உள்ளடக்கத்துக்குச் செல்

வேதாத்திரி மகரிசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேதாத்திரி மகரிசி
வேதாத்திரி மகரிசி
பிறப்புஆகஸ்ட் 14, 1911
கூடுவாஞ்சேரி, தமிழ்நாடு
இறப்புமார்ச்சு 28, 2006(2006-03-28) (அகவை 94) கோயம்புத்தூர், தமிழ்நாடு
மற்ற பெயர்கள்பாமர மக்களின் தத்துவ ஞானி (Common Man's Philosopher), அருட் தந்தை வேதாத்திரி மகரிசி
அறியப்படுவதுசித்தர், மனவளக்கலை (Sky Yoga) தோற்றுவித்தவர், உலக சமுதாய சேவா சங்கம் (WCSC) நிறுவனர், அறிவுத்திருக்கோயில் (Temple of Consciousness) தோற்றுவித்தவர்.
வாழ்க்கைத்
துணை
லோகாம்பாள்

வேதாத்திரி மகரிசி (Vethathiri Maharishi) (14 ஆகஸ்ட் 1911 – 28 மார்ச் 2006) என்பவர் இந்திய யோகக் குரு, மற்றும் தத்துவஞானி ஆவார். உலக அமைதிக்காக அருந்தொண்டாற்றிய ஒப்பற்ற சித்தனையாளர். சென்னையில் உலக சமுதாய சேவா சங்கத்தை (WCSC) நிறுவினார். கோயம்புத்தூர் அருகே ஆழியாரில் அறிவுத் திருக்கோவிலை (Temple of Consciousness) அமைத்தார். மனவளக்கலை பயிற்சி வழியாக எளிய மக்கள் மேன்மைக்கு பாடுபட்டார். மகிழ்ச்சியான வாழ்வுக்கு மனம், உடலை பக்குவப்படுத்தும் விதமாக மனவளக்கலையை உருவாக்கியுள்ளார். பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் தத்துவங்களை உருவாக்கி பயன்பெறும் வகையில் சமுதாயப் பணி அற்றியவர்.[1][2] அறிவின் சிறப்பை உணர்ந்து இனம், மத அடையாளங்கள் கடந்து வாழ்வதே இன்பமயமானது என்ற கருத்துடன் செயல்பட்டார். சமுதாயத்தில் தனி மனித மாண்பை உயர்த்துவதற்கு எளிய வாழ்க்கை தத்துவத்தை உருவாக்கியதால் அருட்தந்தை, பாமர மக்களின் தத்துவ ஞானி என்ற அடைமொழிகளுடன் புகழ் பெற்றுள்ளார். எளிய மக்கள் கற்றுக்கொள்ளும் வகையில், யோகா, தியானம், எளிய உடற்பயிற்சிகள் மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளை உள்ளடக்கிய எளிய முறை காயகற்பம், குண்டலினி யோகாவை உருவாக்கியுள்ளார்.

வாழ்க்கை நிகழ்வுகள்

[தொகு]

வேதாத்திரி மகரிசி சென்னை அருகில் கூடுவாஞ்சேரி கிராமத்தில்[3] நெசவுத் தொழில் செய்த வரதப்ப முதலியார், முருகம்மாள் (சின்னம்மாள்) தம்பதியருக்கு எட்டாவது குழந்தையாக, ஆகஸ்ட் 14, 1911'ல் பிறந்தார். அதிகம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. சொந்த ஊரில் 3ம் வகுப்பு வரை படித்தார். பின்னர் கைத்தறி நெசவில் ஈடுபட்டு குடும்பத்துக்கு உதவினார். கல்வி மீதான ஆர்வத்தால் இரவு பாடசாலையில் சேர்ந்து தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களை கற்றார்.

சென்னை தபால் துறையில் 18ம் வயதில் பணி செய்ய வாய்ப்பு கிடைத்தது. அந்த பணியுடன் பகுதி நேரமாக நெசவுத் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். ஏழை சிறுவர்களுக்கு தனி முயற்சயின் வழியாக கல்விப் பயிற்சியும் அளித்து வந்தார்.

சென்னையில் ஆயுர்வேத மருத்துவர் எஸ்.கிருஷ்ணாராவிடம் சித்த, ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி மருத்துவ முறைகளை கற்றார். தியானம், யோகா கலைகளில் ஈடுபாடு கொண்டு முறைப்படி கற்றார். வாழ்க்கையில் முழுமையை அறியும் ஆர்வத்தால் உந்தப்பட்டு தேடல்களில் ஈடுபட்டார். சித்தா, ஆயுர்வேத மருத்துவ முறைகளையும் கற்றுத் தேர்ந்தார்.

சுயமுயற்சியால் நெசவுத் தொழிற்கூடம் ஒன்றை உருவாக்கி வெற்றிகரமாக நடந்தி வந்தார். அரசின் தொழிற்கொள்கை குளறுபடி மற்றும் இரண்டாம் உலகப் போர் நெருக்கடிகளால் அந்த தொழிலில் பெரும் பாதிப்பு எற்பட்டது. தன்னிடம் பணிபுரிந்த தொழிலார்களின் துயர் துடைக்க ஈட்டிய அனைத்தையும் செலவிட்டார். மனதைத் தளரவிடாது கடுமையாக உழைத்து படிப்படியாகப் பொருளாதாரத்தை மேம்படுத்தினார். இரண்டாம் உலகப் போரில் முதலுதவி உதவியாளராகவும் பணிபுரிந்தார்.

மனித வாழ்வில் துன்பம் ஏன் ஏற்படுகிறது என்ற கேள்வியை முன் வைத்து சிந்தித்தார். தகுந்த காரணங்களை அறிந்து தெளிய முயற்சி மேற்கொண்டார். தமிழத்தில் சித்தர் மரபில் அமைந்த தத்துவங்கள் மீது நாட்டம் கொண்டார். இந்த நிலையில் டிசம்பர் 25, 1944ல் பரஞ்சோதி என்பவரை சந்தித்தார். அவரை குருவாக ஏற்று குண்டலினி யோகக்கலையை பயின்றார். தியானத்திலும் தீவிர ஈடுபாடு காட்டினார்.

தமிழக தத்துவ மரபில் பெரும் தாக்கம் ஏற்படுத்திய அருட்பிரகாச வள்ளலார் மீதான ஈர்ப்பால் அவரது படைப்புகளை கற்று அனுபவங்களை பெற்றார். உலகம் அமைதியுடன் திகழவும், மக்கள் மேன்மையுடன் வாழவும் வழிகாட்டும் சிந்தனைகளை மையக் கருத்தாக்கி கவிதைகள் புனைந்தார். இயற்கையை மையப்படுத்தி அவர் எழுதிய, ‘மலரே மலரே நீ யார்...’ எனற பாடல் பெரும் புகழ் பெற்றுள்ளது. மனித வாழ்க்கையுடன் இயற்கைக்கு உள்ள உறவை கேள்வி – பதில் வடிவில் அந்த பாடல் தெளிவு படுத்துகிறது.

இயக்கவியல் தத்துவ அடிப்படையில் மனித உடல் மற்றும் மனம் நலத்தை மேம்படுத்தும் வகையில் எளிய மனவளக்கலை நெறியை உருவாக்கியுள்ளார் வேதாத்திரி. உலக அமைதிக்காக, 'உலக சமாதானம்' World peace என்பதை அடிப்படையாக வைத்து 200 கவிதைகள் புனைந்தார். அவற்றை தொகுப்பாக்கி 1957ல் புத்தகமாக வெளியிட்டார். அது தமிழ், ஆங்கிலம் மொழிகளில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. அந்த கருத்துகளை பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பரப்புவதற்கு உரிய முயற்சிகள் எடுத்தார். இவரது கருத்தியல் சார்ந்து பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பட்டப்படிப்புகளுக்கான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மனவளக்கலை

[தொகு]

வேதாத்திரி மகரிசி தமிழகத்தில் இனம், மதம் கடந்து அறிவு வாழி சார்ந்த வாழ்வை உருவாக்குவதில் முதல் நிலையில் சிந்தித்தவர். திருவள்ளுவர், வள்ளலார் கருத்து வழி நின்று தவம் போன்ற சுய பரிசோதனை முறைகளில் தீவிர கவனம் செலுத்தி செயல்பட்டார். ஒவ்வொரு மனிதனும் தன்னை அறிதலே முழுமையான விடுதலைக்கு வழி என்ற பார்வையுடன் செயல்பட்டார். அகத்தின் செயல்பாட்டை ஆய்வு செய்யும் சுயபரிசோதனை முறைக்கு தெளிவான இலக்கணம் வகுத்தார். அதை செயல்படுத்துவதற்கு தக்க படிநிலைகளுடன் தெளிவான பாடத்திட்டங்களை உருவாக்கியுள்ளார். இவற்றை கற்பிக்கும் வகையில் மனவளக்கலை மன்றங்களை ஏற்படுத்தினார். இவற்றை பரப்பும் நோக்கத்தை முன் வைத்து, 1958ல் உலக சேவா சமுதாய சங்கத்தை உருவாக்கினார். இதன் வழியாக எளியமுறை உடற்பயிற்சி, தியானப் பயிற்சி, காயகல்பப் பயிற்சி மற்றும் அகத்தாய்வுப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்த அமைப்புக்கு இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட நாடுகளில் கிளைகள் உள்ளன.

ஞானமும் வாழ்வும்

[தொகு]

உலக அமைதி, ஞானி நெறி போன்ற சிந்தனையை வளர்க்கும் விதமாக, விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் கலந்த வாழ்க்கை தத்துவத்தை பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கியுள்ளார் வேதாத்திரி மகரிசி. உயிரினங்கள் தோற்றத்தில் பரிணாம கொள்கையை வலியுறுத்தும் கருத்துகளை முன் வைத்து பிரசாரம் செய்துவந்தார் வேதாத்திரி மகரிசி. எளிய கதை, கவிதைகள், மேடை உரை, போதனைகள் வழியாக மக்களுக்கு எடுத்துரைத்தார். இயற்கையின் ரகசியங்களையும், மதிப்பையும் அறிந்து அறிவில் தெளிந்து வாழும் வாழ்க்கையே இன்பமானது என்பதை வலியுறுத்திவந்தார். உலக சமாதானம் என்ற நூலை 1957ல் வெளியிட்டார் வேதாத்திரி. பல நாடுகளிலும் பயணம் செய்து வாழ்வை மேம்படுத்தும் சிந்தனைகளை சொற்பொழிவாக நிகழ்த்தினார். உலகம் அமைதிக்கான கருத்துகளை எடுத்துரைத்தார். வாழ்வை சீரமைக்கும் ஞானத்தை பெற அகத்தாய்வு என்ற சுயபரிசோதனையில் எண்ணம் ஆராய்தல், ஆசையை சீரமைத்தல், சினம் தவிர்த்தல், கவலை ஒழித்தல், குடும்பத்தில் அமைதியை நிலைநாட்டுதல், பெண்ணின் பெருமை தலைப்புகளில் செயல்படுத்தியுள்ளார்.

காயகற்பம்

வேதாத்திரி மகரிசி பண்டைய சித்தர்கள் கண்டறிந்த கடினமான யோகக் கலைகளைப் பொதுமக்களும் எளிதில் பயிற்சி செய்யும் வகையில் மாற்றியமைத்தார். சித்த மருத்துவத்திலும் யோகக் கலையிலும் 'அசுவினி முத்திரை' என்பது மிகவும் இரகசியமான மற்றும் முக்கியமான பயிற்சியாகக் கருதப்பட்டது. இதனை வேதாத்திரி மகரிசி 'எளிய முறை காயகற்பப் பயிற்சி' என்னும் பெயரில் ஒரு முழுமையான வாழ்வியல் கலையாக முறைப்படுத்தினார். அசுவினி முத்திரை என்பது குதிரை மலம் கழித்த பிறகு தனது குதத் தசைகளைச் சுருக்கி விரிப்பதைப் போன்ற ஒரு செயல்பாடாகும். இந்தக் குதிரையின் இயற்கையான பண்பை அடிப்படையாகக் கொண்டு இப்பெயர் சூட்டப்பட்டது. பழங்காலத் துறவிகள் காடுகளிலும் மலைகளிலும் தவம் செய்யும் போது உடல் ஆற்றலைச் சேமிக்கப் பயன்படுத்திய இம்முறையை இல்லறத்தில் இருப்பவர்களும் பயன் பெறும் வகையில் மகரிசி எளிமையாக்கினார்.

'அசுவம்' என்ற சொல்லானது பழங்கால மொழிகளில் குதிரையைக் குறிப்பதாகும். இதிலிருந்து உருவான 'அசுவினி' என்ற சொல் 'குதிரையைப் போன்றது' அல்லது 'குதிரையுடன் தொடர்புடையது' என்று பொருள்படும். இயற்கையிலேயே குதிரை மிகவும் வலிமையான மற்றும் வேகமான விலங்காக இருப்பதற்கு அதன் இத்தகைய தசைச் சுருக்கங்கள் ஒரு முக்கியக் காரணம் என்று சித்தர்கள் கண்டறிந்தனர். குதிரையின் இந்தச் செயலை அடிப்படையாகக் கொண்டு மனிதர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பயிற்சியே அசுவினி முத்திரை என்று அழைக்கப்படுகிறது.

அசுவினி முத்திரை என்பது குதிரை மலம் கழித்த பிறகு தனது குதத் தசைகளைச் சுருக்கி விரிக்கப்படும் ஒரு செயல்பாடாகும்[4]. இந்தக் குதிரையின் இயற்கையான பண்பை அடிப்படையாகக் கொண்டு இப்பெயர் சூட்டப்பட்டது. பழங்காலத் துறவிகள் காடுகளிலும் மலைகளிலும் தவம் செய்யும் போது உடல் ஆற்றலைச் சேமிக்கப் பயன்படுத்திய இம்முறையை இல்லறத்தில் இருப்பவர்களும் பயன் பெறும் வகையில் மகரிஷி எளிமையாக்கினார்.

வேதாத்திரி மகரிசி இப்பயிற்சியைச் செய்வதற்கு மிகவும் எளிய வழிமுறைகளை வகுத்தார். இதற்காக நீண்ட நேரம் ஒதுக்கித் தவம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் விளக்கினார். இப்பயிற்சியில் அமர்ந்த நிலையிலோ அல்லது படுத்த நிலையிலோ குதத் தசைகளை மெதுவாகச் சுருக்கி ஒரு சில நொடிகள் நிறுத்திப் பின்னர் மெதுவாக விரிவடையச் செய்ய வேண்டும்[5]. இதனை ஒரு நாளைக்கு இருமுறை சுமார் பத்து முதல் இருபது முறைகள் வரை செய்யலாம் என்று அவர் கால அளவை முறைப்படுத்தினார்[6]. இம்முறையைத் தவறாமல் கடைப்பிடிப்பதன் மூலம் உடலில் உள்ள உயிர் ஆற்றல் கீழ்நோக்கிச் சென்று வீணாவதைத் தடுத்து அதனை மேல்நோக்கிச் செலுத்த முடியும். இது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவதோடு உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெருமளவு அதிகரிக்கிறது. குறிப்பாக முதுகெலும்பின் அடிப்பகுதியில் உள்ள ஆற்றல் மையங்களைத் தூண்டி உடல் முழுவதும் ஒருவித புத்துணர்ச்சியை இம்முறை வழங்குகிறது.

ஜீவகாந்தம்

[தொகு]

வேதாத்திரி மகரிஷியின் தத்துவத்தின்படி, உயிர்க்காந்தம் என்பது பிரபஞ்சத்தின் அடிப்படை ஆற்றலான வான்காந்தத்தின் ஒரு பகுதியாகும். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருட்களிலும் காந்த ஆற்றல் நிறைந்துள்ளது. மனித உடலில் ஓடிக்கொண்டிருக்கும் உயிராற்றல் அல்லது உயிர் துகள்களின் சுழற்சியால் ஒருவித நுட்பமான அலை உருவாகிறது. இந்த அலையே 'ஜீவகாந்தம்' அல்லது 'உயிர்க்காந்தம்' என்று அழைக்கப்படுகிறது. வான்காந்தம் என்பது பேரியக்க மண்டலம் முழுவதும் பரவியுள்ள ஆற்றல் என்றால், உயிர்க்காந்தம் என்பது ஒரு தனி மனித உடலுக்குள் செயல்படும் அதே ஆற்றலின் ஒரு சிறு தொகுதியாகும். இந்தத் தத்துவங்கள் 1958 ஆம் ஆண்டு அவர் நிறுவிய உலக சமுதாய சேவா சங்கத்தின் மூலம் பரவலாக அறியப்பட்டன.

உயிர்க்காந்தம் மனித உடலில் ஐந்து விதமான நிலைகளில் மாற்றமடைந்து செயல்படுகிறது. மனித உடல் பெற்றுள்ள ஐந்து புலன்களின் வழியாக இந்த ஆற்றல் செலவிடப்படும்போது அது அழுத்தம், ஒலி, ஒளி, சுவை மற்றும் மணம் என ஐவகையாக உருமாற்றம் பெறுகிறது. உதாரணமாக, கண்கள் வழியாகப் பார்க்கும்போது உயிர்க்காந்த ஆற்றல் ஒளியாகவும், காதுகள் வழியாகக் கேட்கும்போது ஒலியாகவும் மாறுகிறது. அதேபோல், மூளையின் வழியாக இந்த ஆற்றல் பாயும்போது அது எண்ணங்களாக மாறுகிறது. ஒரு மனிதன் சிந்திக்கும் ஒவ்வொரு எண்ணமும் அந்த உடலில் உள்ள உயிர்க்காந்த ஆற்றலின் செலவினமே ஆகும். இந்த ஆற்றல் அளவு குறையும்போது உடல் சோர்வும், மனம் தடுமாற்றமும் ஏற்படுகின்றன.

மனித உடலின் மையப்பகுதியான கருமையத்தில் இந்த உயிர்க்காந்த ஆற்றல் மிகச் செறிவாகக் குவிந்துள்ளது. இதனை வேதாத்திரி மகரிஷி 'கருமையம்' என்று குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலும், அவன் சிந்திக்கும் ஒவ்வொரு எண்ணமும் இந்த உயிர்க்காந்த அலைகளாக மாறி கருமையத்தில் பதிவாகின்றன. இவை சுருக்கப்பட்டு விதையைப் போலச் சேமிக்கப்படுகின்றன. இதுவே ஒரு மனிதனின் குணமாகவும், அவனது சந்ததியினருக்குச் செல்லும் மரபணுத் தகவல்களாகவும் மாறுகிறது. உதாரணமாக, ஒருவருடைய முன்னோர்களின் குணங்கள் அல்லது திறமைகள் அந்த நபரிடம் வெளிப்படுவதற்கு இந்த உயிர்க்காந்தப் பதிவுகளே காரணமாக அமைகின்றன.

உயிர்க்காந்தத்தின் இருப்பு மற்றும் அதன் தரம் ஒரு மனிதனின் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கிறது. உடலில் உள்ள காந்த ஆற்றல் சீராகவும், போதுமான அளவிலும் இருந்தால் மட்டுமே நரம்பு மண்டலம் மற்றும் ரத்த ஓட்டம் போன்றவை தடையின்றிச் செயல்படும். தவறான உணவுப் பழக்கம், அளவுக்கு அதிகமான உழைப்பு, தேவையற்ற மன அழுத்தம் மற்றும் முறையற்ற எண்ணங்கள் ஆகியவை உடலில் உள்ள உயிர்க்காந்தத்தை விரைவாகச் செலவு செய்துவிடும். 2000 ஆம் ஆண்டுக்கு முந்தைய காலகட்டங்களில் அவர் வழங்கிய பயிற்சிகளில், எளிமைப்படுத்தப்பட்ட உடற்பயிற்சிகள் மற்றும் தியான முறைகள் மூலம் இந்த ஆற்றலை எவ்வாறு சேமிப்பது என்பது விளக்கப்பட்டுள்ளது.

இயற்கையோடு இணைந்து வாழும்போது உயிர்க்காந்த ஆற்றல் இயற்கையாகவே மேம்படுகிறது. ஒரு மனிதன் மரம், செடி, கொடிகள் நிறைந்த சூழலில் இருக்கும்போது அல்லது தூய்மையான காற்றுள்ள இடங்களில் தியானம் செய்யும்போது அவனது உயிர்க்காந்தக் களம் விரிவடைகிறது. இதேபோல், பிறருக்குச் செய்யும் தொண்டு மற்றும் அன்பான சொற்கள் ஒருவருடைய காந்த ஆற்றலைத் தூய்மைப்படுத்துகின்றன. கோபம் மற்றும் பொறாமை போன்ற எதிர்மறை உணர்வுகள் உயிர்க்காந்த அலைகளைக் குறுகிய அலைநீளம் கொண்டதாக மாற்றி உடல் உறுப்புகளைப் பாதிக்கின்றன. எனவே, உயிராற்றலை உணர்ந்து அதனை முறையாகப் பராமரிப்பதே முழுமையான வாழ்விற்கு அடிப்படை என்பது வேதாத்திரி மகரிஷியின் முக்கியக் கோட்பாடாகும்.

அறிவு திருக்கோவில்

[தொகு]

தமிழ்நாடு மாநிலம், கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு அணை அருகே 1984ல் அறிவுத்திருக்கோவிலை உருவாக்கினார் வேதாத்திரி. இங்கு தான் அவரது வாழ்க்கை நிறைவடைந்தது. அவரது புகழை நிலைக்க செய்யும் மணிமண்டபம் ஒன்று இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் அவர் பயன்படுத்திய பொருட்களுடன் கூடிய அருங்காட்சியகம் ஒன்றும் உள்ளது. மனவளக்கலை பயிற்சி பெற உண்டு உறைவிடத்துடன் கூடிய மையங்களும் இங்கு அமைந்துள்ளன. அவை ஓம்கார மண்டபம், ஆனந்த திருநிலையம், அன்புத்திருநிலையம் என்ற பெயர்களில் அமைந்துள்ளன.

அறிவரங்கம்

[தொகு]

அறிவுத்திருக்கோவில் வளாகத்தில் அறிவரங்கம் என்ற பெயரில் 2465 சதுர மீட்டர் பரப்புள்ள பிரமாண்டமான வாசகசாலையும் இயங்கி வருகிறது. இங்கு வேதாத்திரி மகரிசி எழுதிய புத்தகங்களுடன், மனவளக்கலை தொடர்பான ஆய்வு நுால்களும் ஏராளமாக உள்ளன. மரங்கள் அடர்ந்த சூழலில் இது அமைந்துள்ளதால் வசதியாக அமர்ந்து வாசிக்க ஏற்றதாக உள்ளது. இது உலக சமுதாய சேவா சங்கம்|உலக சமுதாய சேவா சங்கம் அமைப்பால் (WCSC) நிர்வாகிக்கப்படுகிறது.

அறிவரங்கத்துடன் வேதாத்திரிய கல்வி நிறுவனமும் இயங்குகிறது. இனிய வாழ்வுக்கான யோகக்கல்வி மற்றும் பயிற்சி வழங்கப்படுகிறது. குண்டலினி யோகம், எளியமுறை உடற்பயிற்சிகள், மூச்சுப் பயிற்சி மற்றும் காயகல்ப பயிற்சியும் தரப்படுகின்றன. வேதாத்தரி எழுதிய புத்தகங்கள் விற்பனை கூடமும் அமைந்துள்ளது. அறிவுத்திருக்கோவில் அமைந்துள்ள பகுதி அருட்பெருஞ்ஜோதி நகர் என அழைக்கப்படுகிறது.

படைப்புகள்

[தொகு]

மனித வாழ்வில் அமைதியும் சிந்தனையில் தெளிவும் ஏற்படுத்துவதற்காக வேதாத்திரி மகரிசி எளிய பாடல்களையும், மேன்மையான உரைகளையும், எளிய பயிற்சி முறைகளையும் இனிய பொன்மொழிகளையும் வழங்கியுள்ளார். அவற்றில் ஒன்று, ‘வாழ்க வையகம் வாழ்க வளமுடன்’ என்ற பொன்மொழி. எப்பகுதியிலும் பேதங்களை அகற்றும் விதமாக அன்றாட நிகழ்வுகளில் இது ஜொலித்துக்கொண்டிருக்கிறது. வேதாத்திரி வடிவமைத்து நிறுவிய, அன்பொளி என்ற மாத இதழ் தமிழ், ஆங்கிலம் மொழிகளில் வெளிவருகிறது. இதை ஈரோடு மனவளக்கலை மன்றம் பொறுப்பேற்று வெளியிட்டு வருகிறது.

வேதாத்திரி மகரிசி மொத்தம் 80 நூல்கள் எழுதியுள்ளார். அவற்றில், 47 புத்தகங்கள் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளன. ஆங்கில மொழியில், 23 புத்தகங்கள் உள்ளன. அணு விசம் என்ற தலைப்பில் 1957ல் எழுதிய நாடக நுால் உலக அமைதியை முதன்மை கருத்தாக கொண்டுள்ளது. இரண்டாம் உலகப் போரில் பெரும் நாசத்தை ஏற்படுத்திய அணு குண்டு வீச்சை முன் வைத்து எழுதப்பட்டது. அணு ஆற்றலை அழிவுக்கு பயன்படுத்துவதை தடுக்கும் விதமான கருத்துகளை உடையது. இந்த புத்தகம் உலக தலைவர்களை குற்றவாளிகளாக்கி, அவர்களின் எண்ணப்போக்கிலே உண்மையை வெளிப்படுத்தி, அணு ஆயுதங்களின் தீமையை விளக்குவதாக அமைந்துள்ளது. அந்த நாடகத்தில் உள்ள கருத்து இன்றைய சூழலுக்கும் பொருந்தும் விதமாக அமைந்துள்ளது.

  • மனவளக்கலை
  • உண்மை நிலை விளக்கம்
  • உலக சமாதானம்
  • ஞானக்களஞ்சியம்
  • கடவுளும் கருமையமும்
  • அருளருவி
  • அருட்தந்தையின் பதில்கள் பாகம் 1
  • வேதாத்திரியத்தின் இறைநிலை விளக்கம்
  • வாழ்வியல் விழுமியங்கள்
  • பிரம்மஞான சாரம்
  • நான் யார் ?
  • இறைநிலை அறிவு
  • இறைநிலையின் தன்மாற்றச் சரித்திரம்
  • இறையுணர்வும் அறநெறியும்
  • இன்பமாக வாழ
  • உலக சமுதாய வாழ்க்கை நெறி
  • எளிய முறை உடற்பயிற்சி
  • எனது வாழ்க்கை விளக்கம்
  • கடவுளும் கருமையமும்
  • காந்த தத்துவம்
  • காயகல்ப பயிற்சி
  • குடும்ப அமைதி
  • சமூக சிக்கல்களுக்கான ஆய்வுத் தீர்வுகள்
  • செயல்விளைவு தத்துவம்

உட்பட தலைப்புகளில் புத்தகங்கள் அமைந்துள்ளன. கவிதை நடையில் எழுதிய ஞானமும் வாழ்வும் என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள, ‘எல்லாம் வல்ல தெய்வமது எங்கும் உள்ளது நீக்கமற சொல்லால் மட்டும் நம்பாதே சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய் வல்லாய் உடலில் இயக்கமவன் வாழ்வில் உயிரில் அறிவுமவன்... கல்லார் கற்றார் செயல் விளைவாய்க்காணும் இன்ப துன்பமவன்... அவனின் இயக்கம் அணுவாற்றல் அணுவின் கூட்டுப் பக்குவம் நீ அவனில் தான் நீ உன்னில் அவன் அவன் யார்? நீயார்? பிரிவேது? அவனை மறந்தால் நீ சிறியோன் அவனை அறிந்தால் நீ பெரியோன் அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம் அறிவு முழுமை அது முக்தி...’ என்ற பாடல் அறிவே கடவுள் என்ற தத்துவத்தை முன்வைக்கிறது. இது மனவளக்கலை நிகழ்வுகளில் இறைவணக்கமாக பாடப்படுகிறது.

வேதாத்திரியின் படைப்புகளை ஒருங்கிணைத்து ஆய்வு செய்து இல.ஜெயந்தி என்பவர் சென்னை பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அந்த ஆய்வை [7] வேதாத்தரி மகரிசியின் படைப்புகள் என்ற தலைப்பில் புத்தா பப்ளிகேஷன்ஸ் புத்தகமாக வெளியிட்டுள்ளது.

நூற்றாண்டு விழா

[தொகு]
அருட் தந்தை வேதாத்திரி மகரிசியின் அஞ்சல் தலை

வேதாத்திரி மகரிசியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த நினைவு அஞ்சல் தலையை 2010-ஆம் ஆண்டுவெளியிட்டது இந்திய அஞ்சல் துறை.

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம், மகரிசியின் பங்களிப்புகளைப் பாராட்டி, ‘வேதாத்திரி மகரிசி ஆயிரக்கணக்கான மக்களின் மனதில் அறிவுத்தெளிவு எனும் ஒளியை ஏற்றி வைத்துள்ளார்...’ என போற்றி புகழுரைத்துள்ளார்.

நிறை வாழ்வு

[தொகு]

உயரினங்களிடம் அன்பு, கருணையுடன் நிறைவாக வாழ்ந்து வழிகாட்டிய வேதாத்திரி மகரிசி மார்ச் 28, 2006 செவ்வாய்க்கிழமை அன்று, 95ம் வயதில் உடல்நலக் குறைவிற்குப் பின், மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார். அவரது நினைவாக ஆழியாறு அறிவுத்திருக்கோவில் வளாகத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உரிய காலமுறைப்படி தியானம் என்ற தவ நிகழ்வுகள் மற்றும் அது சார்ந்த பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. The Malaysian Indian Journey. University of California. 2010. p. 220. ISBN 978-9-834-43800-5.
  2. P.K.Aiyasamy (2019). Science of Yoga – A Comprehensive Approach. Notion Press. ISBN 978-1-684-66531-0.
  3. வாழ்க்கை வையகம்
  4. "ஆசனவாய் தசையை வலுவடைய செய்யும் அஸ்வினி முத்திரை". Retrieved 2018-02-01.
  5. "உயிர் வளர்க்கும் காயகல்ப பயிற்சி". Retrieved 2018-02-01.
  6. "simplified-kaya-kalpam-practise-guide-by-vethathiri-maharishi - உயிர் வளர்க்கும் காயகல்ப பயிற்சி page 16". Retrieved 2018-02-01.
  7. வேதாத்தரி மகரிசியின் படைப்புகள்

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதாத்திரி_மகரிசி&oldid=4564827" இலிருந்து மீள்விக்கப்பட்டது