உள்ளடக்கத்துக்குச் செல்

பிள்ளை வெண்பா என்னும் தெய்வசகாயன் திருச்சரிதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிள்ளை வெண்பா என்னும் தெய்வசகாயன் திருச்சரிதை என்னும் கிறித்தவக் காப்பியத்தைப் பாடியவர் தஞ்சாவூரைச் சேர்ந்த புலவர் சூ. தாமஸ் என்பவர்.

அருளாளர் தேவசகாயம் பிள்ளை வரலாறு

[தொகு]

இந்நூலின் பாட்டுடைத் தலைவராக இருப்பவர் 2012ஆம் ஆண்டு திசம்பர் 2ஆம் நாள் அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்ட தேவசகாயம் பிள்ளை ஆவார். இன்றைய குமரி மாவட்டத்தின் நட்டாலம் கிராமத்தில் 1712இல், ஏப்பிரல் 23ஆம் நாள் நாயர் குல இந்துக் குடும்பத்தில் பிறந்த தேவசகாயம் பிள்ளை கத்தோலிக்க கிறித்தவ சமயத்தைத் தழுவி மறைச்சாட்சியாக 1752, சனவரி 24ஆம் நாள் உயிர்துறந்தார். அவரது இயற்பெயர் நீலகண்ட பிள்ளை. கத்தோலிக்க சபையில் திருமுழுக்குப் பெற்றபோது அவருக்கு "கடவுளின் கருணை" என்னும் பொருள்படும் "லாசர்" (Lazarus) என்னும் பெயர் வழங்கப்பட்டது. அதுவே தமிழில் "தேவசகாயம்" என்று வழங்கப்படுகிறது. இவர் கத்தோலிக்க கிறித்தவர்களால் ஒரு மறைச்சாட்சியாக (martyr) கருதப்படுகின்றார்.

நூலின் அமைப்பு

[தொகு]

தெய்வசகாயன் திருச்சரிதை நூல் மறைபெறு காண்டம், சூழ்வினை காண்டம், முடிபெறு காண்டம் என்னும் மூன்று காண்டங்களில் 281 வெண்பாக்களால் பாடப்பட்டுள்ளது. மறைபெறு காண்டம் தெய்வசகாயன் கிறித்தவத்தைத் தழுவியதையும், சூழ்வினை காண்டம் அவர் கிறித்தவ சமய நம்பிக்கைக்காகத் துன்புறுத்தப்பட்டதையும், முடிபெறு காண்டம் அவர் மறைச்சாட்சியாக உயிர்நீத்து விண்ணக வாழ்வு எய்தியதையும் பாடுகின்றன.

அவையடக்கம்

[தொகு]

நூலின் தொடக்கத்தில் ஆசிரியர் அவையடக்கமாக,

ஆழக் கடல்நீரை அள்ளிச் சிறுகுழியில்
வீழச் செலுத்தும் விரகிற்றே - நீளச்
சிறைநின்ற தெய்வ சிகாமணி தன் காதை
அறைகின்ற என் பே ரறிவு

எனப் பாடுகின்றார்.

தெய்வசகாயன் அனுபவித்த துன்பங்கள்

[தொகு]

பாட்டுடைத் தலைவனான தெய்வசகாயன் தமது சமய நம்பிக்கை பொருட்டு மிகக் கொடிய துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டார். அவரது உடலிலும் கண்களிலும் மிளகுத்தூளைத் தூவி கொடுமைப்படுத்தினர். அவர் அனுபவித்த துன்பங்களை நூலாசிரியர் உருக்கத்தோடு பாடுகின்றார்:

செய்ய விழிமலர்தான் சேப்ப மிளகுத்தூள்
வெய்யர் இடுங்கால் விருப்பமுடன் - அய்யனிரு
கண்ணால் புரிந்த பவம் காக்கும் அமிழ் தென்பான்
நண்ணார் இகழ்வர் நகைத்து.

தெய்வசகாயன் மறைச்சாட்சியாக உயிர்நீத்தல்

[தொகு]

துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்டு தெய்வசகாயன் மண்மேல் சாய்ந்ததை நூலாசிரியர்,

துப்பாக்கி மூன்றினிலே தோண மருந்திட்டு
தப்பாமல் சுட்டார் தட மார்பில் - ஒப்பாகும்
சேசு மரி சூசை என்றே செகமீது
தாசன் விழுந்தான் தகர்ந்து

என்று எடுத்துரைக்கிறார்.

ஆதாரம்

[தொகு]

இர. ஆரோக்கியசாமி, கிறித்தவ இலக்கிய வரலாறு, கிறித்தவ ஆய்வு மையம், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 2010. (நூல் கிடைக்குமிடம்: பூரண ரீத்தா பதிப்பகம், 1130 பழனியப்பா நகர், 3-வது தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் - 613006).