மு. இராகவையங்கார்
மு. இராகவையங்கார் | |
---|---|
பிறப்பு | இராமநாதபுரம் | 26 சூலை 1878
இறப்பு | பெப்ரவரி 2, 1960 மானாமதுரை | (அகவை 81)
தேசியம் | இந்தியன் |
பணி | தமிழ்ப் பேராசிரியர் |
பணியகம் | மதுரைத் தமிழ்ச் சங்கம் |
பெற்றோர் | முத்துசுவாமி ஐயங்கார் |
முத்துசுவாமி இராகவையங்கார் (1878 சூலை 26 – 1960 பிப்ரவரி 2) என்னும் மு. இராகவையங்கார் தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்றவர். இவர் தமிழ் ஆய்வாளராகவும், பதிப்பாசிரியராகவும், இதழாசிரியராகவும், சொற்பொழிவாளராகவும், கவிஞராகவும் திகழ்ந்தார்.
பிறப்பு
[தொகு]இராமநாதபுரத்தில் சேதுபதி அவைப்புலவராக விளங்கிய முத்துசுவாமி ஐயங்காருக்கு மகனாக 1878 சூலை 26-ஆம் நாள் இராகவையங்கார் பிறந்தார்.[1] இவர் இளமையிலேயே தம் தந்தையை இழந்துவிட்டார். அதன் பின்னர் பாண்டித்துரைத் தேவர் இவரை வளர்த்துக் கல்வி புகட்டினார்.
அவைக்களப் புலவர்
[தொகு]மு. இராகவையங்கார் இளம் வயதிலேயே தமிழ் இலக்கண, இலக்கியங்களில் தேர்ச்சி பெற்றார். இதனால் 1896-ஆம் ஆண்டில் தம்முடைய பதினெட்டாம் வயதிலேயே பாண்டித்துரைத் தேவரின் அவைக்களப் புலவர் ஆனார்.[2]
தமிழாசிரியர்
[தொகு]பாண்டித்துரைத் தேவரால் 1901-ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டது. இதன் ஓர் உறுப்பான செந்தமிழ்க் கல்லூரியில் 1901-ஆம் ஆண்டில் மு. இராகவையங்கார் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்.[2] அப்பணியை 1912-ஆம் ஆண்டு வரை ஆற்றினார்.
1944-ஆம் ஆண்டில் சென்னை இலயோலாக் கல்லூரியில் கீழ்த்திசை மொழியியல் இளவர் (பி. ஓ. எல்.) பட்ட வகுப்புத் தொடங்கப்பட்ட பொழுது, மு. இராகவையங்கார் அத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார்.[2]
1945-ஆம் ஆண்டில் திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தில் இராம. அழகப்பச் செட்டியார் வழங்கிய நன்கொடையால் தமிழ் ஆராய்ச்சித் துறை தொடங்கப்பட்டது. மு. இராகவையங்கார் அத்துறையின் தலைவராக அவ்வாண்டிலேயே பொறுப்பேற்றார்.[2] 1951-ஆம் ஆண்டு வரை அப்பணியை ஆற்றினார்.
இதழாசிரியர்
[தொகு]மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் மற்றோர் உறுப்பான செந்தமிழ் இதழில் 1901-ஆம் ஆண்டு முதல் 1904-ஆம் ஆண்டு வரை உதவியாசிரியராக இருந்தார். பின்னர் 1904-ஆம் ஆண்டில் ஆசிரியப் பொறுப்பை ஏற்றார். 1912-ஆம் ஆண்டு வரை அப்பணியைச் செவ்வனே ஆற்றினார்.[2] இவருக்கு முன்னர் 1901 – 03-ஆம் ஆண்டுகளில் மு. இராகவையங்காரின் மாமா மகன் இரா. இராகவையங்கார் அவ்விதழுக்கு ஆசிரியராக இருந்தார். இவருக்குப் பின்னர் 1912-ஆம் ஆண்டு முதல் 1947-ஆம் ஆண்டு வரை அ. நாராயண ஐயங்கார் அவ்விதழுக்கு ஆசிரியராக இருந்தார்.
பின்னாளில் தமிழர் நேசன், கலைமகள், ஸ்ரீவாணி விலாசினி, கலைக்கதிர், அமுதசுரபி ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.[3]
தமிழ்ப் பேரகராதிக் குழுவின் தலைமை தமிழ்ப் பண்டிதர்
[தொகு]செந்தமிழ்க் கல்லூரி ஆசிரியப் பணியையும் செந்தமிழ் இதழின் ஆசிரியப் பணியையும் 1912ஆம் ஆண்டில் இறுதியில் துறந்த மு. இராகவையங்கார் 1913-ஆம் ஆண்டு முதல் 1939-ஆம் ஆண்டு வரை சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதிக் குழுவில் தலைமைத் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றினார். அப்பணியைப் பாராட்டி அப்பொழுதைய அரசாங்கம் இராவ் சாகிப் என்னும் விருதினை வழங்கியது.[2]
பதிப்பாசிரியர்
[தொகு]அண்ணாமலை பல்கலைக் கழகம் கம்பராமயாணத்தை உரையோடு பதிப்பிக்க விழைந்தது. எனவே 1951 ஆம் ஆண்டில் பதிப்பாசிரியர் குழுவை உருவாக்கியது. அக்குழுவில் மு. இராகவையங்கார் இடம்பெற்றார். கம்பராமாயணத்தின் சிலபகுதிகளைப் பாடபேத ஆராய்ச்சிக் குறிப்பும் விளக்கவுரையும் எழுதி பதிப்பித்தார்.[4] இந்நூல் தவிர பின்வரும் நூல்களையும் பதிப்பித்திருக்கிறார்.
வ.எண் | ஆண்டு | நூல் |
01 | 1910 | திருக்குறள் பரிமேலழகர் உரையுடன் |
02 | நரிவிருத்தம் அரும்பத உரையுடன் | |
03 | சிதம்பரப் பாட்டியல் உரையுடன் | |
04 | திருக்கலம்பகம் உரையுடன் | |
05 | விக்கிரம சோழனுலா | |
06 | சந்திரா லோகம் | |
07 | கேசவப் பெருமாள் இரட்டை மணிமாலை | |
08 | 1936 | பெருந்தொகை |
09 | 1936 | திருவைகுந்தன் பிள்ளைத்தமிழ் |
10 | 1949 | அரிச்சந்திர வெண்பா |
11 | 1951 | கம்பராமாயணம் – பால காண்டம் |
12 | 1953 | திரிசிராமலை அந்தாதி |
13 | 1958 | கம்பராமாயணம் - சுந்தர காண்டம் |
நூல்கள்
[தொகு]மு. இராகவையங்கார் தன்னுடைய கருத்துகளை நூல்களாக எழுதி வெளியிட்டார். அவை வருமாறு:
வ. எண் | ஆண்டு | நூலின் பெயர் | பொருள் |
01 | 1905 | வேளிர் வரலாறு | வரலாறு |
02 | 1912 | தொல்காப்பிய பொருளதிகார ஆராய்ச்சி | திறனாய்வு |
03 | 1915 | சேரன் செங்குட்டுவன் | வரலாறு |
04 | 1924 | தமிழரும் ஆந்திரரும் | ஆராய்ச்சி |
05 | 1926 | ஆழ்வார்கள் காலநிலை | வரலாறு |
06 | 1929 | சாசனத் தமிழ்க்கவி சரிதம் | வரலாறு |
07 | 1938 | ஆராய்ச்சித் தொகுதி | இலக்கிய ஆராய்ச்சி |
08 | 1939 | திருவிடவெந்தை எம்பெருமான் | திருமங்கை ஆழ்வார் பாடல்களின் விளக்கம் |
09 | 1947 | சேர வேந்தர் செய்யுட் கோவை (முதல் தொகுதி) | இலக்கிய ஆராய்ச்சி |
10 | 1948 | செந்தமிழ் வளர்த்த தேவர்கள் | வரலாறு |
11 | 1950 | Some Aspects of Kerala and Tamil Literature – 2 volumes | |
12 | 1950 | இலக்கியக் கட்டுரைகள் | இலக்கிய ஆராய்ச்சி |
13 | 1951 | சேர வேந்தர் செய்யுட் கோவை (இரண்டாம் தொகுதி) | இலக்கிய ஆராய்ச்சி |
14 | 1958 | வினைதிரிபு விளக்கம் | இலக்கணம் |
15 | 1959 | கட்டுரை மணிகள் | இலக்கிய ஆராய்ச்சி |
16 | 1969 | தெய்வப் புலவர் கம்பர் | வரலாறு |
17 | இலக்கிய சாசன வழக்காறுகள் | வரலாறு | |
18 | நூற்பொருட் குறிப்பகராதி | ||
19 | நிகண்டகராதி |
சொற்பொழிவாளர்
[தொகு]மு. இராகவையங்கார் சிறந்த சொற்பொழிவாளராகவும் திகழ்ந்தார். அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் சில நூல்களாகவும் வெளிவந்தன. அவர் ஆற்றிய புகழ்பெற்ற சொற்பொழிவுகள் சில:
வ. எண் | ஆண்டு | தலைப்பு | இடம் | தலைமை |
01 | 1929 | சாசனத் தமிழ்க்கவி சரிதம் | சென்னைப் பல்கலைக் கழகம் | உ. வே. சாமிநாதையர் |
02 | 1950 | காந்தளூர்ச் சாலை | திருவனந்தபுரம் பல்கலைக் கழகம் | சர். சி. வி. இராமன் |
03 | 1950 | சேரத் தமிழ் இலக்கியங்கள் | திருவனந்தபுரம் பல்கலைக் கழகம் | கோபால மேனன் |
04 | 1959 | தெய்வப் புலமை | சென்னை மாநிலக் கல்லூரி | தெ. பொ. மீனாட்சிசுந்தரம் |
05 | கம்பனின் தெய்வப் புலமை | காரைக்குடி கம்பன் கழகம் | சா. கணேசன் |
மறைவு
[தொகு]மு. இராகவையங்கார் தன்னுடைய 18-ஆம் அகவை முதல் 82-ஆம் அகவை வரை தமிழ்த் தொண்டாற்றி 1960 பிப்ரவரி 2 ஆம் நாள் மானாமதுரையில் தன் மகன் வீட்டில் மரணமடைந்தார்.
சான்றடைவு
[தொகு]- ↑ பாலசுப்பிரமணியன் சி., சான்றோர் தமிழ், நறுமலர் பதிப்பகம் சென்னை, நா.பதி.1993, பக்.70
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 பாலசுப்பிரமணியன் சி., சான்றோர் தமிழ், நறுமலர் பதிப்பகம் சென்னை, நா.பதி.1993, பக்.71
- ↑ பாலசுப்பிரமணியன் சி., சான்றோர் தமிழ், நறுமலர் பதிப்பகம் சென்னை, நா.பதி.1993, பக்.80
- ↑ பாலசுப்பிரமணியன் சி., சான்றோர் தமிழ், நறுமலர் பதிப்பகம் சென்னை, நா.பதி.1993, பக்.72