பதினெண்மேற்கணக்கு
தமிழகத்தில் சங்ககாலத்தில் பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையில் நிலவிய கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்ட பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனி வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை. இவை தொகை நூல்கள் என வழங்கப்படுகின்றன. பல நூல்களின் தொகுப்பே தொகை நூல்கள்.
பிற்காலத்திலே தொகைநூல்களை மேல்வரிசை நூல்கள் என்றும் கீழ்வரிசை நூல்கள் என்றும் பிரித்தனர். குறைந்த அடிகளுடைய நூல்களுக்கு கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் நிறைந்த அடிகளைக் கொண்டவை மேற்கணக்கு நூல்கள் எனவும் வகைப்படுத்தப்பட்டன. மேற்கணக்குப் பகுப்பில் 18 நூல்களும் கீழ்க்கணக்குப் பகுப்பில் 18 நூல்களும் சேர்க்கபட்டுள்ளன. பாட்டின் நீளத்தைக் கொண்டே இவ்வாறு வகைப்படுத்தினர்; பொருட்சுவையை எண்ணி அல்ல என்பதை இங்குக் கருத்தில் நிறுத்த வேண்டும்.
இப்பாடல் தொகுதிகள் பண்டைய தமிழக பண்பாட்டையும் வாழ்க்கைத் தரத்தையும் பெருமையையும் காண துணை புரிகின்றன. தமிழருக்கு அகம் எனும் காதல் ஒழுக்கமும் புறம் எனும் வீர வெளிப்பாடுகளுமே இலக்கிய நோக்காக அமைந்தமை இப்பாடல் தொகுதிகளால் தெரியவரும்.
எட்டுத்தொகை நூல்கள்
எட்டுத்தொகை நூல் | இயற்றியவர் | பாடப்பட்டத் தலைவன் |
நற்றிணை | 192 பெயர்கள் கிடைக்கப்பெற்றன | பலர் |
குறுந்தொகை | 205 புலவர்கள் | பலர் |
ஐங்குறுநூறு | கபிலர் | பலர் |
பதிற்றுப்பத்து | பலர் | சேரர் |
பரிபாடல் | 13 புலவர்கள் | |
கலித்தொகை | நல்லாண்டுவனார் | |
அகநானூறு | பலர் | பலர் |
புறநானூறு | பலர் | பலர் |
பத்துப்பாட்டு நூல்கள்
பத்துப்பாட்டு நூல்கள் | பாடிய புலவர் | பாட்டுடைத் தலைவன் |
திருமுருகாற்றுப்படை | நக்கீரர் | முருகன் |
பொருநராற்றுப்படை | முடத்தாமக்கண்ணியார் | கரிகால் வளவன் |
சிறுபாணாற்றுப்படை | நற்றாத்தனார் | நல்லியக்கோடன் |
பெரும்பாணாற்றுப்படை | கடியலூர் உருத்திரங்கண்ணனார் | தொண்டைமான் இளந்திரையன் |
நெடுநல்வாடை | நக்கீரர் | நெடுஞ்செழியன் |
குறிஞ்சிப் பாட்டு | கபிலர் | பிரகத்தனுக்கு தமிழர் கற்புநெறி பற்றி தெளிவிக்கப் பாடியது |
முல்லைப்பாட்டு | நப்பூதனார் | நெடுஞ்செழியன் என்று கருதப்படுகிறது |
மதுரைக் காஞ்சி | மாங்குடி மருதனார் | நெடுஞ்செழியன் |
பட்டினப் பாலை | கடியலுர் உருத்திரங் கண்ணனார் | கரிகால் வளவன் |
மலைபடுகடாம் | பெருங்குன்றப் பெருங்கௌசிகனார் | நவிரமலை நன்னன் |
இவற்றையும் பார்க்க
உசாத்துணை
- Zvelebil, K. V. Abschnitt. Tamil literature (1975) Brill Academic Publishers பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-04190-7
வெளியிணைப்புகள்
- மதுரைத் திட்டம் பரணிடப்பட்டது 2004-07-11 at the வந்தவழி இயந்திரம்