போர்த்துக்கேயரின் முதலாவது யாழ்ப்பாணப் படையெடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போர்த்துக்கேயரின் முதலாவது யாழ்ப்பாணப் படையெடுப்பு
Wars of Jaffna kingdom பகுதி
நாள் 1560
இடம் நல்லூர், யாழ்ப்பாணம்
Portuguese victory
 • Portuguese captured the capital.
 • Pact between Portuguese and Jaffna kingdom.
 • Portuguese failed to subdue Jaffna, but மன்னார் தீவு and surrounding controlled by the Portuguese.
பிரிவினர்
போர்த்துக்கேயப் பேரரசு போர்த்துகல் பேரரசு யாழ்ப்பாண அரசு
தளபதிகள், தலைவர்கள்
போர்த்துக்கேயப் பேரரசு Dom Constantino de Bragança முதலாம் சங்கிலி
பலம்
1,200 soldiers 2,000 soldiers (first attack)
Unknown (Defending capital)
இழப்புகள்
Few Heavy

போர்த்துக்கேயரின் முதலாவது யாழ்ப்பாணப் படையெடுப்பு என்பது, 1560ம் ஆண்டில் கோவாவில் போர்த்துக்கேயரின் அரசப்பிரதிநிதியாக இருந்த டொம் கான்சுட்டன்டீனோ டி பிரகன்சா தலைமையில் யாழ்ப்பாண இராச்சியத்தின் மீது எடுக்கப்பட்ட படை நடவடிக்கையைக் குறிக்கும். இராச்சியத்தின் தலைநகரமான நல்லூர் கைப்பற்றப்பட்டது எனினும், யாழ்ப்பாண அரசன் முதலாம் சங்கிலி பிடிக்க முடியவில்லை. பிரகன்சாவுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டு மீண்டும் நல்லூருக்குள் நுழைந்த சங்கிலி போர்த்துக்கேயருக்கு எதிரான மக்கள் கிளர்ச்சியொன்றை உருவாக்கி அவர்கள் தப்பி ஓடவேண்டிய நிலையை ஏற்படுத்தினான். எனினும், இந்தப் போரினால் யாழ்ப்பாண இராச்சியம் அதன் ஒரு பகுதியான மன்னார்த் தீவையும் அதனை அண்டிய பகுதிகளையும் போர்த்துக்கேயரிடம் இழந்தது.

பின்னணி[தொகு]

1540ல் யாழ்ப்பாண இராச்சியத்தின் ஒரு பகுதியாகிய மன்னாரில் போர்த்துக்கேயக் குருமாரின் மதமாற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக முதலாம் சங்கிலி எடுத்த தீவிர நடவடிக்கைகளால் மதமாற்றம் செய்யப்பட்ட 800 மன்னார் குடிமக்கள் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த போர்த்துக்கேயக் குருமார், யாழ்ப்பாண அரசனைத் தண்டிக்கும்படி கோவாவில் இருந்த போர்த்துக்கேய அரசப்பிரதிநிதிக்கு அழுத்தங்களைக் கொடுத்துவந்தனர். இந்தியாவில் இருந்த போர்த்துக்கேயரின் ஆட்சிப்பகுதிகளைச் சுற்றியிருந்த தாயக அரசுகளின் பயமுறுத்தல்களை எதிர்கொள்ளவேண்டி இருந்ததாலும், அவர்களின் வணிக நோக்கங்களுக்கு யாழ்ப்பாண இராச்சியம் எவ்வித வாய்ப்புகளையும் வழங்காததினாலும், யாழ்ப்பாணத்தின் மீது நடவடிக்கை எடுப்பதில் அவர்கள் உற்சாகம் காட்டவில்லை. சளைக்காத குருமார் போர்த்துக்கேயப் பேரரசன் வரை இந்த விடயத்தை எடுத்துச் சென்றனர். பேரரசனும் யாழ்ப்பாண அரசனைத் தண்டிப்பதற்கான ஆணையை கோவாவில் இருந்த அரசப் பிரதிநிதிக்கு அனுப்பியிருந்தான். எனினும் குருமார் விரும்பிய அளவு வேகமாக எதுவும் நடக்கவில்லை.

1558ல் டொம் கான்சுட்டன்டீனோ டி பிரகன்சா போர்த்துக்கேய அரசப்பிரதிநிதியாக கோவாவுக்கு வந்தான். புறப்படுமுன், யாழ்ப்பாண இராச்சியம் தொடர்பில் போர்த்துக்கேய அரசன் மூன்றாம் ஜோன் முன்னைய அரசப் பிரதிநிதிகளுக்கு அனுப்பிய ஆணை வேறு போர்களில் கவனம் செலுத்தவேண்டி இருந்ததனாலோ, பிற காரணங்களாலோ நிறைவேற்றப்படாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், கிறித்தவத்துக்கு வேண்டிய ஆதரவை வழங்குவதில் மெத்தனம் காட்டப்படுவது குறித்து குருமார் முறைப்பாடு செய்வதாகவும் கூறிய போர்த்துக்கேய அரசி கத்தரீனா, இந்த விடயத்தில் சிறப்புக் கவனம் எடுக்குமாறு பிரகன்சாவைக் கேட்டுக்கொண்டிருந்தார். யாழ்ப்பாண அரசன் மன்னாரில் செய்த கொடுமைகளுக்காகவும், தொடர்ந்து கிறித்தவத்துக்கு எதிரான அவனது நடவடிக்கைகளுக்காகவும் அவன் இன்னும் தண்டிக்கப்படாமல் இருப்பது வருத்ததுக்கு உரியது என்றும் அரசி எடுத்துக்கூறி இருந்தார். எனவே இந்தியாவுக்கு வந்த பிரகன்சா தானே யாழ்ப்பாணத்துக்குப் படையெடுத்துச் சென்று போர்த்துக்கேய அரசனின் ஆணையை நிறைவேற்றத் தீர்மானித்தான்.[1]

படையெடுப்பு[தொகு]

1560 செப்டெம்பரில் ஏறத்தாழ 100 கடற்கலங்களில் படைகளை ஏற்றிக்கொண்டு பிரகன்சா யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்டான். யாழ்ப்பாணத்தில் எங்கே இறங்குவது என்பது குறித்து விரிவாக ஆராய்ந்தபின் கொழும்புத்துறையில் இறங்குவது எனத் தீர்மானம் எடுக்கப்பட்டது. கோவாவில் இப்போருக்காக 4000 பேர் பதிவு செய்திருந்தும் கப்பலில் 1200 பேர்களே இருப்பது கண்டறியப்பட்டது. மிகக் குறைவான படைவீரரே தம்மிடம் இருப்பதை அறிந்த பிரகன்சா, தான் செய்ய நினைத்தவை எல்லாவற்றையுமே செய்யமுடியாது என்பதை உணர்ந்துகொண்டான். எனினும், இருந்த படையினரை ஐந்து கப்பித்தான்களின் கீழ் ஐந்து பிரிவுகளகப் பிரித்தான். போர்த்துக்கேயர் கப்பல்கள் கடற்கரையை அணுகியபோது, இளவரசன் ஒருவன் தலைமையிலான யாழ்ப்பாண அரசனின் படைகள் போர் முழக்கத்துடன் தாக்குதலுக்குத் தயாராயின. ஆனால், போர்த்துக்கேயரின் கப்பல்களிலிருந்து நிகழ்த்தப்பட்ட சரமாரியான கனரகப் பீரங்கித் தாக்குதல்கள் யாழ்ப்பாணப் படையினரிடையே பெரும் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தின. இதனால், யாழ்ப்பாணப் படை பின்வாங்கியது. போர்த்துக்கேயர் எதிர்ப்பின்றி கரையிறங்கினர். எனினும், தொடர்ந்து முன்னேறிய படையினரை மறைந்திருந்த இளவரசனின் படைகள் தாக்கின. இப்படை கடுமையான எதிர்ப்பைக் காட்டியபோதும், போர்த்துக்கேயர் தாக்குதல்களை முறியடித்து முன்னேறினர். சிறிது தூரம் அணிவகுத்துச் சென்ற பின்னர் போர்த்துக்கேயப் படைகள் நல்லூர் நகரம் கண்ணுக்குத் தெரியும் தொலைவுக்குள் வந்தன. அக்காலத்தில் நல்லூர் நகரம் ஒரு வெளியின் நடுவில் அமைந்திருந்தது. சுற்றிலும் கல்லும் மண்ணும் கலந்து கட்டிய மதில்கள் இருந்தன. பீரங்கிகள் பொருத்தப்பட்ட சில பலம் வாய்ந்த கொத்தளங்களும் காணப்பட்டன. சுற்றிலும், பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.[2]

போர்த்துக்கேயர் உள்நுழையும்போது தாக்குதல் நடத்திப் பெரும் சேதத்தை உண்டுபண்ணும் நோக்கோடு கோட்டை மதிலின் ஒரு பகுதி ஏற்கெனவே உடைக்கப்பட்டிருந்தது. இதற்கூடாக போர்த்துக்கேயர் நுழையும் போது கவனமாக இருந்ததால், பெரிய இழப்பு ஏற்படவில்லை. ஐந்து குழுக்களாக உள்ளே நுழைந்த போர்த்துக்கேயப் படைகளுடன் நகர வீதிகளில் சங்கிலியின் மகன் தலைமையிலான யாழ்ப்பாணப் படைகள் சண்டையில் ஈடுபட்டன. எனினும் பெரும்பாலும் வில், அம்புகளோடு போராடிய யாழ்ப்பாணப் படைகள், போர்த்துக்கேயரின் நவீன ஆயுதங்களுக்கும், போர்த்திறமைக்கும் ஈடுகொடுக்க முடியாமல் பின்வாங்கின. சங்கிலி அரண்மனையைக் கைவிட்டு கோப்பாயில் இருந்த சிறிய கோட்டைக்குப் பின்வாங்கினான். போர்த்துக்கேயப் படைகள் நல்லூர் நகரைக் கைப்பற்றிக்கொண்டன. இரவாகிவிட்டதால், சங்கிலியைத் தேடிச்செல்லும் பணியை அடுத்தநாள் விடியும் வரை போர்த்துக்கேயர் பின்போட்டனர். ஆனால், விடிவதற்கு முன்னரே அரண்மனைக்குத் தீவைப்பித்த சங்கிலி, வன்னிப் பகுதியை நோக்கிப் பின்வாங்கினான். போர்த்துக்கேயருடைய படையின் ஒரு பகுதி மன்னனைப் பிடிப்பதற்காக அவனைத் தொடர்ந்து சென்றது. எனினும், போர்த்துக்கேயப் படைகளுக்கு இம்முயற்சியில் வெற்றி கிடைக்கவில்லை.

அதேநேரம், படை பலத்தால் போர்த்துக்கேயரைத் தனது நாட்டில் இருந்து விரட்ட முடியாது என்பதை உணர்ந்துகொண்டதனால், தந்திரமாக அவர்களை வெளியேற்றச் சங்கிலி தீர்மானித்தான். போர்த்துக்கேய அரசப்பிரதிநிதி பிரகன்சாவுடன் பேச்சு நடத்துவதற்காகத் தூது அனுப்பினான். போர்த்துக்கேயப் படைகளும் அவ்வேளையில் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்தன. படையினர் களைப்புற்றிருந்தனர். உணவுப்பொருட்கள் கையிருப்பில் இல்லை. வெடிமருந்துகளும் போதிய அளவில் இல்லை. எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள பிரகன்சா முடிவு செய்து, கடுமையான நிபந்தனைகளோடு கூடிய உடன்பாடு ஒன்றைச் சங்கிலி ஏற்றுக்கொள்ளவைத்தான்.

ஒப்பந்தம்[தொகு]

இந்த ஒப்பந்தத்தில் பின்வரும் அம்சங்கள் காணப்பட்டன:.[3][4]

 • யாழ்ப்பாண இரச்சியத்தைச் சங்கிலியோ அவனது மகனோ தொடர்ந்து ஆளலாம்
 • தீவுப் பகுதியும், மேற்குக் கரையோரமும் போர்த்துக்கேயரின் கட்டுப்பாட்டில் இருக்கும்
 • யாழ்ப்பாணப் படைகள் துப்பாக்கிகளையோ பிற வெடிக்கும் ஆயுதங்களையோ பயன்படுத்தக்கூடாது
 • யாழ்ப்பாண மன்னர் வெளிநாட்டுப் படைகளைச் சேவைக்கு அமர்த்த முடியாது
 • போர்த்துக்கேயப் படைகளை யாழ்ப்பாண இராச்சியத்தில் நிலைகொள்ள அனுமதிக்க வேண்டும்
 • இறந்துபோன கோட்டே அரசனின் தந்தை வீதியே பண்டார யாழ்ப்பாண இராச்சியத்தில் மறைத்து வைத்துள்ள தங்கத்தையும், பிற செல்வங்களையும் போர்த்துக்கேயரிடம் கையளிக்க வேண்டும்
 • ஆண்டுதோறும் குறித்த எண்ணிக்கையான யானைகளைத் திறையாக வழங்கவேண்டும்
 • போர்த்துக்கேயப் பாதிரிமாரின் மதமாற்ற நடவடிக்கைகளைத் தடையின்றி யாழ்ப்பாணத்தில் அனுமதிக்கவேண்டும்
 • மேற்படி நிபந்தனைகளை நிறைவேற்றுவதை உறுதிசெய்ய இளவரசனையும், இரண்டு முதலிமார்களையும் பிணைக்கைதிகளாகப் போர்த்துக்கேயரிடம் ஒப்படைக்க வேண்டும்

ஏதாவது வழிமூலம் மீண்டும் அரச பதவியை ஏற்றுக்கொண்டு அதன் பின்னர் போர்த்துக்கேயரை வெளியேற்றிவிடலாம் என்ற எண்ணத்துடனேயே சங்கிலி இவ்வாறான ஒப்பந்தத்தை ஏற்றிருக்கக்கூடும்.

போர்த்துக்கேயர் வெளியேற்றம்[தொகு]

ஒப்பந்தத்தின் பின்னர் சங்கிலி நல்லூருக்குத் திரும்பினான். முடிக்குரிய இளவரசனும், இரண்டு முதலிமாரும் பிணையாகப் போர்த்துக்கேயரிடம் ஒப்படைக்கப்பட, அவர்கள் போத்துக்கேயரின் கப்பல்களில் தடுத்து வைக்கப்பட்டனர். சங்கிலி கொடுக்கவேண்டியவற்ரைப் பெற்றுக்கொள்வதற்காகப் படையினர் சிலநாட்கள் அங்கேயே இருந்தனர். சங்கிலி மக்கள் கிளர்ச்சியை உருவாக்கிப் போர்த்துக்கேயரை வெளியேற்றும் திட்டத்தை உருவாக்கியதாகச் சொல்லப்படுகிறது. சங்கிலி நல்லூரில் இல்லாத காலத்தில் போர்த்துக்கேயர் மக்களின் பொருட்களைக் கொள்ளையடித்தும், அவர்களுடைய பசுக்களைக் கொன்று தின்றும், பெண்களை மானபங்கப்படுத்தியும் கொடுமைப்படுத்தினர்.[5] இதனால் மக்களும் கோபமுற்றிருந்தனர். குறித்த நாளொன்றில் கிளர்ச்சி வெடித்தது. பிரகன்சா வேட்டைக்குச் சென்றிருந்தான். போர்த்துக்கேயர் சிலர் நகருக்குள் இருந்தனர். இன்னும் சிலர் பொருட்கள் வாங்குவதற்காக ஊர்களுக்குள் சென்றிருந்தனர். நேரத்தை இழக்க விரும்பாத பாதிரிமார்கள் சிலர் மக்களை மதம் மாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். வழியில் கண்ட போர்த்துக்கேயர் அனைவரையும் கிளர்ச்சிக்காரர்கள் கொன்றனர். முந்திய நாட்களில் மதம் மாறிய உள்ளூர் மக்களும் கொலைசெய்யப்பட்டனர்.

போர்த்துக்கேயர் முகாமிட்டிருந்த கோட்டை எவரும் வெளியேற முடியாதபடி கிளர்ச்சியாளர்களால் சூழப்பட்டிருந்தது. உள்ளே 200 வரையான நோயுற்ற படையினர் இருந்தனர். நாகபட்டினத்தில் இருந்து அனுப்பப்பட்ட ஒரு தொகுதி மீட்புப் படையினர் கிளர்ச்சியாளரின் எதிர்ப்புக்களைச் சமாளித்துக் கோட்டைக்குள் புகுந்தனர். எனினும், திட்டமிட்டபடி நோயாளர்களைக் கப்பலுக்கு அனுப்ப முடியவில்லை. நீண்ட நாட்கள் முற்றுகையின் கீழ் இருப்பது சாத்தியமில்லை என்பதை உணர்ந்துகொண்ட போர்த்துக்கேயத் தளபதிகள் கோட்டையைவிட்டு வெளியேறத் தீர்மானித்தனர். முகாமுக்குத் தீவைத்த அவர்கள், தூக்கிச் செல்ல முடியாத ஆயுதங்களை அழித்துவிட்டுத் தூக்கிச் செல்லக்கூடியவற்றோடு நோயாளர்களையும் சுமந்துகொண்டு வெளியேறி, கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு நடுவே தமது கப்பல்களுக்குத் தப்பிச் சென்றனர்.[2] போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறினாலும் இராச்சியத்தின் ஒரு பகுதியான மன்னார்த்தீவைக் கைப்பற்றிக்கொண்டு அங்கே ஒரு கோட்டையையும் கட்டினர்.

விளைவுகள்[தொகு]

யாழ்ப்பாண இராச்சியம் முழுமையாகப் போர்த்துக்கேயரின் கையில் சிக்காமல் தப்பினாலும் மன்னார்த்தீவு போர்த்துக்கேயரின் கட்டுப்பாடுக்குள் சென்றது ஒரு முக்கியமான பின்னடைவு. நிலப்பகுதிகை இழந்தது ஒருபுறம் இருக்க அப்பகுதியில் இடம்பெற்றுவந்த முத்துக்குளிப்பு வருமானத்தையும் யாழ்ப்பாண மன்னன் இழந்தான். அத்துடன் மன்னாரில் இருந்து யாழ்ப்பாண இராச்சியத்தின்மீது கண்காணிப்புச் செலுத்துவதும் போர்த்துக்கேயருக்கு இலகுவாக அமைந்தது. திருக்கேதீசுவரத்தில் இருந்த பழைமையான சிவன் கோயிலும் இக்காலத்திலேயே போர்த்துக்கேயரால் இடிக்கப்பட்டது.[6]

போர்த்துக்கேயர் தமது கப்பலில் பிணையாக வைத்திருந்த முடிக்குரிய இளவரசனையும் கோவாவுக்குக் கொண்டு சென்றனர். அங்கே அவன் கத்தோலிக்க மதத்துக்கு மாற்றப்பட்டான். 1571 வரையே அவன் வாழ்ந்ததாகத் தெரிகிறது.[7]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Queyroz, Fernao. De, The Temporal and Spritual Conquest of Ceylon (Translated by S. G. Perera), Asian Educational Services, Vol I, New Delhi, 1992 (First Edition 1930 Colombo), p. 351.
 2. 2.0 2.1 Queyroz, Fernao. De, 1992, p. 359.
 3. குணசிங்கம், முருகர்., இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு, எம். வி. வெளியீடு, 2008. பக். 165
 4. Queyroz, Fernao. De, 1992, p. 371.
 5. குணசிங்கம், முருகர்., 2008. பக். 183
 6. குணசிங்கம், முருகர்., 2008. பக். 184
 7. Queyroz, Fernao. De, 1992, p. 377.