உள்ளடக்கத்துக்குச் செல்

ஆரியச் சக்கரவர்த்திகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரியச் சக்கரவர்த்தி
நாடுஇலங்கை
விருதுப்
பெயர்கள்
சிங்கையாரியன், சேதுக்காவலன், கங்கையாரியர் கோன்
நிறுவிய
ஆண்டு
13ஆம் நூற்றாண்டு
நிறுவனர்கூழங்கை ஆரியச்சக்கரவர்த்தி
இறுதி ஆட்சியர்இரண்டாம் சங்கிலியாழ்ப்பாண அரசு
கலைப்பு1619
பிரிவுகள்None
1520களில் யாழ்ப்பாண அரசு (வெள்ளை நிறம்)

ஆரியச் சக்கரவர்த்திகள் என்பது, இலங்கைத் தீவின் வட பாகத்திலிருந்த யாழ்ப்பாண இராச்சியத்தை 13 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 17ஆம் நூற்றாண்டு முற்பகுதி வரை ஆண்ட அரச வம்சத்து மன்னர்களைக் குறிக்கும். இவ்வம்சத்தின் தோற்றம் பற்றியோ இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது பற்றியோ எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தகவல்கள் ஏதும் இல்லை. பெரும்பாலும் இவர்கள் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் என்ற பாண்டிய மன்னனின் அமைச்சர் ஆரியச் சக்கரவர்த்தி வழி வந்தவர்களே என்று கூறப்பட்டாலும்[1] மாற்றுக் கருத்துகளும் உள்ளன. இவ்வரசைத் தொடங்கிய கூழங்கைச் சக்கரவர்த்தி தென்னன் நிகரானவன் என்று போற்றப்படுவதால் இது பாண்டியர் ஆணை கீழ் நட்ந்த இராச்சியம் என்பது பெரும்பாலானோர் கருத்து.[2][3] யாழ்ப்பாணத்தின் வரலாறு பற்றிக் கூறும் வையாபாடல், யாழ்ப்பாண வைபவமாலை போன்ற நூல்கள், யாழ்ப்பாண அரசு அரசனில்லாது இருந்தபொழுது, தமிழ்நாட்டிலிருந்து அழைத்துவரப்பட்ட இளவரசனாலேயே இந்த வம்சம் ஆரம்பித்துவைக்கப் பட்டதாகக் கூறுகின்றன.

எனினும் இம் முதல் ஆரியச் சக்கரவர்த்தியின் காலம் பற்றியோ அல்லது அவ்வரசனுடைய அடையாளம் பற்றியோ பொதுக்கருத்துக் கிடையாது. வடமேற்கு இந்தியாவின், குஜராத், கிழக்கிந்தியாவிலிருந்த கலிங்க தேசம், தமிழ் நாட்டிலுள்ள ராமேஸ்வரம், சோழநாடு போன்ற பல இடங்களையும், அவர்களது பூர்வீக இடங்களாகக் காட்டப் பல ஆய்வாளர்கள் முயன்றுள்ளார்கள்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள நூல்கள் முதலாவது ஆரியச் சக்கரவர்த்தியை கூழங்கைச் சக்கரவர்த்தி, விஜய கூழங்கைச் சக்கரவர்த்தி, கோளறு கரத்துக் குரிசில் எனப் பலவாறாக குறிப்பிடுகின்றன. அவ்வரசனின் கையிலிருந்த ஊனம் (கூழங்கை) காரணமாகவே இப்பெயர்கள் வழங்கியதாகக், காரணமும் கூறப்படுகிறது.

இது தவிர, 13ஆம் நூற்றாண்டில், தமிழ்ப் படைகளின் உதவியோடு வட பகுதி உட்பட்ட இலங்கையின் ஒரு பகுதியைக் கைப்பற்றிய கலிங்க தேசத்தவனான, கலிங்க மாகன் என்பவனே முதல் ஆரியச்சக்கரவர்த்தி எனவும் சிலர் நிறுவ முயன்றுள்ளார்கள். காலிங்கச் சக்கரவர்த்தி என்பதே கூழங்கைச் சக்கரவர்த்தியெனத் திரிபடைந்திருக்கக் கூடும் என்பது அவர்களது கருத்து.

இவ்வம்சத்தின் தோற்ற காலம் பற்றியும், கருத்து-எதிர்க்கருத்துகள் (வாதப் பிரதிவாதங்கள்) உண்டு. யாழ்ப்பாண வைபவமாலை, வையாபாடல் போன்றவை முதலரசன் காலத்தை முறையே --க்கும், --க்கும் முன்தள்ளியுள்ளன.

யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதல் மன்னனாகவிருந்த இளவரசன் பற்றிக் குறிப்பிடும்போது, யாழ்ப்பாண வரலாறு கூறும் நூல்களில் முந்தியதாகக் கருதப்படும் கைலாயமாலை, பின்வருமாறு கூறுகிறது.

.......செல்வமது ரைச்செழிய சேகரன்செய் மாதங்கள்
மல்க வியன்மகவாய் வந்தபிரான்-கல்விநிறை
தென்ன(ன்)நிக ரான செகராசன் தென்னிலங்கை
மன்னவனா குஞ்சிங்கை ஆரியமால்............[4]

இதன்படி பாண்டியன் (செழிய சேகரன்) மகன் செகராசன் என்னும் சிங்கை ஆரியன் என்பதே அவனை அடையாளம் காட்டும் தகவல்கள். இதில், முதற்பகுதி தந்தையையும், அடுத்த பகுதி இடப்பட்ட பெயரையும் குறித்தது. மூன்றாம் பகுதி சிங்கை. பிற்பகுதி, ஆரியன் என்பதாகும். சிங்கை என்பது சிங்கபுரம் அல்லது சிங்கைநகர் என்னும், இந்த அரச வம்சத்தவரோடு தொடர்புள்ள, இடப்பெயரைக் குறிக்கின்றது என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது எனினும், எங்கேயுள்ளது என்பது பற்றியும் அதனுடன் அவர்களுக்கு உள்ள தொடர்பின் தன்மை பற்றியும் ஒத்த கருத்து இல்லை. ஆரியன் என்பது இவர்கள் பிராமணர்கள் என்பதைக் குறிப்பதாகச் சிலரும், இவர்கள் கலிங்கத்து ஆரியர் இனத்தவர் என்பதைக் குறிப்பதாக வேறு சிலரும் கூறுகிறார்கள். ஆரியன் என்பது பாண்டிய மரபினரைக் குறிக்கும் சொல்லாக மகாவம்ச நூல் மற்றும் பிங்கல நிகண்டு தெரிவிக்கின்றது. ஆரியன் என்ற சொல்லிற்கு அழகன், உயர்ந்தவன், பாண்டியன் எனப் பொருட் கொண்டு தென்னிலங்கையில் உரோகணை மற்றும் கல்யாணி நாடுகளை ஆரியர் என்ற பெயரில் பாண்டிய வம்சத்தினர் ஆட்சி செய்த செய்தியை மகாவம்சம் கூறுகின்றது. ஆரியர் என்ற சொல் ஆழியர் என்ற சொல்லின் திரிபாகவும் பிங்கல நிகண்டு அறிவிக்கின்றது. அனைத்தும் இவர் தம் பாண்டிய மன்னரின் தொடர்பையே காட்டுகின்றது.

ராமேஸ்வரம் கோவிலை  பரராஜ சேகரன் என்றவர் 1414 ம் வருடம் கட்டினார்  என்ற குறிப்பு கோவிலின் கல்வெட்டுகளில் உள்ளது. அதற்கு தேவையான  தூண்களும் மற்ற பாறைகளும் திருகோணமலை பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டு இராமேஸ்வரம் கொண்டு செல்ல பட்ட குறிப்பு இலங்கையில் உள்ளது.

           கோவிலில் இருந்த கல்வெட்டு குறிப்புகள் 1866 ம் ஆண்டு ராம்நாடு அரசனால் அழிக்க பட்டும் - திருத்தமும் செய்ய பட்டு உள்ளது.இதை அழிக்கவேண்டிய காரணம் கோவில் உரிமை பற்றிய உண்மை வெளியே தெரியாமல் இருக்க மட்டுமே என்று தெரிய வருகிறது.

திருப்புல்லாணி கோவில் கல்வெட்டில் உள்ள குறிப்புகள் -

                                                        கோவிலுக்கு கொடுக்க பட்ட தேவதான  நிலங்களை பற்றிய குறிப்பில் தெய்வ சிலையான் அழகிய ஆர்ய சக்ரவர்த்தியும் -பராக்கிரம பாண்டியனின் மாமன் ஆன ராமன்வகை ஆர்ய சக்கரவர்த்தியும் என்று கூறப்பட்டுஉள்ளது. இதனால் ஆரிய சக்ரவர்த்தியை பாண்டியனின் மாமன் என்று கூறப்பட்டுள்ளதால் அவர்கள் பாண்டியனுக்கு பெண் கொடுத்து உள்ளது உறுதி செய்ய பட்டு உள்ளது.

மாறவர்மன் குலசேகரன் காலத்தில் ராம்நாடு -சிவபுரியில் தேவர் ஆரிய சக்கரவர்த்தியும் -ஸ்ரீரங்கம் கல்வெட்டில் நல்லூர் செவ்விருக்கைநாட்டு ஆரிய சக்கரவர்த்தி பற்றியும் கூறப்பட்டு உள்ளது. ஆர்ய சக்கரவர்த்திகளுக்கு தனிநின்று வென்ற பெருமாள் என்ற பட்டம் கொடுக்க பட்டு உள்ளது.

சிங்கள வரலாற்று இலக்கியங்களில் ஒன்றான சூளவம்சத்தில் வரும் பின்வரும் கூற்றுக்கள் காணப்படுகின்றன, “முன்பு பஞ்சம் ஒன்று நிலவியகாலத்திலே பாண்டிய இராச்சியத்தில் ஆட்சிபுரிந்த சகோதரர்களான ஐந்து மன்னர்கள் ஆரியச்சக்கரவர்த்தி என்னும் பெயர் கொண்ட தமிழ்ச் சேனாதிபதியின் தலைமையில் படையொன்றை அனுப்பி வைத்தார்கள். அவன் ஆரியனல்லானாயினும் மிகுந்த செல்வாக்கும் அதிகாரமும் கொண்ட பிரதானியாக விளங்கினான். இராச்சியத்தின் எல்லாப் பக்கங்களையும் அழித்துவிட்டு அரண்கள்; பொருந்திய சுபபட்டணத்தினுள் (யப்பகூவாவிற்குள்) அவன் புகுந்தான். அங்கிருந்த தந்ததாதுவையும், விலைமதிக்கமுடியாத செல்வங்களையும் கவர்ந்து கொண்டு ஆரியச்சக்கரவர்த்தி பாண்டிநாட்டுக்குச் சென்றான். அங்கு பாண்டிய மன்னர் குலமெனும் தாமரையை மலர்விக்கின்ற கதிரவனையொத்த குலசேகர மன்னனுக்கு அவற்றைக் கொடுத்தான்”. மேற்கூறப்பட்ட கூற்றிலிருந்து ஆரியச்சக்கரவர்த்திகள் ஆரியர்கள் அல்லாத தமிழர் என்று கூறப்பட்டிருப்பது இங்கு சிறப்பாக நோக்கத்தக்கது.

தல்கால ஆய்வாளர்களான பத்மநாதன் (ஆங்கிலத்தில் யாழ்ப்பாண அரசு என்ற நூலை எழுதியவர்) போன்றோர், முதல் ஆரியச்சக்கரவர்த்தியின் காலம் 13ஆம் நூற்றாண்டு என்றே நம்புகிறார்கள். இவ்வம்சத்தைச் சேர்ந்தவர்களாகப் போர்த்துக்கீசருக்கு முன் 13 பெயர்களும், போர்த்துக்கீசர் காலத்தில் 6 பெயர்களுமாக மொத்தம் 19 அரசர்கள் குறிக்கப்படுகின்றனர். இவர்கள் பரராசசேகரன், செகராசசேகரன் என்ற சிம்மாசனப் பெயர்களை மாறிமாறி வைத்துக்கொண்டு அரசாண்டார்கள்.

வம்சத்தின் தோற்றம் விளக்கும் கதை

[தொகு]

சிங்கை ஆரியர்களின் தோற்றத்தை பற்றி பல்வேறு கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் தங்கள் தோற்றத்தை எவ்வாறு விளக்கினார்கள் என்பது தான் முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வகையில் 1519-1619 கால பகுதியில் எழுதப்பட்டதாக நம்பப்படும் 'கைலாய மாலை' எனும் நூல் ஒரு சில விளக்கத்தை எமக்கு தருகின்றது:

« பாண்டி மழவன் பரிந்து சென்று வேண்டி பெருகு புகழ் யாழ்ப்பாணம் பேரரசு செய்ய வருகுதி நீ என்று வணங்க, திருவரசு மாறற்குச் செம்பொன் மகுடம் அணிந்தோனின் வழி காரணிவனான பெரும் காரணத்தால், பேறு தரச் சாற்றும் இவன் மொழியை தன் மனத்தோர்ந்து எண்ணி, மறு மாற்றமுரை யாது நல்ல வாய்மை சொல்லி... துன்று புகழ் தென் மதுரை விட்டு திரு நகர் யாழ்ப்பாணத்து மன்னரசு செய்ய மனமகிழ்ந்து" (செய்யுள்கள் 79-82 மற்றும் 86)

ஆகையால், கடைசி காலத்து யாழ்ப்பாண அரசர்கள் தங்கள் வம்சத்தை உருவாக்கியது மதுரையை சேர்ந்த ஓர் பாண்டிய இளவரசன் என நம்பினார்கள் என்று கவனிக்க முடிகிறது.

வம்சத்தின் வரலாறு

[தொகு]

1215 தொடக்கம் 1619 வரை இந்த வம்சத்தை சேர்ந்த 19 மன்னர்கள் யாழ்ப்பாண சிம்மாசனத்தில் ஏறியுள்ளனர். அவர்கள் பல்வேறு பெயர்களுடனும் வேவ்வேறு விதமாய் அரசு புரிந்தார்கள்.

ஆரம்ப காலத்தில் சிங்கை ஆரியர்கள் பாண்டிய பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தார்கள். இஸ்லாமியர்கள் மதுரையை நாசம் செய்து பாண்டியர்களை வீழ்திய பின்பு தான் (1335 ஆம் ஆண்டில்) இந்த வம்சத்தை சேர்ந்த மன்னர்கள் முக்கியத்துவம் பெற தொடங்கினர். அக்காலத்து மன்னன் மார்தாண்ட சிங்கை ஆரியனாவான். இவன் காலத்தில் மொரோக்கோ நாட்டில் இருந்து இலங்கை வந்த இப்னு பதூதா என்பவனின் மூலம் அக்காலத்தில் சிங்கை ஆரியர்கள் தான் இலங்கை தீவிலே முக்கியத்துவம் வாய்ந்த மன்னர்கள் என்று தெரிகிறது. மார்தாண்டன் புத்தள பகுதியை கைப்பற்றி முத்து வியாபாரத்தால் யாழ்ப்பாண ராஜ்யம் செழிப்படன் காணப்பட்டது என்றும் அறிய முடிகின்றது. இவன் காலத்தில் சிங்கள மன்னர்களுடன் போர்களும் நடை பெற்றன.

கனகசூரிய சிங்கை ஆரியனின் காலம் (1440 தொடக்கம் 1478 வரை) இன்னொரு முக்கித்துவம் வாய்ந்த ஒன்று: 1450 தொடக்கம் 1467 வரை செம்பக பெருமான் எனும் கோட்டை அரசனின் வளர்ப்பு மகன் யாழ்ப்பாண அரசை கைப்பற்றி அரசு புரிந்தான். இக்காலத்தில் கனகசூரிய மன்னன் மதுரையில் தஞ்சம் தேடினான். இருப்பினும் 1467 இல் ஒரு சிறிய படை எழுப்பிய கனகசூரிய அரசன் யாழ்ப்பாணத்தை மீழப் பெற்றான்.

அதன் பிறகு இந்த வம்சத்தை சேர்ந்த மன்னர்களிடம் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கூற ஒரு ஆவல் காணப்பட்டது. அக்காரணத்தால் கனகசூரியனின் மகன் பரராஜசேகரனின் காலத்தில் தமிழ் சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. மேலும் இம்மன்னன் காலத்தில் பல்வேறு நூழ்கள் எழுதப்பட்டன (கணிதம், மருத்துவம், தோதிடம் மற்றும் வரலாறு நூழ்கள்)

அவனுக்கு பிறகு வரும் மன்னர்கள் 'சிங்கை ஆரியர்கள்' என்று தங்களை அழைத்துக் கொள்வதை நிருத்தினார்கள். அவ்வம்சம் மெல்ல மெல்ல அதன் அதிகாரத்தை இழக்க தொடங்கியது. முதலாம் சங்கிலியம் மற்றும் இரண்டாம் சங்கிலியன் போன்ற மன்னர்கள் யாழ்ப்பாண அரசின் புகழை மீழ பெருவதற்கு முயர்சித்தனர் ஆனால் 1619 ஆம் ஆண்டில் போர்த்துகேயர் சங்கிலிக்கு தூக்கு தண்டனை விதித்ததன் மூலம் வம்ச அழிவுக்கும் காரணமாகினார்.

மேற்கோள்களும் குறிப்புகளும்

[தொகு]
  1. Pathmanathan, The Kingdom of Jaffna,p.11
  2. “தென்னன் நிகரான செகராசன்
    தென்னிலங்கை மன்னவனாகுஞ் சிங்கையாரியமால்”
  3. பொ. சங்கரப்பிள்ளை (B.A. (Lond). B. Com. (Hons). (Lond.), M. Sc. (Econ (Lond.). "நாம் தமிழர்". கொழும்புத் தமிழ்ச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் ஆகஸ்ட் 15, 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. நடராசன், பி. (பதிப்பாசிரியர்), இராஜராஜேசுவரி கணேசலிங்கம் (உரையாசிரியர்), முத்துராச கவிராசரின் கைலாயமாலை, செட்டியார் அச்சகம், யாழ்ப்பாணம், 1983

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரியச்_சக்கரவர்த்திகள்&oldid=3927512" இலிருந்து மீள்விக்கப்பட்டது