போர்த்துக்கேயரின் இரண்டாவது யாழ்ப்பாணப் படையெடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போர்த்துக்கேயரின் இரண்டாவது யாழ்ப்பாணப் படையெடுப்பு
போர்த்துக்கேயர் - யாழ்ப்பாண அரசு போர்கள் பகுதி
நாள் 1591
இடம் யாழ்ப்பாணம், நல்லூர்
யாழ்ப்பாண அரசன் புவிராசபண்டாரம் கொல்லப்பட்டான். போர்த்துக்கேயரின் கட்டுப்பாட்டில் எதிர்மன்னசிங்கம் அரசனானான்.
நிலப்பகுதி
மாற்றங்கள்
யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கேயரின் சிற்றரசு ஆனது.
பிரிவினர்
போர்த்துக்கேய அரசு யாழ்ப்பாண இராச்சியம்
தளபதிகள், தலைவர்கள்
அந்தரே பூர்த்தாடோ தெ மென்டோன்சா புவிராசபண்டாரம்
பலம்
4,400 -

போர்த்துக்கேயரின் இரண்டாவது யாழ்ப்பாணப் படையெடுப்பு என்பது, 1591ல் போர்த்துக்கேயத் தளபதியான அந்தரே பூர்த்தாடோவின் தலைமையிலான படைகள் யாழ்ப்பாணத்தின் மீது எடுத்த படை நடவடிக்கையைக் குறிக்கும். இந்தப் படையெடுப்பின்போது, யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போர்த்துக்கேயப் படைகள், யாழ்ப்பாண அரசன் புவிராச பண்டாரத்தைக் கொன்றுவிட்டு, அரச குடும்பத்தைச் சேர்ந்தவனும், முன்னர் போர்த்துக்கேயரால் அரசனாக்கப்பட்டுப் பின்னர் புவிராசபண்டாரத்தினால் பதவியிலிருந்து அகற்றப்பட்ட பெரியபிள்ளையின் மகனுமாகிய எதிர்மன்னசிங்கம் என்பவனை அரசனாக்கினர். எதிர்மன்னசிங்கம் போர்த்துக்கேயப் பேரரசனின் கீழ் ஒரு சிற்றரசனாகவே யாழ்ப்பாணத்தை ஆண்டான்.

பின்னணி[தொகு]

போர்த்துக்கேயரின் முதலாவது யாழ்ப்பாணப் படையெடுப்பு முழு வெற்றியடையாமல் போனபின்னர் முதலாம் சங்கிலி இருக்கும் வரை போர்த்துக்கேயர் அமைதியாகவே இருந்தனர். சங்கிலி மன்னன் இறந்த பின்னர் ஏற்பட்ட வாரிசுப் போட்டிகளால் யாழ்ப்பாண இராச்சியத்தில் மீண்டும் போர்த்துக்கேயரின் தலையீடு ஏற்படலாயிற்று. முதற் படையெடுப்பின் பின் இணங்கிக்கொண்டபடி, வாரிசு உரிமை கொண்டவனான சங்கிலியின் முதல் மகனைப் போர்த்துக்கேயர் பிணைக் கைதியாக வைத்திருந்தனர். சங்கிலி ஒப்பந்தத்தை மதிக்காமல் விட்டதால், போர்த்துக்கேயர் அவனைக் கோவாவில் தடுத்து வைத்திருந்தனர். சங்கிலி இருந்தபோது அவனைத் திருப்பிக் கொண்டுவர எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. அதனால், இரண்டாவது மகனான புவிராசபண்டாரம் அரசனானான். காசிநயினார் என்பவன் புவிராச பண்டாரத்திடம் இருந்து அரசைக் கைக்கொண்டான். புவிராச பண்டாரம் மன்னாரில் இருந்த போர்த்துக்கேயத் தளபதியிடம் முறையிட்டான். போர்த்துக்கேயத் தளபதி காசிநயினாரைப் பிடித்துச் சிறையில் அடைத்துவிட்டு, இன்னொருவனைப் புதிய அரசனாக்கினர். சில நாட்களிலேயே காசிநயினாரைச் சிறைமீட்ட அவனது ஆதரவாளர்கள் புதிய அரசனைக் கொன்றுவிட்டு மீண்டும் காசிநயினாரை அரசனாக்கினர். ஆனால், போர்த்துக்கேயத் தளபதி தனது கைக்கூலி ஒருவன் மூலம் காசிநயினாரைக் கொலை செய்வித்தான். தொடர்ந்து போர்த்துக்கேயர் பெரியபிள்ளை என்பவனை அரசனாக்கினர். 1582ல் புவிராசபண்டாரம் மீண்டும் அரசைக் கைப்பற்றிக் கொண்டான். முன்னர் போர்த்துக்கேயரின் தலையீட்டை இவன் கோரியிருந்தபோதும், இக்காலகட்டத்தில் போர்த்துக்கேயருக்கு எதிராகவே செயற்பட்டான். யாழ்ப்பாண இராச்சிய மண்ணில் இருந்து போர்த்துக்கேயரை வெளியேற்றும் நோக்கில், 1591ல் மன்னாரையும் தாக்கினான் ஆனாலும் அவனால் வெற்றிபெற முடியவில்லை. இது போர்த்துக்கேயர் மீண்டும் யாழ்ப்பாணத்தின் மீது படையெடுக்க வழிகோலியது.

போர்[தொகு]

போர்த்துக்கேயரின் இரண்டாம் யாழ்ப்பாணப் படையெடுப்பின்போது இளவரசன் எதிர்மன்னசிங்கத்தை போர்த்துக்கேயத் தளபதி ஒருவன் காப்பாற்றும் காட்சியைக் காட்டும் சிற்பம். இரத்தினபுரி மகா சமன் தேவாலயத்தில் உள்ளது.

1591 அக்டோபர் இறுதியில் மன்னாரில் இருந்து, 1400 போர்த்துக்கேயரும், 3000 சிங்களவரும் அடங்கிய பெரும் படையுடன் அந்தரே பூர்த்தாடோ யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்டான். இந்தப் படையெடுப்புக்காக மன்னார்ப் பகுதியில் முத்துக்க்ளிப்பினால் பெறப்பட்ட 30,000 பர்தாங்கும், மன்னார்க் கத்தோலிக்கரிடம் கடனாகப் பெறப்பட்ட 20,000 பர்தாங்கும் பயன்படுத்தபட்டதாகத் தெரிகிறது.[1] 43 கப்பல்களிலும், 200க்கு மேற்பட்ட தோணிகளிலும் இப்படைகள் சென்றன. யாழ்ப்பாணத்து அரசன் இப்படைகள் ஊர்காவற்றுறையில் இறங்கும் என எதிர்பார்த்து அங்கே பாதுகாப்பைப் பலப்படுத்தியிருந்தான். ஆனால், போர்த்துக்கேயப் படைகள் கொழும்புத்துறையை அடைந்தன. கப்பல்களில் இருந்து கனரகப் பீரங்கிகள் தாக்குதல் நடத்த முதலில் 150 போர்த்துக்கேயரும், 200 சிங்களப் படையினரும் கரையில் இறங்கினர். எதிர்த்தாக்குதல் நடத்திய யாழ்ப்பாணப் படைகள் கடுமையான தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தோல்வியைச் சந்தித்தன. முதலியார் பிராங்கோவும் 250 பேரும் இறந்தனர். ஏராளமான ஆயுதங்கள் போர்த்துக்கேயர் வசமாயின.[2] பின்னர் போர்த்துக்கேயரின் படைகள் முழுவதும் கரையிறங்கின. கரையோரமாக நடந்துவந்த படைகள் பண்ணைக்கருகில் முகாமிட்டன. இப்பகுதியில் இருந்த முசுலிம்களின் வணிக நிலையில் இருந்த களஞ்சியங்களில் சேமிக்கப்பட்டிருந்த அரிசி, நெல் ஆகியவற்றையும் அவர்கள் கொள்ளையிட்டனர்.

அடுத்த நாள் அதிகாலை அங்கிருந்து போர்த்துக்கேயப் படைகள் நல்லூரை நோக்கிப் புறப்பட்டன. வழியில் அமைக்கப்பட்டிருந்த தாக்குதல் நிலைகளில் இருந்து யாழ்ப்பாணப் படைகள் தாக்குதல் நடத்தின. பல மணிநேரம் நடந்த போரில் யாழ்ப்பாணப் படைகளின் எதிர்த் தாக்குதலைப் போர்த்துக்கேயப் படைகள் முறியடித்தன. யாழ்ப்பாணப் படைகளின் எதிர்த் தாக்குதலை வழிநடத்திய, பின்னாள் அரசன் எதிர்மன்னசிங்கத்தின் சகோதரனான இளவரசன் காகோ இவ்விடத்தில் கொல்லப்பட்டான்.[3] போர்த்துக்கேயப் படைகள் மீண்டும் நல்லூரை நோக்கி முன்னேறின. நல்லூரில் வீரமாகாளியம்மன் கோயிலுக்கும், கந்தசுவாமி கோயிலுக்கும் இடையே மீண்டும் கடும் போர் வெடித்தது. இங்கும் போர்த்துக்கேயரின் ஆயுதபலம் வெற்றிபெற்றது. இப்போரில் கொல்லப்படவிருந்த பெரிய பிள்ளையின் மகன் இளவரசன் எதிர்மன்னசிங்கம் போர்த்துக்கேயத் தளபதி ஒருவனால் காப்பாற்றப்பட்டான். அரசனைத் தேடிச் சென்ற போர்த்துக்கேயப் படைகள் தப்பிச் செல்ல முயன்ற அவனைப் பிடித்து அந்தரே பூர்த்தாடோ முன் கொண்டு சென்றனர். பூர்த்தாடோவின் கட்டளைக்கிணங்க அரசனின் தலை வெட்டப்பட்டு ஈட்டி முனையில் குத்தப்பட்டுச் சில நாட்கள் அங்கேயே விடப்பட்டது.[4] போர்த்துக்கேயப் படையினர் அரசனின் அரண்மனைக்குள் நுழைந்து அதனைக் கொள்ளையிட்டனர். அங்கிருந்த அரசனின் மனைவிமார்கள், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், முந்திய அரசர்களின் பிள்ளைகள், பிற அரச குடும்பத்தினர் எனப் பலர் அரண்மனையில் பிடிபட்டனர்.

போர்த்துக்கேயரின் எதிரிகளும், வெளிநாட்டுப் போர்வீரர்களும் இராச்சியத்தில் இருக்கக்கூடாது என்னும் எண்ணத்தில், போரின் முடிவில் எஞ்சியிருந்த 800 படகர்களும், கோழிக்கோட்டைச் சேர்ந்த சில முசுலிம்களும் தலை வெட்டிக் கொல்லப்பட்டனர். அரசனின் பயன்பாட்டுக்காக இரண்டு படகுகளை மட்டும் விட்டுவிட்டுத் துறைமுகங்களில் இருந்த எல்லாப் படகுகளும் எரிக்கப்பட்டன. போர்த்துக்கேயரின் 3 கப்பல்களும், 100 போர்த்துக்கேயப் படையினரும், 200 சிங்களப் படையினரும் யாழ்ப்பாணத்தில் நிறுத்திவைக்கப்பட்டனர்.

விளைவுகள்[தொகு]

எதிர்மன்னசிங்கம், பரராசசேகர பண்டாரம் என்னும் பெயருடன் யாழ்ப்பாண இராச்சியத்தின் அரசனாகப் போர்த்துக்கேயரால் அறிவிக்கப்பட்டான். போர்த்துக்கேயரின் முதலாம் யாழ்ப்பாணப் படையெடுப்பின் பின்னர் கடுமையான நிபந்தனைகளுடன் கூடிய ஒப்பந்தம் ஒன்றுக்கு சங்கிலி மன்னன் ஒப்புக்கொண்டிருந்தான். எனினும், சங்கிலியின் தந்திரத்தாலும் உள்ளூர் மக்களின் கிளர்ச்சியாலும் போர்த்துக்கேயர் தப்பி ஓடவேண்டி இருந்ததால், சங்கிலி இருக்கும்வரை ஒப்பந்தத்தை நிறைவேற்றும்படி நிர்ப்பந்திக்கப் போர்த்துக்கேயரால் முடியவில்லை. அதன் பின்னர் வாரிசுப் பிரச்சினைகளால் போர்த்துக்கேயரின் தலையீடு இருந்த போதும், ஒரு காலகட்டத்தில் திறை செலுத்த வேண்டியிருந்தும், அக்கால யாழ்ப்பாண மன்னர்கள் சிலர் போர்த்துக்கேயருக்குப் பெரிய அளவில் விட்டுக்கொடுக்கவில்லை. ஆனால், இரண்டாம் படையெடுப்புக்குப் பிந்திய நிலைமை சற்று வேறுபட்டது. 1591ம் ஆண்டின் ஒப்பந்தம் யாழ்ப்பாண இராச்சியத்தின் இறைமையை மீட்பதற்கு அரசனுக்கு இருக்கக்கூடிய எல்லா வாய்ப்புக்களையும் இல்லாமல் ஆக்குவதாக அமைந்தது. அரசன் கத்தோலிக்க மதத்துக்கு மாறுவதுடன், அவனது குடிமக்களும் மதம்மாற உதவுவதாகவும் உடன்படவேண்டியிருந்தது. யாழ்ப்பாணத்தில் மதமாற்ற நடவடிக்கைகள் தீவிரமடைந்தன. போர்த்துக்கேயக் குருமாரும், அதிகாரிகளும் அரசன் மீது பெரும் அழுத்தங்களை ஏற்படுத்திவந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. ஞானப்பிரகாசர், யாழ்ப்பாண வைபவ விமர்சனம் தமிழரசர் உகம், ஏசியன் எடுகேசனல் சர்வீசஸ், புதுதில்லி, 2003 (முதற்பதிப்பு, அச்சுவேலி 1928). பக். 140.
  2. Queyroz, Fernao. De, The Temporal and Spritual Conquest of Ceylon (Translated by S. G. Perera), Asian Educational Services, Vol II, New Delhi, 1992 (First Edition 1930 Colombo), p. 451.
  3. Queyroz, Fernao. De, 1992, p. 452.
  4. Queyroz, Fernao. De, 1992, p. 453.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]