தினமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தினமணி
Dinamani
Dinamani Logo.jpeg
வகை தினசரி நாளிதழ்
வடிவம் தாள்

உரிமையாளர்கள்
வெளியீட்டாளர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம்
தொடக்கம் 1933 ஆம் ஆண்டு
அரசியல் சார்பு இல்லை
மொழி தமிழ்
தலைமையகம் தமிழ்நாடு

இணையம்: www.dinamani.com

தினமணி இந்தியாவின் தமிழகத்தில் வெளியாகும் ஒரு முன்னணித் தமிழ் நாளிதழ் ஆகும். இது சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர், திருநெல்வேலி, தருமபுரி, புதுதில்லி, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து பிரசுரிக்கப்படுகிறது.

தினமணியை வெளியிடும் நிறுவனம் நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் நிறுவனக் குழுமம் ஆகும். (The New Indian Express Group of Companies). இந்த நிறுவனம் ஆங்கிலத்தில் நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையையும் கன்னடத்தில் கன்னடப் பிரபா நாளிதழையும் வெளியிடுகிறது. சினிமா எக்ஸ்பிரஸ் (தமிழ்), மலையாளம் வாரிகா (மலையாளம்) ஆகியன இந்நிறுவனத்தால் வெளியிடப்படும் இதழ்கள் ஆகும்.

தினமணி பிறந்த கதை[தொகு]

புதிதாக வெளியாக இருக்கும் தேசிய நாளிதழுக்கு, சுருக்கமாக, மனதில் நிற்கும் விதத்தில் நல்லதொரு பெயரைத் தேர்ந்தெடுக்க வாசகர்களுக்கு ஒரு போட்டி வைத்தார் சதானந்த். நல்ல பெயருக்கு பத்து ரூபாய் பரிசு என்று அறிவித்தார். "தினமணி" என்கிற பெயரை மயிலாப்பூரைச் சேர்ந்த டி.எஸ். அட்சயலிங்கமும், தியாகராய நகரைச் சேர்ந்த எஸ்.சுவாமிநாதனும் எழுதி அனுப்பி இருந்தனர். பரிசு இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

"தினமணி" என்றால் அது கதிரவனைக் குறிக்கும். அந்தப் பெயர் புதுமையாகவும், கவர்ச்சிகரமானதாகவும், ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள் தருவதாகவும் இருந்தது. நேரடியாகப் பொருள் கொண்டால், அன்றாடம் ஆட்சியாளர்களைத் தட்டி எழுப்பும் மணி என்று சொல்லலாம்.

சென்னை ஜார்ஜ் டவுனிலுள்ள மூக்கர் நல்லமுத்துச் செட்டி தெருவில் அலுவலகத்துடன் தொடங்கப்பட்ட தேசிய தினசரியான "தினமணி", பாரதியாரின் நினைவு நாளன்று வெளிவந்தது. "தினமணி" நாளிதழின் விளம்பரத்தில் "பாரதியார் நீடூழி வாழ்க! தினமணி நீடூழி வாழ்க!" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தேசிய நாளிதழ் எந்தக் கட்சியையும் சார்ந்ததல்ல என்றும், சுயநல நோக்கமில்லாமல் மக்களுக்குச் சொந்தமான ஒரே பத்திரிகை என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது.

முதல் இதழ்[தொகு]

செப்டம்பர் 11, 1934-ஆம் ஆண்டு அரையணா விலையில் எட்டு பக்கங்களுடன் தனது முதல் பக்கத்திலேயே "ஏழை துயர் தீர்க்க, எல்லோரும் களித்திருக்க, எவருக்கும் அஞ்சாத தினமணி" என்கிற வாசகத்தைப் பொறித்த வண்ணம் "தினமணி" நாளிதழின் முதல் இதழ் வெளிவந்தது.

முதல் தலையங்கம்[தொகு]

""இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு தமிழரும், தன்னைத் "தமிழர்" என்று பெருமையுடன் கூறிக்கொள்ள வேண்டும். நாட்டுக்கு வெளியே செல்லும்போது தன்னை "இந்தியன்" என்று பெருமை பொங்க அழைத்துக் கொள்ள வேண்டும். தமிழர்கள் என்றால் தமிழ்நாட்டில் பிறந்த, தமிழ்நாட்டைத் தங்கள் வசிப்பிடமாகக் கொண்டு வாழும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் மற்றும் தமிழ் பேசும் அனைவரும்தான்"" என்று சந்தேகத்துக்கிடமின்றி முதல் நாள் தலையங்கம் விளக்கி இருந்தது.

இதுதான் 1934-ல் "தினமணி" நாளிதழ் பிறந்த கதை.

(தினமணியின் 75வது ஆண்டில் (பவள விழா ஆண்டில்) தற்போது எழுதப்பட்ட தலையங்கம். இதில் தினமணி பிறந்த கதை முழுமையாகத் தரப்பட்டுள்ளது.)

பவள விழா தலையங்கம்[தொகு]

பவள விழா காணும் முதல் தமிழ் தினசரி என்கிற பெருமைக்கு உரித்தாகிறது உங்கள் "தினமணி'. மகாகவி சுப்பிரமணிய பாரதியின் நினைவு நாளன்று உதயமான நாளிதழ் என்கிற பெருமைக்குரிய "தினமணி', ஒவ்வொரு தமிழனின் உணர்வையும், உள்ளக் குமுறலையும், ஒவ்வோர் இந்தியனின் எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் பிரதிபலிப்பதுடன் நின்றுவிடாமல், மனித நேயம், மக்களாட்சித் தத்துவம், உலக சகோதரத்துவம் போன்ற லட்சியங்களுக்காகவும் தன்னைத் தொடர்ந்து அர்ப்பணிக்கும் என்று நமக்கு நாமே உறுதி ஏற்றுக்கொள்ள வேண்டிய தருணமிது.

’தினமணி' பவள விழா கொண்டாடுகிறது என்பதல்ல பெருமை. நாள் தவறாமல் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை, சமுதாயத்தில் காணும் நிலைபிறழ்ந்த செய்கைகளை, நல்ல பல மாற்றங்களைத் தொடர்ந்து 75 ஆண்டுகளாகப் பதிவு செய்து வருகிறது என்பதுதான் "தினமணி'யின் தலையாய சமுதாயப் பங்களிப்பு. நிலத்தில் யார்க்கும் அஞ்சாமல் துணிந்து தனது கருத்துகளை எடுத்துரைத்து, தவறுகளை இடித்துரைத்து, சிறப்புகளைப் புகழ்ந்துரைத்து "தினமணி' ஆற்றிவரும் சமுதாயத் தொண்டு, தொடரும்... தொடர்ந்தேயாக வேண்டும்...

தினமணியின் முதலாவது ஆசிரியரான டி .எஸ். சொக்கலிங்கமும், நீண்டநாள் ஆசிரியரான ஏ.என். சிவராமனும் போட்டுத் தந்திருக்கும் அடித்தளத்தில் உங்கள் "தினமணி' இன்றும் தொடர்கிறது என்பதும், தொடரும் என்பதும் நூற்றாண்டை நோக்கி நடை போடும் வேளையில் நாம் வாசகர்களுக்கு வழங்கும் உறுதிமொழி.

ஒவ்வொரு நாளும் "இன்று புதிதாய்ப் பிறந்தோம்' என்கிற மனோநிலையுடன், ஓர் ஆவணப் பதிவை தமிழ்கூறு நல்லுலகத்தின் முன் வைக்கிறோம் என்கிற கவனத்துடன் "தினமணி' உருவாக்கப்படுவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. 1934-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் நாள், "அறிமுகம்' என்கிற முதல் தலையங்கத்தில் அன்றைய ஆசிரியர் டி .எஸ். சொக்கலிங்கம் எதையெல்லாம் "தினமணி' நாளிதழின் லட்சியமாகக் குறிப்பிட்டிருந்தாரோ, அந்த லட்சிய வேட்கை தொடர்கிறது, அவ்வளவே.

பவள விழா கொண்டாடும் இந்த நாளில், பாரதியாரின் முதலாம் நினைவுநாளன்று வெளியான முதலாவது "தினமணி' நாளிதழின் தலையங்கத்தில் இருந்து சில பகுதிகள் இங்கு தரப்படுகின்றன. "தமிழில் பல தினசரிப் பத்திரிகைகள் இருக்கின்றன. மற்றுமோர் பத்திரிகை தோன்றுவது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அறிகுறியென்று சிலர் நினைப்பர். பெரும்பாலோர் ""தினமணியின் போக்கைப் பார்த்து முடிவு செய்யலாம் என்று நடுநிலைமை வகித்திருப்பர்.

போர்க்காலத்தில், யுத்த வீரர்களுக்குப் பக்கபலமான சேவகர்கள் பலர் வேண்டும். தொத்து நோய் பரவும்பொழுது, நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்யும் ஊழியர்கள் வேண்டும். பஞ்ச காலத்தில் ஏழைகளுக்குக் கஞ்சி வார்க்கும் தொண்டர்கள் வேண்டும். ஓர் அபூர்வ சுதந்திரப் போர் நடந்து வருகின்றது. அதன் நடுவில் ஏற்படும் அற்ப வெற்றிகளால் மயங்காமலும் சிறிய தோல்விகளால் தளராமலும் பாரத தேசம் விடுதலை அடையும் வரையில் தமிழ் மக்களைப் போற்றியும் தேற்றியும் ""தினமணி துணைபுரியும்.

எல்லா வியாதிகளிலும் மனோவியாதியே மிகக் கொடியது. நமது மக்களின் மனத்தில் அடிமைத்தனம் குடிகொண்டிருக்கின்றது. நமது பெரியாரிடத்தும் சிறியாரிடத்தும் அடிமைப் புத்தி அகன்றபாடில்லை. அதை அடியோடு அழித்து தமிழ் மக்களை மானிகளாகச் செய்வதற்குத் "தினமணி' ஓயாது பாடுபடும்.

இந்திய ஜனங்களில் பெரும்பாலோர் அழியாப் பஞ்சத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். இதற்குப் பல காரணங்களுண்டு. அவற்றுள் முதன்மையானது முதலாளிகளும், ஜமீன்தார்களும் நமது தொழிலாளர்களின் உழைப்பினால் உண்டாகும் செல்வத்தை எல்லாம் பிடுங்கிக்கொண்டு தங்கள் ஆடம்பரங்களுக்காக அழிப்பதுதான். இம்முறை மாறி நாட்டின் செல்வத்தின் பெரும்பகுதி தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய புதியதோர் சமூகம் உருவாக்கப்பட வேண்டும்.

தேச சேவையும், மனித சேவையும் தமிழ்நாட்டிற்கு இன்றியமையாதனவென்று கருதியே ""தினமணி இன்று உதயமாகின்றது. மேற்கூறிய கொள்கைகளைச் சிறிதும் நழுவவிடாமல் பாதுகாப்பதற்கு தேசசேவையில் தேர்ந்த ஒரு இளைஞர் கூட்டம் அதிக ஊதியத்தை எதிர்பாராமல் இவ்வேலையை ஏற்றுக்கொண்டிருக்கின்றது. தமிழ் மொழியின் மறுமலர்ச்சியின் அடையாளம் பாரதியார்தான். பாரத நாட்டின் இதர மாகாணங்களிலெல்லாம் தேசீய எண்ணம் பொங்கியெழுந்து கொண்டிருந்த சமயத்தில் தமிழகம் மட்டும் உணர்ச்சி குன்றியிருந்ததைக் காணச் சகியாது தமிழர்களைத் தட்டியெழுப்பிய முன்னணி வீரர்கள் சிலரே. அவர்களுள் பாரதியாரே முக்கியமானவர்.

நவ யுகத்தின் தூதராகத் தோன்றிய கவிஞரை அவரது காலத்தில் தமிழகம் முற்றிலும் உணர்ந்து கொள்ளவில்லை. ""செல்வம் எத்தனையுண்டு புவி மீதே அவை யாவும் படைத்த தமிழ்நாடு என்று கம்பீரமாகப் பாடிய அந்தக் கவிஞனை வறுமையில் வாடுமாறு விட்டுவிட்டது. இனியாவது கவிஞனின் திருநாமம் என்றென்றும் பசுமையாக தமிழர் சந்ததியிடை வாழ்வதாக! சுதந்திர சூரியனைக் காண விரும்பிய தெய்வீகப் பித்தரான சுப்பிரமணிய பாரதியாரின் வருஷாந்திர தினத்தன்று அவருடைய சுதந்திர தாகத்தையும், சமத்துவக் கொள்கைகளையும் தமிழ்நாட்டில் பரப்பும் நோக்கத்துடன் பிறந்திருக்கும் ""தினமணியை தமிழ் மக்கள் மனமுவந்து வரவேற்பார்கள் என்பது எமது பூர்ண நம்பிக்கை.


தினமணி ஆசிரியர்கள்[தொகு]

டி.எஸ்.சொக்கலிங்கம்

ஏ.என்.சிவராமன்

ஐராவதம் மகாதேவன்

கஸ்தூரிரங்கன்

மாலன்

இராம.திரு.சம்பந்தம்

கே.வைத்தியநாதன் (தற்போதைய ஆசிரியர்)

கே.வைத்தியநாதன்

நடுநிலை நாளேடு[தொகு]

சுதந்திரப் போராட்ட காலத்தின் உச்ச கட்டத்தில், விடுதலைப் போராளிகளின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும், மக்கள் சக்தியை ஏகாதிபத்திய ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக திரட்டும் ஆயுதமாக விளங்கிய "தினமணி", டி.எஸ். சொக்கலிங்கத்தின் தலையங்கம் மூலம் ஒரு மாபெரும் தேசத் தொண்டாற்றியது. சுதந்திர இந்தியாவில் "தினமணி"யின் பங்கு அதைவிட அதிகரித்தது.

கடந்த 61 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில், மாறுபட்ட அரசியல் சூழ்நிலைகளில், எத்தனை எத்தனையோ சோதனைகளில் தனது கொள்கைப் பிடிப்பில் தளராமல், லட்சியங்களை விட்டுக் கொடுக்காமல் "தினமணி" தொடர்கிறது. ஆட்சியாளர்கள் யாராக இருந்தாலும், ஆட்சியின் அவலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டி, தவறுகள் திருத்தப்படவும், குறைகள் களையப்படவும் "தினமணி" பங்காற்றுகிறது.நடுநிலை தவறாமல், நல்லதைப் பாராட்டித் தவறைத் தட்டிக் கேட்டு சமுதாயத்தில் காணும் தடம் பிறழ்ந்த செய்கைகளைப் படம்பிடித்துக் காட்டி சமுதாய மாற்றத்திற்கு வழி கோலும் பணியைச் செவ்வனே செய்து வருகிறது. தமிழ்க் கலாசாரத்தின் அடையாளமாக, தேசிய சிந்தனையின் அடித்தளமாக அன்றும், இன்றும், என்றும் தமிழ்கூறு நல்லுலகம் "தினமணி" நாளிதழைக் கருதுகிறது.

இணையவழிப் பயணம்[தொகு]

"நிமிர்ந்த நன்னடையுடன், நேர்கொண்ட பார்வையுடன், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்" என்கிற குறிக்கோளுடன் "தினமணி"யின் பயணம் தற்போது இணையதளத்தின் மூலமாகவும் தொடர்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

தினமணி[தொகு]

நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் வலைத்தளங்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=தினமணி&oldid=1521382" இருந்து மீள்விக்கப்பட்டது