ஒன்பதாம் அக்கபோதி
ஒன்பதாம் அக்கபோதி, அனுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆண்ட மன்னர்களில் ஒருவன். மன்னன் மூன்றாம் தப்புலனின் மகனான இவன், தந்தை காலமான பின்னர் அரசனானான். கி. பி 831ல் அரியணை ஏறிய ஒன்பதாம் அக்கபோதி 833 வரை ஆட்சியில் இருந்தான்.
வாரிசுப் போட்டி
[தொகு]மூன்றாம் தப்புலன் ஆட்சியில் இருந்தபோது ஆட்சி உரிமையைத் தன்னுடைய மகனுக்குக் கொடுப்பதற்காக, தமையனின் மகனான மகிந்தனை ஆளுனன் ஆக்கவில்லை. இதனால் மனமுடைந்த மகிந்தன் தன்னுடைய சகோதரர்களுடன் இந்தியாவுக்குச் சென்று விட்டான். அரசன் இறந்ததைக் கேள்வியுற்றதும் மகிந்தனும் அவனது சகோதரர்களும் படை திரட்டிக்கொண்டு இலங்கையுட் புகுந்தனர். இதை அறிந்த ஒன்பதாம் அக்கபோதி ஒரு பெரிய படையை அனுப்பி அவர்களைத் தோற்கடித்ததுடன் மகிந்தனதும் அவனது சகோதரர்களதும் தலைகளை வெட்டுவித்தான்.[1]
பணிகள்
[தொகு]நாட்டில் இருந்த மூன்று புத்த பீடங்களினதும் குறைகளை அறிந்து அவற்றை நீக்கி வைப்பதில் அக்கபோதி அக்கறை காட்டினான். இவற்றின் மூலம் நாட்டில் குற்றங்கள் பெருகாமல் தடுக்க முடியும் என்பது அவனது கருத்தாக இருந்தது. அக்காலத்தில் சிறிய விகாரைகளில் இருந்த புத்த பிக்குகள் காலைக் கஞ்சிக்காகப் பெரிய விகாரைகளுக்குச் செல்லவேண்டி இருந்தது. இதையறிந்த அக்கபோதி, சிறிய விகாரைகளுக்கு வருமானம் தரக்கூடிய ஊர்களைக் கொடையாக அளித்து, பிக்குகள் தத்தமது விகாரைகளிலேயே உணவு பெற ஒழுங்கு செய்தான். இம்மன்னன் பறையறைவித்து எல்லாப் பிச்சைக்காரரையும் ஓரிடத்துக்கு வருமாறு செய்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ததாகவும் மகாவம்சம் கூறுகிறது.[2]
இறப்பு
[தொகு]இவன் நீண்டகாலம் ஆட்சியில் இருக்கவில்லை. மூன்று ஆண்டுகளுக்கும் குறைவாகவே ஆட்சியில் இருந்த பின்னர் இவன் காலமானான். இவனுக்குப் பின்னர் இவனது தம்பி முதலாம் சேனன் ஆட்சியில் அமர்ந்தான்.[3]