உள்ளடக்கத்துக்குச் செல்

பால காண்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தசரதனுக்கு நான்கு ஆண் மகன்கள் பிறத்தல்

வால்மீகி முனிவர் இயற்றிய சமஸ்கிருத மொழி இராமாயண இதிகாசம் ஏழு காண்டங்கள் கொண்டதாகும். அவற்றில் பால காண்டம் (Bala Kanda) (சமஸ்கிருதம் bālakāṇḍa, முதலாவதாக அமைந்துள்ளது. மற்ற காண்டங்கள் முறையே அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம் மற்றும் யுத்த காண்டம் ஆகும்.

பால காண்டத்தின் அமைப்பு

[தொகு]

பால காண்டம் 76 அத்தியாயங்கள் எனும் சருக்கங்களுடன் கூடியது.

வரலாறு

[தொகு]

வால்மீகி முனிவர், நாரதரிடம், இப்படிப்பட்ட நல்லொழுக்கமுடைய மனிதன் உலகில் (இராமன்) உண்மையில் வாழ்கிறாரா என்ற கேள்வியுடன் பால காண்டம் துவங்குகிறது. நாரதர், இராமனின் குணநலன்கள், உடல் அமைப்புகள், இராமனின் கதையைச் சுருக்கமாக வால்மீகி முனிவருக்கு விளக்குகிறார். பின்னர் இராமகாதையை எழுதிய வால்மீகி முனிவர், தனது ஆசிரமத்தில் வாழும் சீதையின் பிள்ளைகளான லவன் மற்றும் குசனுக்கு எடுத்துரைக்கிறார். [1][2]

பால காண்டச் சுருக்கம்

[தொகு]

இராம-இலக்குமணர்கள் பிறத்தல்

[தொகு]

இந்திரனின் நண்பரும், அயோத்தியைத் தலைநகராகக் கொண்ட கோசல நாட்டின் இச்வாகு குல மன்னருமான தசரதனின் மூன்று மனைவியர் கௌசல்யா, சுமித்திரை மற்றும் கைகேயி ஆவார். இவ்விணையர்களுக்கு நீண்டகாலமாகப் பிள்ளைப்பேறு இல்லாததால், தன் குல குருவான விசிஷ்டரின் ஆலோசனையின் படி, விபாண்டக முனிவரின் மகன் ரிஷ்யசிருங்கரைக் கொண்டு, பிள்ளைவரம் வேண்டிச்செய்த பெரும் வேள்வியில் கிடைத்த பாயாசத்தை, தசரதன், தம் மூன்று மனைவியர்களுக்கு உண்ணக் கொடுத்தான். அதன் காரணமாகவே கௌசல்யாவிற்கு இராமனும், சுமித்திரைக்கு இலக்குமணன் மற்றும் சத்துருக்கனன் எனும் இரட்டையரும், கைகேயிக்கு பரதனும் பிறந்தனர். [3]

இராமர் பிறந்த நாளை இந்துக்கள் இராம நவமி விழாவாகக் கொண்டாடுகின்றனர். மேலும் இராமர் பிறந்த அயோத்தியை ராம ஜென்ம பூமியாக வழிபடுகின்றனர்.

தசரதனிடம் இராமரை தன்னுடன் காட்டிற்கு அனுப்பக் கோரும் விசுவாமித்திரர்

குல குருவான வசிட்டரிடம் இராமன் முதலானவர்கள் அனைத்துக் கல்விகளையும் கற்றனர். இந்நிலையில் தசரதனின் அரசவைக்கு வந்த விசுவாமித்திரரின் வேண்டுகோளுக்கு இணங்கவும், குல குரு வசிட்டரின் அறிவுரையின் படியும், விசுவாமித்திரரின் வேள்வியைக் காக்க இராமரையும், இலக்குமணனையும், விசுவாமித்திரருடன் காட்டிற்கு அனுப்புகிறார் தசரதன்.

தாடகை – சுபாகு வதம்

[தொகு]

காட்டில் விசுவாமித்திரரின் வேள்வித் தீயில் இறந்த விலங்குகளின் மாமிசம் மற்றும் இரத்தங்களைக் கொட்டி, வேள்வியை நாசம் செய்துவந்த அரக்கர் குல தாடகை மற்றும் சுபாகுவை, இராமர் தன் கூறிய அம்புகளால் தாக்கிக் கொன்றார். இராமரின் தாக்குதலிலிருந்து தாடகையின் மற்றொரு மகன் மாரீசன் அடிபட்டு தப்பிப் பிழைத்தான்.

அகலிகை சாப விமோசனம்

[தொகு]
கல்லாக கிடந்த அகலிகை, இராமரின் பாதம் பட்டு சாபவிமோசனம் அடைதல்

விசுவாமித்திரரின் வேள்வி நன்கு முடிந்த பின்னர், காட்டில் வரும் வழியில், கௌதம முனிவரின் சாபத்தால் கல்லாகி கிடந்த ஒரு கல் மீது இராமரின் கால் பட்டதால், அக்கல் உயிர் பெற்று அகலிகையாக உயிர்த்தெழுந்தாள்.

சீதா கல்யாணம்

[தொகு]
மிதிலையில் சீதையின் சுயம்வரத்தில் சிவ தனுசை முறிக்கும் இராமர்

விசுவாமித்திரர், இராம-இலக்குமணர்களை ஜனக மன்னர் ஆளும் மிதிலை நகரத்திற்கு அழைத்து வந்தார். அங்கு சீதையின் சுயம்வரத்திற்காக வைத்திருந்த, யாராலும் வளைக்க இயலாத, மாபெரும் சிவ தனுசை இராமன் வளைத்து, சீதையை வெற்றி கொண்டார். பின்னர் தசரதன் குடும்பத்தினருக்கு செய்தி அனுப்பிய ஜனகர், தனது இளைய மகளான ஊர்மிளாவை இலக்குமணருக்கும், தன் தம்பி குசத்துவஜினின் மூத்த மகளான மாண்டவியை பரதனுக்கும், இளைய மகளான சுருதகீர்த்தியை சத்துருக்கனனுக்கும் திருமணம் செய்து வைத்தனர்.

பரசுமாரின் ஆணவம் ஒடுக்கல்

[தொகு]

தசரதன் குடும்பத்தினர் திருமண விழா முடிந்த பின்னர், மிதிலையிலிருந்து அயோத்திக்கு திரும்பும் வழியில், மிதிலையில் சிவ தனுசை முறித்த இராமரை இடைமறித்து, பரசுராமர் தனது கோடாரியால் கடும் போர் புரிந்தார். போரின் முடிவில் இராமரிடம் தோற்றுப் போன பரசுராமரின் ஆணவம் ஒழிந்தது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. THE RAMAYANA (“The Deeds of Rama”)
  2. [ http://holybooks.lichtenbergpress.netdna-cdn.com/wp-content/uploads/Ramayana-VOL-1-Bala-Ayodhya-Kanda.pdf}[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "பால காண்டம் - 5. திரு அவதாரப் படலம்". Archived from the original on 2017-06-07. பார்க்கப்பட்ட நாள் 2017-05-19.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால_காண்டம்&oldid=3832522" இலிருந்து மீள்விக்கப்பட்டது