவர் பெண்டிருடனும் பிள்ளைகளுடனும் மகிழ்ந்திருந்தார் என்று பட்டினப்பாலை ஆசிரியர் உருத்திரங்கண்ணனார் பொதுப்படையாக கூறுகிறார். நாங்கூரைச் சேர்ந்த வேளிர் குலப்பெண் ஒருத்தியைக் கரிகாலன் மணந்தார் என்று உரையாசிரியர் நச்சினார்க்கினியர் அவரது காலத்தின் நிலவிய மரபுவழிச் செய்தியின் அடிப்படையில் கூறுகிறார்.

கரிகாற்சோழனின் மகள் ஆதிமந்தியா. ஆதிமந்தியா செய்யுள்கள் சில பாடியுள்ளார்.[6]

தொன்மக் கதைகள்

பழங்காலந்தொட்டே கரிகாலனைப் பற்றிய பல புராணக் கதைகள் உருவாகி, தற்போது, இக்கதையே வரலாறாகப் பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் முடியுடை வேந்தர், வடநாட்டு ஆரிய மன்னர்களை எதிர்த்து வெற்றி பெற்றனர் என்று கூறும் சிலப்பதிகாரம், கரிகாலனின் வடநாட்டுப் படையெடுப்பை பலபடப் பாராட்டுகிறது. இப்படையெடுப்பில், கரிகாலன் இமயம் வரை சென்றதோடு, வச்சிரம், மகதம், அவந்தி போன்ற சில நாடுகளை வென்றோ, அல்லது உடன்பாடோ செய்து கொண்டார். காவேரியாற்றின் கரைகளை உயர்த்திக் கட்டினார் என்பதை ஏழாம், எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த தெலுங்கு சோ(ட)ழ மன்னன் புண்ணிய குமரனின் மலேபாடு பட்டயங்களில் முதன் முதலாகக் காண்கிறோம்.

இறப்பு

கரிகாற் பெருவளத்தான் இறுதியில் குராப்பள்ளி என்ற இடத்தில் உலக வாழ்வை நீத்தார் என்பது தெரிகிறது. ‘குராப்பள்ளி’ என்பது குராமரத்தைத் தலமரமாகக் கொண்ட திருவிடைச் சிவத்தலமாகும் என்று கருதப்படுகிறது.[7]

 • வைதீக மதத்தில் கரிகாலனுக்கு இருந்த நம்பிக்கை பற்றியும் அவர் இறந்ததால் ஏற்பட்ட ஆறாத்துயரத்தைப் பற்றியும் கருங்குழல் ஆதனார் என்னும் புலவர் பாடியுள்ளார்.
 • பொருநராற்றுப்படை என்னும் ஆற்றுப்படை நூல் கரிகால்வளவனை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது.

கரிகாலன் பற்றிய புனைவுகள்

 • "வானவல்லி" சி. வெற்றிவேல் எனும் எழுத்தாளரால் எழுதப்பட்டது. கரிகாற் பெருவளத்தானின் முழு வரலாற்றையும் உள்ளடக்கியது. கரிகாலன் தீ வைக்கப்பட்ட மாளிகையிலிருந்து தப்பிப்பது முதல் அவன் தனக்குரிய அரியணையைப் பெற்று இமயம் வரை வெற்றி பெற்றது வரையிலான வரலாற்றைக் கூறும் புதினம். நான்கு பாகங்களை உள்ளடக்கியது. வானதி பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும்

குறிப்புகள்

 1. சுடப்பட் டுயிருய்ந்த சோழன் மகனும்,
  பிடர்த்தலைப் பேரானைப் பெற்று - கடைக்கால்,
  செயிரறு செங்கோல் செலீஇயினான் இல்லை,
  உயிருடையார் எய்தா வினை. - பழமொழி பாடல் 105

 2. "வாரேன் வாழிய நெஞ்சே கூருகிர்க் கொடுவரிக்
  குருளைகூட்டுள் வளர்த்தாங்குப் பிறர், பிணியகத்திருந்து
  பீடுகாழ், முற்றி யருங்கரை கவியக்குத்திக் குழி
  கொன்று யானை பிடிபுக்காங்கு" (பட்டினப்பாலை 220 – 228)
 3. "நுண்ணுதி னுணர நாடி நண்ணார்
  செறிவடைத் திண்காப் பேறிவாழ் கழித்
  துருகெழ தாப மூழி னெய்திப்
  பெற்றவை மகிழ்தல் செய்வான்" (பட்டினப்பாலை 220 – 228)
 4. புலிக்குட்டி, கூண்டுக்குள்ளே இருந்து வளர்ந்தே பலம் பெறுவது போல, எதிரிகளின் சிறைக்கூடங்களில் வாழ்ந்த போது கரிகாலன் வல்லவன் ஆயினான். ஒரு குழியில் யானை பிடித்து அடக்கப்படுகிறது. ஆனால் அதே குழியை நிரப்பி தப்பித்து ஓடி, பெண் யானையுடன் சேர்ந்துவிடும் இயல்பு அதற்கு உண்டு. இவ்வாறே கரிகாலன் சிறையில் இருந்த காலமெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து, சீரிய முடிவுகளுக்கு வந்து சிறைக்காவலரைக் கொன்று தப்பி, பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையும் அடைந்தான்.
 5. முச் சக்கரமும் அளப்பதற்கு நீட்டிய கால்
  இச் சக்கரமே அளந்ததால்- செய்ச் செய்
  அரிகால்மேல் தேன் தொடுக்கும் ஆய் புனல் நீர்நாடன்
  கரிகாலன் கால் நெருப்பு உற்று
 6. http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0461.html
 7. L. Ulaganatha Pillai’s ‘Karikala Chola’, p.66.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிகால்_சோழன்&oldid=3628265" இலிருந்து மீள்விக்கப்பட்டது