ஆல்பர்ட் சுவைட்சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆல்பட்டு சுவைட்சர்
பிறப்பு(1875-01-14)14 சனவரி 1875
கெய்சர்பெர்க், செருமனி
இறப்பு4 செப்டம்பர் 1965(1965-09-04) (அகவை 90)
லாம்பரென், காபோன்
குடியுரிமைசெருமனி (1875–1919)
பிரான்சு (1919–1965)
துறைமருத்துவம், இசை, தத்துவம், மெய்யியல், இறையியல்
அறியப்படுவதுஇசை, மெய்யியல், கொடைத்தன்மை
விருதுகள்கோதே விருது பரிசு (1928)
நோபல் பரிசு (1952)
துணைவர்எலன்

ஆல்பட்டு சுவைட்சர் (Albert Schweitzer, 14 சனவரி 1875–4 செப்டம்பர் 1965 ) சமாதானத்துக்காக நோபல் பரிசு பெற்ற அறிஞர்.ஆல்பர்ட் சுவைட்சர் மெய்யறிவாளராகவும் மருத்துவராகவும் மதபோதகராகவும் தொண்டூழியம் செய்த மனித நேயராகவும் விளங்கினார். தம் வாழ்வின் இறுதி வரை அணுக்குண்டு தயாரிப்பு, சோதனைகள் அணு ஆயுதங்கள் ஆகியவற்றுக்கு எதிராகக் குரல் கொடுத்தார்.[1][2][3]

இளமையும் கல்வியும்[தொகு]

சமயம் இசை கல்வி ஆகியவற்றில் பல தலைமுறைகளாகச் சிறந்து விளங்கிய குடும்பத்தில் பிறந்தார். தமது 18ஆவது வயதில் பாரிசு நகரில் வல்லுநர்களிடம் முறையாக இசை பயின்றார். 1893 ஆம் ஆண்டில் சுடாரசுபர்க்கு பல்கலைக் கழகத்தில் வேதாகமக் கல்வியைக் கற்று முனைவர் பட்டம் பெற்றார். 1894 இல் படையில் சேர்ந்து பணியாற்றினார். 1898 இல் பாரிசு நகருக்குச் சென்று காண்ட் தத்துவத்தைப் படித்துப் பட்டம் பெற்றார். தத்துவம் இசை கிறித்தவ சமயம் ஆகிய மூன்று துறைகளிலும் முனைவர் பட்டம் பெற்றார். ஏழாண்டுக் காலம் மீண்டும் படித்து மருத்துவத் துறையிலும் டாக்டர் பட்டம் பெற்றார். அதோடு மட்டுமன்றி வெப்பப் பகுதிகளில் நிலவுகின்ற நோய்களைக் குணப்படுத்தும் முறைகளையும் பாரிசுக்குச் சென்று கற்றுக்கொண்டார். தமது 37 ஆம் அகவையில் கெலன் பிரச்சள் என்னும் தொண்டுள்ளம் கொண்டப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.

மருத்துவப் பணி[தொகு]

1911ஆம் ஆண்டில் மருத்துவப் படிப்பை முடித்த சுவைட்சர், கல்வியறிவு இல்லாமல் வறுமையிலும் கடும் நோயிலும் வாடிய ஆப்பிரிக்க நாட்டு ஆதிவாசிகளுக்கு மருத்துவப் பணி புரிய லாம்பர்னே என்னும் ஊருக்குச் செல்லத் தீர்மானித்தார். நண்பர்களும் உறவினர்களும் இம்முடிவை எதிர்த்து அவரைத் தடுக்க முயன்றார்கள். சுவைட்சர் அவர்களின் அறிவுரையைச் செவி மடுக்காமல் லாம்பர்னேயில் காட்டுப் பகுதியில் மரங்களால் கட்டப் பட்ட கட்டிடத்தில் சிறிய அளவில் மருத்துவமனையை அமைத்து நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்தார். நச்சுக்காய்ச்சல், தொழுநோய் பூச்சிக்கடி ஆகியவற்றால் அங்கு வாழ்ந்த நீக்ரோ இன மக்களுக்கு சிகிச்சை அளித்தார். சுவைட்சர் ஒரு செருமானியர் என்பதாலும் அந்தக் கால கட்டத்தில் முதல் உலகப் போரினால் செருமனிக்கும் பிரான்சுக்கும் பகைமை இருந்ததாலும் பிரஞ்சு அரசு அவரை வீட்டுக் காவலில் வைத்தது.அவர் செய்த மருத்துவப் பணிக்கு இடையூறு செய்தது. போதிய நிதி வசதியும் மருந்துகளும் மருத்துவக் கருவிகளும் இல்லாததால் தம் சொற்பொழிவுகள் வாயிலாக கிறித்தவ சமயப் பணிஆற்ற பல நாடுகளுக்குப் பயணம் செய்தார்.அப்பயணத்தில் கிடைத்த பணத்தையும் பொருள்களையும் கொண்டு லாம்பர்னேயில் உள்ள மருத்துவமனையை நடத்தி விரிவாக்கினார். மனிதநேயத்துடன் இவர் ஆற்றிய 40ஆண்டுக் கால மருத்துவத் தொண்டைப் போற்றிப் பாராட்டி நோபல் பரிசு 1952 இல் வழங்கப் பட்டது.

கொள்கையும் கோட்பாடும்[தொகு]

பிறருக்கு எவ்வாறு தொண்டு செய்ய முடியும் என்பதை அறிந்தவர்களே உண்மையான மகிழ்ச்சியை அடைவார்கள்.

வாழுகின்ற அனைத்து உயிர்களிடமும் பரிவும் அன்பும் காட்டாதவர்கள் அமைதியைக் காண முடியாது.

மனிதன் மனித இனம் முழுமைக்கும் சொந்தமானவன்.ஒவ்வொருவரும் மற்றவருக்கு கடமைப் பட்டவர் ஆவர்.

நம்மை நாமே எண்ணிப் பார்க்கும்போதுதான் நம் உயிரின் விலையில்லா மதிப்பையும் வாழ்க்கையின் நோக்கத்தையும் உணர முடிகிறது. இச்சிந்தனையின் விளைவு பிற உயிர்களை மதிக்கத் தோன்றும்.பிறரை நேசிக்கத் தோன்றும் எல்லாரும் சமம் ஓர் நிறை என்று கருதத் தோன்றும்.

மேற்கத்திய நாகரிகம் ஒழுக்கத்தைப் பின்பற்றாமல் அழிந்து வருவதாக சுவைட்சர் வருந்தினார்.

திருக்குறளுக்கு இணையான ஒரு அறநெறி நூல் உலகிலேயே இல்லை என்று கூறினார். அவர் புலால் உணவை மறுத்து காய்கறி உணவைச் சாப்பிட்டார்.

பரிசுகளும் பட்டங்களும்[தொகு]

  • பிராங்குபர்டு கோத்தே பரிசு வழங்கப்பட்டது
  • பல்வேறு பல்கலைக் கழகங்களில் கௌரவப் பட்டங்கள் வழங்கப் பட்டன.
  • நோபல் பரிசு (1952) வழங்கப்பட்டது.
  • ஒரு லட்சம் டென்மார்க்கு குரோனர் சானிங் பரிசு வழங்கப்பட்டது (1959)
  • ஆல்பர்ட் சுவைட்சர் தமது 90 ஆவது அகவையில் ஆப்பிரிக்க நாட்டில் தாம் கட்டிப் பராமரித்த மருத்துவமனையில் காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. McLaughlin, Ryan Patrick (2014). Preservation and Protest: Theological Foundations for an Eco-Eschatological Ethics. Minneapolis, Minnesota: Fortress Press. பக். 160. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4514-8040-5. https://archive.org/details/preservationprot0000mcla. 
  2. Colman McCarthy (25 December 1995). "Religion & the Treatment of God's Creatures". The Washington Post. https://www.washingtonpost.com/archive/lifestyle/1995/12/25/religion-the-treatment-of-gods-creatures/b7c7493b-7e09-4a07-943a-d2827b6a7406/. 
  3. Schweitzer, Albert (10 December 1953), "Award Ceremony Speech", The Nobel Peace Prize 1952, The Nobel prize.

மேற்கோள் நூல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்பர்ட்_சுவைட்சர்&oldid=3777781" இலிருந்து மீள்விக்கப்பட்டது