கோல்புறூக்-கேமரன் ஆணைக்குழு
கோல்புறூக்-கேமரன் ஆணைக்குழு (Colebrooke-Cameron Commission) என்பது பிரித்தானிய இலங்கையின் நிருவாகத்தை மதிப்பிடுவதற்கும், அந்நாட்டின் நிருவாகம், நிதி, பொருளாதாரம், மற்றும் நீதித்துறை ஆகியவற்றில் மெற்கொள்ளவேண்டிய சீர்திருத்தங்களைப் பரிந்துரைக்கவும், 1829 ஆம் ஆண்டில் பிரித்தானிய குடியேற்ற அலுவலகத்தினால் அமைக்கப்பட்ட ஒரு அரசு ஆணைக்குழு ஆகும். இவ்வாணைக்குழுவில் டபிள்யூ. எம். ஜி. கோல்புரூக், மற்றும் சி. எச். கேமரன் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களது பரிந்துரைகளில் பெரும்பாலானவை ஏற்றுக் கொள்ளப்பட்டன. இவை கோல்புறூக்-கேமரன் சீர்திருத்தங்கள் என அழைக்கப்பட்டன.
இலங்கையில் 1833 முதல் 1910 வரை அமுலிலிருந்த அரசியலமைப்பு இதுவாகும். பிரித்தானியரால் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட முதலாவது அரசியலமைப்பும் இதுவே. இலங்கையில் மன்னராட்சி முறையின் கீழ் அல்லது போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சிக்காலங்களில் திட்டமிடப்பட்ட அரசியல் நிர்வாகமுறை எதுவும் காணப்படவில்லை. இலங்கையின் அரசியலானது மன்னராட்சிக் காலத்தில் மரபுவழி சார்ந்த நிர்வாக முறைகளையே கொண்டிருந்தது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் இலங்கையில் பொருளாதாரத்தை பெற்றுக்கொள்ள எத்தனித்தார்களே தவிர, அவர்கள் அரசியலில் ஒரு திட்டமிட்ட ஏற்பாட்டினையும் வழங்கவில்லை. இந்த நிலையில் ஓர் அரசியல் அமைப்பின் கீழ் இலங்கை ஆட்சிமுறையை வழித்திய நாடாக பிரித்தானியாவைக் குறிப்பிடலாம்.
யாப்பு நிர்ணய சபை
[தொகு]கோல்புறூக் அரசியலமைப்பு கோல்புறூக் பிரபுவின் தலைமையில் அமைக்கப்பட்ட யாப்பு நிர்ணய சபையினால் ஏற்படுத்தப்பட்டது. இலங்கையில் நீதித்துறை தொடர்பான சீர்த்திருத்தங்களுக்கு பொறுப்பாக கெமரன் என்பவர் இருந்தார். சட்டம், நீதி, நிர்வாகம் மூன்றும் இணைக்கப்பட்ட அடிப்படையில் இந்த அரசியலமைப்பு அமைக்கப்பட்டமையினால் இது வரலாற்றில் கோல்புறூக் கெமரன் அரசியலமைப்பு அல்லது 1833ம் ஆண்டு அரசியலமைப்பு என வழங்கப்படுகின்றது.
சட்டவாக்க சபை
[தொகு]சட்டவாக்க சபை எனும்போது சட்டங்களை உருவாக்கும் அதிகாரம் பொருந்திய சபையினையே குறிக்கின்றது.
அமைப்பு
[தொகு]கோல்புறூக் அரசியலமைப்பின் கீழ் அமைக்கப்பட்ட இலங்கை சட்டசபை மொத்தமாக 15 அங்கத்தவர்களை கொண்டதாக அமைந்தது. இதில் உத்தியோக சார்புள்ளோர் எண்ணிக்கை 9 ஆகும். உத்தியோக சார்பற்றோர் எண்ணிக்கை 6 ஆகும்.
உத்தியோக சார்புள்ள அங்கத்தவர்கள்
[தொகு]கோல்புறூக் அரசியலமைப்பின் கீழ் அமைக்கப்பட்ட சட்டநிரூபண சபையில் உத்தியோக சார்புள்ள அங்கத்தவர்கள் 9 பேர் இடம்பெற்றனர். இங்கு உத்தியோக சார்புள்ளோர் எனும்போது பிரித்தானிய அரசாங்கத்தினால் ஊதியம் பெறும் இலங்கையில் பணியாற்றிய அதிகாரிகளைக் குறிக்கும். இவர்களுள் பதவிவழி காரணமாக 6 உறுப்பினர்களும் தேசாதிபதியினால் விசேடமாக நியமிக்கப்படும் 3 உத்தியோகத்தர்களும் அடங்குவர்.
பதவி வழி
[தொகு]பதவி வழிகாரணமாக சட்டநிரூபண சபையில் இடம்பெற்ற உத்தியோகசார்புள்ள அங்கத்தவர்கள் பின்வருமாறு:
- அரசாங்கக் காரியதரிசி
- தனாதிகாரி
- கணக்காளர் நாயகம்
- நில அளவை அதிகாரி
- வருமான வரி அதிகாரி
- (கொழும்பு) அரசாங்க அதிபர்
நியமன உத்தியோகத்தினர்
[தொகு]மீதமான 3 உத்தியோகசார்புள்ள அங்கத்தவர்களையும் தேசாதிபதி தனக்கு வேண்டிய உத்தியோகத்தர்களிலிருந்து நியமிப்பார்.
உத்தியோகச் சார்பு அற்றோர்
[தொகு]சடடநிரூபண சபையில் உத்தியோகச் சார்பு அற்ற 6 உறுப்பினர்கள் இடம்பெற்றனர். இங்கு உத்தியோக சார்பற்றோர் எனும்போது பிரித்தானிய அரசாங்கத்தால் வேதனம் பெறாத இலங்கையைச் சேர்ந்தவர்கள். அல்லது இலங்கையில் பிரஜாவுரிமையைப் பெற்றவர்களைக் குறிக்கும். இவர்கள்:
- ஐரோப்பியர் - 03
- சிங்களவர் (கரையோர) - 01
- தமிழர் - 01
- பறங்கியர் - 01
சட்டம், நிர்வாகம் இணைந்த சபை
[தொகு]- சட்டநிரூபணசபை, சட்டவாக்கங்களையும் சட்டநிர்வாக சபை, நிர்வாக விடயங்களையும் மேற்கொள்ளும். இலங்கையில் பணிபுரிந்த பிரித்தானிய உத்தியோகத்தர்களே உத்தியோகசார்புற்ற அங்கத்தவர்கள் என அழைக்கப்பட்டனர். இவர்களின் பதவிவழிகாரணமாகவர்கள் சட்ட நிர்வாகக் கழகத்தினராகச் செயல்பட்டனர்.
- அமைக்கப்பட்ட இச்சபைகள் தேசாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்குவதையே நோக்கமாகக் கொண்டிருந்தன.
முக்கிய திருத்தங்கள்:
[தொகு]- 1848ல் சட்டநிரூபண சபையின் அனுமதியின்றி குடியேற்ற நாட்டுக்காரியதரிசியால் பொது நிதியைச் செலவிட முடியாதென மாற்றப்பட்டது.
- 1859ல் உத்தியோக சார்பற்ற உறுப்பினர்களுக்கும் மசோதாக்களைக் கொண்டுவரும் அதிகாரம் வழங்கப்பட்டது.
- 1889ல் சட்டநிரூபண சபை அங்கத்தவர் எண்ணிக்கை 17ஆக உயர்த்தப்பட்டது. இவ்வாறு அதிகரிக்கப்பட்ட இரண்டு அங்கத்தவர்களும் உத்தியோக சார்பற்றவர்களாவர். இவர்கள்
- முஸ்லிம் - 1
- கண்டிய சிங்களவர் -1
உசாத்துணை
[தொகு]- மெண்டிஸ், ஜீ. ஸி - நம்முன்னோரளித்த அருஞ்செல்வம், முதலாம் பாகம், கொழும்பு அப்போதிக்கரீஸ் கம்பனி, 1969
- புன்னியாமீன் பீ. எம்., - வரலாறு ஆண்டு 11 கண்டி சிந்தனை வட்டம், 1998