விதுர நீதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மகாபாரத பாத்திரங்களில் அறிவுக்கும் விவேகத்துக்கும் இலக்கணமாகப் படைக்கப்பட்டவன் விதுரன். திருதராட்டிரன், பாண்டு ஆகியவர்களின் இளைய சகோதரன். பணிப்பெண்ணுக்குப் பிறந்தவன் என்பதனாலேயே அரச பதவிக்கு அருகதை அற்றவனாகி இருந்தாலும் அரச குடும்பத்தில் எல்லோருடைய மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவனாக இருந்தான். திருதராட்டிரன் தன்னுடைய குழப்பங்கள் எதுவாகினும் விதுரனைக் கலந்தாலோசிப்பது வழக்கம். (ஆனால் விதுரன் சொல்லும் நல்ல ஆலோசனைகள் எவற்றையும் திருதராட்டிரன் ஏற்று நடந்ததில்லை என்பதும் நிஜம்). அவ்வாறு ஓர் இரவு முழுவதும் திருதராட்டிரனுக்கு விதுரன் சொன்ன அறிவுரை நீதிகளின் தொகுப்பே விதுர நீதி எனப்படுவது.

மகாபாரதத்தில் பகவத் கீதை ஒருவகையான தத்துவ விளக்கம் என்றால் விதுரநீதி என்பது அரசியல் சமூக பொது நீதி மொழி எனலாம்.[1]

பாரதப் போருக்கான ஆயத்தங்கள்[தொகு]

பாண்டவர்கள் வனவாசத்தையும் அஞ்ஞாத வாசத்தையும் முடித்த பிறகும் துரியோதனன் அவர்களுடைய நாட்டினைத் திருப்பித் தர மறுத்ததனால் பாரதப் போர் நிகழ்வதென்பது தவிர்க்க இயலாத ஒன்றாக ஆகிவிட்டது. இரண்டு தரப்பினரும் தத்தமது ஆதரவாளர்களுடன் படை திரட்ட ஆரம்பித்தனர்.

சஞ்சையன் தூது[தொகு]

ஆனாலும் இருதரப்பினருக்கும் பொதுவான சிலர் போரினைத் தவிர்க்க தூது முயற்சிகளிலும் ஈடுபட்டனர். திருதராடிரனே இந்தப் போரினைத் தவிர்க்க எண்ணி தர்மபுத்திரனிடம் பேசிப் பார்க்கும் படி தன்னுடைய நம்பிக்கைக்குரிய சஞ்சையனை அனுப்பி இருந்தான்.

சஞ்சையன் பாண்டவர்களிடம் பேசிப் பார்த்து அவர்கள் தரப்பிலேயே நியாயம் இருப்பதை உனர்ந்து கொண்டு, பாரதப் போர் தவிர்க்க இயலாத ஒன்று என்பதனை உணர்ந்து கொண்டு திருதராட்டிரனிடம் திரும்பினான். அப்போது இரவாகி விட்டதால் அவனிடம் தூது நிகழ்ச்சிகளைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் வெறுமனே அவனைக் கடிந்து கொண்டு, மறுநாள் அரசவையில் மற்ற விவரங்களைச் சொல்வதாகக் கூறி விட்டு ஓய்வெடுக்கச் சென்று விட்டான்.

திருதராட்டிரன் குழப்பம்[தொகு]

சஞ்சையனுடைய கடும் வார்த்தைகள் அவனுடைய தூதின் விளைவினைப் பட்டவர்த்தனமாகக் காட்டி விட்டதால் குழப்பத்தில் இருந்த திருதராட்டிரனுக்கு உறக்கம் வரவில்லை. எனவே விதுரனை அழைத்து வரச் சொல்லி அவனிடம் தன் உறக்கமின்மையைச் சொல்லிப் புலம்பினான்.

“அரசே! வலிமை குன்றியும் யுத்த தளவாடங்கள் சரியில்லாத நிலையிலும் இருக்கும் போது வலிமை மிகுந்த எதிரியை எதிர்கொள்ள வேண்டிய நிலை வந்தால் உறக்கம் வராது. பொருளைப் பறி கொடுத்தவன், காதல் வயப்பட்டவன், பிறர் பொருளில் ஆசை வைத்தவன், திருடன் ஆகியோருக்கும் உறக்கம் சாத்தியமாவதில்லை. இதில் நீங்கள் எந்த வகையில் துன்பப்படுகிறீர்கள்?” என்று கேட்கும் ஆரம்பத்திலேயே விதுரனின் புத்திக் கூர்மை தெளிவாகத் தெரிகிறது.

விதுரநீதி[தொகு]

அவனுக்கு நேரடியாக விடை கூற முடியாத திருதராட்டிரன், “எதையாவது சொல். என் மன ஆறுதலுக்காகச் சொல். நீ நீதிவான். நீ சொல்லும் நியாய உரைகள் எப்போதுமே கேட்க நன்றாக இருக்கும்” என்று அவனை ஊக்கிப் பேச வைக்கிறான். அன்று இரவு முழுதும், விதுரன் அவனுக்குச் சொல்லும் நீதி உரைகளின் தொகுப்பே விதுர நீதியாகும்.[2]

இது மகாபாரதத்தில் சஞ்சையன் தூதுக்கு அடுத்த பகுதியாக உள்ளது. இது ஒரு வாழ்வியல் பாடம். மனிதன் எப்படி இருக்க வேண்டும்; எப்படி இருக்கக் கூடாது; என்ன செய்ய வேண்டும்; என்ன செய்யக் கூடாது என்பது போன்ற விளக்கங்கள் நிறைந்துள்ள நூல் இது.

எடுத்துக்காட்டு நீதி உரைகள்[தொகு]

 • பண்டிதன் என்பவன், தானாகப் போய் யாருக்கும் அறிவுரை சொல்ல மாட்டான்; பிறர் கேட்டல் மட்டுமே சொல்லுவான்.
 • பிறர் போற்றும் போது சந்தோஷமும் தூற்றும் போது துக்கமும் அடையாமல் இருப்பான்; தொலைந்து போனதை நினைத்து துக்கப்பட மாட்டான் பண்டிதன்.
 • அடங்கிப் போன பகையைத் தூண்டி வளர்க்கக் கூடாது.
 • வாக்கினை அடக்குவது மிகவும் கடினம். பொருட்செறிவுடனும் புதுமையாகவும் பேச வேண்டும். அதிகம் பேசுபவரால் இவ்வாறு பேச இயலாது;
 • பாணங்களால் ஏற்பட்ட புண் ஆறிவிடும் ஆனால் கொடிய வார்த்தைகள் கொண்டு சொல்லப்பட்ட நிந்தையாகிய புண் ஆறுவதே இல்லை.
 • இரவில் சுகமாகக் காலம் கழிக்க வேண்டும் என்றால் அதற்குத் தக்கவைகளைப் பகலிலேயே செய்து விட வேண்டும்; மழைக்காலத்தைச் சுகமாகக் கழிக்க வேண்டுமானால் மற்ற எட்டு மாதங்களில் உழைத்துச் சேகரித்து வைக்க வேண்டும்; முதுமையில் சுகவாசம் செய்ய வேண்டுமென்றால் இளமையிலேயே அதற்குத் தக்கவைகளைச் செய்து கொள்ள வேண்டும்.
 • அதிக அகந்தை, அதிகப் பேச்சு, பெரிய குற்றம், அதிக கோபம், தன்னை மட்டும் காப்பாற்றிக் கொள்ளும் ஆசை, நம்பிக்கைத் துரோகம் இழைப்பது ஆகிய ஆறும் மனிதனின் ஆயுளை வெட்டும் கூரிய கத்திகள்.

மேற்கோள்கள்[தொகு]

 1. http://www.omjai.org/omjai-docs/120-scriptures/420-mahabharata/3060-vidura-niti-mahabharata.pdf[தொடர்பிழந்த இணைப்பு]
 2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-06-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-06-28 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

குறிப்புதவி[தொகு]

 • மகாபாரதம்
 • விதுரநீதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=விதுர_நீதி&oldid=3228677" இருந்து மீள்விக்கப்பட்டது