கொல்லாமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொல்லாமை சமண சமயத்தவரின் தலையாய அறம். கொல்லாமையில் நான்கு படிநிலைக் கோட்பாடுகள் உள்ளன. எந்த உயிரையும் கொல்லாமை, புலால் உண்ணாமை, அகிமசை, சீவகாருண்யம் என்பன அவை.

கொல்லாமை[தொகு]
கொல்லாமை சமணர் கோட்பாடு. நடந்து செல்லும்போது கூடத் தன்னை அறியாமல் ஏதாவது சிறு உயிரினங்களைக் கொன்றுவிடுவோமோ என்று தான் நடந்து செல்லும் வழியைத் தானே மயில் இறகால் [1] கூட்டிக்கொண்டே நடந்து செல்வது சமணத் துறவிகளின் வழக்கம். கவுந்தியடிகள் என்னும் சமணத் துறவி மயில்பீலியைக் கையில் எடுத்துச் சென்றார். [2] நோன்பு என்பது உயிர்க்கொலை செய்யாதிருக்கும் நற்பண்பு என்பது திருவள்ளுவர் வாக்கு. [3] [4]
உணவுக்காக வேட்டையாடிய காலம் ஒன்று. மீன் பிடித்தல் ஒருவகை வாழ்க்கை முறை. இப்படிப்பட்ட நிலைமைகளில் கொல்லாமை சிந்தனைக்கு உரியது.
புலால் மறுத்தல்[தொகு]
கொல்லாமை துறவிகளின் நோன்பு. புலால் உணவை வேண்டாம் என மறுத்தல் [5] எல்லாரும் கடைப்பிடிக்கக் கூடிய நோன்பு என்பது திருவள்ளுவர் காட்டும் அறம். [6] இந்தக் கோட்பாடு எல்லா சமயத்திலும் ஒருசாரார் கடைப்பிடிக்கும் கோட்பாடு.
இன்னா செய்யாமை[தொகு]
எந்த உயிரினத்துக்கும் துன்பம் செய்யாமல் இருக்கும் இன்னா செய்யாமைக் கோட்பாட்டை [7] அகிம்சை என்னும் பெயரால் கடைப்பிடித்துக்கொண்டு தற்காலத்தில் வாழ்ந்து காட்டியவர் காந்தியடிகள். தன்னைச் சுட்டுக்கொன்ற கோட்சேயைக் கூட மன்னித்துவிடும்படி கூறியது காந்தியடிகளின் அகிம்சைக் கோட்பாடு. [8]
சேவல்சண்டை முதலான விளையாட்டுகள் உயிரினங்களைத் துன்புறுத்துபவை. இவை தவிர்க்கப்பட வேண்டியவை.
அருளுடைமை[தொகு]
அருளுடைமையைத் திருக்குறள் மன்னுயிர் ஓம்பி அருள் ஆள்தல் [9] எனக் குறிப்பிடுகிறது. சிபிச் சக்கரவர்த்தி புறாவையும் அதனைக் கொல்ல வந்த பருந்தையும் காப்பாற்றியது அருளுடைமை. "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" எனப் பாடி வருந்தியது வள்ளலாரின் சீவகாருண்யக் கோட்பாடு.

அடிக்குறிப்பு[தொகு]

 1. தானே உதிர்ந்த மயில் இறகால்
 2. தோம் அறு கடிஞையும், சுவல் மேல் அறுவையும்,
  கவுந்தி ஐயை, கைப் பீலியும், கொண்டு;
  ‘மொழிப் பொருள் தெய்வம் வழித் துணை ஆக’ என
  பழிப்பு-அரும் சிறப்பின் வழிப் படர் புரிந்தோர்- (சிலப்பதிகாரம் 10 அடி 98 முதல்)
 3. கொல்லா நலத்தது நோனமை (திருக்குறள் 984)
 4. இந்தக் கூற்றால் திருவள்ளுவரைச் சமணர் என்பர்
 5. சைவ உணவு
 6. திருக்குறள் அதிகாரம் 26 புலால் மறுத்தல்
 7. இன்னா செய்யாமை (திருக்குறள் அதிகாரம் 32
 8. தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களைக் கூட அறியாமல் செய்கிறார்களே என்று அவர்களுக்காக வருந்திய உள்ளம் இயேசு பெருமான் உள்ளம்
 9. திருக்குறள் 244
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொல்லாமை&oldid=1810300" இருந்து மீள்விக்கப்பட்டது