ஆராய்ச்சி மணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மக்கள் தம் குறைகளை மன்னரிடம் எளிதாக எடுத்துரைக்கும் பொருட்டு அரண்மனையில் கட்டப்படும் மணியே ஆராய்ச்சி மணியாகும். மன்னரிடம் தம் குறைகளைக் கூற வரும் மக்கள் மன்னரின் கீழுள்ள எவரிடமும் அனுமதி கோராமல் மன்னரை நேரடியாகச் சந்திப்பதற்கு இவ்வாராய்ச்சி மணியை அடிப்பர். இம்மணியின் ஒலி கேட்டவுடன் மன்னர், மக்கள் வந்திருப்பது அறிந்து அவர்களைச் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிவார். நெறி தவறாது அரசு செலுத்திய மன்னர்கள் இத்தகைய மணிக்கு மிகுந்த சிறப்பளித்தனர்.

வரலாற்றில் ஆராய்ச்சி மணி[தொகு]

மனுநீதிச் சோழன் தன் அரண்மனையிலுள்ள ஆராய்ச்சி மணியை, மன்னனின் மகன் அறியாமல் செய்த தவறால் தன் கன்றையிழந்த தாய்ப்பசு, அடித்தது. நடந்தவற்றை அறிந்த மன்னன், நீதியை நிலைநாட்டும் பொருட்டு, தன் மகனைத் தானே தேரேற்றிக் கொன்றான்[1]. இந்நிகழ்ச்சியினைப் பெரியபுராணத்தில் சேக்கிழார், திருமலைச் சருக்கத்திலுள்ள திருநகரச் சிறப்பு என்னும் பகுதியில், தெரிவிக்கிறார்[2]. திருநகரச் சிறப்பில் 27வது பாடலாக வரும் கீழ்க்காணும் பாடலில் ஆராய்ச்சி மணி இருந்ததற்கான குறிப்பு வருகிறது
.


இப்பாடலில் "மனுவின் பொன் கோயில் வாயில் பொன் அணி மணி" என்பது மனுநீதிச் சோழனின் அரண்மனை வாயிலிலுள்ள ஆராய்ச்சி மணியைக் குறிக்கிறது. இந்நிகழ்ச்சியின் மூலமாக நெறி தவறாத மன்னர்களின் அரண்மனையில் ஆராய்ச்சி மணி இருந்ததற்கானச் சான்று தெளிவாகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. indianfolklorist.com இன் இந்தப்[தொடர்பிழந்த இணைப்பு] பக்கத்தில் இருந்து
  2. பெரியபுராணம், திருமலைச் சருக்கம், திருநகரச் சிறப்பு, பாடல்கள் 13 - 50, tamilvu.org[1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆராய்ச்சி_மணி&oldid=3768723" இலிருந்து மீள்விக்கப்பட்டது