உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்க் கிறித்தவக் காப்பியங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்க் கிறித்தவக் காப்பியங்கள் என்பது கிறித்தவ மறையின் கொள்கைகளைக் கவிதை வடிவில் எடுத்துரைக்கும் நெடுஞ்செய்யுள் வகை நூல்களைக் குறிக்கும். இவ்வகைக் கவிதை நூல்களில் காப்பியத் தலைவராக வருவோர்: மூவொரு இறைவன்; தந்தை, மகன், தூய ஆவி என்னும் இறையாட்கள்; மனிதரை மீட்க உலகில் மனிதராகத் தோன்றி சிலுவையில் உயிர் துறந்து மீண்டும் உயிர் பெற்றெழுந்த இயேசு கிறிஸ்து, இயேசுவின் தாய் அன்னை மரியா, இயேசுவின் வளர்ப்புத் தந்தை யோசேப்பு, பிற புனிதர்கள் மற்றும் பெருமக்கள் ஆவர்.

சிறப்புகள்

[தொகு]

தமிழ்க் கிறித்தவக் காப்பியங்கள் பெரும்பாலும் விவிலியத்தை அடிப்படையாகக் கொண்டவை ஆகும். விவிலியம் அறிவிக்கின்ற கடவுளின் பண்புகள், அவர்தம் செயல்கள், அவர் மனிதரையும் உலகையும் படைத்தல், மனிதர் கடவுளின் அன்பிலிருந்து அகன்று போய்ப் பாவத்தில் வீழ்தல், மனிதரைக் கடவுள் இயேசு கிறிஸ்துவின் சிலுவைச் சாவின் வழியாக மீட்டு பேரின்ப வாழ்வுக்குக் கொணர்தல் போன்ற பொருள்கள் இக்காப்பியங்களில் கவிதை வடிவில் எடுத்துக் கூறப்படுகின்றன.

தமிழ்க் கிறித்தவக் காப்பியங்களில் கதைத் தலைவர்களாக வருவோரில் இயேசு கிறிஸ்து, அவர்தம் அன்னை மரியா, வளர்ப்புத் தந்தை யோசேப்பு ஆகியோர் முக்கிய இடம் பெறுகின்றனர். மேலும் எஸ்தர், புனித பவுல் போன்ற விவிலிய மாந்தர்மீதும் காப்பியங்கள் உள்ளன.

கிறித்தவ மறையின் கொள்கைகளைச் சிறப்பான விதத்தில் வாழ்ந்து காட்டிய பெருமனிதர்களாகிய புனிதர் பலர் இக்காப்பியங்களில் பாட்டுடைத் தலைவர்களாக வருகின்றனர். குறிப்பாகப் புனித சவேரியார், தேவசகாயம் பிள்ளை, அன்னை தெரேசா போன்றோரைச் சுட்டிக்காட்டலாம்.

இருவகைக் காப்பியங்கள்

[தொகு]

தமிழ் இலக்கியப் பிரிவில் உள்ள பெருங்காப்பியம், சிறுகாப்பியம் என்னும் வகைப்பாடு கிறித்தவக் காப்பிய வகையிலும் உண்டு.

தண்டியலங்காரம் என்னும் நூல், வாழ்த்துதல், தெய்வம் வணங்குதல், உரைக்கும் பொருள் உணர்த்தல் என்னும் மூன்றனுள் ஒன்று முன்னே கூறப்பட்டு, அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கினையும் பயக்கும் ஒழுகலாறு உடையதாய், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவனைப் பெற்று, மலை, கடல், நாடு, நகரம், இருசுடர் தோற்றம் போன்றவற்றின் வருணனையுடையதாய், புதல்வரைப் பெறுதல், புலவி, கலவி போன்றவற்றைப் புனைந்து கூறல், அரசச் சுற்றத்தோடு ஆலோசித்தல், தூது விடுத்தல், போர்புரிதல், வெற்றி பெறுதல் போன்ற பல நிகழ்வுகளும் பாடப்படுதல் பெருங்காப்பியத்தின் இலக்கணமாகும் எனப் பகர்கிறது.

அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கினுள் ஒன்றும் பலவும் குறைந்து வருவது சிறுகாப்பியம் என்றும் தண்டியலங்காரம் கூறுகிறது.

சைவம், வைணவம், சமணம், பவுத்தம், இசுலாம் போன்ற சமயங்களைச் சார்ந்து தமிழில் பல காப்பியங்கள் பாடப்பட்டுள்ளது போன்று, கிறித்தவர்களும் பிறரும் கிறித்தவ சமயக் கொள்கைகளை மையமாகக் கொண்டு பல காப்பியங்களைப் பதினேழாம் நூற்றாண்டிலிருந்தே படைத்துள்ளனர்.

நாற்பத்து மூன்று தமிழ்க் கிறித்தவக் காப்பியங்கள்

[தொகு]

தமிழ்க் கிறித்தவக் காப்பியங்களுள் வீரமாமுனிவர் இயற்றிய தேம்பாவணி, என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை பாடிய இரட்சணிய யாத்திரிகம் போன்றவை பெரும்புகழ் பெற்றவை ஆகும். இவை தவிர எண்ணிறந்த தமிழ்க் கிறித்தவக் காப்பியங்கள் அச்சில் பதிப்பிக்கப்பெற்றுள்ளன. ஆயினும் அவற்றுள் பல நூல்கள் பொதுமக்கள் அறிவுக்கு எட்டாத நிலையிலேயே உள்ளன.

அறியப்பட்ட தமிழ்க் கிறித்தவக் காப்பியங்களின் முழுப் பட்டியல் கீழ்வருமாறு:

1. தேவ அருள் வேதபுராணம்
2. தேம்பாவணி
3. திருச்செல்வர் காவியம்
4. யோசேப்புப் புராணம்
5. கிறிஸ்தாயனம்
6. திருவாக்குப் புராணம்
7. ஆதி நந்தவனப் புராணம்
8. ஆதி நந்தவன மீட்சி
9. ஞான ஆனந்த புராணம்
10. ஞானாதிக்கராயர் காப்பியம்
11. அர்ச்சயசிஷ்ட சவேரியார் காவியம்
12. பூங்காவனப் பிரளயம்
13. கிறிஸ்து மான்மியம்
14.இரட்சணிய யாத்திரிகம்
15. சுவர்க்க நீக்கம்
16. சுவிசேட புராணம்
17. திரு அவதாரம்
18. சுடர்மணி
19. கிறிஸ்து வெண்பா
20. இயேசு காவியம்
21. அருள் அவதாரம்
22. அறநெறி பாடிய வீரகாவியம்
23. எஸ்தர் காவியம்
24. மோட்சப் பயணக் காவியம்
25. அன்னை தெரசா காவியம்
26. அருள்நிறை மரியம்மை காவியம்
27. புவியில் ஒரு புனித மலர்
28. அருட்காவியம்
29. நற்செய்திக் காவியம்
30. இயேசு மாகாவியம்
31. இதோ மானுடம்
32. புதிய சாசனம்
33. பவுலடியார் பாவியம்
34. உலக சோதி
35. திருத்தொண்டர் காப்பியம்
36. மீட்பதிகாரம் என்னும் பேரின்பக் காப்பியம்
37. ஆதியாகம காவியம்
38. அருள் மைந்தன் மாகாதை
39. இயேசுநாதர் சரித்திரம்
40. பிள்ளை வெண்பா என்னும் தெய்சகாயன் திருச்சரிதை
41. புனித பவுல் புதுக்காவியம்
42. கன்னிமரி காவியம்
43. புதுவாழ்வு

தாரம்

[தொகு]

இர.ஆரோக்கியசாமி, கிறித்தவ இலக்கிய வரலாறு, கிறித்தவ ஆய்வு மையம், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 2010. (நூல் கிடைக்குமிடம்: பூரண ரீத்தா பதிப்பகம், 1130 பழனியப்பா நகர், 3-வது தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் - 613006).