உள்ளடக்கத்துக்குச் செல்

டொனமூர் அரசியலமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டொனமூர் அரசியலமைப்பு (டொனமூர் அரசியல் யாப்பு, Donoughmore Constitution) என்பது பிரித்தானிய இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட அரசியலமைப்பு ஆகும். 1924 முதல் அமுலில் இருந்த மனிங்-டெவொன்சயர் அரசியல் சீர்திருத்தம் டொனமூர் ஆணைக்குழு மூலம் திருத்தியமைக்கப்பட்டு புதிய அரசியலமைப்புக்கு டொனமூர் அரசியலமைப்பு எனப் பெயரிடப்பட்டது. இது 1931 முதல் 1947 ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது. நவீன இலங்கையின் வரலாற்றில் ஐந்தாவது அரசியல் திட்டமாக இது கொள்ளப்படுகின்றது. இது ஆளுநர் கர்பட் ஸ்டான்லி அவர்களின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டது. டொனமூர் ஆணைக்குழுவில் சேர். மேதிவ் நேதன், சேர் ஜெப்ரி பட்லர் மற்றும் பேராசிரியர் டிரமன்ட் ஷீல்ஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த அரசியலமைப்பு 1947 இல் சோல்பரி அரசியலமைப்பாக மாற்றப்பட்டது.

டொனமூர் குழுவினரின் வருகை[தொகு]

1924ம் ஆண்டு அரசியல் அமைப்பில் காணப்பட்ட குறைபாடுகளை உணர்ந்த தேசாதிபதி ஹியுகிளிபேட்டின் சிபாரிசுக்கமையவும், தேசியகாங்கிரஸ் மற்றும் தேசியத் தலைவர்களின் கோரிக்கையை அடுத்தும் நவம்பர் 13 1927 ம் திகதி டொனமூர் குழுவினர் இலங்கைக்கு வந்தனர்.

விதந்துரைப்புகளைத் தயாரிக்கையில் கவனத்தில் எடுத்தவை[தொகு]

 • சனநாயக நிறுவனங்களை அமைத்தல்
 • சமத்துவம், சமவாய்ப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தல்
 • சர்வசன வாக்குரிமையை வழங்கல்
 • இனவாரிப் பிரதிநிதித்துவத்தை நீக்கி பிரதேச ரீதியான பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தல்
 • சுமார் 80,000 ஒதுக்கப்பட்ட மக்களின் நல உரிமைகளைப் பாதுகாத்தல்

டொனமூர் விதந்துரைப்புகளில் முக்கிய விடயங்கள்[தொகு]

 • 21 வயதுக்கு மேற்பட்ட சகல ஆண் பெண்களுக்கும் சர்வசன வாக்குரிமை வழங்கியமை
 • இலங்கை சட்டவாக்கப் பேரவைக்குப் பதிலாக இலங்கை அரச சபையை அமைத்தமை
 • சுதேச மக்களுக்கு நிர்வாகத்தில் ஈடுபட நிர்வாகக் குழு முறையை ஏற்படுத்தியமை
 • உள்நாட்டு நிர்வாகப் பொறுப்புகளை வழங்கியமை

சர்வசன வாக்குரிமையை வழங்கல்[தொகு]

21 வயதுக்கு மேற்பட்ட சகல ஆண், பெண்களுக்கும் எவ்விதத்தகுதி வித்தியாசமுமின்றி வழங்கப்பட்ட வாக்குரிமை சர்வசன வாக்குரிமை எனப்படுகின்றது. (இது 1931ல் வழங்கப்பட்டது) 1931ல் சுமார் 18,50,000 பேர் வாக்குரிமை பெறுவர் என எதிர்பார்க்கப்பட்டது.

இதன் மூலம்

 • சமூக நலன் பேணும் சட்டங்கள் உருவானவை
 • மக்களின் அரசியல் ஈடுபாடு அதிகரித்தமை
 • பெண்கள் வாக்குரிமை பெற்றமையால் பெண்கள் நலன், குழந்தை நலன் என்பன பேணப்பட்டமை
 • சமச்சீர் அபிவிருத்தி ஏற்பட்டமை
 • கிராமப்புரங்கள் அபிவிருத்தியடைந்தமை
 • மக்களின் மனக்குறைகளைத் தீர்க்க வழி ஏற்பட்டமை
 • ஒதுக்கப்பட்ட சுமார் 80,000 மக்களின் நல உரிமைகள் பாதுகாக்கப்பட்டமை
 • ஜனநாயகப் பண்புகள் கட்டவிழ்க்கப்பட்டமை

டொனமூர் அரசாங்கசபையின் கட்டமைப்பு[தொகு]

 • மொத்த உறுப்பிர்கள் 61
 • சர்வசன வாக்குரிமை மூலம் 50 உறுப்பினர்
 • இனரீதியான நியமனம் 8 உறுப்பினர்கள்
 • உத்தியோக சார்புள்ளோர் 3 பேர்
  • பிரதம செயலாளர்.
  • நிதிச் செயலாளர்
  • சட்டத்துறை நாயகம்
 • அரசாங்க சபை சட்டங்களை ஆக்கும் அதிகாரம் பெற்றிருந்தது. இச்சட்டங்களை அமுல்படுத்த தேசாதிபதியின் அங்கீகாரம் அவசியம்.

நிர்வாகக் குழு முறை[தொகு]

 • இலங்கையில் மந்திரிசபை முறையை ஏற்படுத்தக்கூடிய அரசியல் சூழ்நிலையோ, அரசியல் கட்சிகளோ காணப்படவில்லை.
 • இருப்பினும் உள்நாட்டு மக்களுக்கு உள்ளுராட்சி நிர்வாகப் பொறுப்புக்களை வழங்கவே இது ஏற்படுத்தப்பட்டது
 • அரசாங்க சபையில் மொத்த உறுப்பினர்கள் 61 பேரில் 3 அரசாங்க உத்தியோகத்தர்களையும், சபாநாயகரையும் தவிர ஏனைய 57 உறுப்பினர்களும் (குறைந்தது 7 கூடியது 9 எனும் அடிப்படையில்) 7 குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். இவ்வாறு பிரிக்கப்பட்டு 7 இலாகாக்கள் இவர்களுக்கு வழங்கப்பட்டன.
  • உள்நாட்டலுவல்கள்
  • விவசாயமும் காணியும்
  • உள்ளுராட்சி
  • சுகாதாரம்
  • கல்வி
  • போக்குவரத்து
  • தொழில் கைத்தொழில் வர்த்தகம்

இம்முறையே நிர்வாகக்குழு முறை என அழைக்கப்படுகின்றது.

 • இக்குழுக்களின் தலைவர்கள் அமைச்சர்கள் போல கருதப்பட்டனர்
 • உள்நாட்டு நிர்வாகப் பொறுப்புகள் உள்நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டமை இங்கு முக்கிய அம்சமாகும்

உசாத்துணைகள்[தொகு]

 • Russell, Jane (1982). Communal Politics Under the Donoughmore Constitution. Colombo: Tisara Publishers.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டொனமூர்_அரசியலமைப்பு&oldid=3866652" இலிருந்து மீள்விக்கப்பட்டது