நான்காம் கசபன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நான்காம் கசபன்
அநுராதபுர இராச்சிய மன்னன்
ஆட்சிகிபி 898 - 914
முன்னிருந்தவர்இரண்டாம் உதயன்
பின்வந்தவர்ஐந்தாம் கசபன்
வாரிசு(கள்)ஐந்தாம் கசபன்
அரச குலம்இரண்டாம் இலம்பக்கண்ணை மாளிகை

நான்காம் கசபன் (Kassapa IV of Anuradhapura), அனுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆண்ட அரசர்களுள் ஒருவன். இவன் இரண்டாம் உதயனுக்குக்குப் பின் அரசுரிமை பெற்றான். இவன் இரண்டாம் உதயனின் தமையனும், முன்னாள் அரசனுமான இரண்டாம் சேனனின் மகன் ஆவான். கி.பி. 898 இல் அரியணை ஏறிய இவன் கி. பி. 914 வரை ஆட்சியில் இருந்தான். இவன் தனது சிறிய தகப்பன் இரண்டாம் உதயனின் அரசியான திசாவை மணந்துகொண்டு அவளை மீண்டும் தலைமை அரசியாக்கினான். இதனால் திசா இருமுறை முடிசூடிய அரசி என மகாவம்சத்தில் குறிப்பிடப்படுகிறாள்.[1]

பணிகள்[தொகு]

இவன், அனுராதபுரத்திலிருந்த மகா விகாரை, அபயகிரி விகாரை போன்றவற்றுக்கும், மகியங்கனை விகாரைக்கும் பல திருப்பணிகளைச் செய்துள்ளதுடன் நிலக்கொடைகளையும் அளித்துள்ளான். இவனுடைய காலத்தில், அரச குடும்பத்தினர் பலரும், அமைச்சர்களும் புத்த மத நிறுவனங்களுக்குத் திருப்பணிகளைச் செய்துள்ளனர். இவ்வாறு திருப்பணிகளைச் செய்தவர்களில் அமைச்சர் சோழராஜா, முதன்மை எழுத்தர் சேனன், படைத் தலைவன் இலங்க சேனன் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக இலங்க சேனன் புத்த மத நிறுவனங்களுக்குச் செய்த பணிகள் குறித்து மகாவம்சம் விதந்துரைக்கிறது.[2]

குழப்பம்[தொகு]

நான்காம் கசபன் காலத்தில் துணையரசனாக இருந்த கசபனின் (பின்னாளின் ஐந்தாம் கசபன் என்னும் பெயரில் அரசனானவன்) மகனும் ரோகணத்தின் ஆளுனராக இருந்தவனுமான மகிந்தன் அனுராதபுரத்தைக் கைப்பற்றுவதற்காகப் படையுடன் வந்து குழப்பம் விளைவித்ததாகத் தெரிகிறது. அவனது தந்தை கசபனை அனுப்பி மகிந்தனை அமைதிப்படுத்திய அரசன், அவனுக்குத் தன் மகளை மணமுடித்து வைத்து அவனை அடக்கினான்.[3]

இறப்பு[தொகு]

ஏறத்தாழ 17 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த[4] இம்மன்னன் 904 ஆம் ஆண்டு காலமான பின்னர் ஐந்தாம் கசபன் ஆட்சிக்கு வந்தான்.

மேற்கோள்கள்[தொகு]

  1. The Mahavansa, translated in to Eglish by L. G. Wijesinha, Part II, Asian Educational Services, New Delhi, 1996 (First Published 1889), p. 78
  2. The Mahavansa, 1996, p. 77, 78.
  3. The Mahavansa, 1996, p. 76
  4. The Mahavansa, 1996, p. 78

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்காம்_கசபன்&oldid=2174299" இலிருந்து மீள்விக்கப்பட்டது