அறிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அறிவு (Knowledge) என்பது உணர்தலாலும், அனுபத்தாலும், கற்பதாலும் கிடைக்கப்பெறுவைகளாகும். அறிவு என்பது ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரை கிடைப்பவைகளாகவே உள்ளன. அதனை படித்தவர்களுக்கு மட்டுமே அறிவு இருப்பது போன்றும், அறிஞர்கள் என்றும் ஒரு தோற்றப்பாடு பொதுவாக அநேகமானோரிடம் காணப்படுகின்றன. அத்தோற்றப்பாடு முற்றிலும் தவறானது. அறிவு என்பது எல்லோருக்கும் உண்டு, மனிதரல்லாத விலங்குகளுக்கும் உண்டு. அவற்றை இயற்கையறிவு, உணர்வறிவு, படிப்பறிவு, பட்டறிவு, கல்வியறிவு, தொழில்சார் அறிவு, துறைச்சார் அறிவு, அனுபவ அறிவு, பொது அறிவு, ஆள்மனப்பதிவறிவு என பல்வேறு வகைகளாகப் பிரிக்கலாம். இந்தப்பிரிவுகளை பல்வேறு உற்பிரிவுகளாக வகுத்துக்கூறலாம். எடுத்துக்காட்டாக அறிவை கூடச் சிலர் பேரரறிவு, சிற்றறிவு என்று வகைப்படுத்தும் முறைமையும் உள்ளது.

இயற்கையறிவு[தொகு]

இயற்கையறிவு என்பது இயற்கையைப் பற்றி அறியும் அல்லது கற்கும் அறிவன்று. அது இயற்கையிலேயே கிடைக்கப்பெறும் அறிவைக் குறிக்கும். ஒரு குழந்தை பிறந்தவுடன் கிடைக்கப்பெறும் அறிவு இயற்கையறிவு ஆகும். அது முதலில் பசியை உணரும் அறிவை இயற்கையறிவாகவே கொண்டுள்ளது. அதனாலேயே பசித்தால் குழந்தைகள் அழத்தொடங்கிவிடுகின்றன. அதன்பின் உணரும் அறிவை பெறுகின்றது. அதாவது தாயின் முலைக்காம்பை தொட்டதும் அதையுணர்ந்து (அழுகையை நிறுத்தும்) பாலருந்தத் தொடங்கிவிடும். இதன் வளர்ச்சிப்போக்கில் பாலைத் தரும் தாயை அறியும் அறிவையும், அவரிடத்தில் அன்புகொள்ளும் அறிவையும் பெற்றுக்கொள்ளும். இவைகளை இயற்கையறிவு எனலாம்.

அறிவும் உணர்வும்[தொகு]

தமிழில் அறிவு எனும் சொல்லுக்கான வரைவிலக்கணத்தையே; ஆங்கிலச் சொல்லான Knowledge கொண்டிருப்பதாகக் கொள்ள முடியாது. ஏனெனில் தமிழில் விலங்குகளுக்கு ஐந்தறிவு என்றும், மனிதர்களுக்கு ஆறறிவு என்றும் கூறும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. ஆனால் ஆங்கிலத்திலோ Five Sense, Sixth Sense என்று கூறும் வழக்கைக்கொண்டுள்ளனர். அதாவது இந்த "sense" எனும் சொல் அறிவு, புலன், உணர்வு போன்றவற்றுடன் தொடர்புக்கொண்ட ஒரு வரைவிலக்கணத்தைத் தருகின்றது. தமிழில் ஐம்புலன் என்று கூறும் ஒரு கூற்று இருப்பதனையும் நோக்கலாம்.

கல்வி அறிவு[தொகு]

ஒரு பாடசாலையில் கற்பிப்பதை ஒரு மாணவன் உடனடியாக அவற்றை விளங்கிக்கொள்கின்றான் என்றால், அது அம்மாணவரின் கிரகிக்கும் ஆற்றலின் தன்மையையே காட்டுகிறது. அதேவேளை ஒழுங்காகப் பாடங்களில் கவனம் செலுத்தாத மாணவனை அறிவற்றவன் என்று கூறவும் முடியாது. சிலவேளை அம்மாணவன் விளையாட்டுத் துறையிலோ, வேறு எதாவது ஒரு துறையிலோ அறிவதில் ஆர்வம் மிக்கவராக இருக்கலாம். இங்கே அறிவு என்பது தாம் ஆர்வம் கொள்ளும் துறைச்சார்ந்து பெற்றுக்கொள்ளப்படுகின்றது. எனவே எல்லோரது அறிவும் ஒரே மாதிரியானதாகவும், ஒரே தன்மைக்கொண்டதாகவும் இருப்பதில்லை. அதேவேளை கல்வியால் கிடைக்கப்பெறும் அறிவை கல்வியறிவு என்று மட்டுமே கூறலாம்.

எழுத்தறிவு[தொகு]

எழுத்தறிவு என்பது எழுத வாசிக்க அறிந்துள்ள அறிவைக் குறிக்கும். அதேவேளை ஒருவர் சிறப்பாக எழுதக்கூடியவராயின் அவரைச் சிறப்பான எழுத்தாற்றல் மிக்கவர் என்பதே பொருத்தமானதாகும். இந்த எழுதும் ஆற்றலையும் சிலர் முறைப்படி கற்று பெற்றுக்கொள்பவர்களும் உளர். தமது ஆர்வத்தின் காரணமாக அற்புத ஆற்றல்மிக்க எழுத்தாளர்களாய் ஆவோரும் உளர்.

ஆழ்மனப்பதிவறிவு[தொகு]

ஆழ்மனப்பதிவறிவு என்பது தாம் பிறந்த, வாழ்ந்த சூழலிற்கு ஏற்ப பிறராலோ, வாழும் நாட்டின் அரசியல் அமைப்புக்கு அமைவாக ஆழ்மனதில் பதிந்து அதுவே சரியென ஏற்றுக்கொள்ளும் அறிவெனலாம். எடுத்துக்காட்டாக: பிறந்த ஒரு குழந்தையை அது தானாக உணர்ந்துக்கொள்ளும் முன் வேறு ஒரு தம்பதியினர் எடுத்துத் தமது குழந்தை என்று கூறி வளர்ப்பதால், அக்குழந்தை தமது பெற்றோர் அவர்களே என ஆழ்மனதில் பதிந்துக்கொள்ளும் அறிவு ஆழ்மனப்பதிவறிவு எனலாம். இன்னுமொரு எடுத்துக்காட்டாக: GOD எனும் ஆங்கிலச் சொல்லின் ஒலிப்பை இந்தியத் தமிழர்கள் "காட்" என்பதே சரியெனும் அறிவையும், இலங்கைத் தமிழர்கள் "கோட்" என்பதே சரியெனும் அறிவையும் கொண்டிருப்போம். ஒரே தமிழரான நாம் ஒரு வேற்று மொழி சொல் தொடர்பில் இத்தகைய உறுதியை எவ்வாறு கொண்டிருக்கிறோம் எனில் நாம் பிறந்த வளர்ந்த நிலப்பரப்பின் அரசியல் எல்லைக்கோடுகள் நிர்ணயிக்கும் சிலவிதிமுறைகள் மனதில் ஆழப்பதிந்து அதுவே சரியெனும் மனநிலைக்கு நாம் சென்று விடுவதே காரணமாகும். இதுவே ஆழ்மனப்பதிவறிவு எனப்படுகின்றது. குறிப்பாகச் சிவபெருமான் அடித்ததாலேயே எல்லோரது முதுகிலும் தழும்பு இருக்கின்றது என இந்துக்கள் நம்பும் நம்பிக்கை போன்ற ஒவ்வொரு மதங்களிலும் உள்ள வெவ்வேறு கருத்துக்களை அப்படியே உள்வாங்கி அதுவே சரியென கொள்ளுதலும் ஆழ்மனப்பதிவறிவின் வெளிப்பாடே ஆகும்.

பட்டறிவு[தொகு]

பட்டறிவு பற்றி மேலும் பார்க்க, பட்டறிவு

Commons logo
இந்த தலைப்பைச் சார்ந்த மேற்கோள்கள் சில விக்கிமேற்கோள் திட்டத்தில் உள்ளன :அறிவு
Commons logo
தமிழ் விக்சனரி யிலுள்ள விளக்கத்தையும் காண்க!

அறிவு என்பது ஒரு மனிதனைப் பற்றியோ, ஒரு நிறுவனத்தைப் பற்றியோ அல்லது ஏதாவது ஒரு பொருள் பற்றியோ (அறிந்து)தெரிந்து கொள்வது ஆகும். இந்த அறிவைப் பெறும் வழிகள்: 1.கூரிய நோக்கு(perception) 2.கல்வி கற்கும் முறை(learning process) 3.விவாதித்து முடிவுக்கு வருதல்(debates) 4.செவிகளைத் திறந்து வைத்துக் கொள்ளுதல்(open ears) - கேள்வி அறிவு 5.தனக்குத்தானே விவாதிக்கும் முறை(reasoning)

நாம் அனுபவத்தினாலோ, புத்தகங்களைப் படிப்பதன் மூலமாகவோ அல்லது ஏதாவது காரண, காரியங்களினாலோ பெறுகிறோம். அறிவு என்பதன் முழுமையான விளக்கம் நம் தத்துவ மேதைகளிடையே காலம் காலமாக நடந்து வரும் விவாதமாகும். இன்றும் இந்த விவாதம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அறிவு என்பதற்கு சரியான விளக்கம் தரவேண்டுமென்றால் ஒரு செயல் ஏரண விதிகளால்(logically) நியாயப்படுத்தபட்டதாகவும், உண்மையாகவும், அனைவராலும் நம்பக்கூடியதாகவும் இருக்க வேண்டும். (Plato) ஆனால் இவை மட்டுமே ஒரு செயலை அறிவு என்று சொல்லுவதற்கு தகுதியான அளவுகோல் இல்லை என்று வாதிடுவோரும் உண்டு. அறிவு பல வகைப்படும்.

ஒவ்வொரு கணத்திலும் நாம் பாடுபட்டு(அநுபவித்து) அறியும் அறிவு பட்டறிவு(experience). ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஏற்படும் அறிவுத்திறனை சூழ்நிலை அறிவு என்று வகைப்படுத்தலாம். புத்தகங்களில் பெறுவதை புத்தக அறிவு என்றும், சமூக வழி பெறுவதை சமூக அறிவு என்றும் பல வகை உண்டு. சூழ்நிலை அறிவு மொழி, கலாசாரம், பண்பாடு இவற்றோடு நெருங்கிய தொடர்பு உடையது.

மெய்யறிவு[தொகு]

ஆன்மீகத் துறையில் மெய்யறிவு என்பது உண்மையை உணர்ந்து கொள்வது என்ற பொருள் படுமாறு கூறப்படுகிறது. இந்து மதத்தில் மெய்யறிவு என்பது மாயையை கடந்து உண்மையைக் காண்பது என்பதாகும். இதை மெய்ஞானம் என்றே கூறுகின்றனர். சமூகவியல் வல்லுநர் மெர்வின் கூறிய கருத்தின் படி அறிவு மதங்களால் நான்கு முறையில் சுட்டப்படுகிறது. அவை உள்ளடக்கம், அடர்த்தி, மையத்தன்மை மற்றும் அதிர்வு என்பவை ஆகும்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Verbit, M. F. (1970). The components and dimensions of religious behavior: Toward a reconceptualization of religiosity. American mosaic, 24, 39.
  2. Küçükcan, T. (2010). Multidimensional Approach to Religion: a way of looking at religious phenomena. Journal for the Study of Religions and Ideologies, 4(10), 60–70.
  3. http://www.eskieserler.com/dosyalar/mpdf%20(1135).pdf

மேலும் பார்க்க[தொகு]

பட்டறிவு

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவு&oldid=2051260" இருந்து மீள்விக்கப்பட்டது