பதார்த்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பதார்த்தம் அல்லது பொருட்கள்.[1][2], இந்திய மெய்யியல் தத்துவங்களில் ஒன்றான வைசேஷிகம் மற்றும் நியாயத் தத்துவங்கள் இப்பிரபஞ்சம் 7 பதார்த்தங்களால் (பொருட்கள்) ஆனது எனக்கூறுகிறது. வைசேஷிக தத்துவத்தின்படி, இருக்கும், அறியக்கூடிய மற்றும் பெயரிடக்கூடிய அனைத்தும் பதார்த்தங்கள் ஆகும். நியாய சூத்திரத்தின் கருத்தின்படி, ஒரு மனிதன் விடுதலை அடைய பதார்த்தங்களின் உண்மை அறிவை அறிந்திருக்க வேண்டும் எனக்கூறுகிறது.[3] பதார்த்தங்கள் எழு வகையாக பிரித்துள்ளனர்.

விளக்கம்[தொகு]

பதார்த்தம் எனும் சமசுகிருத மொழிச் சொல் இரண்டு சொற்களால் ஆனது. அவை பாதம் (சொல்) மற்றும் அர்த்தம் (பொருள்) ஆகும். எனவே பதார்த்தம் என்பதற்கு சொற்களின் பொருள் அல்லது குறிப்பு என்பதாகும்.[4]

7 வகை பதார்த்தங்கள்[தொகு]

திரவியம் (பொருள்)[தொகு]

திரவியம் என்பது பிரபஞ்ச படைப்பிற்கு காரணமாக ஐம்பூதங்கள், காலம், திசை (வெளி), சீவாத்மா (உயிர்) மற்றும் அந்தக்கரணம் (மனம்) என 9 வகை கருப்பொருட்களே திரவியம் ஆகும். இக்கருப்பொருட்கள் இருவகையானது. ஒன்று நிலையானது. மற்றொன்று இயங்கக்கூடியது. இதில் ஆகாயம் தவிர பிற பூதங்கள் இயக்கம் கொண்டது. ஐம்பூதங்களில் நிலம், நீர், தீ, காற்று ஆகிய 4 திரவியங்கள் நுண்ணிய அணுக்களால் (பருப்பொருட்கள்) ஆனது. இவைகளை நாம் நேரில் அறிந்து உண்ரக்கூடியது. ஆனால் 5வதான ஆகாயம் அணுக்களால் ஆனதென்றாலும், தொட்டு உணராவிட்டாலும், ஊகித்து அறிய முடியும். பிற பூதங்களுக்கு காரணமான ஆகாயம் எனும் பூதம் பஞ்சீகரணம் அடைந்து மற்ற நான்கு பூதங்கள் தோன்றக் காரணம் ஆகிறது. ஐம்பூதங்களில் ஆகாயம் தவிர மற்ற பூதங்கள் நிலையானவைகள் அல்ல. காலம், திக்கு (வெளி), மற்றும் [[சீவாத்மா|ஆத்மா} ஆகிய திரவியங்கள் நிலையானது. இவைகளை நேரடியாக அறிய முடியாவிட்டாலும், அனுமானத்தின் மூலம் ஊகித்தறிய இயலும். இதில் மனம் எனும் திரவியம் மட்டுமே இயக்கம் கொண்டது. இதில் அழியாத திரவியங்கள் காலம், வெளி, ஆத்மா, மனம் ஆகும்.

குணம்[தொகு]

குணம் என்பது ஒரு திரவியத்தின் (கருப்பொருள்) உள்ளார்ந்த தன்மை ஆகும். ஆன்மா அழியாதது எனில் அதன் குணமான மனம் இயங்கும் ஆற்றல் கொண்டது. அதே போல் திரவியங்களின் தன்மையாகிய ஞானேந்திரியங்கள் மூலம் தொடு உணர்வு (தோல்), சுவை (நாக்கு), வாசனை (மூக்கு), ஒலி (காது), ஒளி (கண்) அறிதல்கள் அனைத்தும் குணங்களே.

கர்மம்[தொகு]

இது செயலைக் (வினை) குறிக்கிறது. குணத்தை போல் இதுவும் திரவியத்தின் (பதார்த்தம்) உள்ளடக்கமாக (சூக்குமம்) உள்ளது. குணங்கள் நிலையானதாகவும், இயக்கமற்றதாகவும் இருக்கும் போது, வினையோ இயக்கமும், மாறுபாடும் கொண்டதாக உள்ளது. அண்ட வெளியில் அணுக்கள் ஒன்றோடென்று இணைதலையும், பிரிதலையும் செய்து கொண்டே உள்ளது. இணைதலும், பிரிதலும் வினையே. கருமம் எனப்படும் வினை ஐவகைப்படும். 1. மேல் நோக்கிய இயக்கம், 2. கீழ்நோக்கிய இயக்கம், 3. குறுகுதல், 4. விரிவடைதல் 5. இடம் பெயர்தல் ஆகும்.

சாமான்யம்[தொகு]

சாமான்யம் என்பதற்கு திரவியங்களின் பொதுத்தன்மையைக் குறிக்கிறது.

விசேசம்[தொகு]

இது திரவியத்தின் (பதார்த்தம்) சிறப்புத் தன்மையைக் குறிக்கிறது. ஒரு திரவியத்திலிருந்து மற்றொன்றை வேறுபடுத்தி அறிய உதவும் தனித்தன்மையே விசேசம் ஆகும். பொதுத் தன்மை என்பது பல்வேறு பொருட்களை வகைப்படுத்துவது. ஆனால் சிறப்புத் தன்மையானது பொருட்களை வேறுபடுத்தி வகைப்படுத்துவது அல்லது பகுப்பதாகும்.

சமவயம்[தொகு]

சாமான்யம் என்பதற்கு திரவியங்களின் பொதுத்தன்மையைக் குறிக்கிறது. இது திரவியங்களின் பிரிக்க முடியாத, நீடித்த தொடர்பைக் குறிக்கிறது. இரண்டு பொருட்களின் சேர்கையால் (சம்யோகம்) ஏற்படும் தொடர்பு நிலையானது அல்ல, மாறுபடக்கூடியது. அதுபோலன்றி, இரண்டு பொருட்களுக்கு இடையே உள்ள நிலையான தொடர்பே சமவயம். இது இணைப்பால் அல்லாத, இயல்பான தொடர்பாகும். இது முழுமைக்கும் அதன் பகுதிக்கும் இடையே உள்ள தொடர்பே சமவயம் ஆகும். எடுத்துக்காட்டிற்கு ஆடைக்கும், அதன் நூலிழைகளுக்கும் இடையே உள்ள தொடர்பு போன்று. அதே போன்று ஒரு திரவியத்திற்கும் அதன் குணத்திற்கும், ஒரு திரவியத்திற்கும் அதன் செயலுக்கும் உள்ள தொடர்பு சமவயம் ஆகும்.

அபாவம்[தொகு]

அபாவம் என்பதற்கு இல்லாமை. ஒரு பொருள் அல்லது ஒரு விஷயம் இல்லாததே அபாவம். காலையில் காணப்படும் சூரியன் இரவில் காணப்படாமல் இருப்பது அபாவம். அபாவம் நால்வகைப்படும். 1. முன்பு இல்லாமை 2. பின்பு இல்லாமை 3. நெருக்கத்தால் இல்லாமை (தொலைவிலிருந்து பார்க்கப்படும் வயல்வெளியில் குறிப்பிட்ட தாவரத்தை பிரித்து அறிய இயலாமை). 5. முற்றிலும் இல்லாமை (முயல் கொம்பு)

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Padārtha, Jonardon Ganeri (2014), Stanford Encyclopedia of Philosophy
  2. Daniel Henry Holmes Ingalls (1951). Materials for the Study of Navya-nyāya Logic. Motilal Banarsidass. பக். 37–39. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-208-0384-8. https://books.google.com/books?id=ENvsAAAAIAAJ. 
  3. Ganeri, Jonardon. "Analytic Philosophy in Early Modern India". Stanford Encyclopedia of Philosophy. பார்க்கப்பட்ட நாள் 19 March 2018.
  4. Mishra, Umesh (1987). Conception of matter according to Nyayavaisesika. Delhi: Gian Publishing House. பக். 345–347. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதார்த்தம்&oldid=3913756" இலிருந்து மீள்விக்கப்பட்டது