உள்ளடக்கத்துக்குச் செல்

தேம்பாவணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேம்பாவணி (Thembavani) என்னும் நூல் இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தையான புனித யோசேப்பு மீது இயற்றப்பட்ட முதற் பெரும் செய்யுள் வகை நூலாகும். இந்நூல் இத்தாலிய நாட்டவரான வீரமாமுனிவர் அவர்கள் தமிழில் திறம்பட ஆக்கிய நூல் எனப் புகழப்படுகிறது. கிறிஸ்தவ சமயத்தின் சுருக்கமென்றே இந்நூலை அறிஞர்கள் மதிப்பிடுகின்றனர்.

இத்தமிழ்க் காப்பியம் பிறமொழி நூல் ஒன்றில் வருகின்ற செய்திகளைத் தழுவி, தமி்ழ் நெறிக்கேற்ப எழுதப்பட்டதாகும். அதாவது, ஸ்பானிய நாட்டு ஆகிருத நகரில் வாழ்ந்த ஆகிர்த மரியாள் (Maríyal de Ágreda) என்னும் கன்னி மறைபொருளான இறைநகரம் (Mystical City of God) என்னும் நூலை, கன்னி மரியாவின் ஆணைப்படி எழுதியதாகக் கூறியுள்ளார்[1]. அந்த நூலில் இயேசுவின் வளர்ப்புத் தந்தையான யோசேப்பு பற்றிய செய்திகளும் உண்டு. ஆகிர்த மரியின் அந்நூலைத் தழுவி, தமிழ் மரபுக்கும், தமிழ்ப் பண்பாட்டுக்கும் ஏற்ப யோசேப்பின் வரலாற்றை இயற்றியிருக்கிறார் வீரமாமுனிவர்.

தேம்பாவணியின் பொருள்[தொகு]

தேம்பா + அணி எனப் பிரித்து வாடாத மாலை என்றும், தேன் + பா + அணி எனப் பிரித்துத் தேன் போன்ற இனிய பாடல்களின் மாலை என்றும் இதற்குப் பொருள் உண்டு.[2])[3][4] இயேசு நாதரை வளர்த்த தந்தையாகிய சூசையப்பரைத் தலைவராகக் கொண்டு இது பாடப்பட்டது.[5] சூசையப்பருக்குத் தேம்பாவணி எனப் பெயரிட்டு இந்நூலில் பாடியுள்ளார்.

தேம்பாவணியின் அரங்கேற்றம்[தொகு]

'தேம்பாவணி' கி.பி. 1726-ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் அரங்கேற்றப்பட்டது. பல புலவர்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்குச் சளைக்காமல் பதிலளித்த வீரமாமுனிவரிடம் தமிழ்ப் புலவர்கள், "எல்லாம் தெரியுமெனக் கூறும்; பெஸ்கி அவர்களே! வானத்தில் எத்தனை நட்சத்திரம் இருக்கிறது; எனக் கூற முடியுமா?" என நையாண்டியாகக் கேட்டார்கள். பதட்டமின்றி "முப்பது மூன்று கோடி, முப்பதிமூன்று லட்சத்து, முப்பதிமூவாயிரத்து, முன்னூற்றிமுப்பதிமூன்று நட்சத்திரங்கள் சந்தேகமிருந்தால் எண்ணிப்பாருங்கள்" என்றதும், சபையில் சிரிப்பொலி எழும்பிப் பலர் முனிவரைப் பாராட்டினார்கள். "தேம்பாவணி"யின் சிறப்பைப் பாராட்டி மதுரைத் தமிழ்ச்சங்கம்; பெஸ்கிப் பாதிரியாருக்கு ராஜரிஷி என்ற பட்டம் அளித்துச் சிறப்பித்தது.

நூலின் அமைப்பு[தொகு]

தேம்பாவணி மூன்று காண்டங்களைக் கொண்டது. ஒவ்வொன்றிலும் 12 படலமாக 36 படலங்கள் உள்ளன. மொத்தம் 3,615 விருத்தப் பாக்கள் 90 சந்த வகைகளுடன் பாடப் பெற்றது தேம்பாவணி.

தமிழ் மரபு[தொகு]

தேம்பாவணி ஆசிரியர், வெளி நாட்டவரே ஆயினும், காப்பியக் கதைத் தலைவர் சூசை வாழ்ந்ததும் தமிழ் மண்ணில் இல்லை எனினும், காப்பியம் முழுக்கத் தமிழ் மணம் கமழ்வதாக, தமிழ்ப் பண்பாட்டில் தோய்ந்ததாகவே படைக்கப் பெற்றுள்ளமைக்குப் பல சான்றுகள் கூறலாம்.

பிற தமிழ்க் காப்பியங்களைப் போலவே, சீரிய உலகம் மூன்றும் என மங்கலச் சொற்களைப் பெய்தே, தொடங்குகிறார் ஆசிரியர். இறைவனை வணங்க முற்படும் போது, மேனாடுகளில் வழங்கும் கிறித்தவ மரபுகளைச் சாராது, தமிழ் மரபையே சார்ந்து, இறைவனது பாதங்களையே முதலில் வணங்குவதையும், இறைவனது பாதங்களை மலராகக் காண்பதையும் இங்குக் காண்கிறோம். இறைவனுக்கு வாகனங்களை உரிமை செய்து பாடுவன தமிழகச் சமயங்கள். அத்துடன், இறைவனுக்குரிய கொடிகளாகச் சிலவற்றைக் குறிப்பதும் இங்குள்ள சமய மரபு. இதனைப் பின்பற்றி வீரமாமுனிவரும் திருமகன் இயேசுவை மேக வாகனத்தில் வருபவராகவும், அவரது முன்னோரான தாவீது அரசனைச் சிங்கக் கொடியோன் என்றும் பாடுகிறார்.

மேலும் இறைவனது திருமேனிக்கு வண்ணம் (நிறம்) குறித்துப் பாடுவது, இறைவனைத் தரையில் தலைபட வணங்குவது, கை கூப்பி வணங்குவது, மலர்கள் தூவி வழிபாடு செய்வது, பல்வகை விளக்குகளை ஆலயத்தில் ஏற்றுவது, தேர்த்திருவிழா காண்பது முதலிய பல தமிழ்ச் சமய மரபுகளைத் தம் காப்பியத்தில் வீரமாமுனிவர் இணைத்துள்ளதைக் காண்கிறோம். ஓரிரு இடங்களில் தாம் கூறவரும் செய்திகளுக்கு உவமையாகத் தமிழ்நாட்டுப் புராணச் செய்திகளையும் பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு தமிழ் மரபுக் கேற்ப, தம் காப்பியத்தைக் கவிஞர் அமைத்துள்ளமை புலனாகிறது.

தமிழ் இலக்கியத் தாக்கம்[தொகு]

வீரமாமுனிவர் வெளிநாட்டவராக இருந்தும் தமிழ் மரபைக் கருத்தாகக் கடைப்பிடிப்பது சிறப்பு. அவர் வருணிக்கின்ற பாலத்தீன நாடும், எருசலேம் நகரும் தமிழ் மண்ணின் மணம் கமழ்வதாகவே உள்ளன. முன்னோர் மொழியைப் பொன்னேபோல் போற்றிய வீரமாமுனிவர் திருவள்ளுவர், சீவக சிந்தாமணி பாடிய திருத்தக்கதேவர், கம்பர், மாணிக்கவாசகர் போன்றோரின் நடை, சொல், உவமை, கருத்து போன்றவற்றைச் சூழலுக்குப் பொருத்தமாக எடுத்தாள்கிறார்.

எடுத்துக்காட்டாக, கபிரியேல் வானதூதன் கடவுளின் நற்செய்தியை மரியாவிடம் உரைத்தபோது, மரியா கலக்கமுற்றதையும் அக்கலக்கத்தை வானதூதர் உணர்ந்தறிந்தார் என்பதையும் விளக்கவந்த வீர்மாமுனிவர்

பளிங்கு அடுத்தவற்றைக் காட்டும் பான்மையால் இவள் முகத்தில்
உளம் கடுத்தவற்றை ஓர்ந்த கபிரியேல் உறுதி சொல்வான்... (பாடல்: 535)

என்ற வரிகளில் திருவள்ளுவரின்

அடுத்தது காட்டும் பளிங்குபோல நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்

என்னும் குறட்பா அமைவதைக் காணலாம்.

எருசலேம் நகரை வருணிக்கும் வீரமாமுனிவர் இவ்வாறு பாடுகிறார்:

நீர் அல்லதும் அலை இல்லது; நிறை வான் பொருள் இடுவார்
போர் அல்லது பகை இல்லது; புரிவான் மழை பொழியும்
கார் அல்லது கறை இல்லது; கடி காவலும் அறனால்
சீர் அல்லது சிறை இல்லது திரு மா நகர் இடையே (பாடல்: 162)

(பொருள்): "எருசலேம் என்னும் திரு மாநகரில் நீரே அலைபடுவதல்லாமல், வேறு அலைச்சல் இல்லை; நிறைந்த சிறந்த பொருளை இரவலர்க்கு இடுவாரிடையே எழும் போட்டிப் போரேயல்லாமல், பகையால் எழும் போர் இல்லை; தாரையாக வானத்தினின்று மழை பொழியும் கருமேகமே கறை கொண்டுள்ளதல்லாமல், மக்களிடையே எவ்விதக் கறையும் இல்லை. குற்றங்களைக் கடிவதற்கான காவலும் அறவுணர்வினால் சீர் பெறுவதேயல்லாமல், சிறைக்காவல் என்பது இல்லை."

இப்பாடல் சேக்கிழார் வருணிக்கும்

ஓங்குவன மாடநிரை ஒழுகுவன வழுவில் அறம்
நீங்குவன தீங்குநெறி நெருங்குவன பெருங்குடிகள்...

என்னும் பாடல் வரிகளை ஒத்திருப்பதைக் காணலாம்.

அவலச் சுவையை வெளிப்படுத்துவதில் தமிழுக்கு இணையான வேறொரு மொழி காணல் அரிது. காணாமற்போன தம் திருமகன் இயேசுவைத் தேடி அலையும் யோசேப்பு புலம்புவதை வீரமாமுனிவர் பாடுகிறார்:

பொன் ஆர் சிறகால் புட்கரம் சேர் புள்குலமே,
என் ஆர் உயிரே, என் நெஞ்சத்து ஆள் அரசே,
ஒன்னார் மனம் நேர் வனம் சேர உற்ற வழி,
அன்னான் நாட, அறையீரோ எனக்கு?" என்றான். (பாடல்: 3143)

(பொருள்): "பொன் போன்ற அழகிய சிறகுகளால் வானம் சேரும் திறம் கொண்ட பறவை இனங்களே, எனக்கு அரிய உயிர்போன்றவனும் என் உள்ளத்தில் அமர்ந்து ஆளும் அரசனுமாகிய திருமகன், பகைவர் மனம்போல் இருண்ட வனத்தை அடையச் சென்ற வழியை, அவனை நான் தேடிக் காணும் பொருட்டு, எனக்குச் சொல்ல மாட்டீரோ?" என்றான்.

அறக் கடல் நீயே; அருள் கடல் நீயே; அருங் கருணாகரன் நீயே;
திறக் கடல் நீயே; திருக் கடல் நீயே; திருந்து உளம் ஒளிபட ஞான
நிறக் கடல் நீயே; நிகர் கடந்து, உலகின் நிலையும் நீ; உயிரும் நீ; நிலை நான்
பெறக் கடல் நீயே; தாயும் நீ எனக்கு; பிதாவும் நீ அனைத்தும் நீ அன்றோ? (பாடல்: 487)

(பொருள்): "அறத்தின் கடலாய் இருப்பவனும் நீயே; அருளின் கடலாய் இருப்பவனும் நீயே; அரிய கருணைக்கு இருப்பிடமானவனும் நீயே; வல்லமையின் கடலாய் இருப்பவனும் நீயே; செல்வக் கடலாய் இருப்பவனும் நீயே; திருந்திய மக்களின் உள்ளம் ஒளி பெறுமாறு ஞான அழகின் கடலாய் இருப்பவனும் நீயே; ஒப்புமையெல்லாம் கடந்து நின்று, இவ்வுலகின் நிலைக்களனாய் இருப்பவனும் நீயே; அதன் உயிராய் இருப்பவனும் நீயே; நான் நிலைபெறக் கடல்போல் நின்று தாங்குபவனும் நீ எனக்குத் தாயாய் இருப்பவனும் நீ; தந்தையாய் இருப்பவனும் நீயே; அனைத்தும் நீயே அல்லவா?"

தேம்பாவணியின் இப்பாடலில் திருவாசக மணம் கமழ்கிறது.

நூலின் சிறப்பு[தொகு]

தமிழில் அமைந்த காப்பியங்களிலேயே, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத வெளிநாட்டவர் ஒருவரால் இயற்றப்பட்டது எனும் பெருமை தேம்பாவணிக்கே உண்டு.

தேம்பாவணியில் சில வரிகள்[தொகு]

தேம்பாவணியில் உள்ள கடவுள் வாழ்த்தில் உள்ள சில வரிகள்:

 
கார்த்திரள் மறையாக் கடலிலுண் மூழ்காக்
   கடையிலா தொளிர்பரஞ் சுடரே
நீர்த்திரள் சுருட்டி மாறலை யின்றி
   நிலைபெறுஞ் செல்வநற் கடலே
போர்த்திரள் பொருதக் கதுவிடா வரணே
   பூவனந் தாங்கிய பொறையே
சூர்த்திரள் பயக்கு நோய்த்திரள் துடைத்துத்
   துகடுடைத் துயிர்தரு மமுதே

தேம்பாவணியில் விவிலியச் செய்திகள்[தொகு]

வீரமாமுனிவர் இயற்றிய தேம்பாவணி கிறித்தவ விவிலியத்தில் வருகின்ற பல நிகழ்ச்சிகளை உள்ளடக்கியுள்ளது. அவை 150க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ளன.

அதே நேரத்தில் விவிலியத்தில் காணப்படாத பல செய்திகளையும் தேம்பாவணி கொண்டுள்ளது. அச்செய்திகள் பலவற்றையும் வீரமாமுனிவர் ஆகிர்த மரியாவின் நூலிலிருந்து பெற்றார். எடுத்துக்காட்டாக, யோசேப்பு துறவறம் புகச் சென்றபோது கடவுளருளால் மனம் மாறி, இல்லறத்திலேயே துறவியாக வாழ முடிவுசெய்து எருசலேம் கோவில் செல்வதும், அங்கு ஏற்கனவே கன்னியாக அர்ப்பணிக்கப்பட்டு வாழ்ந்த மரியா திருமணம் செய்ய முன்வந்தபோது அங்கே வரிசையாக நின்றுகொண்டிருந்த ஆடவர்களுள் யோசேப்பு கையில் பிடித்திருந்த கோல் அதிசயமாகத் தளிர்விட்டு, பூக்களால் நிறைந்ததும் அதையே கடவுள் தாம் யாரை மணக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார் என்று மரியா விளக்கம் பெற்று யோசேப்பை மணப்பதையும் குறிப்பிடலாம்.

யோசேப்பு பிடித்திருந்த கோல் துளிர்விட்டுப் பூத்துக் குலுங்கல்[தொகு]

திறல் ஆர் திரு நீரிய தீம் கொடியைப்
பெறல் ஆக எனக்கு ஒரு பேறு உளதோ
துறவாய் மணம் நீக்குப சொல்லிய பின்
உறல் ஆம் மணமோ என உள்ளினன் ஆல். (பாடல் எண் 397)

(பொருள்: "வல்லமை பொருந்திய வானுலகச் செல்வமே போன்ற இனிய மலர்க் கொடியாகிய மரியாவை மனைவியாகப் பெறத்தக்க ஒரு பேறு எனக்கு உண்டோ? மேலும், துறவு மேற்கொண்டு, திருமணத்தை விலக்கி வாழ்வதாக வாக்குறுதி சொல்லியபின் மணம் புரிந்து கொள்ளுதல் தகுமோ என்றெல்லாம் யோசேப்பு எண்ணினான்.")

உள்ளும் பொழுதே இவன் ஓங்கிய கோல்
கள்ளும் கடியும் பொழி காமர் இதழ்
விள்ளும் செழு வெண்மலர் பூத்தமையால்
மள்ளும் விரை ஆலயம் மல்கியதே. (பாடல் எண் 398)

(பொருள்: "துறவறம் கடைப்பிடிக்க எண்ணிய யோசேப்பு, கடவுளின் திட்டப்படி மரியாவை மணக்க வேண்டிய நிலை பற்றி எண்ணத்தில் ஆழ்ந்திருந்த பொழுதே அவர் உயர்த்திப்பிடித்திருந்த கோலில் தேனும் மணமும் பொழியும் அழகிய இதழ் விரியும் செழுமையான வெண்ணிற லீலி மலர்கள் பூத்தமையால் பரவுகின்ற வாசனை எருசலேம் கோவில் முழுவதும் நிறைந்தது.")

காம்பா அணிகாட்டிய கன்னி நலத்து
ஓம்பா அணி இவ்அணி ஓர்ந்த பிரான்
நாம்பா அணி நம்பியை நல்கிட ஓர்
தேம்பா அணிஆம் கொடி சேர்த்தன் என்றார். (பாடல் எண் 399)

(பொருள்: "மெலியாத அழகைத் தன்னகத்தே கொண்டு நின்ற கன்னி மரியாவின் நன்மைக்கு இவ்வுலக அழகெல்லாம் வேண்டாத அழகு என்று உணர்ந்த ஆண்டவன், கெடாத அழகுடைய ஆண்களில் சிறந்தவனாகிய யோசேப்பையே ஓர் அழகாகச் சேர்த்துக் கொடுக்கும் அறிகுறியாக, ஒரு வாடாத மாலை போன்ற இம்மலர்க் கொடியை அவனுக்குத் தந்தான் என்று அனைவரும் கூறினர்.)

இயேசு, மரியா, யோசேப்பு ஆகியோரின் இணைந்த வரலாறு[தொகு]

தேம்பாவணியின் காப்பியத் தலைவனாக யோசேப்பு (சூசை, வளன்) இருந்த போதிலும், அங்கே அன்னை மரியா மற்றும் இயேசுவின் வரலாறும் பின்னிப் பிணைந்துள்ளது.

மரியாவை மணந்த பின்னரும் திருமண உறவில் ஈடுபடவில்லை யோசேப்பு. மரியா கடவுளின் துணையால் கருத்தாங்கி ஒரு மகவை பெற்றெடுத்து அவருக்கு "இயேசு" என்று பெயரிடுகிறார். கன்னியும் தாயுமாகவும் விளங்குகின்ற மரியாவின் பெருமையை வீரமாமுனிவர் தேம்பாவணியில் இவ்வாறு பாடுகிறார்:

உலகம் மூன்றினும் உவமை நீக்கிய,
இலயை மூன்றினும் இழிவு இல் கன்னியாய்,
அலகு இல் மூன்றினுள் நடுவ மைந்தனை,
நிலவு மூன்றினும் நிறப்ப ஈன்றனள். (பாடல் எண் 946)

(பொருள்): "மூன்று உலகங்களிலும் இதற்கு ஓர் ஒப்புமை இல்லாத தன்மையாய், முக்காலங்களிலும் பழுதில்லாக் கன்னியாய்த் தான் இருந்தே, அளவில்லாத தெய்வ மூன்றாட்களுள் நடுப்பட்டு நிற்கும். மகனாம் ஆண்டவனை, முச்சுடர்களினும் சிறந்து விளங்க மரியாள் பெற்றெடுத்தாள்").

"இலயை மூன்றினும்" என்னும் சொற்றொடர் மரியா மகனைப் பெறு முன்னும் பெற்ற போதும் பெற்ற பின்னுமாக முப்பொழுதும் கன்னியாகவே விளங்கினர் என்று பொருள்படும்.

வாய்ப் படா நுழை பளிங்கின் வாய் கதிர்
போய்ப் படா ஒளி படரும் போன்று, தாய்
நோய்ப் படாது, அருங் கன்னி நூக்கு இலாது,
ஆய்ப் படா வயத்து அமலன் தோன்றினான். (பாடல் எண் 947)

(பொருள்): "கண்ணாடியிடத்து வாயில் இல்லாமல் நுழையும் பகலவனின் கதிர் உள்ளே போய்க் கெடாத ஒளியைப் பரப்புதல் போன்று, எக்குற்றமுமற்ற ஆண்டவன் ஆராய்ச்சிக்கு எட்டாத வல்லமையோடு, தன் தாய் பேறுகால நோவு அடையாமலும், அவளது அரிய கன்னிமைக்கு அழிவில்லாமலும் மகனாய்ப் பிறந்து தோன்றினான்".

தேம்பாவணியில் யோசேப்பின் வரலாறு[தொகு]

இயேசுவின் பிறப்புக்குப் பின்னர் யோசேப்பும் மரியாவும் தம் குழந்தையோடு நாசரேத்து வந்து அங்கு சில ஆண்டுகள் வாழ்கின்றனர். பின்னர், பாட்டுடைத் தலைவராகிய யோசேப்பைப் பிணிசேர்கின்றது. அவர் அதனைப் பொறுமையோடு தாங்கிக் கொள்கிறார். பின்னர் யோசேப்பு உயிர்துறக்கிறார்.

இறந்த யோசேப்பு மண்ணுலகோராலும் விண்ணுலகோராலும் முடிசூட்டப் பெறுகிறார்.

இந்நிகழ்வுகளைத் தேம்பாவணி கலைநயம் இலக்கிய நயம் பொருந்த பாடுகின்றது.

நீதிநூல்[தொகு]

தேம்பாவணிக் காப்பியம் இயற்கை வனப்பில் இறைவனின் தோற்றம், இல்லறம் துறவறம் ஆகியவற்றின் மாட்சி, உழைப்பின் மேன்மை, வறுமையில் செழுமை, கற்பின் பெருமை, கடவுளின் இலக்கணம், வானோர் உயர்வு, நரகோர் தாழ்வு, பாவத்தின் கொடுமை, அறத்தின் மேன்மை, காதலின் பெருமை, காமத்தின் தீமை ஆகியவற்றை விளக்கும் நீதி நூலாகவும் விளங்குகிறது.

மறை உண்மைகள்[தொகு]

தேம்பாவணியில் வீரமாமுனிவர் கிறித்தவ மறை உண்மைகளைத் துல்லியமாக எடுத்துரைக்கிறார். மூவொரு கடவுளின் இரண்டாம் ஆளாகிய மகன் இவ்வுலகில் இயேசு கிறித்துவாக வந்து அவதரிக்கும் நிகழ்ச்சி, அவருடைய தாய் அன்னை மரியா அவரைக் கன்னியாகக் கருத்தரித்து, தம் கன்னிமை கெடாமலே அவரை ஈன்றளித்த செய்தி, இயேசு மனித குலத்தின் பாவத்திலிருந்து மக்களை மீட்டு விண்ணகப் பேற்றினை ஈந்திட தம் உயிரைச் சிலுவையில் கையளித்து மீண்டும் உயிர்பெற்றெழுந்த செய்தி போன்றவை தேம்பாவணியில் விளக்கம் பெறுகின்றன.

யோசேப்பின் மாட்சி[தொகு]

புனித யோசேப்பைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டுள்ள தேம்பாவணியில் அவருடைய மாட்சி பல இடங்களில் பாடப்படுகிறது. யோசேப்பு இவ்வுலகில் மரியாவையும் இயேசுவையும் அன்போடு பாதுகாத்து வளர்த்து, கடவுளின் திட்டத்தை விருப்புடன் நிறைவேற்றினார் என்பதுவே அவருக்கு இறைவன் மாட்சி அளித்ததற்கு அடிப்படை ஆகும்.

உன் உயிர் தன்னினும் ஓம்பி, தாய் மகன்
இன் உயிர் காத்தனை, இனி, பயன் கொளீஇ,
மன் உயிர் பெறும் கதி வானில் வந்து உறீஇ,
நின் உயிர் வாழ்தலே நீதி ஆம் அரோ (பாடல்: 3344)

(பொருள்): "கன்னித் தாயும் திருமகனுமாகிய இருவர் தம் இனிய உயிரை, நீ உன் உயிரைக் காட்டிலும் பேணிப் பாதுகாத்தாய்; இனி, அதன் பயனை நீ பெறக்கொண்டு, நிலையான மனித உயிர்கள் பெறுதற்குரிய கதியாகிய வான் வீட்டில் வந்தடைந்து, உன் உயிர் என்றும் நிலையாக வாழ்தலே நீதியாகும்."

இவ்வாறு, யோசேப்பின் புகழை இறைவனே எடுத்துரைப்பதாக வீரமாமுனிவர் பாடுகிறார்.

யோசேப்பு உயிர்துறத்தல்[தொகு]

பிணிவாய்ப்பட்டு யோசேப்பு இறக்கும் நிலையில் உள்ளார். அப்போது அவரைச் சூழ்ந்து அவர்தம் மனைவி மரியாவும் அன்புக் குழந்தை இயேசுவும் நிற்கின்றனர். அவர்களது அன்பை உணர்கிறார் யோசேப்பு. அவருடைய உள்ளத்திலும் அன்பு ததும்புகிறது. அந்த அன்பின் வலிமை அவருடைய உயிர் உடலை விட்டுப் பிரிய விடாமல் பிடித்துவைக்கிறது என தேம்பாவணியில் பாடுகிறார் வீரமாமுனிவர்.

மூ உலகு அனைத்தும் தாங்கும் முதலவன் ஒருபால், ஓர் பால்
தே உலகு அனைத்தும் ஏத்தும் தேவதாய் தாங்க, சூசை
மே உலகு உள்ளி யாக்கை விடும் உயிர்தனை அன்பு ஒன்றே
பூ உலகு இருத்தினாற் போல் பூங் கரம் கூப்பி நின்றான்.

(பொருள்): "வி்ண் மண் பாதலமென்னும் மூன்று உலகங்கள் முழுவதையும் தாங்கி நடத்தும் ஆண்டவனாகிய திருமகன் ஒரு பக்கமும், தெய்வ உலகம் முழுவதும் போற்றும் தேவ தாயாகிய மரியா மற்றொரு பக்கமும் தன்னைத் தாங்கிக் கொண்டிருக்க, மேலுலகத்தை நினைந்து உடலைவிட்டுப் பிரியவிருந்த தன் உயிரை, அவ்விருவர் மீது கொண்டஅன்பு ஒன்றே இம்மண்ணுலகில் பிடித்து வைத்து இருத்தினாற்போல், சூசை தனது மலர்போன்ற கைகளைக் குவித்த வண்ணம் நின்றான்."

இருவரும் இரு பால் ஆசி இட்டு அருள் உரையின் தேற்ற,
உரு வரும் வானோர் சூழ, ஒலிக் குழல் இசையின் பாடி,
மரு வரு மலரைச் சிந்தி, வயவையில் விளித்து முன்ன,
திரு வரும் ஆக்கை நீக்கி, தெள் உயிர் போயிற்று, அம்மா! (பாடல்: 3355)

(பொருள்): "மரியாவும் திருமகனுமாகிய இருவரும் இரு பக்கமும் தம் நல்லாசி கூறி, அருள் கொண்ட சொல்லால் தேற்றவும், உருவத்தோடு வந்து தோன்றிய வானவர் சூழ்ந்து நின்று, ஒலிக்கும் குழலிசையோடு தாமும் வாயாற் பாடி, மணம் பிறக்கும் மலர்களைத் தூவி, வழி காட்டி அழைத்துத் தாம் முன்னே செல்லவும், சூசையின் புண்ணியத் தெளிவு கொண்ட உயிர் அத் திருவுடலை விட்டு நீங்கிப் போயிற்று, அம்மா!"

உயிர்நீத்த யோசேப்பு இறந்தோர் உலகில் இயேசுவின் செய்தியை அறிவித்தல்[தொகு]

தேம்பாவணியில் பாட்டுடைத் தலைவன் யோசேப்பு என்பதால் அந்நூலில் இயேசுவின் வாழ்க்கை வரலாறு, அவரது சிலுவைச் சாவு, உயிர்த்தெழுதல் போன்றவற்றை நேரடியாக எடுத்துரைக்கும் வாய்ப்பு இல்லை. இயேசு தமது பொதுவாழ்வைத் தொடங்குவதற்கு முன்னரே யோசேப்பு இறந்துவிட்டார். எனவே, வீரமாமுனிவர் மற்றொரு உத்தியைக் கையாளுகின்றார். அதாவது, இயேசு வருங்காலத்தில் என்னென்ன போதனைகளை அறிவிப்பார், எவ்வாறு இறப்பார் என்ற செய்திகள் யோசேப்புக்குக் கடவுளால் முன்னரே அறிவிக்கப்படுவதாகவும், அச்செய்தியை யோசேப்பு தம் இறப்பிற்குப் பிறகு இறந்தோர் உலகம் சென்று அங்குள்ளோருக்கு எடுத்துக் கூறுவதாகவும் வீரமாமுனிவர் எடுத்துக் கோக்கின்றார்:

இயேசுவின் பணியை விவரிக்கும்போது யோசேப்பு கூறுவது:

நோய் ஒக்கும் அவர்க்கு இன்பம் நுனித்த உயிர் மருந்து ஒக்கும்;
தீ ஒக்கும் புரையார்க்கே சீதம் ஒக்கும் புயல் ஒக்கும்;
வீ ஒக்கும் வடிவத்தால்; வியன் தயையால் கடல் ஒக்கும்;
தாய் ஒக்கும் தாதை ஒக்கும் சகத்து எங்கும், அத் திருவோன். (பாடல் 3376)

(பொருள்): "அத் திருமைந்தனாம் இயேசு நோய்வாய்ப்பட்டவர்க்கு இன்பம் கூர்ந்த உயிர் தரும் மருந்துக்கு ஒப்பாவான்; நெருப்பைப் போன்ற பாவங்களைக் கொண்டுள்ளவர்க்குக் குளிர்ச்சி பொருந்திய மழைக்கு ஒப்பாவான்; தன் உள்ளத்தின் அமைப்பால் மலருக்கு ஒப்பாவான்; பரந்த இரக்கத்தால் கடலுக்கு ஒப்பாவான்; உலகத்தார் அனைவருக்கும் தாய் போல்வான்; தந்தையும் போல்வான்."

இயேசுவின் கண்கள், வாய், சொல்திறம், முகம் ஆகியவற்றின் எழிலை யோசேப்பு இறந்தோர் உலகில் உள்ளவர்களுக்கு எடுத்துரைக்கும் விதம்:

மீன் ஒக்க, பாவ இருள் விலக, மிளிர் விழி கொண்டான்;
கான் ஒக்க மறை உமிழ, கமழ் கமல வாய் கொண்டான்;
தேன் ஒக்க, துயர்க் கைப்புச் சிதைப்ப, இனிது உரை கொண்டான்;
வான் ஒக்க, கவின் காட்ட, மலர் வதன நலம் கொண்டான். (பாடல்: 3377)

(பொருள்): "அத்திரு மகன் இயேசு, பாவமாகிய இருள் விலகுமாறு, விண்மீனைப் போன்று இலங்கும் கண்களைக் கொண்டவன்; வேதத்தை மணம் பொருந்த எடுத்துக் கூறும் வண்ணம், மணம் கமழும் தாமரை மலர் போன்ற வாயைக் கொண்டவன்; துயரத்தின் கசப்பை ஒழிக்கும் வண்ணம், தேனைப் போன்று இனிதான சொல்லைக் கொண்டவன்; தன் அழகை எடுத்துக் காட்ட, வானம் போல் மலர்ந்த முகம் கொண்டவன்."

இயேசு வழங்கிய போதனைகள் மற்றும் கொடைகள் பல. அவற்றுள் சிலவற்றை யோசேப்பு எடுத்துரைப்பதாக தேம்பாவணி புனைகிறது:

மருள் வரும் நசை பிறர் பொருளில் வைத்திடாது,
அருள் வரும் முகத்தில் தன் பொருள் அளித்தலே
பொருள் வரும் வழி என, புயலின் வான் கொடை,
தெருள் வரும் அறிவு உளார், திருத்துவார்" என்பான். (பாடல்: 3404)

(பொருள்):"பிறர் பொருளின்மீது மயக்கத்தைத் தரும் ஆசை வையாமல், கருணை பொருந்திய முகத்தோடு தன் பொருளைப் பிறருக்கு ஈதலே தனக்குப் பொருள் சேரும் வழியாகுமென்று கொண்டு, தெளிவு பொருந்தி, அறிவு படைத்தோர், மேகம் போன்று சிறந்த கொடையைத் திருந்தச் செய்வர் என்றும் இயேசு போதிப்பார்."

கண் தரும்; கரம் தரும்; செல்லக் கால் தரும்;
உண் தரும்; களி தரும்; உயிர் தரும்; தகும்
பண்டு அருந் துயர்கள் நோய் பலவை தீர் தரும்;
மண்டு அருந் தயை நலம் வழங்கத் தந்து உளான். (பாடல்: 3410)

(பொருள்): "கண்ணைத் தருவான்; கையைத் தருவான்; நடந்து செல்லக் காலைத் தருவான்; உணவு தருவான்; மகிழ்ச்சி தருவான்; உயிர் தருவான்; மதிக்கத்தக்க பழமை வாய்ந்த அரிய துயர்கள் நோய்கள் பலவற்றையும் தீர்த்துத் தருவான்; இவ்வாறு, தன்னிடம் செறிந்து கிடந்த அரிய தயை நலத்தை மக்களுக்கு வழங்கும் ஆற்றலைச் சீடருக்குக் கொடுத்துள்ளான்."

இவ்வாறு இயேசு தம் சீடர்களுக்கு எண்ணிறந்த நற்கொடைகளை வரையின்றி வாரி வழங்கியுள்ளார்.

இயேசு அனுபவித்த துன்பம், சாவு[தொகு]

யோசேப்பு தம் வளர்ப்பு மகன் இயேசு அனுபவித்த துன்பங்களை எடுத்துரைக்கிறார்:

 
கண் கிழித்து ஒழுகச் செந் தீக் கதத்தினர் அடித்த பாலால்,
விண் கிழித்து ஒழுகும் மாரி விதப்பு என, எந்தை யாக்கை
புண் கிழித்து ஒழுகும் செந்நீர், புரை வினை மலங்கள் தீர்ப்ப,
மண் கிழித்து ஒழுகு வெள்ளம், மலிவொடு ஆங்கு ஒழுகிற்று அன்றோ. (பாடல்: 3419)

(பொருள்): "செந்நிற நெருப்பு தம் கண்களைக் கிழித்துக் கொண்டு பாய்வது போன்ற சினங்கொண்ட பகைவர் அடித்த தன்மையால், மேகத்தைக் கிழித்துக் கொண்டு பாயும் மழையினும் மிகுதியென்று கொள்ளுமாறு, நம் தந்தையாகிய ஆண்டவனின் உடலைப் புண்படக் கிழித்துப் பாயும் குருதி, நம் பாவ வினைகளாகிய அழுக்கையெல்லாம் போக்குமாறு, பூமியைக் கிழித்துக் கொண்டு பாயும் வெள்ளத்தின் மிகுதியோடு அங்கே பாய்ந்தோடியது.

இயேசு அறையுண்டு இறந்த சிலுவை மரம், பண்டைய நாள்களில் முதற்பெற்றோர் இறைவனுக்குக் கீழ்ப்படியாமல் உண்ட கனியைத் தின்ற மரத்தினால் விளைந்த பாவம் என்னும் தீநிலையை மனித குலத்திலிருந்து போக்கிடும் மருந்தாயிற்று என்பது கிறித்தவக் கொள்கை. அதை யோசேபு எடுத்துக் கூறுகிறார்:

கடு மரத்து இழிந்த நஞ்சு உள் கடுத்து அடும் வினையைக் காக்க,
நெடு மரத்து இழிந்த தேவ நிலை மருந்து உரியது என்ன,
வடு மரக் கனியால் மாக்கட்கு அமைந்த தொல் பழியை, எந்தை,
கொடு மரத்து அறைவுண்டு, எம்மைக் குணித்து, இறந்து ஒருங்கு தீர்த்தான். (பாடல்: 3420)

(பொருள்): "நச்சு மரத்தினின்று இறங்கிய நஞ்சு உள்ளே போய் மிகுந்து கொல்லும் செயலைத் தடுத்துக் காக்க, மற்றொரு நெடிய மரத்தினின்று இறங்கிய தெய்வத் தன்மை கொண்ட மருந்து தகுந்ததாய் அமைவது போல, குற்றமுள்ளதென்று விலக்கப்பட்ட மரத்தின்கனியால் மக்களுக்கு ஆதிப் பெற்றோரால் உண்டான பழைய பாவப் பழியை, நம் தந்தையாகிய ஆண்டவன், நம்மைக் கருதி, ஒரு கொடிய சிலுவை மரத்தில் அறையுண்டு இறந்து ஒருங்கே தீர்த்துக் காத்தான்."

இயேசு சிலுவையில் இறந்து மனிதர்க்கு இறைவாழ்வில் பங்களித்துள்ளார்:

துன் உயிரை ஓம்பும் அருள் தோன்றி எனை ஆளும்,
என் உயிரில் இன் உயிர் எனும் தயையின் நல்லோய்,
உன் உயிர் அளித்து எமை அளிப்ப, உயர் வீட்டை
மன் உயிர் எலாம் உற, வருத்தம் உறீஇ மாய்ந்தாய்! (பாடல்: 3429)

(பொருள்): "எங்கும் செறிந்த உயிர்களையெல்லாம் பேணும் அருளோடு இவ்வுலகில்வந்து தோன்றி என்னை ஆள்பவனும், என் உயிரைக் காட்டிலும் எனக்கு இனிய உயிர் என்னத் தக்கவனுமாகிய தயை மிக்க நல்லவனே, உன் உயிரையே வழங்கி எம்மையெல்லாம் மீட்டுக் காக்கவும், நிலைபெற்ற மனித உயிர்களெல்லாம் உயர்ந்த வான் வீட்டை அடையவும், நீ துன்பங்களை அனுபவித்து இறந்துள்ளாய்."

இறப்புக்குப் பின் தம் பாவக் கறைகள் அனைத்திலிருந்தும் விடுதலை பெறும் வண்ணம் உத்தரிப்பு இடத்திற்கு இறந்தோர் செல்வர் என்பது கத்தோலிக்க கிறித்தவ போதனை. அவ்வாறு உத்தரிப்பு இடத்தில் இருந்தோரைச் சேர்ந்தடைந்த இயேசு தம் துன்பங்கள் பற்றி அவர்களுக்கு எடுத்துரைக்கிறார்:

தூய் இரக்கு ஒழித்த நீசர் தூணினோடு எனைச் சேர்த்து, ஓர் ஐ-
யாயிரத்து ஒரு நூற்று ஐம் மூன்று அடி அடித்து, இடம் ஒன்று இன்றி,
வாய் இரக்கமும் அற்று, ஆய வடு அடித்து, என்பும் தோன்ற,
பாய் இரத்தமும் ஆறு ஓட, பழி உரு உடலை நோக்கீர்! (பாடல்: 3443)

(பொருள்): "தூய இரக்கத்தை நெஞ்சினின்று அறவே ஒழித்த கொடியோர், ஒரு கற்றூணோடு என்னைச் சேர்த்துக் கட்டி, ஐயாயிரத்து நூற்றுப் பதினைந்து அடிகள் அடித்து, மேலும் அடிக்க இடம் ஒன்றும் இல்லாமையால், எலும்பும் வெளியே தோன்றுமாறு, முன் ஏற்பட்ட காயத்தின் மீதே மேலும் அடித்து, இரக்கச் சொல்லும் அற்று, பாய்ந்த இரத்தமும் ஆறு போல் ஓடவே, பழிக்கத்தக்க உருவம் கொண்டுள்ள உடலையும் பாருங்கள்!"

யோசேப்பு விண்ணில் ஏற்கப்பட்டபோது எழுந்த மகிழ்ச்சி ஒலி[தொகு]

வீரமாமுனிவர் தமிழ் இலக்கியம் தவிர இசையிலும் தேர்ந்தவர் என்பதை பல பாடல்கள் காட்டுகின்றன. யோசேப்பு விண்ணில் ஏற்கப்பட்டபோது வானவர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தபோது எழுந்த ஒலியைத் தேம்பாவணியில் கேட்கலாம்:

மொடமொட என, இனமுரசு ஒலி முழவு ஒலி மோதிய யாவும் முழங்கி அதிர
நெடநெட எனஉள குழல் இசை கல இசை நீரிய ஓதை கலந்து கனிய,
படபட என மழை இடி ஒலி கடல் ஒலி பாடு என நேரில் ஒழிந்து மடிய,
விடவிட என வெளி உலகு அலை உலகிடை வீரிய ஓதை மயங்கி எழும் ஆல். (பாடல்: 3470)

(பொருள்): "மொடமொடவென்று, பலவகை முரசுகளின் ஒலியும் பறைகளின் ஒலியுமாக, அடிக்கப்பட்ட வாச்சியங்கள் யாவும் அதிர்ந்து முழங்கவும், நெடநெடவென்று, கைகளிற் கொண்டுள்ள குழல்களின் பாடலும் வீணைகளின் பாடலுமாக, நல்லியல்பு வாய்ந்த இசைக் கருவிகளின் ஓசை கலந்து இனிமையூட்டவுமாக, படபடவென்று மேகத்திற் பிறக்கும் இடியொலியும் கடல் அலையொலியும் தம் பெருமை இவற்றின் நேரே ஒழிந்து மடியுமாறு, விடவிடவென்று, வெளி சூழ்ந்த வானுலகிலும் கடல் சூழ்ந்த மண்ணுலகிலும் வீரம் சிறந்த ஓசையாக மயங்கி எழும்."

இசை நயம் ஒலிக்கின்ற இப்பாடலில் 'விடவிட' என்பது உருக் குறிப்பும் 'மொடமொட' போன்றவை ஒலிக் குறிப்பும் ஆகும்.

யோசேப்புக்கு விண்ணகத்தில் இறைவன் முடிசூட்டல்[தொகு]

தன்னை வளர்த்து ஆளாக்கிய யோசேப்பு மண்ணுலகில் இறைவனுக்கு உகந்தவராக வாழ்ந்து சிறப்புற்றமையால் அவருக்கு விண்ணக மகிழ்ச்சியில் பங்களித்து அவரை மாட்சிப்படுத்த வேண்டும் என்று இயேசு தந்தையாம் இறைவனிடம் கேட்கின்றார். முழுமுதல் இறைவனாகிய தந்தை அவ்வாறே யோசேப்புக்கு மணிமுடி சூட்டுகின்றார். பின்னர் மகனாம் இறைவன் இயேசு யோசேப்புக்கு மகுடம் சூட்ட, இறுதியில் தூய ஆவி இறைவன் யோசேப்பைப் பெருமைப்படுத்துகிறார்.

இதை வீரமாமுனிவர் தேம்பாவணியில் எழிலுற எடுத்துப் பாடுகிறார்.

வான் புறத்து இலகும் செஞ்சுடர் காண வந்து என வனைந்த வாள் மகுடம்,
தான் புறத்து ஒரு வேறு ஏழ் சுடர் பூண்ட தன்மை ஏழ் மணி ஒளி இயக்க,
மீன் புறத்து அகற்றும் செல்வ வீட்டு உவகை மிக அளவு இன்றி, அம்முடியை,
கான் புறத்து அலர் கோல் சூசை தன் தலைமேல் களிப்பு எழ, முதலவன், புனைந்தான். (பாடல்: 3510)

(பொருள்): "வானத்தில் விளங்கும் பகலவன் அக்காட்சியைக் காண வந்தது போல் அமைத்த ஒளியுள்ள மகுடம்; தன் புறத்தே சுற்றிலும் வேறு ஏழு பகலவரைப் பூண்ட தன்மையாக ஏழு மணிகள் ஒளி பரப்பியிருக்க, விண்மீன்களை ஒளியற்றனவென்று புறத்தே போக்கும் செல்வச் சிறப்புள்ள மோட்ச வீட்டில் மகிழ்ச்சி அளவின்றிப் பொங்க, தெய்வ மூன்றாட்களுள் முதலவனாகிய தந்தையாங் கடவுள், மணத்தைப் புறத்தெல்லாம் பரப்பி மலர்ந்த மலர்க்கோலைத் தாங்கிய சூசையின் தலைமேல் மகிழ்ச்சியோடு அம்முடியைச் சூட்டினான்."

ஆர்த்தன தேவ மகிழ்வு ஒலி அரவம்; ஆர்த்தன தொடர் துதித்துழனி;
ஆர்த்தன தேவ வீணை வாய் அமலை; ஆர்த்தன இனியபாசைகள்;
ஆர்த்தன பொலிந்த சோபன வகுளி, ஆர்த்தன அதிசய குமுதம்;
ஆர்த்தன உவப்பில், ஆர் ஒளி மகுடம் அருந்தவற்கு, அருட் சுதன், புனைந்தான். (பாடல்: 3511)

(பொருள்): "தெய்வீக மகிழ்ச்சி ஒலியின் ஓசைகள் முழங்கின; தொடர்ந்த துதியின் ஓசைகள் முழங்கின; தெய்வீக வீணையினின்று வரும் ஓசைகள் முழங்கின; இனிய பாடலின் இசைகள் முழங்கின; பொலிந்த வாழ்த்தின் ஓசைகள் முழங்கின; வியப்புக் கொண்டவரின் ஓசைகள் முழங்கின; அவ்வாறு முழங்கிய மகிழ்ச்சியினிடையே, மூவருள் இரண்டாமவனாகிய திருமகன், ஒளி நிறைந்த மற்றொரு முடியை அரிய தவத்தோனாகிய சூசைக்குச் சூட்டினான்.

இப்பாடலில், அரவம், துழனி, அமலை, இசை, வகுளி, குமுதம் என்ற பல சொற்கள் ஓசை என்ற ஒரே பொருளில் வந்தது, பொருட் பின்வரு நிலை என்னும் அணியாகும்.

ஆர்த்தன பல்லாண்டு; ஆர்ந்தன உவகை; ஆறு அறுநூற்று மூ ஐம் பூ,
சீர்த்தன மதுவின் பூத்தன, சூசை சேர்த்த கைக் கொடியில். அம் மலரால்
கோர்த்தன ஆறாறு அணிகளே. கடவுட் குளுஞ் சுடர்ப் பதத்து அவை, வானோர்,
நீர்த்தன இன்பத்து அணிய, மா தவற்கே, நேயனும் ஒளிமுடி புனைந்தான். (பாடல்: 3512)

(பொருள்): "'பல்லாண்டு வாழ்க!' என்னும் வாழ்த்தொலிகள் முழங்கின; மகிழ்ச்சிகள் நிறைந்தன; சூசை தன்கையில் தாங்கியிருந்த மலர்க் கொடியில் சிறந்த தேனோடு பூத்த மலர்கள் மூவாயிரத் தறுநூற்றுப் பதினைந்து. அம் மலர்களால் தொடுத்த மாலைகள் முப்பத்தாறு. வானவர் அவற்றைக் கடவுளின் குளிர்ந்த ஒளியுள்ள அடியில் சிறந்த இன்பத்தோடு அணிந்தனர். அப்பொழுது, மூவருள் மூன்றா மவனாகிய நேயன் எனப்படும் தூய ஆவியும் பெருந்தவத்தோனாகிய சூசைக்கு ஒளி முடி சூட்டினான்."

இங்கு, 'கோத்தன' என்பது, எதுகைப் பொருட்டு, 'கோர்த்தன' என நின்றது. மேலும், "பிதா சுதன் இஸ்பிரீத்துச் சாந்து என்னும் மூவரும் வேறுபாடின்றி ஒரு மெய்க்கடவுளாகையில், செய்யுந் தொழில் ஒன்றாயினும், இங்கே நாம் உணருந்தன்மையைப் பற்றி, பொருளும் தெளிவது வேண்டி, வேறுபட விரித்துரைத்தான் என்க" என்பது பழைய உரை அடிக்குறிப்பு.

தேம்பாவணி என்னும் பெயரை விளக்கும் பாடல்கள் சில[தொகு]

வீரமாமுனிவர் யாத்த தேம்பாவணி என்னும் நூலின் பெயரை வெவ்வேறு முறைகளில் பிரித்துப் பொருளுரைப்பது உண்டு. நூலிலேயே பெயர் விளக்கம் தருகின்ற பாக்கள் சில உள. அவை:

"வான் மேல் மகுடம் புனை நாளில், வர மா தவன், தன் கொடி பூத்த,
தேன் மேல் தளம்பு, ஆறு அறு நூறு சேர்ந்த மூ ஐந் திரு மணிப் பூ,
நூல் மேல் முறை நையா தொடுத்த நுண் மண் ஆறு ஆறு இது" என மீன்
மேல் விளங்கும் வளன் பதத்தில் விரும்பிச் சாத்தி, மீண்டு உரைத்தார்

(பொருள்): "வரங்கொண்ட பெருந் தவத்தோனாகிய சூசை, வானுலகத்தில் முடி புனைந்து கொண்ட நாளில், திருமணத்தின்போது தன் கைக் கொடியில் பூத்தனவும், தேன் நிறைந்து மேலே தளம்புவனவுமான ஆறு அறுநூறோடு சேர்ந்த மூவைந்துமாக மூவாயிரத்து அறுநூற்றுப் பதினைந்து அழகிய மணிப்பூக்களைக் கொண்டு, நூல் முறை வழுவாமல் தொடுத்து அணிந்த ஆறாறு முப்பத்தாறென்று அமைந்த மாலைத் தொகுப்பு இது" என்று கூறி, விண்மீனினும் சிறந்து விளங்கும் சூசையின் அடியில் விரும்பிச் சாத்தி, மீண்டும் பின்வருமாறு கூறினர் :

ஆறறு நூறு சேர்ந்த மூவைந்து : (6x600) + (3x5) = 3600 + 15 = 3615. ஆறாறு 6x6 = 36. முன் இப்படலத்தும் திருமணப் படலத்தும் குறித்த செய்திகளை நினைவிற் கொண்டு, வேண்டிய சொற்கள் விரித்துரைக்கப்பட்டன.

                  
"நாம்பா அணிப் பூங் கொடி பூத்த நறும் பூ அனைய சொல் மலரால்
காம்பா அணி வில் வீசிய தன் கன்னித் துணைவி, களித்து இசைத்த
தேம்பா அணி இஃது; இதை அணிவார் திரு வீட்டு உயர்வார்! அவ் இருவர்,
சாம்பா அணித் தம் மைந்தனோடு ஆர் தயையின் காப்பார்!" என மறைந்தார்.

(பொருள்): "கெடாத கற்பென்னும் அணி ஒளி வீசிய தன் கன்னித் துணைவி, தன் இளைக்காத அணியாகிய மலர்க்கொடியில் பூத்த மணமுள்ள மலர் போன்ற சொல்லாகிய மலரால் களிப்புடன் இணைத்துக் கட்டிய வாடாத மாலை இது : இதனை அணிவார் வானுலக வீட்டில் உயர்வு பெறுவார்! அக்கன்னியும் சூசையுமாகிய இருவரும், ஒடுங்காத அணி போன்ற தம் மகனோடு சேர்ந்து, நிறைந்த தயவோடு அவரைக் காப்பார்!" என்று கூறி மறைந்தனர்.

"ஆகையால், வானரசாளாகிய மரியென்பாள் வான்மேல் வழங்கு மொழியால் தேம்பாவணி என்னும் சூசைதன் சரிதை முன் சொன்ன அளவு முப்பத்தாறு படலமாக மூவாயிரத்து அறுநூற்று ஒருபத்தைந்து பாட்டென்று அறிக" என்பது, பழையவுரை அடிக்குறிப்பு. "தேம்பாவணி' என்பதனை, பூங்கொடி பூத்தநறும்பூவால் தொடுத்ந 'வாடாத மாலை' எனவும், நறும்பூ அனைய சொல் மலரால் இசைத்த 'தேம்பாவணிக் காப்பியம்' எனவும் கொள்க.

திருவாய் மணித்தேன் மலர் சேர்த்த தேம்பாவணியைத் தொழுது ஏந்தி,
மருவாய் மணிப்பூ வயல்நாடு வடு அற்று உய்ய ஈங்கு உற்றேன்,
உருவாய் வேய்ந்த என் இறையோனுடன் மூவரின் பொற் பதத்து அணிய,
வெருவாய்ப் புன்சொல் அஞ்சிய பின், விருப்பம் தூண்ட, தொழுது அணிந்தேன்.

(பொருள்): அக் கன்னிமரியாள்தன் திரு வாயினின்று பிறந்த அழகிய சொல் மலரால் சேர்த்துத் தொடுத்த தேம்பாவணி என்னும் சூசையின் வரலாற்றைத் தொழுது ஏந்திக் கொண்டு, மணம் பொருந்திய அழகிய பூக்கள் நிறைந்த வயல்களைக் கொண்ட இத்தமிழ் நாடு பாவ வடுவினின்று நீங்கி வாழும்படி இங்கு வந்தடைந்த நான், மனித உருவாய் வந்து தோன்றிய என் ஆண்டவனாகிய திருமகனுடன், கன்னி மரியாளும் சூசையுமாகக் கூடிய அம்மூவரின் பொன்னடிகளில் ஒரு காப்பியமாக அணியுமாறு எண்ணி, எனது புன்சொல்லைக் கருதி நடுக்கத்தோடு அஞ்சி வாளாவிருந்தபின், அவ்விருப்பம் மேன்மேலும் என்னைத் தூண்டவே, இதனை இயற்றி அம்மூவர் அடியைத் தொழுது சூடினேன்.

"ஆகையால், தேவதாய் முன் வாய்மொழியாற் சொன்ன தேம்பாவணியைப் பொருளும் பிறழாது அளவும் மாறாது தானும் தமிழ் மொழியாற் சொன்னது என்பதாயிற்று என்க" என்பது பழையவுரை அடிக்குறிப்பு.

ஆதாரங்கள்[தொகு]

  1. ஆகிர்த மரியா
  2. Thembavani: A Garland of Unfading Honey-Sweet Verses /by Beschi S. J., Costanzo Giuseppe (Author), Beschi S. J., Fr Costanzo Giuseppe (Author), Veeramamunivar (Author), Dominic Raj M (Translator), Marudanayagam P (Introduction)
  3.   "Constanzo Giuseppe Beschi". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். 
  4. Sundar, James (19 July 2009). "James Sundar Chithambaram: Research on Beschi's Tembavani".
  5. Ditchfield, Simon (2020-01-29). "Getting beyond "Jesuit Thinking". The "désenclavement" of Jesuit Studies Twenty Years on. Where We Are Now?". Journal of Jesuit Studies 7 (2): 311–318. doi:10.1163/22141332-00702010. பன்னாட்டுத் தர தொடர் எண்:2214-1324. https://brill.com/view/journals/jjs/7/2/article-p311_311.xml. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேம்பாவணி&oldid=4000537" இலிருந்து மீள்விக்கப்பட்டது