நாராயண ஐயங்கார்
அப்பனையங்கார் திரு நாராயண ஐயங்கார் இதழாசிரியர்; ஆய்வாளர்; நூலாசிரியர்.
திரு. நாராயண ஐயங்கார் | |
---|---|
பிறப்பு | 31 அக்டோபர் 1861 எதிர்க்கோட்டை ,இந்தியா |
இறப்பு | 29 சூலை 1947 | (அகவை 85)
பிறப்பு
[தொகு]தமிழ் இலக்கிய உலகில் திரு நாராயண ஐயங்கார் என்று அறியப்பட்ட அ. நாராயண ஐயங்கார் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டத்தில் உள்ள எதிர்க்கோட்டை என்னும் சிற்றூரில் 1861 அக்டோபர் 31 ஆம் நாளில் கோ. அப்பனையங்கார் – செங்கமலவல்லி என்னும் இணையருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவர் தமிழ், வடமொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர்.[1]
கல்வி
[தொகு]நாராயணனார் உள்ளூரில் தொடக்கக் கல்வியைப் பெற்றார். பின்னர் இராமநாதபுரம் சென்று அங்கு வாழ்ந்த பந்தல்குடி வேங்கடாசாரியாரிடம் வடமொழியையும் சித்தாத்திக்காடு சிறீநிவாசாசாரியாரிடம் திவ்யப் பிரபந்தம் உள்ளிட்ட வைணவ நூல்களையும் சாமாசாரியாரிடம் ஏரணமுறை (தருக்கம்)யையும் பழனிக்குமார தம்பிரானிடம் சைவநூல்களையும் கற்றார்[2]. மேலும் சதாவதானம் முத்துசாமி ஐயங்காரிடம் குருகுலவாசம் செய்து பல நூல்களைக் கற்றறிந்தார்.
பணி
[தொகு]கல்வி கற்றல் நிறைவடைந்ததும் தன்னோடு பயின்ற பாண்டித்துரைத் தேவர் அரசவையில் அவைக்களப் புலவராகப் பணியாற்றினார். 24.5.1901 ல் தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டபோதிருந்து தமிழ்ச்சங்கக் கலாசாலைத் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்று[3], தன் இறுதிக்காலம் வரை (ஏறத்தாழ நாற்பத்தாறு ஆண்டுகள்) அப்பதவியைத் திறம்பட நிர்வகித்தார்.
இதழாசிரியர்
[தொகு]நாராயண ஐயங்கார் மதுரைத் தமிழ்ச் சங்கத்தால் வெளியிடப்படும் செந்தமிழ் இதழின் ஆசிரியராக[4] 1911 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். இவருக்கு முன்னர் அவ்விதழுக்கு 1902 முதல் 1907 வரை இரா. இராகவையங்காரும் 1907 முதல் 1911 வரை மு. இராகவையங்காரும் ஆசிரியர்களாக இருந்தனர்.
படைப்புகள்
[தொகு]இவர் பின்வரும் நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்:[1]
- வான்மீகரும் தமிழும் - 1938 செந்தமிழ் இதழில் கட்டுரையாக வந்தது, பின்பு புத்தகமாக வெளியிடப் பட்டது.
- நியாயப் பிரவேச மணிமேகலை - அநுமான விளக்கம்
- பரதாழ்வான் வைபவம் - செந்தமிழ் இதழில் கட்டுரையாக வந்தது, பின்பு "படியில் குணத்து பரதநம்பி" என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப் பட்டது.
- அண்ட கோள விருத்தி - 1931 செந்தமிழ் இதழில் கட்டுரையாக வந்தது, பின்பு "வான்மீகரும் தமிழும்" புத்தகத்தின் பகுதியாக வெளியிடப் பட்டது.
- அமிர்த ரஞ்சனி - 1939 செந்தமிழ் இதழில் கட்டுரையாக வந்தது, பின்பு "வான்மீகரும் தமிழும்" புத்தகத்தின் பகுதியாக வெளியிடப் பட்டது.
- தமிழ் ஜாதகசந்திரிகா - ஜாதகசந்திரிகா என்ற வடமொழி நூலை தமிழ் வெண்பாக்களாக வடிக்கப்பட்ட நூல்
- பழமொழி நானூறு உரை - பழமொழி நானூறின் முதல் 200 பாக்களுக்கான விரிவான உரை
- பாண்டியம் - 1911ஆம் ஆண்டு முதன் முதலில் எழுதப்பட்ட, பல மொழிகளுக்குப் பொதுவான எழுத்து வடிவமும் சுருக்கெழுத்தும்[5]
இவை தவிர இலக்கணம். இலக்கியம். ஏரணம் (தருக்கம்), சோதிடம், வரலாறு, சமயம் தொடர்பாக ஐம்பதிற்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியிருக்கிறார்[2].
விருதுகள்
[தொகு]நாராயண ஐயங்கார் பெற்ற விருதுகளும் பாராட்டுக்களும் பல. சில இங்கே வருமாறு:
- 1896 விக்டோரியா மகாராணியாரின் ஜுபிலீ பண்டிகைக் கொண்டாட்டத்தில் உதவி கலெக்டர் ராஜாராமையாவால் பரிசளிக்கப்பட்டு பாராட்டப்பட்டார்.
- 1922 ஜனவரி 13 வேல்ஸ் இளவரசர் சென்னை வருகையை முன்னிட்டு, சென்னை அரசாங்கம் நாராயண ஐயங்காரின் தமிழ் புலமையை மெச்சி அவருக்கு தங்கத் தோடாவும், பதக்கமும், சால்வையும், இளவரசர் கரத்தாலே பரிசளிக்கச் செய்து கௌரவித்தது.
- 1934 மதுரை தமிழ் சங்கத்தின் முப்பத்து மூன்றவது வருட விழாவில், அவர் தமிழ் சங்கத்திற்கு ஆற்றிய தொண்டை மெச்சி சென்னை மாகாண கவர்னர் முஹமது உஸ்மான் ஸாஹிப் பகதூர் கரத்தால் பொன்முடிப்பும் சால்வையும் அளித்துச் சிறப்பித்தனர்.
- 1945 சேது வேந்தர் ஷண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதி அவர்கள் தமது முப்பத்து ஏழாம் ஆண்டு நிறைவு விழாவில் பொற்பதக்கமும் பட்டும் பரிசும் நல்கிப் பாராட்டினார்
மறைவு
[தொகு]நாராயண ஐயங்கார் 1947 சூலை 29 ஆம் நாள் மறைந்தார்.
சான்றடைவு
[தொகு]- ↑ 1.0 1.1 வைத்தியநாதன் கே, தினமணி செம்மொழிக்கோவை 2010, சென்னை, பக்.276
- ↑ 2.0 2.1 அ. கி, செல்வகணபதி (7 பெப்ரவரி 2010). "செந்தமிழ் ஆசிரியர் நாராயண ஐயங்கார்". தினமணி. http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/article1008664.ece.
- ↑ http://www.senthamilcollege.org/ssr2.pdf பரணிடப்பட்டது 2015-07-17 at the வந்தவழி இயந்திரம் பக்கம் எண் 26
- ↑ http://www.senthamilcollege.org/ssr2.pdf பரணிடப்பட்டது 2015-07-17 at the வந்தவழி இயந்திரம் பக்கம் எண் 18
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-23. பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.