உள்ளடக்கத்துக்குச் செல்

சிவகாமியின் சபதம் (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சிவகாமியின் சபதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சிவகாமியின் சபதம்
நூலாசிரியர்கல்கி கிருஷ்ணமூர்த்தி
பட வரைஞர்மணியம்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைவரலாற்றுப் புதினம்
வெளியீட்டாளர்வானதி பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
1940கள்

சிவகாமியின் சபதம், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 12 வருடங்களாகக் கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த இக்கதை பிறகே ஒரு புதினமாக வெளியிடப்பட்டது.

முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற இளவரசன் முக்கிய இடம் வகிக்கிறார்.

கல்கி சஞ்சிகையில் வெளிவந்து பரவலான கவனத்தை ஈர்த்த இந்நாவல்

  1. பரஞ்சோதி யாத்திரை
  2. காஞ்சி முற்றுகை,
  3. பிட்சுவின் காதல்,
  4. சிதைந்த கனவு

என நான்கு பாகங்களைக் கொண்டதாகும்.

கதைச் சுருக்கம்

[தொகு]

இப்புதினத்தின் கதையானது காஞ்சியில் ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாகச் சாளுக்கிய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்தொடுத்தது பற்றிய செய்திகளையும் உள்ளடக்கியதாகும். இக்கதையின் தலைவன் யாரென்பதைச் சுட்டிக் காட்டுவது இயலாத காரியமாகும். முதல் பகுதியில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனே நாயகனைப் போன்று தோன்றினும் பிற்பகுதியில் அவரது மகன் நரசிம்ம பல்லவர் கதையை ஆதிக்கம் செலுத்துகிறார். கதையில் பல்லவ 'மற்றும் சாளுக்கிய நாட்டின் வரலாறு அழகாக எடுத்தியம்பப்பட்டுள்ளது.[1]

இப்புதினம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது

பகுதி 1: பரஞ்சோதி யாத்திரை

[தொகு]

பரஞ்சோதியாரின் காஞ்சி வருகையுடன் இக்கதை தொடங்குகிறது. வழியில் எதிர்படும் சமணர்களினால் காஞ்சியில் ஏற்பட்ட மதமாற்றத்தைப் பற்றியும் நாம் அறியலாம். சமயக் குரவர் நால்வருள் ஒருவரான திருநாவுக்கரசரின் தாள்பணிந்து இறைதொண்டாற்ற நினைத்துக் காஞ்சி வந்தவர் விதிவசத்தால் ஆடலரசியும் பேரழகியுமான சிவகாமியையும் அவள் தந்தையும் தலைமை சிற்பியுமான ஆயனார் அவர்களையும் மதம்கொண்ட யானையின் பிடியிலிருந்து மீட்கிறார். இதனால் ஏற்பட்ட கலவரத்தை முன்னிட்டு பரஞ்சோதியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். பின்னர்தான் அவருக்குக் காஞ்சியை நோக்கிச் சாளுக்கிய மன்னன் புலிகேசி படையெடுத்து வருவதும் மன்னர் தன்னை நேரில் பார்த்து தன் வீரத்தை பாராட்டவே சிறையில் வைத்திருப்பதும் தெரிந்து கொள்கிறார். ஆனால், அதற்கு முன்பாகவே தன்னுடன் காஞ்சி வந்த நாகநந்தி அடிகள் என்னும் புத்த துறவியின் உதவியுடன் சிறையில் இருந்து தப்பிக்கிறார்.

ஒரு சுரங்கத்தின் வழியாகக் கோட்டை சுவரின் வெளியே அமைந்திருக்கும் ஆயனாரின் குடிசைக்குச் செல்கிறார்கள். தனது மாமாவின் துணையால் ஆயனரைப் பற்றி நன்கு அறிந்திருந்த பரஞ்சோதி அவரிடம் சீடனாகச் சேர்ந்து சிற்பக்கலையைக் கற்க நினைத்தார். மூலிகை ஓவியங்களில் மிகவும் ஈடுபாடு கொண்ட ஆயனர் நாகநந்தியிடம் அசந்தா குகைகளில் இருக்கும் வண்ண ஓவியங்களைப் பற்றி வினவினார். அதன் பொருட்டு மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள நாகநந்தியின் சிறுகுறிப்பு ஒன்றுடன் விந்தய மலைத்தொடருக்குப் பரஞ்சோதியார் அனுப்பப்படுகிறார்.

பரதத்தில் நன்கு தேர்ச்சிபெற்ற ஆடல் நங்கை சிவகாமியைக் காண, அவள் காதலனும் இளவரசருமான நரசிம்ம பல்லவர் வந்து செல்லும் விபரமறிந்த மன்னர் மகேந்திரவர்மர் இதற்குச் சம்மதிக்காமல் இருந்தார். அவர் மனதை மாற்றும் பொருட்டு புலிகேசியுடன் போருக்குச் செல்லும் நேரத்தில் காஞ்சியைக் காவல் புரியும் பொறுப்பை நரசிம்மரிடம் கொடுத்திருந்தார் பல்லவ மன்னர்.

விந்தய மலை செல்லும் வழியில் ஓரிரவில் பரஞ்சோதியார், வச்சிரபாகு என்ற போர் வீரனைத் தங்கும் விடுதி ஒன்றில் சந்தித்தார். நடுநிசியில் பரஞ்சோதியாரிடம் இருந்த கடிதத்தின் விஷயத்தை அவர் அறியா வண்ணம் வச்சிரபாகு மாற்றியமைத்தான். விடியலில் இருவரும் பிரிந்துசென்றனர். அன்று எதிர்வந்த சாளுக்ய படையினரால் பரஞ்சோதியார் கைது செய்யப்பட்டார். பின்பு மன்னர் புலிகேசியிடம் கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு விசாரிக்கப்பட்டார். மொழிப் பிரச்சனையின் காரணமாகப் பரஞ்சோதியார் வச்சிரபாகுவினால் விசாரிக்கப்பட்டுக் குற்றமற்றவர் என்று கூறப்பட்டார். வச்சிரபாகு கொடுத்த சமிக்யயுடன் அவனுடன் சில படை வீரர்கள் துணையுடன் தன் பயணத்தைத் தொடர்ந்தனர். அன்றிரவு மற்ற வீரர்கள் தூங்கும் பொழுது வச்சிரபாகு, பரஞ்சோதியாரை அழைத்துக்கொண்டு அவ்விடம் இருந்து தப்பித்துப் பல்லவர் படையிடம் வந்து சேர்ந்தனர். அங்கு வந்த பின்பே தன்னுடன் வந்த வச்சிரபாகு வேறொருவர் அன்றி மன்னர் மகேந்திரவர்மரே என்று அறிந்தார்.

பகுதி 2:காஞ்சி முற்றுகை

[தொகு]

ஏழு மாதங்கள் கழிந்த பின்பு பரஞ்சோதியார் மகேந்திரவர்மரின் நன்மதிப்பை பெற்ற ஓர் சிறந்த படைத் தலைவனாக இருக்கிறார். சாளுக்யருடன் போர் நெருங்கிவரும் இவ்வேளையில் பரஞ்சோதியார் நாடு திரும்பி காஞ்சியில் இளவரசர் நரசிம்மருடன் மிகவும் நட்புடன் இருந்தார். தன் காதலியைச் சந்திக்காமல் நரசிம்மர் படும் வேதனைக்குப், பரஞ்சோதியாரின் நட்பு மருந்தாக இருந்தது. இவ் இக்கட்டான நிலையில் பல்லவ படையின் தலைமை ஒற்றனான சத்ருக்னன் இடமிருந்து, காஞ்சி மீது படையெடுக்க எத்தனித்த துர்வநீதன் என்னும் சிற்றரசன் மீது போர்தொடுக்கும்படி மகேந்திர பல்லவரின் அரசாணை வந்து சேர்ந்தது. சிவகாமியிடம் சோழ பாண்டிய நாடுகளில் நடனமாடும் பெரிய வாய்ப்பு ஒன்றை வாங்கித் தருவதாகக் கூறிய நாகநந்தி அவள் நல்மதிப்பைப் பெற்றான். போரைப் பற்றி எதுவும் அறியாத ஆயனாரிடம் நடக்க இருக்கும் விபரீதத்தினை எடுத்துரைத்த நாகநந்தி அவர்களைப் புத்த விகாரம் ஒன்றில் தங்க வைத்தான். அங்கிருந்து துர்வீந்தன் மீது நரசிம்ம பல்லவர் படையெடுத்து செல்வதைக் கண்ட சிவகாமி அவரிடம் செல்ல நினைக்க, அக்கணம் வஞ்சக எண்ணம் கொண்ட நாகநந்தியால் உடைக்கப்பட்ட ஏரியினால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டாள். இதைக் கண்ட நரசிம்மர் அவளையும் ஆயனாரையும் பத்திரமாக மீட்கிறார்.

பகுதி 3:பிட்சுவின் காதல்

[தொகு]

காஞ்சியின் மதில் சுவரை உடைத்து எறிய நினைத்து அங்கு வந்த புலிகேசிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காஞ்சி அவ்வளவு வலிமையுடன் இருந்தது. இதனால் மனம் தளராத புலிகேசி கோட்டையின் வெளியிலே தண்டு இறங்கி பாசறை அமைத்து தங்கினான். உணவு தட்டுப்பாட்டின் காரணமாகக் காஞ்சி விரைவில் வீழும் என்று நினைத்தான் புலிகேசி. ஆனால் அவன் கூற்றைப் பொய்யாக்கும்படி காஞ்சியிடம் தேவைக்கு அதிகமாகவே உணவு இருப்பு இருந்தது. அதற்கு நேர் மாறாகச் சாளுக்ய படையிடம் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக யானைகளைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக மாறியது.

தோல்வியை ஏற்க விரும்பாத புலிகேசி அமைதி தூது விடுத்துக் காத்திருந்தான். இதை சிறிதும் நம்பாத மன்னர் மகேந்திர பல்லவர், நரசிம்மரைத் தெற்கே சென்று பாண்டியனிடம் போர்புரிய அனுப்பிவிட்டுப் பின்பு புலிகேசியை அரண்மனைக்கு அழைத்தார். இராச உபசரிப்பையும், விருந்தோம்பலையும் நன்கு அனுபவித்தான். மன்னரின் வேண்டுகோளுக்கிணங்க மண்டபப்பட்டிலிருந்து வந்த சிவகாமி தன் நாட்டிய விருந்தால் புலிகேசியை மகிழ்வித்தால். அவளும் அவள் தந்தையும் கோட்டை வாயில் திறக்கும் வரை காஞ்சியிலே தங்கி இருந்தனர். புலிகேசி விடைபெறுமுன் வச்சிரபாகுவாய் வந்தது தாமே என்ற உண்மையை மகேந்திரர் போட்டுடைத்தார். இதனால் தனக்கு ஏற்பட்ட அவமானத்தைக் காட்டிக்கொள்ளாத புலிகேசி காஞ்சியை விட்டு வெளியேறிய பின்பு தன் படை வீரர்களிடம் கண்ணில் தென்படும் அனைத்தையும் அழிக்குமாறு உத்தரவிட்டான். மற்றும் மகேந்திரவர்மரின் கலைஞர்களின் கரங்களைத் துண்டிக்கவும் ஆணையிட்டான்.

நடக்கப்போகும் விபரீதமறியா ஆயனார், சிவகாமியுடன் சுரங்கம் ஒன்றின் வழியாகக் காஞ்சியை விட்டு வெளியேறி புலிகேசியிடம் மாட்டிக்கொண்டார். புலிகேசியைப் போல் வேடம் புனைந்த நாகநந்தி ஆயநாரை மட்டும் காவலர்களிடமிருந்து மீட்டான் (இவ்விடம் புலிகேசியும் நாகநந்தியும் இரட்டை சகோதரர்கள் என்பதை தெரியபடுத்திக் கொள்கிறார்கள்). புலிகேசியுடன் எதிர்கொண்ட போரில் மகேந்திரவர்மர் பலத்த காயமடைகிறார். மரணப்படுக்கையில் அவர் சாளுக்ய மன்னனுடன் அமைதி உடன்பாடு கொண்டதின் தவற்றை உணர்ந்தார். இக்களங்கத்தைப் போக்க நரசிம்மப் பல்லவரை சாளுக்ய நாடு சென்று சிவகாமியைப் புலிகேசியின் பிடியிலிருந்து மீட்டுவரும்படி கூறுகிறார்.

சிவகாமி, மற்ற கைதிகளுடன் வாதாபி கொண்டுசெல்லப்பட்டாள். புலிகேசியிடம், தான் சிவகாமியின்பால் காதல் கொண்ட உண்மையை நாகநந்தி தெரிவித்தான். பின்பு புலிகேசி சிவகாமியைப் பார்த்துகொள்வேன் என்று வாக்களித்த பின்பு போர்முனையைத் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறிப் புறப்பட்டான். வாதாபியில் பல்லவரை வென்று வாகை சூடியதாகக் கூறி வெற்றி முழக்கமிட்டான். தன் சபையில் வீற்றிருக்கும் பாரசீக தூதுவர்முன் ஆட மறுத்த சிவகாமியை ஆட வைப்பதற்காகத் தான் பிடித்து வந்த பல்லவ நாட்டினரைச் சிவகாமியின் முன் கொடுமைப் படுத்தினான். இம்முறையைத் தினமும் பின்பற்றி அவளை ஆடச்செய்தான். இதனால் மனம் வெதும்பிய சிவகாமி சீற்றம் கொண்டு சினத்துடன் ஓர் சபதம் கொண்டாள். தன் காதலர் நரசிம்ம பல்லவர் இவ்வாதாபி நகரத்தை தீக்கிரையாக்கித் தன்னை மீட்டுச் செல்லும் வரை தான் அந்நகர் விட்டு வெளியேறுவதில்லை என்று சூளுரைத்தாள். பின்பு ஒருமுறை தன்னை அழைத்துச்செல்ல ரகசியமாய் வந்த நரசிம்மரிடமும் இதையே கூறி உடன் செல்ல மறுத்தாள்--

பகுதி 4:சிதைந்த கனவு

[தொகு]

காலம் உருண்டோடி ஒன்பது ஆண்டுகள் கடந்தன. புலிகேசியுடன் ஏற்பட்ட போரினால் காயமுற்று மரணபடுக்கையில் இருந்த மாமன்னர் மகேந்திர பல்லவர் அதிலிருத்து மீளாமலேயே வீரமரணமெய்தினார். தந்தைக்குப் பின் முடிசூடிய நரசிம்மவர்மர், பாண்டிய இளவரசி வானமாதேவியை மணம்புரிந்திருந்தார். ஆனால் வாதாபியை நோக்கி படையெடுப்பில், அவரது முனைப்பு சிறிதும் குறையாமல் இருந்தது. இதற்கிடையே புலிகேசிக்கும், நாகநந்திக்கும் இடையேயான கருத்துவேறுபாடுகள் அதிகரித்து இருந்தது. தான் நாட்டை துறந்து, பதவியாசையை விட்டு துறவறம் புரிந்தது தவறென்று எண்ணினான். இதன் பொருட்டு பல்லவர்கள் படையெடுப்பைப் பற்றித் தெரிந்தும் அவன் அதைக் கூறாமல் மறைத்தான். இவனது எல்லா மனக்குழப்பத்திற்கும், சிவகாமி அவனை மணப்பதற்கு சம்மதிக்காமையே காரணமாகும்.

புலிகேசி அசந்தாவில் நடைபெறும் கலாசார விழாவிற்கு சென்றிருந்த வேளையில் பல்லவர் படை வாதாபிக் கோட்டையை சூழ்ந்தது. இதைச் சற்றும் எதிர்காணா வாதாபி பல்லவரிடம் பணிய முனைந்தது. இதற்கிடைய விபரமறிந்து விரைந்து வந்த புலிகேசியின் படையுடன் கோட்டைக்கு அப்பால் போர் நடந்தது. இதில் மன்னன் புலிகேசி கொல்லப்பட்டான். யாரும் இதை அறியும் முன்பாக நாகநந்தி தன் சகோதரனின் உடலை எடுத்துச்சென்று அதனைச் சிதையிலிட்டான். பின்பு சுரங்கப் பாதை மூலம் நகரினுள் வந்த நாகநந்தி புலிகேசிபோல் வேடமிட்டு போர்க்களம் வந்தான். முன்னர் அறிவித்த அடிபணியும் அறிவிப்பையும் நீக்கினான். இதனால் கோபமுற்ற நரசிம்ம பல்லவர் வாதாபியைத் தீக்கிரையாக்க கட்டளையிட்டார்.

இக்கதையின் முடிவாக ஒருகை இழந்த நாகநந்தி பரஞ்சோதியாரால் புத்த துறவி என்ற காரணத்தினால் உயிருடன் விடப்பட்டான். போரினால் தான் பாவம் செய்ததாக நினைத்த பரஞ்சோதியார் பின் சைவதுறவியாக மாறினார். நாடு திரும்பிய சிவகாமி தன் காதலன் இன்னொரு பெண்ணின் கணவரென்பதையறிந்து தன் கனவு சிதைந்ததை எண்ணி மனத்தால் இறந்தாள். பின் தன் பரதக் கலைக்கே தன்னை அர்ப்பணிக்கும் விதமாகக் காஞ்சி ஏகாம்பரேசுவரருக்கே திருமாங்கல்யம் கட்டிக் கொண்டாள். இக்காட்சியுடன் இக்கதை முடிவடைகிறது.

முக்கிய பாத்திரங்கள்

[தொகு]

மகேந்திரவர்மன் : கல்கி இவரை ஆயகலைகளில் சிறந்தவராகவும் அவைகளை விரும்பி வளர்ப்பவராகவும் சித்திரித்துள்ளார். நுண்ணிய அறிவு கூர்மை உடையவராகவும் மந்திரிகளின் ஆலோசனைகளை ஏற்பவராகவும் உள்ளார். இவர் காலத்தில்தான் மாமல்லபுரம் சிற்பங்களால் அழகுற்றது. முன்பு சமண சமயத்தைப் பின்பற்றிய இவர் பிற்காலத்தில் சைவ சமயத்தைப் பின்பற்றினார். சமய ஒற்றுமையை விரும்பினார்.

வரலாற்றில் முக்கிய இடம்பெறுவோர்

[தொகு]

ஏனைய சில பாத்திரங்கள்

[தொகு]

இணையத்தில் சிவகாமியின் சபதம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]