உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ் இலக்கியம்
சங்க இலக்கிய நூல்கள்
அகத்தியம் தொல்காப்பியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
நற்றிணை குறுந்தொகை
ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து
பரிபாடல் கலித்தொகை
அகநானூறு புறநானூறு
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை மலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார் நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது இனியவை நாற்பது
களவழி நாற்பது கார் நாற்பது
ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது
திருக்குறள் திரிகடுகம்
ஆசாரக்கோவை பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம் முதுமொழிக்காஞ்சி
ஏலாதி கைந்நிலை
சங்கநூல் தரும் செய்திகள்
தமிழ்ச் சங்கம் சங்கம் மருவிய காலம்
சங்க காலப் புலவர்கள் சங்ககால நிலத்திணைகள்
சங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள்
சங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள்
சங்ககால விளையாட்டுகள் சங்ககால மலர்கள்

நற்றிணை (Natrinai) என்பது தமிழ் இலக்கியத்தில் எட்டுத்தொகை என்ற சங்க இலக்கிய வகைப்பாட்டினுள் காணப்படும் ஒரு நூலாகும். இந்நூல் தனிப்பாடல்களாகப் பலராலும் பாடப்பட்டுப் பின்னர்த் தொகுக்கப்பட்டது. எட்டுத்தொகை நூல்கள் இவையெனக் குறிப்பிடும் பழைய வெண்பாவில் முதலிடம் பெற்றுத்திகழ்வது நற்றிணை ஆகும். எட்டுத்தொகை நூல்களில் "நல்" என்ற அடைமொழி பெற்ற நூல் (நல்+திணை) இதுவேயாகும். இதனை நற்றிணை நானூறு என்றும் தூதின் வழிகாட்டி என்றும் (வாப் பறை விரும்பினைஆயினும், தூச் சிறை - பாடல் எண்.54)[1] கூறுவர். இந்நூலில் கடவுள் வாழ்த்தோடு 401 பாடல்கள் ஆசிரியப்பாவில் அமைந்துள்ளன. அவைகளில் பெரும்பான்மையானவை 9 அடி முதல் 12 அடிகள் கொண்ட பாடல்களாக அமைந்துள்ளன. இந்நூலைத் தொகுத்தவர் யாரென அறியப்படவில்லை என்றாலும் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி ஆவார். நற்றிணைப் பாடல்கள் அனைத்தும் அகப்பொருள் அமையப் பெற்ற பாடல்களாம். நற்றிணையில் 7 அடிகள் கொண்ட பாடலும் 13 அடிகள் கொண்ட பாடல்களும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

7 அடிகளில் அமைந்த பாடல்கள் - 1

8 அடிகளில் அமைந்த பாடல்கள் - 1

9 அடிகளில் அமைந்த பாடல்கள் - 106

10 அடிகளில் அமைந்த பாடல்கள் - 96

11 அடிகளில் அமைந்த பாடல்கள் - 110

12 அடிகளில் அமைந்த பாடல்கள் - 77

13 அடிகளில் அமைந்த பாடல்கள் - 8

234-ஆவது பாடல் கிடைக்கவில்லை.

பாடியோர்

[தொகு]

நற்றிணையில் உள்ள 401 பாடல்களை 175 புலவர்கள் பாடியுள்ளனர். குறுந்தொகைப் புலவர்கள் போலவே நற்றிணைப் புலவர்களும் பாடலில் இடம்பெற்றுள்ள தொடர்களால் பெயர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர்கள் -

  1. வண்ணப்புறக் கந்தத்தனார்
  2. மலையனார்
  3. தனிமகனார்,
  4. விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார்
  5. தும்பிசேர்க்கீரனார்
  6. தேய்புரிப் பழங்கயிற்றினார்
  7. மடல் பாடிய மாதங்கீரனார்

என்ற எழுவராவர். மேலும் 59 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் காணப்படவில்லை. இந்நூலில் உள்ள நானூறு பாடல்களில் 234 ஆம் பாடலும் 385 ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிடைக்கப்பெறவில்லை. இந்நூலினைத் திணை அடிப்படையில் ஆராயும்போது,

  • குறிஞ்சித் திணைப் பாடல்கள்-132
  • பாலைத் திணைப் பாடல்கள்-104
  • நெய்தல் திணைப் பாடல்கள்-102
  • மருதத் திணைப் பாடல்கள்-32
  • முல்லைத் திணைப் பாடல்கள்-30 அமைந்துள்ளன.

நற்றிணை காட்டும் வாழ்க்கை

[தொகு]

நற்றிணைப் பாடல்கள் வாயிலாக அக்கால மக்களிடம் பரவிக்கிடந்த பழக்க வழக்கங்களை அறியலாம். தலைவன் பிரிவால் வாடும் தலைவி, தன்தலைவனின் வரவைச் சுவரில் கோடிட்டுக் கணக்கிடும் பழக்கமும் காதலன் வரவைப் பல்லி கத்தும் ஓசையை வைத்துச் சகுனம் பார்க்கும் வழக்கமும் அக்காலமக்களிடம் இருந்த நம்பிக்கையைக் காட்டுகிறது. மேலும் மகளிர் காற்பந்து விளையாடும் வழக்கமும் இருந்ததை அறியமுடிகிறது. பிற்காலத்தில் சிறந்து விளங்கிய "தூது" என்ற சிற்றிலக்கியத்திற்கு வழிகாட்டியாகக் குருவி, கிளி, நாரை ஆகியவற்றைத் தூதுவிடும் பாங்கையும் நற்றிணையில் காணலாம். மேலும் மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, கொடைத்திறம், மன்னர்களைப் பின்பற்றி மக்கள் வாழ்ந்த அறவாழ்வு ஆகியவற்றை அறியவும் நற்றிணைப் பாடல்கள் துணை செய்கின்றன.

நற்றிணைக் கடவுள் வாழ்த்து

[தொகு]

திணை

[தொகு]

பாடாண்

துறை

[தொகு]

கடவுள் வாழ்த்து

துறைவிளக்கம் 

[தொகு]

இந்நூல் என்றும் நின்று நிலவ வேண்டிக் கடவுளை வாழ்த்துவான் எடுத்துக்கொண்ட ஆசிரியர், மாயோனே வேதமுதல்வனென ஆன்றோர் கூறுவராதலின், யாமும் அவனையே வணங்குவோமென்று வாழ்த்துக் கூறாநிற்பது. (இலக்கண விளக்கம்)

“பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே
நாடுங் காலை நாலிரண் டுடைத்தே” (தொல்.பாடாண். நூ.80)

எனப் பெறப்பட்ட கடவுள் வாழ்த்து வகை முதலிய எட்டு வகையினுள் இது கடவுள் வாழ்த்து என்னும் வகையினுள் அடங்கும்.

“வாழ்த்தியல் வகையே நாற்பாக்கும் உரித்தே” என்னும் விதிபற்றி ஆசிரியர் பாரதம் பாடிய பெருந்தேவனார் இந்நூற்கு ஆசிரியப்பாவாற் கடவுள் வாழ்த்துக் கூறுவாராயினர் என்க. இஃது உலகிற்குப் பயன்பட இறைவனைப் படர்க்கையில் வைத்து வாழ்த்தியபடியாம்.

பாடல்

[தொகு]
மாநிலஞ் சேவடி யாக தூநீர்
வளைநரல் பெளவம் உடுக்கை யாக
விசும்புமெய் யாக திசைகை யாக
பசுங்கதிர் மதியோடு சுடர்கண் ணாக
இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய
வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிரி யோனே.

புலவர் : பாரதம் பாடிய பெருந்தேவனார்.

எடுத்துக்காட்டுப் பாடல் 1

[தொகு]

திணை

[தொகு]

குறிஞ்சி

கூற்று

[தொகு]

பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி சொல்லியது. குறை நயப்பு ஆகும்.

என்கைக் கொண்டு தன்கண் ஒற்றியும்
தன் கைக் கொண்டு என் நல் நுதல் நீவியும்
அன்னை போல இனிய கூறியும்
கள்வர் போலக் கொடியன் மாதோ
மணி என இழிதரும் அருவி பொன் என
வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து
ஆடு கழை நிவந்த பைங் கண் மூங்கில்
ஓடு மழை கிழிக்கும் சென்னி
கோடு உயர் பிறங்கல் மலைகிழவோனே
நற்றிணை - பா.28 (பாலை) - முதுகூற்றனார்

பாடல் 2

[தொகு]

திணை

[தொகு]

நெய்தல்

கூற்று

[தொகு]

பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது. குறிபெயர்த்தீடும் ஆகும்.

விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த கான்முளை ஆகைய
நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே
அம்ம!!நாணுதும் நும்மொடு நகையே!
— நற்றிணை - பா.172.(நெய்தல்)

பதிப்பு வரலாறு

[தொகு]

எட்டுத்தொகை நூல்களில் பழைய உரை இல்லாத ஒரே நூலான நற்றிணை என்னும் இந்நூல் முற்காலத்தில் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் என்னும் தமிழறிஞர் இந்நூலின் பல சுவடிகளைத் தேடிக் கண்டறிந்து ஒப்பிட்டு ஆய்வுசெய்து முதன்முதலில் புத்துரையுடன் 1915-ம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார். இப்பதிப்பிற்குப் பின்னர் வேறு பல தமிழ்ச் சான்றோரும் உரையுடன் பதிப்பித்து வெளியிட்டுள்ளனர்."[2]

குறிப்புகள்

[தொகு]
  1. https://www.tamilsurangam.in/literatures/ettuthogai/narrinai/narrinai_54.html
  2. சங்க இலக்கியப் பதிப்புரைகள்.பாரதி புத்தகாலயம், பக்கம் 37

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நற்றிணை&oldid=4143615" இலிருந்து மீள்விக்கப்பட்டது