உள்ளடக்கத்துக்குச் செல்

சோமசுந்தர பாரதியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ச. சோமசுந்தர பாரதியார்
மிடுக்குத் தமிழர்
பிறப்புசத்தியானந்த சோமசுந்தரன்
(1879-07-27)சூலை 27, 1879
எட்டயபுரம் தூத்துக்குடி மாவட்டம்
இறப்புதிசம்பர் 14, 1959(1959-12-14) (அகவை 80)
மதுரை
இருப்பிடம்பசுமலை
தேசியம்இந்தியர்
கல்விகலை முதுவர், சட்ட இளவர்.
பணிவழக்குரைஞர், தமிழ்ப் பேராசிரியர்.
பணியகம்அண்ணாமலை பல்கலைக் கழகம், சிதம்பரம்.
அறியப்படுவதுதமிழாய்வு
பட்டம்நாவலர், கணக்காயர்.
பெற்றோர்எட்டப்ப பிள்ளை, முத்தம்மாள்.
வாழ்க்கைத்
துணை
(1) மீனாட்சி
(2) வசுமதி
பிள்ளைகள்(1) டாக்டர் இராசாராம் பாரதி
(2) இலக்குமிரதன் பாரதி
(3) இலக்குமி பாரதி
(4) மீனாட்சி
(5) மருத்துவர் லலிதா காமேஸ்வரன்

ச. சோமசுந்தர பாரதியார் (Somasundara Bharathiar, 27 சூலை 1879 – 14 திசம்பர் 1959 ; எட்டயபுரம், தமிழ்நாடு) என்னும் நாவலர் சோமசுந்தர பாரதியார் சிறந்த தமிழறிஞர் ஆவார். இவர் பல பாடல்களையும் நூல்களையும் எழுதியதோடு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்று செயலாற்றியவர். மதுரை மாவட்டத்தின் தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் தலைவராகவும் செயற்பட்டவர்.

பிறப்பு

[தொகு]

சத்தியானந்த சோமசுந்தரன்[1] என்ற இயற்பெயரைக் கொண்ட சோமசுந்தர பாரதியார் சுப்பிரமணிய நாயகர் (எட்டப்ப பிள்ளை) – முத்தம்மாள் இணையருக்கு மகனாக 1879 சூலை 27-ஆம் நாள் எட்டயபுரத்தில் பிறந்தார்.[2] சோமசுந்தர பாரதியார் எட்டயபுரம் அரண்மனையில் அரசியாரின் அரவணைப்பில் வளர்ந்தார்.

பாரதி பட்டம்

[தொகு]

அரண்மனையில் பணியாற்றிவந்த சின்னசாமி ஐயரின் புதல்வர் சுப்பிரமணிய பாரதிக்கு நண்பர் ஆனார். இருவரும் தமிழ் நூல்களைக் கற்பதிலும், பாடல்களை உருவாக்குவதிலும் பெரு விருப்புக் கொண்டிருந்தனர். நெல்லைக்கு யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு புலவர் வருகை தந்திருந்தார். அரண்மனை அவையில் நடந்த புலவர் கூட்டத்தில் ஈற்றடி ஒன்றைக் கொடுத்துப் பாடல் ஒன்றை இயற்றித் தருமாறு வேண்டினார். கூட்டத்துக்குச் சென்றிருந்த சோமசுந்தரமும் சுப்பிரமணியனும் தாம் எழுதிய பாடல்களைக் கொடுத்தனர். அனைத்துப் பாடல்களிலும் இவர்கள் எழுதிய பாடல்களே சிறந்ததெனத் தெரிந்தெடுத்த அப்புலவர் இருவருக்கும் பாரதி என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்தார்.[3]

கல்வி

[தொகு]

சோமசுந்தர பாரதியார் தனது தொடக்கக் கல்வியை எட்டயபுரத்திலும் [4] இடைநிலைக் கல்வியை நெல்லையில் சி.எம்.எஸ். கல்லூரி பள்ளியில் கல்வி கற்றார். [சான்று தேவை]

நெல்லையில் படிப்பை முடித்த சோமசுந்தர பாரதி சென்னை கிருத்துவக் கல்லூரியில் பயின்று கலை இளவர் (Bachelor of Arts ) பட்டமும் சென்னை சட்டக் கல்லூரியில் படித்து 1905-ஆம் ஆண்டில் சட்ட இளவர் பட்டமும் (Bachelor of Law) பெற்றார். தூத்துக்குடியில் வழக்கறிஞராகத் தொழிலாற்றியபொழுது தானே பயின்று 1913-ஆம் ஆண்டில் கலை முதுவர் (Master of Arts) பட்டம் பெற்றார்.[1]

குடும்பம்

[தொகு]

சோமசுந்தர பாரதியார் 1894 (ஏறத்தாழ) ஆம் ஆண்டில் மீனாட்சி அம்மையாரை மணந்தார். இவர் வழியாகச் சோமசுந்தர பாரதியாருக்கு இராசராம் பாரதி (1898 மார்ச் 30 -?), இலக்குமிரதன் பாரதி [5] (1903 பிப்ரவரி 16 -?) என்னும் மகன்களும் இலக்குமி பாரதி (1905 அக்டோபர் 13 - ?) என்னும் மகளும் பிறந்தனர்.[1]

திருவெட்டாற்றில் 1927 திசம்பர் 1-ஆம் நாள் வசுமதி அம்மையாரை சோமசுந்தர பாரதியார் தனது 48-ஆம் வயதில் மணந்தார். இவ்வம்மையாரின் வழியாக மீனாட்சி (1929 பிப்ரவரி 28 - [1] லலிதா [6] (1930 சூலை 27 - )[7] ஆகிய இரு மகள்களும் பிறந்தனர்.

தொழில்

[தொகு]

சோமசுந்தர பாரதியார் சிறிது காலம் எழுத்தராகவும், தட்டச்சாளராகவும் பணியாற்றினார்.[சான்று தேவை]

1905-ஆம் ஆண்டு முதல் 1920-ஆம் ஆண்டு வரை தூத்துக்குடியில் வழக்குரைஞராகத் தொழிலாற்றினார்.[1]

1920-ஆம் ஆண்டு முதல் 1933-ஆம் ஆண்டு வரை மதுரையில் வழக்கறிஞராகத் தொழிலாற்றினார்.[1]

1933-ஆம் ஆண்டு சூன் மாதம் முதல் 1938-ஏப்ரல் மாதம் வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.[7]

இந்திய விடுதலைப் போராட்டம்

[தொகு]

சோமசுந்தர பாரதியார் 1905-ஆம் ஆண்டில் தூத்துக்குடியில் வழக்கறிஞராகத் தொழிலாற்றத் தொடங்கியபொழுது, அங்கே விடுதலைப் போராட்டம் கனன்று கொண்டிருந்தது. அப்போராட்டத்தால் சோமசுந்தர பாரதியாரும் ஈர்க்கப்பட்டார். இந்திய தேசிய காங்கிரசு இயக்கம் நடத்திய பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். இதனால் 1905-ஆம் ஆண்டு முதல் 1919-ஆம் ஆண்டு வரை அவரது பெயர் அரசினரின் ஐயப்பாட்டு பட்டியலில் இடம்பெற்று இருந்தது.[1]

வ. உ. சிதம்பரம் பிள்ளையின் அழைப்பை ஏற்றுக்கொண்டு சோமசுந்தர பாரதியார் “இண்டியன் நேவிகேஷன்” என்னும் சுதேசி கப்பல் கம்பெனியின் செயலாளராக இருந்தார்.[8]

மதுரையில் தமிழ் மாநிலக் காங்கிரஸ் மாநாட்டினைக் கூட்டி அதன் செயலாளராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றினார். 1926 ஆம் ஆண்டில் சித்தரஞ்சன் தாசை மதுரைக்கு அழைத்து, சொற்பொழிவாற்றச் செய்தார்.[1]

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்

[தொகு]

1937-ஆம் ஆண்டில் இராசகோபாலாச்சாரியார் சென்னை மாகாண முதலமைச்சராகப் பதவியேற்றபோது உயர்நிலைப் பள்ளிகளில் முதல் மூன்று படிவங்களில் (6, 7, 8 ஆம் வகுப்புகளில்) இந்தி மொழி கட்டாய பாடமாக்கப்பட்டது. தாய்மொழியைத் தவிர்த்து வேற்று மொழியைத் திணிக்கக் கூடாதென்ற கருத்தால் இந்தி எதிர்ப்பு இயக்கத்தை நாவலர் உருவாக்கினார்.


1937 செப்டம்பர் 5-ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டின் தலைவராகப் பொறுப்பேற்றார். அக்டோபர் 25-ஆம் நாள் கட்டாய இந்திக் கல்வியைக் கைவிடக் கோரி, அன்றைய முதலமைச்சர் ச. இராசகோபாலாச்சாரியருக்குத் திறந்த மடல் (An Open Letter to Honourable Minister C. Rajagopalachariar)ஒன்றை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினார்.[9]

1948-ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாவது இந்திப் போராட்டத்தின்பொழுது சோமசுந்தர பாரதியார் அன்றைய கல்வி அமைச்சர் தி. சு. அவிநாசிலிங்கனாருக்கு மடல் எழுதினார்.[7]

தமிழ்ப்பணி

[தொகு]

இளமையிலேயே தமிழிலக்கியத்தில் ஈடுபாடுகொண்டிருந்த சோமசுந்தர பாரதியார், பின்னாளில் தமிழிலக்கிய, இலக்கண ஆராய்ச்சியிலும் படைப்பிலக்கியத்திலும் ஈடுபட்டார். தனது ஆராய்ச்சிகளைச் சொற்பொழிவின் வழியாகவும் ஆய்வுநூல்கள் எழுதுவதின் வழியாகவும் வெளியிட்டார்.

1932–33-ஆம் ஆண்டுகளில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக இருந்தார்.[7]

சொற்பொழிவுகள்

[தொகு]

சோமசுந்தர பாரதியார் 1916 ஆகத்து 16-ஆம் நாள் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தசரதன் குறையும் கைகேயி நிறையும் என்னும் தலைப்பில் ஆராய்ச்சிச் சொற்பொழிவாற்றினார்.[1] இச்சொற்பொழிவு இதே தலைப்பில் பின்னர் நூலாக வெளியிடப்பட்டது.

மதுரைத் தமிழ்ச் சங்கமும் இளம் கிறித்துவ ஆடவர் சங்கமும் (YMCA ) மதுரையில் 1926 சனவரி 26-ஆம் நாள் நடத்திய ஆய்வரங்கிலும் [1] 1929 மார்ச் 11-ஆம் நாள் சென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத்திலும் [7] திருவள்ளுவர் என்னும் தலைப்பில் உரையாற்றினார். இவ்வுரைகளே பின்னர்த் திருவள்ளுவர் என்னும் நூலாக வெளியிடப்பட்டன.

திராவிடர் கழகம் கம்பராமாயணத்தையும் பெரிய புராணத்தையும் எரிக்க வேண்டும் என இயக்கம் நடத்தியது. அதன் ஒருபகுதியாக நடைபெற்ற பட்டிமன்றத்தில் சோமசுந்தர பாரதியார் கலந்துகொண்டு கம்பராமாயணத்தை எரிக்கக் கூடாது என அண்ணாதுரையுடன் வாதிட்டார். அச்சொற்பொழிவு தீபரவட்டும் என்னும் நூலில் இடம்பெற்று இருக்கிறது.

நூல்கள்

[தொகு]

1998-ஆம் ஆண்டு இவரது நூல்கள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டது.[10][11]

ஆய்வு நூல்கள்

[தொகு]

திருவள்ளுவர், தொல்காப்பியர் ஆகியோரைப் பற்றிப் புனையப்பட்ட பொய்க்கதைகளை தன்னுடைய ஆய்வுகளின் மூலம் தகர்த்த சோமசுந்தர பாரதியார் பின்வரும் நூல்களை எழுதினார்:

  1. தசரதன் குறையும் கைகேயி நிறையும் (1926)
  2. திருவள்ளுவர் (1929) -தமிழ், ஆங்கிலம்.
  3. சேரர் தாயமுறை (1960) -தமிழ், ஆங்கிலம்
  4. தமிழும் தமிழரும்
  5. சேரர் பேரூர் (1917) (தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும்) [12]
  6. அழகு
  7. பழந்தமிழ் நாடு (1955)
  8. நற்றமிழ் (1957)
  9. Tamil Classics and Tamilakam (1912)[13]

படைப்பிலக்கியங்கள்

[தொகு]

சோமசுந்தர பாரதியார் பல தனிச்செய்யுள்களை அவ்வப்பொழுது இயற்றி இருக்கிறார். எனினும் பின்வரும் இரண்டு படைப்புகள் மட்டுமே நூல்களாக உருப்பெற்றிருக்கின்றன.

  1. மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி: ஒரு செய்யுட் கதை (1947)
  2. மாரி வாயில் (1936)

உரைநூல்

[தொகு]

சோமசுந்தர பாரதியார் தொல்காப்பியத்தின் பொருள் இலக்கணப்பகுதியில் உள்ள அகத்திணை, புறத்திணை, மெய்ப்பாட்டியல் ஆகிய மூன்று இயல்களுக்கும் முழுமையாக உரை எழுதியிருக்கிறார். அவ்வுரை நூல் தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை என்னும் தலைப்பில் 1942 அம் ஆண்டில் வெளியிடப்பட்டது. மீதமுள்ளவற்றுள் களவியல், கற்பியல், செய்யுளியல் ஆகியவற்றில் இன்றியமையாச் சில நூற்பாக்களுக்கு மட்டும் புத்துரை எழுதினார். அவை அவருடைய காலத்தில் நூலாக உருப்பெறவில்லை.[14]

பின்னர் 1997ஆம் ஆண்டில் நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி – 2 : தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை என்னும் தலைப்பில் சோமசுந்தரனார் தொல்காப்பிய பொருளதிகாரத்திற்கு எழுதிய உரைகள் அனைத்தையும் திரட்டி மதுரை ச. சாம்பசிவனாரை பதிப்பாசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்டது. சோமசுந்தரனாரின் மகள் மருத்துவர் லலிதா காமேசுவரன் அந்நூலை வெளியிட்டார்.

அரசியல் நூல்

[தொகு]
  • ”இந்தி” கட்டாய பாடமா?

வாழ்க்கை வரலாறு

[தொகு]
  • நான் கண்ட சுப்பிரமணிய பாரதி

மாநாடுகள்

[தொகு]

சொற்பொழிவுகள், நூல்கள் ஆகியவற்றின் வழியாகத் தமிழ்ப்பணி ஆற்றியதைப் போலவே தமிழ் மாநாடுகள் சிலவற்றில் சொற்பொழிவாளராகவும் அமைப்பாளராகவும் தலைவராகவும் பொறுப்பேற்று சோமசுந்தர பாரதியார் செயற்பட்டார். அம்மாநாடுகளுள் சில பின்வருமாறு[7]:

  • மதுரையில் 1942 ஆகத்து 1, 2, 3 ஆகிய மூன்று நாள்கள் நடைபெற்ற முத்தமிழ் மாநாட்டின் வரவேற்புக் குழுத் துணைத் தலைவராக வினையாற்றினார்.
  • சென்னையில் 1948 பிப்ரவரி 14-ஆம் நாள் நடைபெற்ற அகில தமிழர் மாநாட்டின் தலைவர்.
  • சிதம்பரம் அண்ணாமலை நகரில் 1954 சூலை 11-ஆம் நாள் நடைபெற்ற சென்னை மாநிலத் தமிழாசிரியர் மாநாட்டிற்குத் தலைமை வகித்தார்.
  • மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பொன்விழாவின் 5-ஆம் நாள் விழா 1956 சூன் 3-ஆம் நாள் நடைபெற்றது. அன்றைய இயலரங்கிற்கு இவர் தலைமை வகித்தார்.
  • தமிழகப் புலவர் குழுவின் அமைப்புக் கூட்டம் 1958 திசம்பர் 14-ஆம் நாள் பசுமலையில் நடைபெற்றது. அக்கூட்டத்தின் முடிவுப்படி சோமசுந்தர பாரதியார் தமிழகப் புலவர் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1959 நவம்பர் 8-ஆம் நாள் மதுரை எழுத்தாளர் மன்ற ஆண்டுவிழாவில் தொடக்கவுரை ஆற்றினார்.

சமூகச் சீர்திருத்தப்பணி

[தொகு]

சோமசுந்தர பாரதியார் இளமையிலேயே சமூகச் சீர்திருத்தத்தில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தோடு தொடர்புடையவராக இருந்தார். எனவே சடங்குகள் நீக்கிய திருமணம் உள்ளிட்ட விழாக்களை முன்னின்று நடத்தினார். தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் மதுரை மாவட்ட தலைவராகவும் செயற்பட்டார்.

அப்பணியின் உச்சமாக, 1933 மே 13-ஆம் நாள் மதுரைக்கு அருகில் உள்ள உசிலங்குளத்தில் தாழ்த்தப்பட்டோர்க்கு எனத் தொடக்கப்பள்ளி ஒன்று நிறுவினார். அதன் தொடக்கவிழாவில் வ. உ. சிதம்பரனார் சிறப்புரையாற்றினார்.[7]

வெளிநாட்டுப் பயணம்

[தொகு]

சோமசுந்தர பாரதியார் 1930, 1936, 1944 ஆகிய ஆண்டுகளில் ஈழ நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.[7]

பட்டங்களும் விருதுகளும்

[தொகு]
  • நாவலர் பட்டம் - ஈழ நாட்டிற்கு 1944-ஆம் ஆண்டு திசம்பர் 30 – 31-ஆம் நாள்களில் சோமசுந்தர பாரதியார் சென்றிருந்த பொழுது அங்குள்ள ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் மன்றம் நாவலர் பட்டத்தை அவருக்கு அளித்தது.
  • கணக்காயர் விருது - 1954 சனவரி 17-ஆம் நாள் மதுரைத் திருவள்ளுவர் கழகம் சோமசுந்தர பாரதியாருக்குப் பொன்னாடை போர்த்தி கணக்காயர் என்னும் பட்டத்தை அளித்தது.
  • 1959 சூலை 27-ஆம் நாள் மதுரையில் சோமசுந்தர பாரதியாரின் 80-ஆம் அகவை நிறைவுப் பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது.
  • 1959 அக்டோபர் 4-ஆம் நாள் மதுரை நகரவையும் தமிழகப் புலவர் குழுவும் இணைந்து சோமசுந்தர பாரதியாருக்குப் பாராட்டுக் கூட்டம் நடத்தினர்.

மறைவு

[தொகு]

1959 திசம்பர் 2-ஆம் நாள் சோமசுந்தர பாரதியார் மதுரை பசுமலையில் உள்ள தனது வீட்டில் மயக்கமுற்று விழுந்தார். திசம்பர் 4-ஆம் நாள் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். திசம்பர் 7-ஆம் நாள் தந்நினைவு இழந்தார். திசம்பர் 14-ஆம் நாள் இரவு 8.40 மணிக்கு மரணமடைந்தார். திசம்பர் 15-ஆம் நாள் மாலை 6 மணிக்கு அவரது உடலுக்குப் பசுமலையில் எரியூட்டப்பட்டது.[15]

சோமசுந்தர பாரதியாரைப் பற்றிய கட்டுரைகள் / நூல்கள்

[தொகு]
  • ச. சாம்பசிவனார் எழுதிய நாவலர் சோமசுந்தர பாரதியாரின் தமிழ் இலக்கியப்பணி என்னும் நூலில் இவரது வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பும் இலக்கியப்பணி பற்றிய திறனாய்வும் இடம்பெற்றிருக்கின்றன.
  • குன்றக்குடி பெரியபெருமாள் எழுதிய தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள் என்னும் நூலில் இவரைப் பற்றிய கட்டுரை இடம் பெற்றிருக்கிறது. (சென்னை, 1996)
  • தமிழ்ப்பிரியன் எழுதிய இரு நூற்றாண்டுகளும் 50 தமிழ் அறிஞர்களும் என்னும் நூலில் இவரைப் பற்றிய கட்டுரை இடம் பெற்றிருக்கிறது. (சென்னை, 2005)

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 சாம்பசிவனார் ச (பதி), நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி – 2, சென்னை வசுமதி பதிப்பகம், மு. பதி. சனவரி 1997, பக்.500
  2. "நாவலர் சோமசுந்தர பாரதியார் 10". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-11-06.
  3. குன்றக்குடி பெரியபெருமாள், தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள் (ப. 340), சென்னை, 1996
  4. சாம்பசிவனார் ச (பதி), நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி – 2, சென்னை வசுமதி பதிப்பகம், மு. பதி. சனவரி 1997, பக்.viii
  5. விடுதலைப் போராட்ட வீரரான இவர் அரசியல் அல்லது இறைமாட்சி என்னும் நூலை இயற்றி உள்ளார். முனைவர் கோரா ஆங்கிலத்தில் எழுதிய An Atheist with Gandhi என்னும் நூலை தமிழில் மொழிபெயர்த்து உள்ளார். - அரிஅரவேலன்
  6. புகழ்பெற்ற மருத்துவரான இவர் சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் ஆவார். - அரிஅரவேலன்
  7. 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 7.6 7.7 சாம்பசிவனார் ச (பதி), நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி – 2, சென்னை வசுமதி பதிப்பகம், மு. பதி. சனவரி 1997, பக்.501
  8. சாம்பசிவனார் ச (பதி), நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி – 2, சென்னை வசுமதி பதிப்பகம், மு. பதி. சனவரி 1997, பக். Ix
  9. சாம்பசிவனார் ச (பதி), நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி – 2, சென்னை வசுமதி பதிப்பகம், மு. பதி. சனவரி 1997, பக். x
  10. "புதிய புத்தகம் பேசுது". June 2010. பார்க்கப்பட்ட நாள் 2020-03-21.
  11. "தமிழரறிஞர் சோமசுந்தர பாரதி நூல்கள் நாட்டுடமை: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு". பார்க்கப்பட்ட நாள் 6 November 2021.
  12. Classified Catalogue of books Registered from 1916–1920 at the office of the registrar of books page.186
  13. Classified Catalogue of books Registered from 1911–1915 at the office of the registrar of books page.28
  14. சாம்பசிவனார் ச (பதி), நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி – 2, சென்னை வசுமதி பதிப்பகம், மு. பதி. சனவரி 1997, பக். xvi
  15. சாம்பசிவனார் ச (பதி), நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி – 2, சென்னை வசுமதி பதிப்பகம், மு. பதி. சனவரி 1997, பக்.502
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோமசுந்தர_பாரதியார்&oldid=3750972" இலிருந்து மீள்விக்கப்பட்டது