உள்ளடக்கத்துக்குச் செல்

ராம. அழகப்பச் செட்டியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராம.அழகப்பச் செட்டியார்
வள்ளல் டாக்டர் திரு க.வி.அழ.ராம.அழகப்பச் செட்டியார் அவரது உருவ அஞ்சல் தலை
பிறப்பு(1909-04-06)ஏப்ரல் 6, 1909
கோட்டையூர், சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு
இறப்புஏப்ரல் 5, 1957(1957-04-05) (அகவை 47)
தேசியம்இந்தியன்
கல்விமுதுகலை (ஆங்கில இலக்கியம்), சட்டம்
பணிதொழிலதிபர்
அறியப்படுவதுவள்ளல், கல்விப்பணி
வலைத்தளம்
http://www.alagappa.org

ராம.அழகப்பச் செட்டியார் (6 ஏப்ரல் 1909 - 5 ஏப்ரல் 1957) ஓர் பன்முக ஆளுமைத்திறன் கொண்ட இந்தியத் தொழிலதிபரும் கொடை வள்ளலும் ஆவார். இந்தியதேசம் விடுதலை அடைந்த நேரத்தில் தமிழ்நாட்டின் உயர்கல்வி வளர்ச்சிக்காக பல கல்விச்சாலைகளையும் ஆய்வுக்கூடங்களையும் தமது செலவில் நிறுவித் தமிழகம் இந்தியாவில் கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்க வித்திட்டவர்.[1]

இளமையும் கல்வியும்

[தொகு]

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடிக்கு அருகில் அமைந்துள்ளள கோட்டையூரில் கே.வி.அழ.ராமநாதன் செட்டியார் மற்றும் உமையாள் ஆச்சி தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக ஏப்ரல் 6, 1909 ஆம் ஆண்டு பிறந்தார். காரைக்குடியில் இருந்த எஸ் எம் எஸ் வித்யாசாலையில் படித்து பின்னர் தமது 21ஆவது வயதில் சென்னை மாகாணக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அப்போது பின்னாளில் இந்தியக் குடியரசுத் தலைவரான ராதாகிருஷ்ணனுடன் தோழமை கொண்டிருந்தார். சட்டம் பயில இங்கிலாந்து சென்று சார்ட்டட் வங்கி,லண்டனில் பயிற்சி பெறும் முதல் இந்தியராக விளங்கினார். மிடில் டெம்பிள் வழக்கறிஞர் அவை(bar)யில் தேர்வானார். அவரது துடிப்பான இயல்பால் லண்டன் கிரயோடனில் உள்ள பயிற்சிக் களத்தில் விமான ஓட்டி உரிமம் பெற்றார்.

பணிவாழ்வு

[தொகு]

தமது தொழில் முயற்சியை துணி தயாரிப்பில் கொச்சி டெக்ஸ்டைல்ஸ் என்று 1937ஆம் ஆண்டு துவக்கினார். பின்னர் அழகப்பா டெக்ஸ்டைல்ஸ் ஆலையை கேரளாவில் திருச்சூர் அருகே புதுக்காடு என்ற இடத்தில் துவக்கினார். அங்குள்ள பணியாளர் குடியிருப்பு அழகப்பா நகர் என அழைக்கப்படலாயிற்று.

தமது வணிகத்தை விரைவாக விரிவாக்கி மலாயாவில் தேயிலைத் தோட்டங்கள், பர்மாவில் ஈய சுரங்கங்கள், கேரளத்தில் துணியாலைகள், கொல்கத்தாவில் காப்பீடு நிறுவனம், பம்பாயில் உணவுவிடுதிகள், சென்னையில் திரைப்பட கொட்டகைகள் என பல்வேறு துறைகளில் தடம் பதித்தார். பங்கு வணிக நிறுவனம் ஒன்றும் திறம்பட நடந்து வந்தது. தனி விமானசேவையும் நடத்தினார்.

இருப்பினும் கல்விப்பணியில் நாட்டம் கொண்டு தமது குவியத்தை மாற்றிக் கொண்டார்.

கல்வி புரவலர்

[தொகு]

இவரது கல்விப்பணி திருவாங்கூர் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கான துறையை ஏற்படுத்த 1943ஆம் ஆண்டு ஒரு இலக்கம் ரூபாய்கள் நன்கொடை வழங்கியதுடன் துவங்கியது.

1947ஆம் ஆண்டு நடந்த அன்னி பெசண்ட் நூற்றாண்டுவிழாக் கொண்டாட்டத்தின்போது சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் இந்தியாவில் கல்வியை வளர்க்க தொழிலதிபர்களுக்கு விடுத்த அழைப்பினை ஏற்று காரைக்குடியில் காந்திமாளிகையில் அழகப்பா கலைக்கல்லூரியை மூன்று நாட்களுக்குள் நிறுவினார்.[2]

அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவை காரைக்குடியில் அழகப்பா வளாகத்தில் 15 இலக்கம் ரூபாய் மதிப்புள்ள 300 ஏக்கர் நிலப்பரப்பினை நன்கொடை அளித்து நடுவண் அரசின் தேசிய ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை நிறுவ இணங்கச் செய்தார்.இவரது இந்த நன்கொடையைப் பாராட்டி நேரு இவரை சோசலிச முதலாளி என்று புகழ்ந்தார்.1953ஆம் ஆண்டுசனவரி 14 அன்று இந்நிலப்பரப்பில் மத்திய மின் வேதியியல் ஆய்வுக் கழகத்தை (CECRI) இந்தியக் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.[3]

தமது அரண்மனை போன்ற கோட்டையூர் இல்லத்தையே ஓர் பெண்கள் கல்லூரி நிறுவ வழங்கியது இவரது வள்ளல்தன்மைக்கு சிகரமாக அமைந்தது.

இவரது பிற நன்கொடைகள் மற்றும் நிறுவனங்கள்:

  • அவரது பிறந்த ஊரான கோட்டையூரில் ஓர் உயர்நிலைப் பள்ளி
  • சென்னை வேப்பேரியில் ஓர் பெண்கள் தங்கும் விடுதி
  • கோட்டையூர் நகரமைப்பிற்காக வளர்ச்சி நிதி
  • கந்தனூர் மீனாட்சி மன்றத்திற்காக நன்கொடை
  • சிதம்பரம்,அண்ணாமலை பல்கலைக்கழகம் வளாகத்தில் பொறியியல் கல்லூரி துவக்கம்
  • கிண்டியில் சென்னைப் பல்கலைக்கழகத்தில், பின்னர் அழகப்பா செட்டியார் தொழில்நுட்பகல்லூரி என பெயர்பெற்ற,தொழில்நுட்பக் கல்லூரி துவக்கம்
  • மலேசியாவில் உயர்கல்வி துவங்க நன்கொடை
  • 1948ஆம் ஆண்டு புது தில்லியில் தென்னிந்தியா கல்வி சொசைட்டி அமைக்க நன்கொடை
  • மதுரை லேடி டோக் கல்லூரிக்கு நன்கொடை
  • 1946ஆம் ஆண்டு தக்கர் பாபா வித்யாலயாவில் அழகப்பா மண்டபம் கட்ட நன்கொடை
  • தமிழ் களஞ்சியம் பதிப்பித்திட நன்கொடை
  • புவியியல் ஆய்விற்காக திருவாங்கூர் அரசிற்கு நன்கொடை
  • கொச்சியில் குழந்தைப்பேறு மற்றும் குழந்தை வளர்ப்பு மையம் ஒன்றை நிறுவ நன்கொடை
  • எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் நாட்டு மருத்துவ ஆய்வினுக்காக நன்கொடை

அவர் நிறுவிய கல்விக்கூடங்களின் அடிப்படையில் தமிழக அரசு 1985ஆம் ஆண்டு அழகப்பா பல்கலைக்கழகத்தை அமைத்தது.

விருதுகள்

[தொகு]

1943ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தாலும் 1944ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தாலும் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.

1945ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியம் அவருக்கு சர் விருது வழங்கி கௌரவித்தது.இந்திய விடுதலையை அடுத்து இவ்விருதினை அவர் புறக்கணித்தார்.இந்திய அரசு 1957ஆம் ஆண்டு பத்ம பூசண் விருது வழங்கியது.

அழகப்பரால் உருவாக்கப் பெற்ற கல்வி நிறுவனங்கள்[4]

[தொகு]
வ. எண் நிறுவனம் தோற்ற ஆண்டு
1 அழகப்பா கல்லூரி 1947
2 அழகப்பா ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி 1950
3 அழகப்பா பொறியியற் கல்லூரி 1952
4 அழகப்பா மகளிர் கல்லூரி 1954
5 அழகப்பா பல்தொழிற் கல்லூரி 1955
6 அழகப்பா உடற்கல்விக் கல்லூரி 1956
7 அழகப்பா நகர் பல்தொழிற் கல்லூரி 1956
8 அழகப்பா மாதிரிப் பள்ளி 1951
9 அழகப்பா மாண்டிசோரிப் பள்ளி 1953
10 அழகப்பா தொடக்கப் பள்ளி 1954
11 அழகப்பா ஆதாரப் பள்ளி 1955
12 அழகப்பா ஆயத்தப்பள்ளி 1955
13 அழகப்பா இசைப்பள்ளி 1956
14 இராமானுஜம் கணக்கு நிலையம் 1949
15 மு.சித.மு.சிதம்பரஞ்செட்டியார் நினைவு ஆயத்தப் பள்ளி (சென்னை) 1954
16 பவநகர் மாளிகை 1952
17 நேருக்கா (சவகர்சோலை) 1953
18 உமையாள் விடுதி 1950
19 விசாலாட்சி விடுதி 1950
20 மாங்கொம்பு ஆண்டி அய்யர் விடுதி 1953
21 வீரப்ப அம்மாள் விடுதி 1953
22 குப்புசாமி நாயுடு விடுதி 1955
23 சண்முகம் நூல் நிலையம் (கால்கோள்) 1954
24 உமையாள் மருத்துவசாலை 1954
25 முருகப்பா மண்டபம் 1955
26 விளையாட்டு நிலையம் 1955

மறைவு

[தொகு]

அழகப்பர் இளவயதில் தொழுநோய்க்கு உள்ளானார். இவர் கொடைக் குணத்தைக் கண்டறிந்த காந்தியடிகள் 'அழகப்பா நோய்நீங்கி வாழ்க' என்று ஒருநாள் மாலைத் தொழுகையில் இறைவனை வழுத்தினார். இக்குறிப்பை இந்திய நல்வழித்துறை அமைச்சி இராசகுமார் அமிர்தகௌர் 3-8-1954-ல் அழகப்பா கல்லூரி வட்டத்து உமையாள் மருத்துவ சாலைக் கால்கோள் விழாவில் வெளிப்படுத்தினார்.[1] அழகப்பா கோட்டையூரில் பிறந்தவர். இறந்தபின் அவ்வூர் இடுகாட்டில் தம்மை அடக்கஞ் செய்வதை அவர் விரும்பவில்லை. தம் எண்ணத்தை, அறிவை, பொருளை யெல்லாம் பணிகொண்ட கல்லூரி வட்டத்திலேயே தம்மைச் சமாதி செய்ய வேண்டும் என்று விரும்பினார். இறப்பதற்கு இனி நெடுநாள் இல்லை என்று உணர்ந்த அழகப்பா, கல்லூரி வட்டத்துத் தமக்கு உரிய இடம் இது என்று முன்னரே காட்டியிருந்தார்.[5] 6.4.1909 அன்று தோன்றிய வள்ளல் அழகப்பர், 46 ஆண்டுகள் நிறைவுற்ற வேளையில் 5.4.1957 சென்னையில் தன் பூவுலக வாழ்வை நீத்தார்.சென்னையில் அவரது திருவுடலுக்குப் பலரும் திரண்டு அஞ்சலி செய்தனர். அன்று மாலை அவரது திருவுடல் கோட்டையூருக்கு எடுத்து வரப்பெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் கல்லூரி மாணவர்களும் பேராசிரியர்களும் இழுத்து வர கல்லூரியை நோக்கி நிறைவுப் பயணம் தொடர்ந்தது. வழிநெடுகிலும் மக்கள் கூடி நின்று கண்ணீர் பெருக்கினர். அழகப்பா கல்லூரியின் பவநகர் அரங்கத்தில் மேடை அமைக்கப் பெற்று நிறைவுக் கிரியைகள் நடைபெற்றன.[6] வள்ளல்தம் நினைவிடம் மிகவும் புனிதமாக இன்றும் போற்றப்பட்டு வருகிறது.

வள்ளல் அழகப்பரைக் குறித்த சான்றோரின் புகழ்மொழிகள்

[தொகு]

மகாத்மா காந்தியடிகள்:

“அழகப்பாவைப் போன்ற 'தர்ம கர்த்தா’க்கள் நாடெங்கும் பெருக வேண்டும்.”

ஜவகர்லால் நேரு:

“அழகப்பர், ஒரு சமதர்ம முதலாளி (SOLIALISTIC CAPITALIST)

மூதறிஞர் இராஜாஜி:

“நமது சடலம் புகையாய்ப் பொடியாய்ப் போகும்; நமது சாதனைகளே எப்போதும் சாசனமாய் நிற்கும். அழகப்பர் புகழ் பூத்த சாதனையாளர்.... பணம் சேர்க்கிற ஒரு வழியே பலருக்குத் தெரியும் சேர்த்த பணத்தை எல்லோருக்கும் நிலைத்த பயன் தரும் வகையில் வகுத்துக் கொடுக்கின்ற மறு வழி ஒரு சிலர்க்கே தெரியும். ஆனால் அழகப்பரோ. இரு வழியும் தெரிந்தவராய் விளங்கினார்.”

பெரியார் ஈ.வெ.ரா:

“டாக்டர். அழகப்பச் செட்டியார் ஒருவர்தான் தனக்கென்று சொத்துச் சேர்த்தவர் ஆவார். பிறர் எவரும் தமக்காகச் சொத்துச் சேர்க்கவில்லை. பிள்ளைகளுக்கும் வாரிசுகளுக்குமே சொத்துக்களைச் சேர்த்து வைத்துவிட்டுப் போனார்கள். அழகப்பச் செட்டியார் தமது வள்ளன்மையால் கட்டியுள்ள பல்வேறு கல்வி நிலையங்கள் அவருடைய சொத்துக்களே. இவை என்றைக்கும் அவரை விட்டு அகலா இக்கல்லூரிகள் அவர் பெயரையும் புகழையும், எப்போதும் உலகிற்கு எடுத்துக் கூறும்.”

குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன்:

“தம் வாழ்நாளில் தமக்கென்றே அழகப்பர், பெரியதொரு நினைவாலயத்தை எழுப்பிக் கொண்டிருக்கிறார். சுற்றிலும் நான்கு புறமும் உள்ள கல்வி நிறுவனங்கள். அழகப்பரின் பெருமையைப் புலப்படுத்துகின்றன.”

விஞ்ஞானி டாக்டர் சர்.சி.வி. ராமன்:

“குணங்களால் சிறந்த பலரை நம் வாழ்வில் சந்தித்திருக்கிறோம்.. ஆனால், பிறர் எவரிடமும் எளிதில் காணமுடியாத அருள்குணம் ஒன்று அமையப் பெற்றவர் அழகப்பர். ‘நல்ல மனிதர்’ என நாடே வியக்க அமைந்துள்ள அந்தச் சிறப்பையே குறிப்பிடுகிறேன். நல்லதையே நாடிச் செய்யும் இந்த உயரிய இயல்பு அவருடைய முகத்திற்கே களையூட்டிப் பொலிகிறது. இந்த நன்மை என்னும் நன்னீரால் அவர் எத்தனையோ கல்வி வித்துக்களை முளைக்கச் செய்து வருகிறார். அவருடைய முயற்சிகள் வாழ்க!”

குடியரசுத் தலைவர் டாக்டர். இராஜேந்திர பிரசாத்:

“அழகப்பச் செட்டியார் என்னும் ஒரு தனிப் பெருமகனின் தாராளக் கொடைகளால், இந்த நகரத்தில் எழுந்துள்ள நிறுவனங்கள் எல்லாம். எதிர்கால நம்பிக்கைக்குரிய சின்னங்களாக இலங்குகின்றன. இந்தியாவின் வருங்காலப் புனரமைப்பில் இவை தமக்குரிய பணிகளைச் செவ்வனே செய்யும்.”

பெருந்தலைவர் காமராசர்:

“கல்வித் தொண்டில் அழகப்பர் தனக்கென்றே தனியான சிறப்பு வரலாறு படைத்துக் கொண்டிருப்பது போற்றுவதற்குரியது.”

அருள்நெறித் தந்தை குன்றக்குடி அடிகளார்:

“தமது தலைமுறையினை மட்டுமல்ல, வருங்காலத் தலைமுறையினரையும் ஏழேழு பிறப்புகளும் வாழ்வளித்த,

உய்தியளித்த வள்ளல் பெருமான் அழகப்பர். ஒரு கொடிக்குத் தேர் ஈந்தான் பாரி. ஆனால் அழகப்பரோ. ஆயிரம் ஆயிரம் உயிர்க் கொடிகளுக்கு அறிவுத் தேரை வழங்கினார். பாரி கொடுத்த தேரால். கொடிக்கு உய்தி இல்லை: ஆனால் அழகப்பர் கொடுத்த தேராலோ வாழ்க்கையும் கிடைத்தது. உய்தியும் கிடைத்தது. பாரி கொடுத்த தேர், கொடி இனத்துக்குப் பயன்படவில்லை. ஆனால் வள்ளல் அழகப்பரின் கொடை, மனித இனத்திற்கெல்லாம் பயன்படுகிறது. பாரியின் கொடையால், கொடிக்குப் புகழ் இல்லை: பாரிக்கு மட்டுமே புகழ். ஆனால் வள்ளல் அழகப்பரின் கொடையால் அவருக்கும் புகழ் உண்டு: அக்கலைக் கோயில்களில் பயின்றோரால் பார் முழுமைக்கும் புகழ் உண்டு.”

சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர்.ஏ.லெட்சுமணசாமி முதலியார்:

காரைக்குடியில் கல்லூரியை நிறுவத் தாராள மனத்துடன் முன்வந்து அழகப்பச் செட்டியார், பண்பாட்டையும் கல்விச் செல்வத்தையும் சூழ்நிலையின் வாயிற்படிக்கே கொண்டுவந்துவிட்டார். அழகப்பர் கல்லூரி வட்டம், நாளுக்கு நாள் வளர்ந்து உயர்ந்து வருகிறது. டாக்டர் அழகப்பச் செட்டியாரது தொண்டின் பெருமைகளைத் தென்னாடு நன்கு உணர வேண்டும்.”

மாநில ஆளுநர் ஸ்ரீ பிரகாசா:

“அழகப்பரைப் போல் வேறு எவர்க்கேனும் இவ்வளவு உடற்பிணிகள் வந்திருந்தால். அவர்கள் சமுதாயத்தை மறந்து, தமக்கே நலமும் சுகமும் தேடியிருந்திருப்பார்கள். ஆனால் அழகப்பர். தம் உடல் உபாதைகளைக் கூடப் பொருட்படுத்தாமல், ஏதோ ஒரு வெறி கொண்டவர் போல், உலகம் வியக்கப் பணி புரிகிறார். எட்டு ஆண்டுப் பணிகளால் அவர் உருவாக்கியுள்ள இந்த அற்புத உலகத்தைப் பல்கலைக்கழகம் என அழைக்கலாம்போல் தோன்றுகிறது. ”

பொறியியல் மேதை டாக்டர்.எம். விஸ்வேசுவரய்யா:

“அழகப்பரை. 'இந்தியாவின் ஒளியுடைப் பெருமகன்' எனப் போற்றலாம்.”[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. winentrance.com|Biography Of Dr RM Alagappa Chettiar|வலை காணல்: 23/04/2016
  2. engineering.careers360.com|Alagappa Chettiar College of Engineering and Technology, Karaikudi|வலைக் காணல்: 23/04/2016
  3. "accet.edu.in|OUR FOUNDER - DR. R. M. ALAGAPPA CHETTIAR|வலைக் காணல்: 23/04/2016". Archived from the original on 2016-03-24. பார்க்கப்பட்ட நாள் 2016-04-23.
  4. "கொடை விளக்கு - மின்னூல்".
  5. வ.சுப.மாணிக்கனார் (முதற்பதிப்பு 1957). கொடை விளக்கு ((நூற்றாண்டு நினைவு வெளியீடு)). கோ.இளவழகன்பதிப்பாளர்). p. 118. {{cite book}}: Check date values in: |year= (help)
  6. அய்க்கண் (இ.ப.2017). அழகப்பர். அழகப்பா பல்லைகக்கழக வெளியீடு. p. 102. {{cite book}}: Check date values in: |year= (help)
  7. அய்க்கண் (இ,ப. 2016,). அழகப்பர். காரைக்குடி: அழகப்பா பல்கலைக்கழக வெளியீடு. pp. 106-108. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: extra punctuation (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம._அழகப்பச்_செட்டியார்&oldid=3621223" இலிருந்து மீள்விக்கப்பட்டது