உள்ளடக்கத்துக்குச் செல்

சித்திரகூடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்திரகூடம்
चित्रकूट
நகரம்
மந்தாகினி ஆற்றின் இராமன் படித்துறையிலிருந்து சித்திரகூட நகரக் காட்சி
மந்தாகினி ஆற்றின் இராமன் படித்துறையிலிருந்து சித்திரகூட நகரக் காட்சி
நாடுஇந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்சத்னா
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்23,316
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

சித்திரகூடம் (Chitrakoot - चित्रकूट) மத்திய இந்தியாவின் புந்தேல்கண்ட் எனும் காடுகள் அடர்ந்த மத்தியப் பிரதேச மாநிலத்தின் சத்னா மாவட்டத்தில் அமைந்த வரலாறு, கலாசாரம், தொல்லியல் கொண்ட ஊராகும். உத்தரப் பிரதேசம் - மத்தியப் பிரதேசம் மாநிலங்களின் எல்லையை ஒட்டி அமைந்தது சித்திரகூடம். இவ்வூர் 15 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பேரூராட்சி ஆகும். சித்திரகூடம், உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களைப் பிரிக்கும் இடமாக உள்ளது. சித்திரகூட ஊரில் பல இந்து கோயில்கள் அமைந்துள்ளது.

இராமன் பதினான்கு ஆண்டு காடுறை வாழ்வின் போது, சீதை மற்றும் இலக்குவனுடன் சித்திரகூட காட்டில் சில மாதங்கள், அனுசுயா, அத்ரி, மார்க்கண்டேயர் போன்ற முனிவர்களுடன் தவமியற்றியதாக இராமாயணத்தில் கூறப்படுகிறது. அமாவாசை, பௌர்ணமி, தீபாவளி, மகரசங்கராந்தி, இராமநவமி போன்ற இந்து சமய திருநாட்களின் போது சித்திரகூடத்தில் பெருங்கூட்டமாக மக்கள் கூடி, இங்கு பாயும் மந்தாகினி ஆற்றில் புனித நீராடி இராமனை வழிபடுவார்கள்

நிலவியல்

[தொகு]

மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மேற்கு - கிழக்காக பரவியுள்ள வடக்கு விந்திய மலைத்தொடரில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் சித்திரகூட மாவட்டத்திலும், மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்திலும் சித்திரகூடம் ஊர் பரந்துள்ளது.[1]சித்திரகூடத்தில் மந்தாகினி ஆறு பாய்கிறது.

சித்திரகூட மலைத் தொடர்கள் காமத் மலை, அனுமான் மலை, சீதை குளம், இலக்குவன் மலை எனும் சமயப் புகழ் வாய்ந்த மலைகளைக் கொண்டது.

இதிகாச வரலாறு

[தொகு]
அனுசுயா ஆசிரமப் பகுதியில் பாயும் மந்தாகினி ஆறு

இராமன் தனது பதினான்கு ஆண்டு கால காடுறை வாழ்வின் போது, சீதை மற்றும் இலக்குவனுடன் சித்திரகூடம் அடர்ந்த காட்டில் சில மாதங்கள் கழித்தார். அப்போது அத்ரி, அனுசுயா, மார்கண்டேயர் போன்ற முனிவர்களின் நட்பு இராமனுக்கு கிடைத்தது.

சித்திரகூட கானகத்தில் இருந்த இராமனைச் சந்தித்த பரதன், அயோத்தியை அடைந்து பட்டம் ஏற்றுக் கொள்ள வேண்டினான். அவனின் கோரிக்கையை இராமன் மறுத்து விட்டார். பின்னர் தசரதன் இறந்த செய்தி கேட்ட இராமன், தனது தம்பியர்களுடன் இறந்த தன் தந்தை தசரதனுக்கு இறுதிக் காரியத்தை சித்திரகூடத்தில் பாயும் மந்தாகினி ஆற்றின் கரையில் செய்தனர். பின்னர் இராமன் சித்திரகூடத்தை விட்டு மலைக்காடுகள் அடர்ந்த தண்டகாரண்யம் பகுதியை அடைந்தார்.[2]

காமத் மலையை வலம் வரும் பாதையில் காமத்நாத்தின் இராண்டாவது முகம்
இராமாயண நிகழிடங்கள்; இராமனின் அயோத்தி முதல் இலங்கை வரையான பயண இடங்கள்

மக்கள் தொகையியல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, சித்திரகூட நகரத்தின் மொத்த மக்கள் தொகை 23,316 ஆகும். அவர்களில் ஆண்கள் 12,675 ; பெண்கள் 10,641 ஆக உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3666 ஆக உள்ளது. பாலினவிகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 840 என்ற அளவில் பெண்கள் உள்ளனர். சராசரி படிப்பறிவு 70.01 % ஆகவும்; ஆண்களின் படிப்பறிவு 79.49% ஆகவும்; பெண்களின் படிப்பறிவு 58.40 % ஆகவும் உள்ளது. சித்திரகூட நகரப் பஞ்சாயத்து 4,752 வீடுகளைக் கொண்டது. [3]

பார்க்க வேண்டிய இடங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்திரகூடம்&oldid=3695387" இலிருந்து மீள்விக்கப்பட்டது