இரட்சணிய யாத்திரிகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இரட்சணிய யாத்திரிகம் என்றி ஆல்பிரட் கிருட்டிணபிள்ளை (எச்.ஏ.கிருட்டினனார்) அவர்களால் எழுதப்பட்ட ஒரு காப்பிய நூல் ஆகும்.ஜான் பான்யன் (John Bauyan) என்பவர் ஆங்கிலத்தில் இயற்றிய 'புனிதப் பயணிகள் முன்னேற்றம்' என்ற நூலின் தமிழாக்கமான மோட்சப்பிரயாணம் என்னும் நூலைத் தழுவிச் செய்யுள் நடையில் எழுதப்பட்டதாகும்.(The Pilgrim's Progress) தழுவல் ஆகும். கம்ப இராமாயண இலக்கிய வழியிலும், தண்டியலங்கார இலக்கண வழியிலும் தமிழ் மரபுக்கேற்ப எழுதப்பட்டுள்ளது.

இந்நூலில் பருவம் என்பது பெரும் பிரிவு, படலம் அப்பருவத்தினுள் அமையும் சிறுபிரிவு. இந்நூல் ஆதிபருவம், குமார பருவம், நிதான பருவம், ஆரணிய பருவம், இரட்சணிய பருவம் என்னும் ஐந்து பருவங்களையும் 47 படலங்களையும் உடையது. இந்நூல் 3622 பாடல்களையும், 144 இரட்சணிய யாத்திரிகத் தேவாரங்களையும் கொண்டுள்ளது.

இரட்சணிய யாத்திரிகத்தில் காப்பியத் தலைவன் கிருத்துவன் அல்லது ஆன்மீகன் ஆவான். அவனின் குரு நற்செய்தியாளன், நண்பன் மென்னெஞ்சன் ஆவான். காப்பியத் தலைவன் மனம் தடுமாறும் போது அவனுக்கு உதவி  சகாயம் செய்கிறான். இடுக்க வாயில் என்னுமிடத்தில் வியாக்கியானி என்பவனைச் சந்திக்கிறான்.அவனது ஊக்க உரைகளால் உரம் பெறுகிறான். நல்வழி நோக்கிச் செல்லுகின்ற பயணம், எளியதாக அமைவதில்லை; துன்பங்களும் தொல்லைகளும் அடுக்கடுக்காக வந்து, நம்மை வழி தவறச் செய்யும். எனினும் அசையாத ஊக்கத்தோடு நாம் அப்புனிதப் பயணத்தில் முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதை இதன் வாயிலாக உணர்கிறான்.தனது பயணத்தில்  கிறிஸ்தவ குன்றினைக்  கண்டு இறைவனைத் துதித்தபடி முன்னேறும் அவன், இடையில் பயணிகள் இளைப்பாறும் ஒரு சத்திரத்தில் தங்கி ஒய்வு பெறுகிறான். அங்கு விவேகி, யூகி, பக்தி, சிநேகிதி என்னும் நான்கு நல்ல பெண்மணிகள் அவனை அன்புடன் உபசரிக்கின்றனர். அவர்களுள் பக்தி என்பவள், கிறித்து பெருமானின் சிலுவைப்பாடுகளையும் அதனால் மனிதர் பெறும் மீட்சியின் (விடுதலையின்) அருமையையும் விளக்கிச் சொல்கிறாள்.

மீண்டும், பயணத்தில் நம்பிக்கை என்னும் இன்னொரு நண்பனின் துணையைப் பெறுகிறான். பற்பல துன்பங்களைத் தாண்டி இறுதியில் மரண ஆற்றையும் கடந்து, உச்சிதப் பட்டணம் சேருகின்றனர். அங்கு இவர்களை இறைத்தூதர்கள் வரவேற்கின்றனர். இயேசு பெருமான் அரியணையில் வீற்றிருக்கும் கோலத்தைக் கண்டு களிக்கின்றனர். பின்னர் இருவரும் நீடு வாழ்வு பெறுகின்றனர். ஆகவே தான் இந்நூல் இரட்சணிய யாத்திரிகம், அதாவது மீட்சிப் பயணம் எனப் பெயர் பெற்றது. எனவே இந்த நூல் முற்று உருவகமாக அமைந்த பெருங்காப்பியம் ஆகும்

திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த “ நற்போதகம்” எனும் ஆன்மீக மாத இதழில் இரட்சணிய யாத்திரிகம் 13 ஆண்டுகள் தொடராக வெளிவந்தது. பின்னர் 1894 - ஆம் ஆண்டு மே மாதம் கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தாரால் முதற்பதிப்பாக வெளியிடப்பட்டது. இரட்சணிய யாத்திரிகம் என்பதன் பொருள்,கடவுளால் இரட்சிக்கப்படுவது குறித்து உயிர் செய்யும் யாத்திரை என்பதாகும்.