உள்ளடக்கத்துக்குச் செல்

ஈழம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தற்காலத்தில் இலங்கை என அழைக்கப்படும் தீவு பழங்காலத்தில் ஈழம் என அறியப்பட்டது. பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்பட்ட 'ஈழத்துணவு', 'ஈழத்துப் பூதந்தேவனார்' போன்ற சொற்கள் மேற்படி தீவின் தொடர்புகளைக் காட்டி நின்றன. பழந் தமிழ் மன்னர்களால் வெளியிடப்பட்ட சாசனங்களும் ஈழம் அல்லது ஈழ மண்டலம் என்ற பெயரைப் பயன்படுத்தின.

பெயர்த் தோற்றம்

[தொகு]

தமிழ்ச்சொல்

[தொகு]

ஈழம் என்னும் சொல் கீழம் என்பதன் மற்றொரு வடிவம்[1] இதனை மரூஉ என்றும் கொள்ளலாம். “கீழ் என் கிளவி உறழத் தோன்றும்” என்பது தொல்காப்பியம்.[2] கீழ் என்னும் சொல் இரண்டு பொருளில் வரும். ஒன்று தாழ்வைக் குறிக்கும். மற்றொன்று கிழக்குத் திசையைக் குறிக்கும். தமிழ்நாடு பொதுவாகப் பார்த்தால் கிழக்கில் தாழ்ந்த நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. தாழ்வை இழிவு என்கிறோம். இது மனப்பாங்குப் பார்வை. நிலச்சரிவுப் பார்வையில் இலங்கை தமிழ்நாட்டின் சரிவாக உள்ளது. நீரிழிவு என்னும்போது இழிவு என்னும் சொல் இறங்குதலைக் குறிக்கிறது. இழிவு < > ஈழ் < ஈழம். இது தமிழர் வழங்கிய தமிழ்சொல்.

பிறசொல்

[தொகு]

ஈழம் என்ற பெயர்த் தோற்றம் பற்றிப் பொதுக் கருத்து இல்லை இது பற்றிய வாதங்களும், எதிர் வாதங்களும் இன்னும் தொடர்ந்து வருகின்றன. ஈழம் என்ற பெயர் இத் தீவைக் குறிக்கும் பாளிமொழிச் சொல்லான 'சிஹலம்' என்பதிலிருந்து திரிந்தது எனக் கிருஷ்ணசாமி ஐயங்கார் போன்றவர்கள் கருதினார்கள். வேறு சிலரோ ஈழம் என்ற சொல்லே 'சிஹலம்' என்று திரிபடைந்தது என்பர். இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே நிலை இப்படியாயின், இவ்வாறான ஆய்வுகள் அரசியல் பின்னணியால் பாதிக்கப்படுகின்ற தற்காலத்தில் முரண்பாடுகள் குறையும் வாய்ப்பு இல்லை.

'தமிழு'ம் 'ஈழ'மும்

[தொகு]

ஈழம் என்ற சொல்லுக்குப் பாலி அல்லது சிங்கள மூலம் காட்டுகின்ற அதேவேளை சில ஆய்வாளர் 'தமிழ்' என்ற சொல்லும் ஈழம் என்ற சொல்வழியாக, 'சிஹலம்' என்பதிலிருந்தே உருவானதாகக் காட்ட முயல்கின்றனர்.

தற்காலத்தில் 'ஈழம்'

[தொகு]

இலங்கையில் இன முரண்பாடுகள் அதிகம் கூர்மையடையாதிருந்த காலத்தில் ஈழகேசரி, ஈழநாடு போன்ற பெயர்கள் செய்திப் பத்திரிகைகளின் பெயர்களாகப் பிரபலம் பெற்றிருந்தன. அரசியலில் இன வேறுபாடுகள் விரிவடைந்துவந்தபோது, அரசியல் அரங்கில், இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளைக் குறிக்கத் 'தமிழீழம்' என்ற சொல்லைப் பயன் படுத்திவந்தனர். இலங்கையில் தமிழர்களுக்குத் தனி நாடு வேண்டுமென்ற கோரிக்கையைச் சில அரசியல் கட்சிகள் முன்வைத்தபோது, கோரப்பட்ட அந்நாட்டுக்கும் 'தமிழீழம்' என்ற பெயரையே பயன்படுத்தினார்கள். காலப்போக்கில், பேச்சு வழக்கிலும், சிங்கள இனத்தவர் மத்தியிலும் 'தமிழீழம்' சுருங்கி ஈழம் ஆகியது. ஒரு காலத்தில் முழு இலங்கைத் தீவையும் குறிக்கப் பயன்பட்ட சொல், இன்று அதன் ஒரு பகுதியை மட்டுமே குறிக்கும் சொல்லாக மாறியுள்ளது.

இலக்கியத்தில் ஈழம்

[தொகு]

தமிழின் சங்க இலக்கியங்களில் ஒன்றான பட்டினப்பாலையில்,

ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும்,

அரியவும், பெரியவும், நெரிய ஈண்டி,

வளம் தலைமயங்கிய நனந் தலை மறுகின்

நீர் நாப்பண்ணும் நிலத்தின் மேலும்

ஏமாப்ப இனிது துஞ்சி.

என்ற பாடலில் ஈழத்து உணவு என்ற சொல்லாடல் மூலம் ஈழம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடிக்குறிப்பு

[தொகு]
    • கிழக்கிடும் பொருளோடு ஐந்தும் ஆகும். (கிழக்கு = தாழ்வு) – தொல்காப்பியம் உவமவியல் 5
    • இழிதரும் அருவி (இழி = தாழ்) புறநானூறு 154, 399, திருமுருகாற்றுப்படை 316
    • கிழி < > கீழ் (கிழி = கிழிந்த துணி, கீழ் = கிழிந்த துணியாலான கோவணம்)
    • உழி < > ஊழ் (உற்றுழி = துன்பம் வந்தபோது – புறம் 183, ஊழ் = தோன்றுதலை உணர்த்தும் வினைச்சொல், இணர் ஊழ்த்தும் – திருக்குறள் 650
    • கழி < > காழ் (கழி = வயிரம் பாய்ந்த மூங்கில், காழ் = வயிரம் – திருக்குறள் ‘காழ்த்தவிடத்து’ 879)
    • ஆழ் < > காழ் (ஆழ் = அழுந்து, காழ் = அழுத்தம் கொண்ட வயிரம்)
    • ஈ = பொருளைப் பிறருக்குத் தாழ்த்துதல்
    இவற்றால் ஈழம் என்பது தாழ்திசையாகிய கிழக்குத் திசையிலுள்ள நிலம் என்பது தெளிவு. (ஈழம் < கீழம் – சொல்விரிவு)
  1. புள்ளிமயங்கியல் 100

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈழம்&oldid=3648419" இலிருந்து மீள்விக்கப்பட்டது