உள்ளடக்கத்துக்குச் செல்

கோசல நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கி.மு.6-ஆம் நூற்றாண்டில் கோசல நாடு

கோசல நாடு (சமக்கிருதம்: कोसल) என்பது பரத கண்டத்தின் வடக்கில் அமைந்திருந்த இராச்சியம் ஆகும். இது தற்கால உத்தரப் பிரதேச மாநிலத்தின் அவத் பிரதேசத்தில் அயோத்தி மாவட்டமாக உள்ளது.[1] கோசல நாட்டின் தலைநகரம் அயோத்தி நகரம் ஆகும். கோசல நாட்டு மன்னர்கள் சூரிய குலத்தின் இச்வாகுவின் வழித்தோன்றல்கள் ஆவார். இவர்களில் புகழ் பெற்றவர்கள் தசரதன், இராமன், இலக்குவன், பரதன் ஆவர்.

அங்குத்தர நிக்காயம் எனும் பௌத்த நூலினதும், பகவதி சூத்திரம் எனும் சமண நூலினதும் அடிப்படையில் கிமு 6-ஆம் நூற்றாண்டில் காணப்பட்ட பதினாறு பெருங் குடியேற்றங்களுள்(மகா ஜனபதங்கள்) இதுவும் ஒன்றாகும்.[2] இதன் கலாசார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையின் காரணமாக இது ஒரு பெரும் சக்தி படைத்த நாடாக மாறியது. எவ்வாறாயினும் பிற்காலத்தில் இது, அதன் அண்டைய நாடான மகதத்துடன் தொடர்ச்சியான போர்களில் ஈடுபட்டமையால் மிகவும் பலவீனப்பட்டு, இறுதியில், கிமு. 4-ஆம் நூற்றாண்டளவில் மகதத்தினுள் உள்வாங்கப்பட்டுவிட்டது. கோசல நாட்டில் அயோத்தி, சாகேதம் மற்றும் சிராவஸ்தி ஆகிய மூன்று முக்கிய நகரங்கள் காணப்பட்டன. மேலும் சேதவ்யா, உகத்தா[3] தந்தகப்பா, நளகபன மற்றும் பங்கதா போன்ற சிறிய நகரங்களும் காணப்பட்டன.[4] புராணங்களின் அடிப்படையில், இச்வாகு மற்றும் அவரது வழிவந்தோரின் ஆட்சியின்கீழ் கோசலையின் தலைநகரமாக அயோத்தி அமைந்திருந்தது.[5] கி.மு.6ம் நூற்றாண்டுக்கும், கி.பி.6ம் நூற்றாண்டுக்கும் இடையில் கோசலையின் தலைநகரமாக சிராவஸ்தி விளங்கியது.

புராண - இராமாயண இதிகாச வரலாறு

[தொகு]
கோசல நாட்டின் தலைநகரான சிராவஸ்தியின் நகரச் சுவர்களின் இடிபாடுகள்

முந்தைய வேத இலக்கியங்களில் கோசலை பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை. இது பிற்கால நூல்களான சதபத பிராமணம், கல்ப சூத்திரம் ஆகியவற்றில் ஒரு பிராந்தியமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.[6] வால்மீகி இயற்றிய இராமாயணம், வியாசர் இயற்றிய மகாபாரதம் மற்றும் புராணங்களில் கோசல நாட்டின் ஆட்சியாளர்கள் சூரிய குல இச்வாகு மன்னரின் வழித்தோன்றல்கள் எனப்படுகிறது. இச்வாகு குலத்தின் புகழ் பெற்றவர்களாக பகீரதன், தசரதன் மற்றும் இராமன் கருதப்படுகிறார்கள்.

இராமாயண காவியத்தில் இச்வாகு முதற்கொண்டு இலவன் - குசன் வரையான இச்வாகு வம்ச அரசர்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன.[7] மச்சிம நிக்காய என்ற பௌத்த நூல் புத்தரை கோசல நாட்டவர் எனக் குறிப்பிடுவதோடு[8] சமண மதத்தின் 24வது தீர்த்தங்கரரான மகாவீரர் கோசலையில் கல்வி போதித்ததாகவும் குறிப்பிடுகின்றது. மகா கோசல மன்னனின் காலத்தின்போது காசி, கோசல நாட்டின் ஒரு முக்கிய பகுதியாக விளங்கியது.[9]. மகாகோசலனின் பின் அவனது மகன் பிரசன்னஜித் மன்னனானான். இவன் புத்தரின் போதனைகளைப் பின்பற்றினான். இவன் தலைநகரைத் துறந்து வெளியேறியபின், இவனது மந்திரியான திக சாராயன தனது மகனான விதூதபாவை ஆட்சிப் பொறுப்பில் நியமித்தான்.[10]. எனினும் மிக விரைவிலேயே கோசல நாடு மகதத்துடன் இணைக்கப்பட்டது.

மௌரிய ஆட்சியின் கீழ் கோசலம்

[தொகு]

மௌரிய ஆட்சியின் போது கோசல நாடு, கௌசாம்பியின் பிரதிநிதியொருவரால் நிர்வகிக்கப்பட்டது.[11] சொக்கௌரா செப்புப் பட்டயம் பெரும்பாலும் சந்திரகுப்த மௌரியனின் ஆட்சியின்போது வெளியிடப்பட்டிருக்கலாம். இது சிராவஸ்தியில் ஏற்பட்ட பஞ்சத்தைப் பற்றியும் அதற்கு வழங்கப்பட்ட நிவாரண உதவி பற்றியும் குறிப்பிடுகிறது.[12] யுக புராணத்தின் ஒரு பகுதியான கர்கி சங்கிதை இறுதி மௌரிய ஆட்சியாளனான பிருகத்ரதனின் ஆட்சியின்போது நடைபெற்ற யவனர்களின்(இந்தோ-கிரேக்கர்) படையெடுப்பைப் பற்றியும் சகேதம் கைப்பற்றப்பட்டமை பற்றியும் குறிப்பிடுகிறது.[13]

மௌரிய ஆட்சியின் பின் கோசலம்

[தொகு]

மௌரிய ஆட்சியின்பின் வந்த கோசல நாட்டு ஆட்சியாளர்கள் பற்றி, அவர்களால் வெளியிடப்பட்ட சதுரச் செப்புக் காசுகளின் மூலம் அறியமுடிகிறது. அவ் ஆட்சியாளர்கள்: மூலதேவன், வாயுதேவன், விசாகதேவன், தனதேவன், நரதத்தன், ஜேசதத்தன் மற்றும் சிவதத்தன் ஆகியோராவர். எனினும் மூலதேவனால் வெளியிடப்பட்ட நாணயங்களை, சுங்க ஆட்சியாளனான வசுமித்திரனைக் கொன்ற மூலதேவனின் நாணயங்களிலிருந்து வேறுபடுத்தி அறியமுடியாமல் உள்ளது.[14] தன தேவனின் நாணயங்களை கி.மு. 1ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த, அயோத்தி கல்வெட்டை எழுதிய தனதேவனின் நாணயங்களிலிருந்து வேறுபடுத்தி அறியக்கூடியதாகவுள்ளது. இச் சமஸ்கிருதக் கல்வெட்டில் கௌசிகிபுத்திர தனதேவன், தன் தந்தை பல்கு தேவனின் நினைவாக கேதான(கொடிக்கம்பம்) எனும் ஒன்றை நாட்டியமை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இக் கல்வெட்டில் அவன் தன்னை புஷ்யமித்திர சுங்கனின் 6வது பரம்பரையினன் எனக் குறிப்பிட்டுள்ளான். தனதேவன், எருதின் இலச்சினை பொறிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்டான்.[15][16]

இதனையும் காண்க

[தொகு]

குறிப்புக்கள்

[தொகு]
  1. Mahajan 1960, ப. 230
  2. Raychaudhuri 1972, ப. 85–6
  3. Raychaudhuri 1972, ப. 89
  4. Law 1973, ப. 132
  5. Pargiter 1972, ப. 257
  6. Law 1926, ப. 34–85
  7. Raychaudhuri 1972, ப. 89–90
  8. Raychaudhuri 1972, ப. 88–9
  9. Raychaudhuri 1972, ப. 138
  10. Raychaudhuri 1972, ப. 186
  11. Mahajan 1960, ப. 318
  12. Thapar 2001, ப. 7–8
  13. Lahiri 1974, ப. 21–4
  14. Lahiri 1974, ப. 141n
  15. Bhandare 2006, ப. 77–8, 87–8
  16. Falk 2006, ப. 149

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bhandare, S. (2006), Numismatic Overview of the Maurya-Gupta Interlude in P. Olivelle (ed.), Between the Empires: Society in India 200 BCE to 400 CE, New York: Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-568935-6.
  2. Falk, H. (2006), The Tidal Waves of Indian History in P. Olivelle (ed.), Between the Empires: Society in India 200 BCE to 400 CE, New York: Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-568935-6.
  3. Lahiri, B. (1974), Indigenous States of Northern India (Circa 300 B.C. to 200 A.D.), Calcutta: University of Calcutta.
  4. Law, B.C. (1926), Ancient Indian Tribes, Lahore: Motilal Banarsidass.
  5. Law, B. C. (1973), Tribes in Ancient India, Poona: Bhandarkar Oriental Research Institute.
  6. Mahajan, V.D. (1960), Ancient India, New Delhi: S. Chand, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-219-0887-6.
  7. Pargiter, F.E. (1972), Ancient Indian Historical Tradition, Delhi: Motilal Banarsidass.
  8. Raychaudhuri, H.C. (1972), Political History of Ancient India, Calcutta: University of Calcutta.
  9. Thapar, R. (2001), Aśoka and the Decline of the Mauryas, New Delhi: Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-564445-X
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோசல_நாடு&oldid=3322901" இலிருந்து மீள்விக்கப்பட்டது