தாரை (இராமாயணம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாரை
கிட்கிந்தையில் சுக்ரீவன், அனுமன், தாரை ஆகியோரைச் சந்திக்கும் இலக்குவன்
தேவநாகரிतारा
வகைபஞ்சகன்னிகை
இடம்கிட்கிந்தை
துணைவாலி, சுக்ரீவன்

தாரை இராமாயணப் பாத்திரமாவாள். இவள் வானர அரசன் வாலியின் மனைவியாகத் திகழ்ந்தவள்.வாலியை,வாலியின் சகோதரனான சுக்ரீவனே கொன்று அரசைக் கைப்பற்றியதோடு தாரையையும் தன் மனைவியாக்கினான். அவளது புத்திக்கூர்மையினாலும் , இக்கட்டுக்களை அவள் சந்தித்த விதத்தினாலும் தினமும் போற்றப்பட வேண்டிய பஞ்ச கன்னிகைகளுள் ஒருத்தியாக விளங்குகின்றாள்

வாழ்க்கை[தொகு]

இராமாயணத்தில், தாரை, வானர மருத்துவன் சுசேனனின் மகளாகக் காட்டப்படுகின்றாள்.[1][2] பாலகாண்டத்தின் ஓரிடத்தில், அவள் பிரகஸ்பதியின் மகளின் அம்சமாகப் பூமியில் அவதரித்தவள் என்று சொல்லப்படுகின்றது.[3] கம்ப இராமாயணம் போன்ற நூல்களில், பாற்கடல் கடைந்தபோது அவதரித்த அரமகளிரில் ஒருத்தியாகத் தாரை சுட்டிக்காட்டப்படுகின்றாள்.[1][2] யாவா நாட்டு வயாங் அரங்கக் கலையாடலில், தாரை, இந்திரன் மற்றும் அவன் மனைவி வியாதியின் மகளாகக் காட்டப்படுகின்றாள். அவளின் சகோதரி தாரி, இராவணன் மனைவி என்றும், அவளுக்குச் சித்ரதன், சித்ராங்கனன், சயந்தகன், சயந்தரன், கர்யுன்வம்சன் என்ற சகோதரர்கள் உண்டு என்றும் அங்குச் சொல்லப்படுகின்றது.[4]

சில தமிழ், தெலுங்கு மரபுகள், பாற்கடல் கடைய உதவியமைக்காக, வாலி, சுக்ரீவன் ஆகிய இருவருக்கும் பொதுமனையாளாகத் தாரை வழங்கப்பட்டதாகச் சொல்கின்றன.[5] மகாபாரதத்திலும் ஒரு பெயர் தெரியாத பெண்ணுக்காக, வாலியும் சுக்ரீவனும் மோதியதாக ஒரு சம்பவம் சொல்லப்படுவதால், அது தாரா என்றே கொள்ளலாம்.[2]

சில மகாபாரத, இராமாயணக் கதைகள், தென்கிழக்காசிய இராமாயண வேறுமங்கள் என்பன, தாராவைச் சுக்ரீவன் மனைவியாகவும், அவள் வாலியால் அபகரிக்கப்பட்டதாகவும் சித்திரிக்கின்றன.[2][6] [4] எனினும், எல்லா வேறுமங்களிலும், அங்கதன் வாலிக்குத் தாராவிடம் பிறந்த மகனாகவே காட்டப்படுகின்றான்.[2][4]

மாயாவி எனும் அரக்கனுடனான சண்டையில் தன் அண்ணன் வாலி இறந்ததாகத் தவறுதலாகக் கருதிய சுக்ரீவன், விதவையான தன் அண்ணி தாரையை மணந்து கிட்கிந்தையின் ஆட்சிக்கட்டில் ஏறுகின்றான். ஆனால், உயிரோடு திரும்பிவரும் வாலியோ, அவனைத் தவறாகப் புரிந்துகொண்டு அவனை அடித்து விரட்டுவதுடன், சுக்ரீவன் மனைவி ருமையையும் கவர்ந்து கொள்கிறான்[7] இந்த ஒரு செயலுக்காகவே இராமாயண ஆய்வாளர்களால், வாலி மிகக்கடுமையாக விமர்சிக்கப்படுகின்றான்.[8]


சுக்ரீவன் அறைகூவும்போது வாலியை எச்சரிக்கும் தாரை

வான்மீகி இராமாயணத்தின் படி,சீதையை, இராவணன் இலங்கைக்குக் கடத்திய பின்னர், அவளைத் தேடி வரும் இராமன், சுக்ரீவனுடன் நட்புப்பூண்டு, வாலியிடமிருந்து கிட்கிந்தை அரசையும், அவன் மனைவியையும் மீட்டுத்தருவேனென உறுதிகூறுகின்றான். அவன் கூற்றுக்கேற்ப சுக்ரீவன் வாலியை அறைகூவும் போது, தாரை வாலிக்குக் கூறும் புத்திமதி, மிக அறிவார்ந்த அறிவுரைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.[2]

கம்ப இராமாயணத்திலும், இந்தத் தாராவின் எச்சரிக்கை சிறப்புற விவரிக்கப்பட்டிருக்கின்றது. எனினும், இராமனை அறவோன் எனப் போற்றும் வாலி, இராமனால் தனக்கு ஆபத்து நேராது என்று உறுதிபூண்டு, சுக்ரீவனைக் கொல்வேன் என, வஞ்சினம் உரைத்துச் செல்கின்றான். [9] இராமபாணத்தால் வாலி இறந்ததும், அங்குவந்து சேரும் தாரை, இராமனையும் சுக்ரீவனையும் அவர்களது இழிசெயலுக்காகக் கடிவதுடன், பின்னர், ருமையைக் கவர்ந்ததற்குத் தக்க தண்டனையே அது என்று கூறி சமாதானமடைகிறாள்.[10][11] சில வடநாட்டு மரபுகளில், சீதையை அடைந்தவேகத்திலேயே அவன் இழப்பான் என இராமனுக்குத் தீச்சொல்லிடுகிறாள்.[12] [13] வங்காள கிருத்திவாச இராமாயணத்திலோ, இன்னும் ஒருபடி மேலே சென்று, அவன் மறுபிறப்பில் அதேபோல் தவறுதலாக வாலியால் கொல்லப்படுவான் எனத் தீச்சொல்லிடுகிறாள்.[2][14] சில பிற்கால இராமாயணங்கள், கண்ணனைக் கொன்ற வேடன், வாலியின் மறுபிறப்பே என்கின்றன.[2]

புள்ளமங்கை வாலிவதச் சிற்பத்தில் அரற்றியவாறு அமர்ந்திருக்கும் (வானர வடிவத்) தாரை.


வாலிவத முடிவில் அரற்றும் (மானுட வடிவத்) தாரை

வாலிவத முடிவில், அனுமனால் ஆற்றுப்படுத்தப்படுபவளாக சித்தரிக்கப்படும் தாரை, பின் கிட்கிந்தையின் எழுச்சிக்குத் தன்னை அர்ப்பித்துக் கொள்வதாக, சில இராமாயண வேறுமங்கள் காட்டுகின்றன. எனினும் அவள், சுக்ரீவனின் அரசியாக அமர்ந்தே அக்காரியங்களைச் செய்யவேண்டியதாகின்றது. அவள் வாலி கொல்லப்பட்டபின், சுக்ரீவனை மணந்துகொண்டது பல வேறுமங்களில் சொல்லப்படுகின்றது.[15] தாயை ஒத்த அண்ணியை தன் சிற்றப்பன் சுக்ரீவன் மணந்துகொண்டதை, அங்கதனும் சில இடங்களில் விமர்சிக்கின்றான்.[16] இம்மணத்தில் தாராவின் சம்மதம், தன் கணவனின் மறைவுக்குப் பின், தன் மகனையும் நாட்டையும் காப்பாற்றிக் கொள்ள, அவள் எடுத்த இராசதந்திர முடிவாகவே கருதப்படுகின்றது.[2] எனினும், கம்ப இராமாயணத்தில், சுக்ரீவன் அவளை மணமுடிக்காமல், தாய் போல் மதிப்பதாகவே காட்டப்படுகின்றது.[17]

தாரையும் இலக்குவனும்[தொகு]

தாரை-சுக்ரீவனிடம் இலக்குவன் வருகை

தாரையை மணந்தபின், சுக்ரீவன் தன் சீதையை மீட்கும் வாக்குறுதியை மறந்து களியாட்டங்களில் ஈடுபட்டிருந்ததை அடுத்து, அவனது வாக்கை நினைவூட்ட கடும் கோபத்துடன் இலக்குவன் அங்கு வருகின்றான். அப்போது, அவனது சீற்றத்தைத் தணிப்பதற்காகத் தாரையே அவனை எதிர்கொள்கிறாள்.சில பதிப்புகள் அவளும் மதுபோதையில் இருந்ததாகவும்[18] ஆனால், இன்சொற்களால் இலக்குவனைக் குளிர்வித்தாகவும் சொல்லப்படுகின்றது.[2] கம்ப இராமாயணமும், இச்சந்தர்ப்பத்திலும் தாரையே இலக்குவனின் கோபத்தைத் தணித்து அனுப்பியதாகக் காட்டுகின்றது. அது சுட்டுவதற்கேற்ப, கைம்பெண்ணின் அடையாளமாக அவள் வெண்ணிறாடை உடுத்தியிருந்ததையும், இலக்குவன் அதைக்கண்டு தன் தாயை நினைவுகூர்ந்ததையும் கம்பர் வர்ணிக்கிறார்.[17] இறுதியில் தாரையின் அரசுசூழ்மதியால், இலக்குவனே சுக்ரீவனிடம் மன்னிப்புக் கேட்கும்படி ஆகின்றது.[19]

பஞ்சகன்னிகை தாரா[தொகு]

தினமும் காலையில் இந்துப் பெண்கள் நினைவுகூரவேண்டிய ஐந்து கன்னியரில் ஒருத்தியாகத் தாரையும் சொல்லப்பட்டு வருகின்றாள். வாலி அவள் மீது வைத்திருந்த அன்பும், மரியாதையும் இராமாயணத்தில் பல இடங்களிலும் சொல்லப்படுவதன் மூலம், அவளது புத்திக்கூர்மையை உணர்ந்து கொள்ள முடிகின்றது.[20] அவள் பேரறிவு நிறைந்தவள், எதிர்வுகூறும் ஆற்றல் வாய்ந்தவள், தன்னம்பிக்கையும் வாக்குச் சாதுரியமும் நிறைந்தவள் என்பதற்கு இராமாயணமே பல இடங்களிலும் சான்றாவதால், அவள் பெண்கள் எப்போதும் எண்ணிக் கொண்டிருக்க வேண்டிய ஐங்கன்னியரில் ஒருத்தியாகத் திகழ்வதில் வியப்பேதுமில்லை.[2]

மேலும் பார்க்க[தொகு]


அடிக்குறிப்புகள்[தொகு]

 1. 1.0 1.1 Mani p. 786
 2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 Bhattacharya, Pradip (March–Apr 2004). "Five Holy Virgins, Five Sacred Myths: A Quest for Meaning (Part I)". Manushi (141): 7–8. http://www.manushi-india.org/pdfs_issues/PDF%20141/03%20panchakanya%204-12.pdf. பார்த்த நாள்: 2015-08-31. 
 3. Goldman p. 316
 4. 4.0 4.1 4.2 Sudibyoprono pp. 536–7
 5. Pattanaik, Devdutt (2002). The man who was a woman and other queer tales of Hindu lore. Harrington Park Press. பக். 109. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-56023-181-5. 
 6. Meyer p. 411
 7. Lefeber pp. 42, 157
 8. Lefeber p. 243
 9. Srinivasan pp. 149–50
 10. Lefeber pp. 97–8
 11. Lefeber p. 250
 12. Lefeber p. 252
 13. Guruge p. 34
 14. Stewart, Tony K.; Dimock, Edward C. (2001). "Krittibasa's Apochatic Critique of Rama's Kingship". in Richman, Paula. Questioning Ramayanas: a South Asian tradition. University of California Press. பக். 254, 259. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-520-22074-9. 
 15. Nath p. 178
 16. Singh, Sarva Daman (1988). Polyandry in Ancient India. Motilal Banarsidass Publ. பக். 139–140. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-208-0487-2. https://archive.org/details/polyandryinancie0000sarv. 
 17. 17.0 17.1 Srinivasan p. 159
 18. Lefeber p. 286
 19. Rao p. 58
 20. Sharma p. 83

உசாத்துணை நூல்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரை_(இராமாயணம்)&oldid=3849010" இலிருந்து மீள்விக்கப்பட்டது