உள்ளடக்கத்துக்குச் செல்

நான்காம் மகிந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நான்காம் மகிந்தன் என்பவன், அனுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆண்ட சிங்கள மன்னர்களில் ஒருவன். நான்காம் சேனனுக்குப் பின்னர் அரசனான இவன், கி.பி. 956 தொடக்கம் கி.பி. 972 வரை ஆட்சியில் இருந்தான்.

இவன் பெருஞ் செல்வமும், புகழும், படை வலியும் கொண்டவனாக இருந்தான். அதனால், தனக்கு எதிரான சூழ்ச்சிகள் அனைத்தையும் முறியடித்து பகுதித் சிற்றரசர்களைப் பணிய வைத்து நாட்டை ஒற்றுமைப்படுத்தினான். நாட்டில் அரச மரபின் வழிவந்த பொருத்தமான பெண்கள் இருக்கவும், கலிங்க நாட்டில் இருந்து இளவரசி ஒருத்தியை வரவழைத்து மணம் செய்துகொண்டான். அவளையே பட்டத்து அரசியாகவும் ஆக்கினான். மகிந்தனுக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் பிறந்தனர். மகன்கள் இருவரையும் ஆளுனர்களாக ஆக்கிய மகிந்தன், மகளை துணை அரசி என்ற நிலைக்கு உயர்த்தினான்.[1]

சோழர் படையெடுப்பு

[தொகு]

இவன் காலத்தில் சோழ மன்னன் வல்லபன் படையெடுத்து வந்து நாகதீபத்தில் இறங்கினான். மகிந்தன் தனது வலிமையான படைகளை அனுப்பி அவனைத் தோற்கடித்தான். இதைத் தொடர்ந்து சோழ மன்னன், மகிந்தனுடன் ஒப்பந்தம் செய்துகொண்டான். இதனால், மகிந்தனின் புகழ் இந்தியா வரை பரவியது.[2]

பணிகள்

[தொகு]

நான்காம் மகிந்தன் புத்த பிக்குகளைச் சிறப்பாகக் கவனித்துக்கொண்டான். குறிப்பாக "பன்சுகூலிகர்" எனப்படும் கைவிடப்பட்ட ஆடைகளையே அணியும் பிக்குமாருக்கு உணவும் பிற வசதிகளும் அளித்தான். ஒவ்வொரு நாளும் மருத்துவர்களை அனுப்பி உடல்நலம் குன்றிய பிக்குமாருக்கு மருத்துவம் செய்வித்தான். இரண்டு தடவை தனது நிறைக்குச் சமமான பெறுமதியான பொருட்களை விகாரைகளைச் சேர்ந்த பிக்குகளுக்குத் தானமாக வழங்கியுள்ளான். ஏழைகளுக்கும் ஏதிலிகளுக்கும் உணவு வழங்கவும் ஏற்பாடு செய்தான். சோழர் படையெடுப்பின்போது தீமூட்டி எரிக்கப்பட்டதும், தூபாராம, ருவன்வெலிசாய, அபயகிரி, சேதவனாராம ஆகிய நான்கு விகாரைகளுக்குச் சொந்தமானதுமான கட்டிடம் ஒன்றை மீளக் கட்டினான். இதைப் போலவே எரியுண்ட தந்ததாது இல்லம், சங்கணி இல்லம், மகாபாலி தானசாலை ஆகிவையும் மீளவும் கட்டப்பட்டன. புத்த நிறுவனங்களுக்கு ஏராளமான திருப்பணிகளைச் செய்த இம்மன்னன், தனது சிறிய தந்தை மூன்றாம் உதயனால் தொடங்கப்பட்ட " மணி" எனப்படும் அரச மாளிகையையும் கட்டி முடித்தான்.[3]

இறப்பு

[தொகு]

நான்காம் மகிந்தன் தனது 16 ஆவது ஆட்சியாண்டில் காலமானான். இவனுக்குப் பின்னர் இவனது கலிங்கத்து மனைவிக்குப் பிறந்த 12 வயது மகன் அரசனானான்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. The Mahavansa, translated in to Eglish by L. G. Wijesinha, Part II, Asian Educational Services, New Delhi, 1996 (First Published 1889), p. 85
  2. The Mahavansa, 1996, p. 85
  3. The Mahavansa, 1996, p. 86, 87

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்காம்_மகிந்தன்&oldid=2174920" இலிருந்து மீள்விக்கப்பட்டது