அருள் மைந்தன் மாகாதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அருள் மைந்தன் மாகாதை என்னும் கிறித்தவக் காப்பியத்தை பொன் தினகரன் என்பவர் இயற்றியுள்ளார். இந்நூல் இயேசுவின் பிறப்பு முதல், அவர் உயிர்பெற்றெழுந்து சீடர்களுக்குக் காட்சி நல்கும் நிகழ்ச்சி வரையான வரலாற்றைக் கூறுகிறது.

நூல் பிரிவுகள்[தொகு]

இக்காப்பியத்தில் திருப்பிறப்புக் காண்டம், அருட்பணிக் காண்டம், மீட்புக் காண்டம் என்று மூன்று காண்டங்கள் உள்ளன. முப்பது உட்பிரிவுகளும் 330 பாடல்களும் நூலில் அடங்கும்.

திருக்குறளும் விவிலியமும்[தொகு]

இயேசுவின் வரலாற்றைப் பாடுகின்ற இக்காப்பியத்தில் நூலாசிரியர் திருக்குறள் பாக்களின் கருத்துகளையும் இணைக்கின்றார்.

  • பன்னிரண்டு வயதில் இயேசு சிறுவன் காணாமற் போனபோது அவருடைய வளர்ப்புத் தந்தை யோசேப்பும் அன்னை மரியாவும் கலங்கித் தவிக்கின்றனர். கோவிலில் அறிஞர் நடுவே இயேசு உரையாடிக்கொண்டிருந்ததைக் கண்ட அவருடைய பெற்றோர், மகனே ஏன் இப்படிச் செய்தாய் என்று வினவியபோது, அவர், நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா என்றார். இதனை, காப்பிய ஆசிரியர்,

தந்தைக்கு தன்மைந்தன் செய்ந்நன்றி யாதெனின்
தந்தை உவப்பன தான்செய்தல் - கந்தாகும்
வான்தந்தை சித்தமிவன் வாய்ப்பச் செயல்கடனாய்த்
தான்வந்தது என்பார்இவ் வாறு
 

என்று திருக்குறள் மணம் கமழ எடுத்துரைக்கின்றார்.

  • மேலும், தம் குற்றம் காணாமல் பிறர் குற்றம் கடிகின்ற செயலை இயேசு கடிந்துகொண்டதைத் திருக்குறள் கருத்தோடு இணைத்துக் கூறுகின்றார்:

ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதில்லை மன்னுயிர்க்கு என்றறி - யாதுநீர்
நும்கண் தடியிருப்ப நும்அயலார் கண்துரும்பை
இங்கண் எடுப்போம் எனல்.

ஆதாரம்[தொகு]

இர.ஆரோக்கியசாமி, கிறித்தவ இலக்கிய வரலாறு, கிறித்தவ ஆய்வு மையம், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 2010. (நூல் கிடைக்குமிடம்: பூரண ரீத்தா பதிப்பகம், 1130 பழனியப்பா நகர், 3-வது தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் - 613006).

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருள்_மைந்தன்_மாகாதை&oldid=3175841" இலிருந்து மீள்விக்கப்பட்டது