விலங்கு வன்கொடுமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1751இல் வில்லியம் ஹோகார்த் வீட்டு விலங்குகளை அடித்தும் முடுக்கியும் கொடுமைப்படுத்துவதை விளக்க வரைந்த வன்கொடுமையின் நான்கு நிலைகள் என்றத் தொடரிலிருந்து இரண்டாம் நிலை வன்கொடுமை – வண்டிக்காரர் கீழே விழுந்த குதிரையை அடித்தல் ஓவியம்.

விலங்கு வன்கொடுமை (Cruelty to animals), அல்லது விலங்கு புறக்கணிப்பு, என்பது விலங்குகளை, தற்காப்புக்காகவோ தப்பிப்பதற்காகவோ அல்லாது, இன்ன பிற காரணங்களுக்காக மனிதரால் கொடுமைப்படுத்துவதோ காயப்படுத்துவதோ ஆகும். மிகக் குறிப்பாக உணவுக்காகவோ தோலுக்காகவோ கொல்லப்படுவது குறித்தும் கொல்லும் முறைகள் குறித்தும் அறிஞர்களால் பலவாறு விவாதிக்கப்படுகின்றன. சில நேரங்களில் மக்கள் தங்களின் மனமகிழ்ச்சிக்காகவும் விலங்குகளைத் துன்புறுத்துவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. விலங்கு வன்கொடுமை குறித்த சட்டங்கள் தேவையற்ற கொடுமையை தவிர்க்கும் விதமாக இயற்றப்படுகின்றன. இவற்றைக் குறித்த விழிப்புணர்வு உலகின் பல்வேறு நாடுகளில் பலவிதமாக கடைபிடிக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, விலங்குகளை உணவு, உடை, மற்ற பொருட்களுக்காக கொல்வது சட்டங்களால் முறைப்படுத்தப்படுகின்றன; மேலும் சில நாடுகளில் மனமகிழ்ச்சி, கல்வி, ஆய்வு போன்றவற்றிற்காக விலங்குகளை பயன்படுத்தும் முறைகளை சட்டங்கள் வரையறுக்கின்றன. விலங்குகளை மக்கள் வளர்ப்பு விலங்குகளாக வைத்திருப்பதையும் சட்டங்கள் முறைப்படுத்துகின்றன.

விலங்கு வன்கொடுமை குறித்து மூன்று பரந்த கோட்பாடுகள் உள்ளன. விலங்கு நலவாழ்வு கோட்பாட்டின்படி விலங்குகளை உணவு, உடை, மனமகிழ்ச்சி, ஆய்வு போன்ற மனிதப் பயன்பாட்டிற்காக, பயன்படுத்தப்படுவதை ஏற்றுக் கொள்கின்றது; ஆனால் அவைகளுக்கு ஏற்படும் வலியையும் துன்பத்தையும் குறைப்பதாக, மனிதநேயத்துடன் பயன்படுத்தப்பட வேண்டும். பயனெறிமுறைக் கோட்பாட்டின்படி செலவு–பயன் பகுப்பாய்வு பார்வையைக் கொண்டு விலங்குகளுக்கான துன்புறுத்தலை வரையறுக்கின்றனர். இவர்களில் சிலர் விலங்கு நலவாழ்வை ஒட்டிய "மென்மையான" வழிமுறையையும் வேறு சிலர் விலங்கு உரிமைகளை ஒட்டிய வழிமுறையையும் பரிந்துரைக்கின்றனர். விலங்குரிமையாளர்கள் இவ்விரு கோட்பாடுகளையும் எதிர்க்கின்றனர்; "தேவையற்ற", "மனிதநேய" போன்ற சொற்கள் பலவாறு புரிந்து கொள்ளக்கூடியவை என்றும் விலங்குகளுக்கு அடிப்படை உரிமைகள் உள்ளன என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். விலங்குகளுக்கான உரிமையை நாட்டிட ஒரே வழி அவைகளை சொத்தாக நினைப்பதைத் தடை செய்வதாகும்; விலங்குகள் விளைபொருட்களாக கருதப்படுவதை தடை செய்யவேண்டும் என்பன இவர்களது நிலையாகும்.

மேலும் காண்க[தொகு]

மேற்கல்விக்கு[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விலங்கு_வன்கொடுமை&oldid=3798717" இலிருந்து மீள்விக்கப்பட்டது