உள்ளடக்கத்துக்குச் செல்

சீவக சிந்தாமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீவக சிந்தாமணி என்பது சங்க காலத்துக்குப் பின்னர் தோன்றிய ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. சோழர் காலத்தில் எழுதப்பட்டது. திருத்தக்கதேவர் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்ட இக் காப்பியம் சீவகன் என்பவனின் அக வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. சமய இலக்கியங்களே அதிகம் படைக்கப்பட்ட அக்காலத்தில், மக்களிடத்திலும் மன்னனிடமும் கூட இதற்கான தேவையும், ஆதரவும் இருந்ததாகத் தெரிகிறது.[1][2]

சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் தமிழில் தோன்றிய முதல் இரு காப்பியங்களாகக் கருதப்படும், கதையை அடிப்படையாகக் கொண்ட இலக்கியங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக உருவான கதை கூறும் தமிழ் இலக்கியம் இது. எனினும் முன்னையவற்றைப் போலன்றிச் சீவகசிந்தாமணி விருத்தப்பாக்களால் ஆனது. இதனால் விருத்தப் பாக்களால் ஆன முதல் தமிழ்க் காப்பியமாகவும் இது திகழ்கின்றது.

நூலாசிரியர்

[தொகு]

இக்காப்பியத்தை இயற்றிய திருத்தக்கதேவர் சமண முனிவராவார். இவர்,

  1. திருத்தகு முனிவர்
  2. திருத்தகு மகா முனிவர்

என்று அழைக்கப் பெறுவார். இவர் சைன ஆசாரியர் சங்கங்களில் ஒன்றாகிய திரமிள சங்கத்து அருங்கலான்வயத்தைச் சேர்ந்தவர் என்பர். திருத்தக்கதேவர் சோழர் குடியில் பிறந்தவர். இளமையிலேயே கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியவர். வடமொழிப் பயிற்சி மிக்கவர். காமம், பொய், கொலை, கள், சூதாடல் என்ற ஐவகைத் தீமையும் அகற்றியவர். சமணத் துறவியாக வாழ்ந்தவர். விருத்தமெனும் பாடல்களைக் கொண்டு பெருங்காப்பியம் பாடியவர்களில் இவர் முதன்மையானவர்.

நூல் குறிப்பு

[தொகு]

சீவக சிந்தாமணி," மூவா முதலா உலகம் " எனத் தொடங்கும் கடவுள் வாழ்த்தோடு தொடங்குகிறது. இந்நூலில் நாமகள் இலம்பகம் முதலாக முத்தி இலம்பகம் ஈறாக, 13 இலம்பகங்களைக் கொண்டு திகழ்கின்றது. இலம்பகம் யாவும் மகளிர் பெயரினையே பெற்றுள்ளன. ஒவ்வோர் இலம்பகத்திலும் ஒரு மண நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. இலக்கியச் சிறப்பு மிக்க இந்நூலில் 3145 பாடல்கள் உள்ளன. விருத்தம் என்னும் பாவகையால் பாடப் பெற்றது.

நூலின் வேறு பெயர்கள்

[தொகு]
  • மணநூல்
  • முக்தி நூல்
  • காமநூல்
  • இயற்கை தவம்
  • முதல் விருத்தப்பா காப்பியம்
  • தமிழ் இலக்கிய நந்தாமணி
  • முடி பொருள் தொடர்நிலைச் செய்யுள்

எனப் பல்வேறு பெயர்களைக் கொண்டுள்ளது சீவக சிந்தாமணி.

கதைச் சுருக்கம்

[தொகு]

மன்னனுக்கு மகனாக, அரசியின் வயிற்றில் உருவானவன் சீவகன். எனினும் விதி வசத்தால் சுடுகாட்டில் பிறக்கிறான். பின்னர் கந்துக்கடன் என்னும் வணிகன் ஒருவனின் வீட்டில் வளர்கின்றான். அச்சணந்தி என்னும் ஆசானிடம் கல்வி பயின்ற இவன் சிறந்த தோற்றப்பொலிவு கொண்டவன், மிகுந்த அறிவு நிரம்பியவன், பல்வேறு கலைகளிலும் வல்லவன், சிறந்த வீரன். இவன் எட்டு மங்கையரை மணந்து கொள்கிறான். அந்த எட்டு மகளிர்க்கும் எட்டு வகை குணங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இந்நூலுக்கு மணநூல் என்ற சிறப்புப்பெயரும் உண்டு. இவ்வாறு பல மணம் புரிந்தவன் ஆனாலும், இவன் ஒரு காமுகனாக அன்றிச் சிறந்த மன அடக்கம் கொண்டவனாகவே சித்திரிக்கப்படுகிறான். இவ்வாறு பல பெண்களை மணம்புரிந்ததன் மூலம், பணபலத்தையும், படைபலத்தையும் பெருக்கிக் கொண்டு அரசபதவியை அடைகிறான். 30 ஆண்டுகள் நீதியுடன் ஆட்சி செய்த சீவகன், ஆட்சிப் பொறுப்பை மகனிடம் அளித்துவிட்டுத் துறவறம் பூண்டு முத்தி பெறுகிறான்.

முக்கிய பாத்திரங்கள்

[தொகு]

நூல் உணர்த்தும் உண்மைகள்

[தொகு]
  • அமைச்சரை ஆராய்ந்து தெளிதல் வேண்டும்.
  • பெண்வழிச்சேறல் பெருந்துன்பம் விளைவிக்கும்.
  • தன்ஆட்சியர் கட்டளைப்படி நடத்தல் வேண்டும்.
  • பகையை வெல்லக் காலமும், இடமும் வரும் வரை யாரிடமும் தன் எண்ணத்தை வெளிப்படுத்தக் கூடாது.
  • எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும்.
  • நன்றி மறவாது இருத்தல் வேண்டும்.

குறிப்பு

[தொகு]
  • சீவக சிந்தாமணியில் மன்னன் மனைவியான விசயை தப்பித்துச் செல்ல மன்னன், பறக்கும் மயிற்பொறியொன்றைச் செய்விக்கிறான்.
  • சேக்கிழார், மன்னவன் சமண காப்பியத்தைப் படித்து இன்புறும் நிலை கண்டு வருந்தித் திருத்தொண்டர் வரலாற்றைப் பெரிய புராணமாகத் தொகுத்தார்.

சான்றுகள்

[தொகு]

மேலும் அறிய

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீவக_சிந்தாமணி&oldid=3899511" இலிருந்து மீள்விக்கப்பட்டது