புதிய சாசனம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதிய சாசனம் என்னும் கிறித்தவக் காப்பியத்தை அருள்திரு வின்சென்ட் சின்னதுரை என்னும் கத்தோலிக்க குரு ஆக்கியுள்ளார். புதுக்கவிதை நடையில் ஆக்கப்பட்ட இக்காப்பியம் 2002ஆம் ஆண்டு வெளிவந்தது.

நூல் பிரிவுகள்[தொகு]

இக்காப்பியம் இயேசுவின் வரலாற்றைக் கூறுகின்ற நற்செய்தி நூல்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. வானதூதர் செக்கரியா என்னும் யூத குருவுக்குத் தோன்றி இறைத் திட்டத்தை அறிவித்த நிகழ்ச்சி தொடங்கி இயேசு விண்ணேறிச் சென்ற நிகழ்ச்சி வரை இக்காப்பியத்தில் பாடப்பட்டுள்ளன.

நூலின் 10 இயல்களில் 122 பாடல்கள் அடங்கியுள்ளன.

ஆசிரியர்[தொகு]

இக்காப்பியத்தின் ஆசிரியர் தமிழக அரசின் சிறுபான்மைக் குழுத் தலைவராகவும் சென்னையில் அமைந்துள்ள சாந்தோம் கலைத் தொடர்பு நிலையத்தின் இயக்குநராகவும் செயல்பட்டிருக்கிறார். தற்போது அகில இந்திய கத்தோலிக்க திருச்சபையின் பொதுநிலையினர் குழுவின் செயலராகப் பணியாற்றுகின்றார்.

பாடல்கள் சில[தொகு]

அன்னை மரியாவின் சிறப்பைக் கூறும்போது ஆசிரியர்,

மரியா!
கால் முளைத்த யாழ்!
தேவ ராகத்தை மீட்டுவதற்காகவே
தேவன் தேர்ந்தெடுத்த தேவ மங்கை
யூத குலம் பெற்றெடுத்த யாக நங்கை

என்று பாடுகிறார்.

மனித குலத்தின் மீட்புக்காக இயேசு சிலுவையில் கொடிய மரணத்தைச் சந்தித்த காட்சி:

உருவப் படத்தைத் தொங்கவிடுவது போல்
ஆணியால் அடித்த அடியில் ஆன்மாவே துடிதுடித்துத் துள்ளியது
அறையப்பட்ட இயேசுவைச் சிலுவையின் தாரோடு தூக்கி
வேராக வெட்டிய பள்ளத்தில் நட்டார்கள்.
மூன்று ஆணிகளோடு முழு உடலும் தொங்க,
பூமியின் முகத்தில் புதிய ஆணியைப் போல்
சிலுவை நின்றது.

ஆதாரம்[தொகு]

இர.ஆரோக்கியசாமி, கிறித்தவ இலக்கிய வரலாறு, கிறித்தவ ஆய்வு மையம், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 2010. (நூல் கிடைக்குமிடம்: பூரண ரீத்தா பதிப்பகம், 1130 பழனியப்பா நகர், 3-வது தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் - 613006).

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_சாசனம்_(நூல்)&oldid=3175801" இலிருந்து மீள்விக்கப்பட்டது