கண்ணகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கண்ணகி சிலை, சென்னை

சங்ககால வரலாற்றில் கண்ணகி என்னும் பெயரில் இரண்டு பெண்கள் காணப்படுகின்றனர்.

கள் போல் மயக்கும் சிரிப்பை[1] உடையவள் என்னும் பொருள் விளங்கும்படி, 'கண்ணகி' என்றனர். கண்+நகி என்று பிரித்து சிரிக்கின்ற - மலர்ந்த கண்ணைக் கொண்டவள் என்றும் பொருள்காண்பர்.

கோவலன் மனைவி[தொகு]

கண்ணகி, தமிழில் எழுந்த ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் தலைவி ஆவாள். கற்பிற் சிறந்தவளாக காட்டப்பட்டுள்ள இவள், எவ்வித ஆராய்வுமின்றிப் பொய்க் குற்றச்சாட்டின் மீது கொலைத் தண்டனைக்கு உட்பட்ட தனது கணவனின் குற்றமற்ற தன்மையை பாண்டிய அரசன் நெடுஞ்செழியனிடம் வாதித்து நிரூபித்தாள். தன் பிழை கண்டு வேதனையடைந்த பாண்டியனும், அவரது மனைவியான கோப்பெருந்தேவியும் அவ்விடத்திலேயே உயிர் துறந்தனர். கோபம் அடங்காத கண்ணகி, மதுரை நகரையும் தன் கற்பின் வலிமையால் எரித்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கண்ணகிக்கு அடைக்கலம் கொடுத்துக் காத்த ஆயர்கள் பற்றிக் குறிப்பிடுகிறார். அந்த ஆயர்கள்தான் யாதவர்கள் என்று சொல்லப்படுகிறது.[சான்று தேவை]தமிழ் நாட்டில் இருந்த சித்தர்களில் திருமூலர், இடைக்காட்டுச் சித்தர், புண்ணாக்கீசர் இடையர் நாங்குனேரி, கொங்கண சித்தர் இடையர் திருப்பதி, மற்றும் குதம்பைச் சித்தர் இடையர் மாயூரம் ஆகியோர் ஆயர் குலத்தைச் சேர்ந்தவர்கள் என அறியப்படுகிறார்.கண்ணகி வணிகர் குலத்தில் நகரத்து செட்டியார் சமுதாயத்தில் உதித்த நங்கை.

சிலப்பதிகாரம் எழுதப்பட்ட வேளையில், சேர நாட்டு மன்னன் செங்குட்டுவன் கண்ணகிக்கு விழா எடுத்தான். இவ்விழாவில் இலங்கை மன்னன் கஜபாகுவும் கலந்துக்கொண்டதாக வரலாறு கூறுகிறது. இவன் மூலம் இலங்கையில் கண்ணகியை பத்தினித் தெய்வமாக வணங்கும் வழக்கம் ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது.

திருமாவுண்ணி[தொகு]

கண்ணகி போல் இருக்கவேண்டிய தலைவி தன்னிடம் சினம் கொள்கிறாளே என்று பரத்தை ஒருத்தி அங்கலாய்த்துக் கொள்கிறாள். அவள் கண்ணகி முலையை அறுத்து மதுரையை எரித்த செய்தியை நினைவுகூர்கிறாள்.[சான்று தேவை]

கண்ணகியை அவள் திருமாவுண்ணி என்று குறிப்பிடுகிறாள். அழகால் திருமகளைத் தின்றவள் என்பது இத்தொடருக்குப் பொருள்.[2][3]

பேகன் மனைவி கண்ணகி[தொகு]

பொதினி என்று சங்கக் காலத்தில் வழங்கப்பட்ட பழனிமலைப் பகுதியைத் தன்னகத்தே கொண்டு விளங்கிய நாடு வையாவி நாடு. இதனை ஆண்ட சங்க கால அரசர்களுள் ஒருவன் 'வையாவிக் கோப்பெரும் பேகன்' இவனது மனைவியின் பெயர் கண்ணகி ஆகும். சிலப்பதிகாரக் கோவலனைப் போலவே இவனும் தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து வாழ்ந்துவந்தான். புலவர்கள் பலர் இவனுக்கு அறிவுரைக் கூறித் திருத்தியிருக்கிறார்கள். அரிசில் கிழார்[4] கபிலர் [5] பரணர் [6] பெருங்குன்றூர் கிழார் [7] ஆகிய புலவர்கள் கண்ணகி காரணமாக வையாவிக் கோப்பெரும் பேகனைப் பாடி அறிவுரைக் கூறியுள்ளனர்.

இதையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

 1. கள் நகி (நகை = புன்னகை)
 2. திருமா = திருமகள்
 3. ஒரு முலை அறுத்த திருமாவுண்ணிக்
  கேட்டோர் அனையராயினும்,
  வேட்டோர் அல்லது, பிறர் இன்னாரே (நற்றிணை 216 அடி 9-11)
 4. புறம் 146
 5. புறம் 143
 6. புறம் 144, 145
 7. புறம் 147
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணகி&oldid=2582185" இருந்து மீள்விக்கப்பட்டது