உள்ளடக்கத்துக்குச் செல்

சிலப்பதிகாரத்தில் சமூகவியல் செய்திகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிலப்பதிகாரம் சிலம்பு- அதிகாரம் என்ற இரு சொற்களால் ஆனது. சிலம்பு காரணமாக விளைந்த கதை ஆனதால் சிலப்பதிகாரம் ஆயிற்று. இந்நூல் தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று.இது பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள் எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றனையும் காணலாம். கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பர். ஏனைய நூல்கள் அரசனையோ தெய்வங்களையோ பாட்டுடை த்தலைவனாகக் கொண்டிருக்க சிலப்பதிகாரம் கோவலன் என்ற குடிமகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டதால் இதனை 'குடிமக்கள் காப்பியம்' என்றும் கூறுவர். இன்பியலும் துன்பியலும் கலந்து எழுதப்பட்ட இந்நூலை இயற்றியவர் இளங்கோ அடிகள் என்பவராவார். இவர் புகழ் பெற்ற சேரமன்னன் செங்குட்டுவனுடைய தம்பி எனக் கருதப்படுகின்றது.

சமூக வாழ்க்கை

[தொகு]

சிலப்பதிகாரத்தில் அக்கால அரசியல் நிலை, மக்கள் நிலை,நகர வாழ்வு, கிராம வாழ்வு ஆகியவைகளை அறியலாம் . தமிழக மூன்று பெருநகரங்கள் பற்றியும், அந்நகரங்களின் கலைப்பெருக்கு, நாகரிக முதிர்ச்சி முதலியவற்றையும் பற்றிய விரிவான செய்திகள் பலவற்றையும் காணலாம்.மேலும் கிராமங்கள் பற்றிய செய்திகளையும் அறிய முடிகிறது.

நகர அமைப்பு

[தொகு]

இடையீடின்றி வணிகம் நடக்கும் பெருமறுகுகளிலே வேற்று நாட்டினர் பலர் வந்து ஒருங்கிருந்து அளவளாவி மகிழ்ந்தனர். நகராண்மைக்கழகங்களின் ஆட்சி வியத்தகு நிலையில் அமைந்திருந்தது. பெருவழிகளும் மறுகுகளும் என்றும் தூய்மையுடன் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வந்தன. ஆங்காங்கே இருள் போக்கும் ஒளி விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

கட்டிடங்கள்

[தொகு]

வீடுகள் அனைத்தும் சுடுமண்ணாலும் கோட்டு நூற்றாலுங்கட்டப்பட்டு வளி உலவும் சாளரங்கள் பலவற்றை உடையனவாய் இருந்தன. எழுநிலை மாடங்கள் எண்ணிலவாய் விளங்கியமையின் தென்னாட்டுச் சிற்பக்கலை உச்ச நிலை அடைந்து விளங்கியமை அறியலாம்.

அந்தணர் வாழ்க்கை

[தொகு]

மறையோதுதலாலும், வேள்வியாலும், கேள்வியாலும், ஒழுக்கத்தாலும் தனக்கென வாழாத்தியாகத்தாலும், அங்கிச் சடங்குகளை முட்டின்றி ஆற்றலாலும், அந்தணர் பிற பாலரின் நன்மதிப்பிற்கு உரியராகிப், பெரும்பொருளையும், அருவிலைப் பண்டங்களையும், பரிசிலாகப் பெற்றனர். போர்க்கொடுமைகள் அந்தணனை அணுகாது.

வணிகர்

[தொகு]

உழவினையடுத்து பொருள் வரும் துறை வணிகமாகும். செங்குட்டுவன் காலத்தில் தரை வணிகமும் கடல் வணிகமும் முட்டின்றியும் இடையூறுயின்றியும் நடந்து வந்தன. பொதிமூட்டைகளும், அம்மூடைகளேறிய சாகாடுகளும், எண்ணப்பெற்றுக், குறியிடவும் பெற்றன. இக்குறியீட்டினைக் கண்ணெழுத்து என வழங்கினர். வணிகர் பெருஞ்செல்வராய் விளங்கினர். அவர்தம் மதிப்புக்கு அறிகுறியாக அவர்களுக்கு வேந்தன் 'எட்டி' முதலாய பல பட்டங்களை ஈந்து பெருமை செய்தான். அரச விழாக்கள் முதலியவற்றில் இவர்கள் அழைத்து கௌரவிக்கப்பட்டனர்.

புறஞ்சேரி

[தொகு]

நகரை அடுத்துள்ள வாழுமிடம் புறஞ்சேரி எனப்படும். இப்புறஞ்சேரிகளிலே துறவிகள், தவசிகள், வைதிகர் முதலான பலரும் வசித்து வந்தனர்.

மக்கள் வாழ்க்கை

[தொகு]

நகர வாழ்க்கை எளிதாய் இன்பம் நிறைந்ததாய் இருந்தது. மாந்தர் பொழுதுபோக்கினுக்காக, சைககளால் ஆன ஊமைக் கூத்துகள் வல்லோரால் நடத்தப்பெறும். அதனையடுத்து ஆடலும் பாடலும் அவிநயமும் நடைபெறும். கருவியாலும்( இசைக்கருவி) கண்டத்தாலும் (வாய்ப்பாட்டு) பாடல் இயலும். இந்நிகழ்ச்சிக்கண் மகளிர் கலந்துகொள்வதும் உண்டு. அம்மகளிர் ஆலயம் தொழுவர், பொதுக்கூத்தில் கலப்பர். பேரழகு வாய்ந்த அவர்கள் விலை மதிப்பில்லா ஆடைகளையும் அணிகலன்களையும் உடுத்தும் அணிந்தும் உலாவுவர். அவர்தம் ஆடைகள் பட்டாலும், பருத்தியாலும், கம்பளத்தாலும், எலிமயிராலும் ஆனவை. உடம்பினை மாசுகழுவி, சாந்துபூசி, சுண்ணந்தூவி, மாலையணிந்து ஆடவர் தம் கண்ணைக் கவருமாறு அவர்கள் விளங்குவர்.

மகளிர் நிலை

[தொகு]

அக்காலத்தே பெண்களும் துறவு வாழ்வை மேற்கொண்டனர் என்பதை கவுந்தியடிகள், மாதவி இவர்களால் அறியலாம். மேலும் அரச மகளிர் அரசவையில் முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது உடன் இருந்தனர். நகர மகளிர் இரு திறத்தினராக இருந்தனர். இல்லறம் நடத்தும் மறுவில் கற்பினர் ஒரு திறத்தார். தனிமறுகுகளில் வசித்த, விலைமகளிரென்னும் பொது மகளிர் மற்றொரு திறத்தினர்.

கிராம ஆட்சி

[தொகு]

தமிழக அரசுகள் நாடுகளாகவும், நாடுகள் கூற்றங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. கிராமங்கள் தனித்தனியாக ஆளப்பட்டன. ஒவ்வொரு கிராமத்திலும் ஓர் ஆட்சிச் சபையுண்டு. அச்சபை மன்றம் எனப்படும். சான்றோர் அம்மன்றங்களிலிருந்து கிராம நிகழ்ச்சிகளை மேற்பார்வை பார்த்து வந்தனர். காடுகளிலும் மலைகளிலும் சில தனிக் குடிகள் இருந்தன. எயினர் குடி இதைப் போன்றதாகும். இத்தனிக்குடிகள் நீங்கலாக, ஏனைமக்கட்தொகுதி பிற தொகுதிகளினின்றும் தனியே பிரித்துவைத்து எண்ணப்பெறாதவையாம்.

ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்கும் பிற நகரங்களுக்கும் அரசியல், வாணிகம் ஆகிய நீங்காத தொடர்புகள் இருந்தன. காடுகள் நிறைந்த தனி வழிகளிலும் வழிப்போக்கர்களுக்கு எத்துன்பமும் விளைந்ததில்லை. கிராமங்களின் நலன்களைக் காக்க கிராம அதிகாரிகள் அரசரால் நியமிக்கப்பட்டிருந்தனர். இதனால் கிராமங்களில் அமைதியும் ஊறின்மையும் நிலைபெற்றன. அவ்வதிகாரிகளோடு கிராமசபையினர் பெருந்துணை புரிந்தனர்.

கிராம மக்கள் வாழ்க்கை

[தொகு]

நகர வாழ்வைப் போலவே கிராம வாழ்க்கையும் மனவமைதி தருவதாகவே இருந்தது. கிராமத்தினர் பலரும் உழுதொழில் செய்பவராயும் , இடையருமாயிருந்தனர். பகைஏதுமின்றி அவரவர் தொழிலை ஆற்றிவந்தனர். கிராமத்திற்கும் நகரத்திற்கும் போதிய தொடர்பு இருந்தது. நீரிலும் நிலத்திலும் செல்ல சகடங்களையும் அம்பிகளையும் ஊர்தியாகக் கொண்டனர். கிராமங்கட்கும் நகரங்கட்கும் இடையே காடுகள், நெல்மணி விளைபுலங்கள், ஓடைகள், நீரூற்றுகள், கனிமரங்கள், பிற தருக்கள், மலர்ச்சோலைகள் முதலியன நிறைந்திருந்தன. இருள்பட அடர்ந்த காடுகள் பல இருந்தன. புகார் தொடங்கி மதுரை வரை இருந்த வழி வளங்களை இளங்கோவடிகள் கூற்றுகளால் நன்கு அறியலாம்.

கிராம மக்களின் பொழுதுபோக்கு

[தொகு]

கிராம மக்களின் பொழுது போக்கிற்காக பல நிகழ்வுகள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு பொதுவான ஆடுகளம் ஒன்று இருந்தது. கிராம மகளிர் சிலர் 'துணங்கை' முதலான கூத்துகளை நிகழ்த்துவர். கிராம வாழ்க்கை அமைதி நிறைந்ததாய் இருந்தது.

எயினர் அல்லது மறவர்

[தொகு]

காட்டிலும் பாலை நிலத்திலும் வாழ்ந்து வந்த மறவர் அல்லது எயினர் என்போர் ஆறலைக்கள்வராய் இருந்தனர். ஆறலித்தலும், சூறைகோடலும், நிரைகவர்தலும் அவர்க்குப் பொழுதுபோக்கு. இவர்களை தமிழ்நாட்டு மூவேந்தர் போர் நிகழும் காலத்து படைவீரராய் நியமித்தலுமுண்டு. இவர்கள் காட்டுப்பன்றி, எய்ப்பன்றி, மான் ஆகியவற்றை வேட்டையாடிக் கொன்று அவற்றின் இறைச்சியைத் தின்று, தோலினை உடுத்துவர். புலிப்பற்களையும் நகங்களையும் அணிகலன்களாக அணிவர். அனைவரும் ஒன்றாய்க் கூடி தெளி தேனைப் பருகி, ஆடிப்பாடி மகிழ்வர்.

திருமணம்

[தொகு]

சமூக வாழ்க்கையில் திருமணம் ஒரு தலையாய நிகழ்ச்சியாக இருந்தது. களவு கற்பு என இருமணங்கள் நிகழ்ந்தன. சிலப்பதிகாரத்துக் கானல்வரி களவின் பகுதிகளைக் கூறும். சிலர் அற நூல்களின் படி மண நிகழ்ச்சிகளை நடத்தினர். புரோகிதர்கள் மறையோதிச் சடங்கு ஆற்றுதலும், மணமக்கள் தீவலம் வருதலும் போன்ற வேத நூற்கரணங்கள் தமிழரிடையே இருந்தன.

ஆடல் பாடல் கலைகள்

[தொகு]

சிலப்பதிகாரம் அரங்கேற்றுக்காதை ஆடற்கலையின் இயல்பையும் இசைக்கலையின் இயல்பையும், ஆடலரங்கேற்ற மேடையின் அமைப்பையும் அவற்றின் இலக்கணத்தையும் விவரித்துக்கூறுகிறது. ஆடல் கலை 'வேத்தியல்' 'பொதுவியல்' என இருவகைப்படும். வேத்தியல் என்பது வேந்தர் முன் ஆடுவதாகும் . ஆடல் மகளிர் தலைக்கோல் பெறுவர். போர்க்கடவுளாகிய முருகனும், இன்பக்கடவுளாகிய மாயோனும் இவ் வாடற்கண் வணங்கப்பெறுவர். சிவபெருமான், துர்க்கை, இந்திராணி, முதலியோரின் பெயரால் பல ஆடல்கள் அமைந்திருந்தன. மாதவி பதினோருவகை ஆடலை ஆடியதாகவும் அவை எவ்வாறு ஆடப்பட்டன எனவும் அவிநயம் முதலான செய்திகளையும் இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். நாட்டியத்திற்கு வேண்டிய

  • ஆடலாசிரியன்
  • இசையாசிரியன்
  • நாட்டியக்கவிஞன்
  • தண்ணுமையாசிரியன்
  • குழலாசிரியன்
  • யாழாசிரியன்

ஆகியோரின் இலக்கணத்தை சிலம்பு குறிப்பிடுகிறது. சிலப்பதிகாரம் இசைத்தமிழ் நூல் என்பதற்கு அரங்கேற்றுக்காதை, கானல்வரி, வேனிற்காதை, ஆய்ச்சியர் குரவை, குன்றக்குரவை, வேட்டுவவரி, என வரும் ஆறு காதைகளும் சான்றாகும்.

உசாத்துணை

[தொகு]
  1. ஆர்.கே.சண்முகம் செட்டியார். சிலப்பதிகாரம். புகார்க் காண்ட உரை. புதுமலர் நிலையம் -வெளியீடு- 1946
  2. வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர். சிலப்பதிகாரம். புகார்க் காண்ட மதிப்புரை. புதுமலர் நிலையம் வெளியீடு -:1946
  3. எஸ். வையாபுரிப்பிள்ளை. தமிழ் ஆராய்ச்சித்துறைத்தலைவர். சென்னைப் பல்கலைக்கழகம்- சிலப்பதிகாரப் : புகார்க்காண்டம் முன்னுரை. புதுமலர் நிலையம் வெளியீடு- 1946