ஐந்தாம் கசபன்
ஐந்தாம் கசபன், அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சிபுரிந்த சிங்கள அரசர்களுள் ஒருவன். நான்காம் கசபனுக்குப் பின்னர் இவன் அரசனானான். மன்னன் உதயனின் அரசியாக இருந்து பின்னர் நான்காம் கசபனை மணந்து இரண்டாம் முறை அரசியான திசா மூலம் நான்காம் கசபனுக்குப் பிறந்தவனே ஐந்தாம் கசபன்.[1] கி.பி. 914 இல் அரசுகட்டிலேறிய இவன் கி.பி. 923 வரை ஆட்சிபுரிந்தான்.
இயல்புகள்
[தொகு]இவன் இறை பக்தியுள்ளவனும், புத்திக்கூர்மை உள்ளவனுமான அரசனாகக் கருதப்படுகிறான். திரிபிடகங்களை நன்கு கற்றவனும், சிறந்த கல்விமானுமான ஐந்தாம் கசபன், தாம்பிய அத்துவ கெட்டப்பாதய என்னும் நூலையும் எழுதியுள்ளான். இது தவிர வேறும் சில புத்த மதம் சார்ந்த நூல்களையும் இவன் எழுதியுள்ளதாகத் தெரிகிறது. இவன் ஒரு கவிஞனாகவும் விளங்கினான்.[2] பெரும் செல்வந்தனான இவனது ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு இன்னல்கள் ஏற்படாமல் பார்த்துக்கொண்டான். இந்த மன்னன் புத்த மதத்துக்கும் பெரும் தொண்டு ஆற்றியுள்ளான். மிரிசவெட்டி விகாரையில் அடிக்கடி புத்தமதச் சொற்பொழிவுகளுக்கு ஒழுங்கு செய்ததுடன், தகுதியில்லாத பிக்குகளை நீக்கியும் உள்ளான்.
போர்கள்
[தொகு]தமிழ்நாட்டில் சோழருக்கும், பாண்டியருக்கும் ஏற்பட்ட போரில், கசபனின் நண்பனான பாண்டிய மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க அவனுக்கு ஆதரவாக ஐந்தாம் கசபன் படைகளை அனுப்பினான். இரண்டு படைகளையும் நடத்திச் சென்ற பாண்டியன், சோழரை வெற்றிகொள்ள முடியாத நிலையில், தனது எண்ணத்தைக் கைவிட்டுத் திரும்பிவிட்டான். சிங்களப் படைகளின் தளபதி தொற்று நோய் வாய்ப்பட்டு இறந்தான். சிங்களப் படையினர் பலரும் அதே நோயினால் உயிரிழந்தனர். இறந்த தளபதியின் இடத்துக்கு அவனுடைய மகனுக்குத் தளபதி பதவியை ஐந்தாம் கசபன் வழங்கினான்.[3]