காம சூத்திரம்
காம சூத்திரம் (Kama Sutra, வடமொழி: कामसूत्र), என்பது காமம் தொடர்பான ஒரு பண்டைய வடமொழி நூலாகும். இது வாத்சாயனர் என்பவரால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவர் கிபி முதலாம் நூற்றாண்டுக்கும் ஆறாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட ஒரு காலத்தில் வாழ்ந்தவர் ஆவார். காம சூத்திரம் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த நூலின் துவக்கத்தில், முதலில் நான்கு புருஷார்த்தங்கள் குறித்தும், பின்னர் அதன் முக்கியத்துவம் குறித்தும் கூறப்பட்டுள்ளது. இந்நூலில் அறம் (தர்மம்), பொருள் (அர்த்தம்) ஆகியவற்றுக்கு பிறகு காமம் என கூறப்பட்டுள்ளது[1]. எனினும் மேலை நாட்டவரின் தவறான மொழிபெயர்ப்பினாலும் மூலநூலில் இல்லாத பாலியல் சித்திரங்களை பின்னர் இணைத்ததனாலும் இந்நூல் பாலுறவு நிலைகள் பற்றியதாகவே பரவலாக அறியப்படுகிறது. பாலியல் தகவல்கள் நூலின் ஒரு பகுதியேயாகும். இரண்டாம் அத்தியாயம் மட்டுமே முழுவது பாலியல் தொடர்பான கருத்துகளைக் கூறுகிறது. காதல், பாலியல் கல்வி முதலிய பிற கருத்துகளும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.
காமசூத்திரம் என்ற நூல் காம சாஸ்திரத்தை சார்ந்து எழுதப்பட்ட நூல் ஆகும்[2]. இந்நூலின் படி, காம சாஸ்திரம், முதன் முதலில் சிவன் பார்வதியுடன் காமத்தை குறித்து பேசிக்கொண்டிருந்ததை, ஏதேச்சையாக கேட்க முற்பட்டார் நந்திதேவர். பிறகு மனித நலனுக்காக தான் கேட்டதை நந்தி தேவர் இதை ஒராயிரம் அத்தியாயங்களில் எழுதினார். இந்த சாஸ்திரம் பின்னர் பலராலும் சுருக்கி எழுதப்பட்டது. வாத்சாயனர் தான் மூல காம சாஸ்திரத்தின் ஒரு சிறு பகுதியையே விவரிப்பதாக நூலில் குறிப்பிட்டுள்ளார். அதன் சுலோகம் வருமாறு[3]
மஹாதேவானுசரஸ் ச நந்தீ சஹஸ்ரேத்யாயானாம் ப்ருடக் காமசூத்ரம் ப்ரோவாச
வரலாற்று ஆசிரியர்கள், காம சூத்திரம் தற்போதைய வடிவில் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் கருதுகின்றனர்.[4]
சொற்பிறப்பியல்
[தொகு]காம என்ற சொல்லுக்கு வடமொழியில் ஆசை, விருப்பம் மற்றும் இன்பம் என்று பொருள்[5] காமம் என்பதின் விளக்கம் காம சுத்திரத்தில் இவ்வாறாக குறிப்பிடப்பட்டுள்ளது[6].
ஸ்ரோத்ரதவக்சக்ஷுர்ஜிஹ்வாக்ராணானாம் ஆத்மசம்யுக்தேன மனசாதிஷ்டிதானாம் ஷ்வேஷு ஷ்வேஷு ஆனுகூல்யதாம் ப்ரவருத்திம் காமம்
காமம் என்பது ஐம்புலன்கள், மனம், ஆன்மா ஆகிய அனைத்தின் சங்கமத்தால் உணரக்கூடிய அனைத்து இன்பம் தருபவனவற்றையும் குறிக்கும்
சூத்திரம் என்பது வடமொழியில் நூலைக்குறிக்கும். எனவே காமத்தை குறித்த நூலுக்கு காமசூத்திரம் என்ற பெயர் வந்தது.
உள்ளடக்கம்
[தொகு]காமசூத்திரத்தில் 36 அத்தியாயங்கள் உள்ளன. இவை 7 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
அவ்வேழு பகுதிகள் பின்வருமாறு
- சாதாரணம்(முன்னுரை): இதில் தர்மம், அர்த்தம், காமம் குறித்த பொதுவான கருத்துக்கள், மற்றும் பாலியல் குறித்த சில கருத்துகளும் உள்ளன.
- சாம்பிரயோகிகம்(கலவி): இப்பகுதி வெவேறுவிதமான பாலியல் நிலைகள், பாலியல் செயல்கள் முதலியவற்றை விவரிக்கிறது. முழுக்க முழுக்க பாலியல் தொடர்பான கருத்துகளை விவரிப்பது இப்பகுதி மட்டுமே.
- கன்யாசம்பிரயுக்தகம்(மனைவியை தேர்ந்தெடுத்தல்): வெவ்வேறு விதமான திருமணங்கள், பெண்ணிடம் காதலை தெரிவிக்கும் முறைகள், அவளை மணக்கும் முறைகள், திருமணத்திற்கு பிறகான பாலியல் உறவு ஆகியவை தெரிவிக்கப்பட்டுள்ளன
- பார்யாதிகாரம்(மனைவி அதிகாரம்): இப்பகுதி, மனைவியின் நடத்தை விதிமுறைகள் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் இருப்பின் மூத்த மனைவி மற்றும் பிற மனைவியரின் செயல்பாடுகள் ஆகியவை உள்ளன
- பாராதாரிகம்(பிற மனைவியர் குறித்து):பிற மனைவியரின் நடத்தை விதிமுறைகள் குறித்த விபரங்கள் உள்ளன.
- வைசிகம்(வேசிகளை குறித்து): காமக்கிழத்தியரின் செயல்பாடுகள், மனைவியாக காமக்கிழத்தியரின் செயல், முன்னால் காதலுருடன் இணையும் வழிகள் முதலியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
- ஔபமிஷாதிகம்(மருத்துவ அதிகாரம்): இதில் உடற்கவர்ச்சியினை கூட்டுவதற்கான மருத்துவ முறைகள், ஆண்மையை மீண்டும் பெறும் வழிகள் போன்றவை உள்ளன.
சாதாரணம்
[தொகு]இது காம சூத்திரத்தின் முதல் பகுதியாகும். காம சூத்திரத்தில் முதல் வாக்கியம்
தர்மார்த்த காமேப்யோ நம
அறம் பொருள் இன்பமே போற்றி
இந்த அத்தியாயத்தின் பகுதிகள்:
- சாஸ்திர சங்கிரஹ - முன்னுரை
- திரிவர்கபிரதிபத்தி - மூன்று புருஷார்த்தங்களை அடைதல்
- வித்தியாமுத்தேஷ - கற்க வேண்டிய கல்விகள்
- நாகரகவிருத்தம் - குடிமகன் நுகர வேண்டிய இன்பங்கள்
- நாயக சஹாய தூதி கர்ம விமர்ச - கூடலுக்குரிய மற்றும் விலக்க வேண்டிய பெண்கள், நண்பர்கள் மற்றும் தூதர்கள்
முதலில் பகுதியில் நான்கு புருஷார்ந்தங்களும் முதன் முதலில் எவ்வாறு மனித குலத்துக்கும் உபதேசிக்கப்பட்டன என கூறப்பட்டுள்ளது. தர்மம் சுயம்பு மனுவாலும், அர்த்தம், பிருகஸ்பதியாலும் காமம் நந்திதேவராலும் உபதேசிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சில நூல்கள் கிடைக்காததாலும், சில மிகப்பெரியதாக இருப்பதால் கற்க கடினமாக உள்ளதாலும், முன்பு கூறப்பட்டவர்களால் விரித்தும் சுருக்கியும் எழுதப்பட்ட காம சாஸ்திரங்களில் சாரமாக மிகச்சிறு பகுதியையே தான் விவரிப்பதாக வாத்ஸாயனார் குறிப்பிடுகிறார். பின்னர், அத்தியாயங்களின் சுருக்கம் விவரிக்கப்படுகிறது. இரண்டாம் பகுதியில் புருஷார்த்தங்களை விளக்கி அவற்றை கற்றுக்கொள்ளும் முறை விளக்கப்படுகிறது. பொதுவாக தர்மம் அர்தத்தை விடவும், அர்த்தம் காமத்தை விட சிறந்தவை என்றும், எனினும் விதிவிலக்காக அரசனுக்கு அர்த்தமும் வரைவின் மகளிர்க்கு காமமும் முக்கியம் என கூறப்பட்டுள்ளது. பின்வரும் சுலோகம் இதை விவரிக்கிறது.
அர்த்தஸ்ச ச ராஜ்ஞ தன்மூலத்வால் லோகாயாத்ராயா வேசியாஸ் சேதி திரிவர்கப்ரதிபத்தி
பிறகு, கேள்வி-பதில் முறையில் காமத்துடன் தொடர்புடைய பல்வேறு ஐயங்கள் விளக்கப்படுகின்றன.
மூன்றாம் பகுதியில் ஆயக்கலைகள் 62ஐயும் பட்டியலிட்டு காம சூத்திரத்துடன் இவற்றையும் அறிந்துகொள்ள வேண்டும் எனக் கூறுகிறார். ஆயக்கலைகள் 62ஐயும் கற்றுக்கொண்டால் விரும்பிய துணையை எளிதாக அடையலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கடுத்த நான்காம் பகுதியில் ஒரு குடிமகன் எவ்வாறெல்லாம் இன்பங்களை நுகர வேண்டும் என்பது விளக்கப்பட்டுள்ளது. கடைசி பகுதியில் எவ்வகை மகளிருடன் கலவி கொள்ளலாம் எவ்வகையினருடன் கொள்ளக்கூடாது ஆகியவையும் எவரெவரை நண்பர்களாகவும் தூதர்களாகவும் கொள்ளமுடியும் என்பதுவும் கூறப்பட்டுள்ளன.
சாம்பிரயோகிகம்
[தொகு]இந்த அத்தியாயம் கலவி (உடற்புணர்ச்சி) ஒழுக்கத்தை குறித்து விளம்புகிறது. இந்த அத்தியாயம் பத்து பகுதிகளைக் கொண்டுள்ளது அவையாவன்
- பிரமாண கால பவேப்யோ ரத அவஸ்தாபனம் - கலவி வகைகள்
- ஆலின்கனவிசார - ஆலிங்கனம் செய்தல்
- சும்பன விகல்பாஸ் - முத்தமிடுதல்
- நகங்களை பயன்படுத்துதல்
- தசன சேதவிஹயோ - கடித்தல் மற்றும் பிற தேசத்தாருடன் உறவு கொள்ளுதல்
- சம்வேஷன பிரகாராஷ் சித்ரரதானி - பல்வேறு பாலுறவு நிலைகள்
- பிரஹணன பிரயோகாஸ் தத்யுக்தாஷ்ச சித்கிருதகிருமா - அடித்தல் மற்றும் ஒலி எழுப்புதல்
- புருஷோ பாசிருப்தானி புருஷாதியம் - ஆண் போல் செயல்படும் பெண்கள்
- ஔபரிஷ்டகம் நவமோ - வாய்வழிப் பாலுறவு
- ரத ஆரம்ப அவசானிகம் விசேஷ பிரணயகலஷ் ச - பாலுறவு நிலைகளை துவங்குதல் மற்றும் நிறைவுசெய்தல்
கன்யாசம்பிரயுக்தகம்
[தொகு]அத்தியாயத்தின் பகுதிகள்,
- வரண சம்விதானம் சம்பந்தநிச்சய ச - திருமணம் நிச்சயித்தல்
- கன்யா விஸ்ரம்பானம் - பெண்ணிடம் நம்பிக்கை வளர்த்தல்
- பாலாயாம் உபகிரமா இங்கித கார சூசனம் ச
- ஏகபுருஷாபியோக - ஆண்கள் மட்டும் செய்யக்கூடியது
- திருமண வகைகள்
காமத்தின் முக்கியத்துவம்
[தொகு]இந்து மதத்தில், காமம் வாழ்வில் அடைய நான்கு கருத்துகளுள் காமமும் இணைக்கப்பட்டுள்ளது (நான்கு புருஷார்த்தங்க்கள்:தர்மம், அர்த்தம், காமம், மோட்சம்). புருஷார்த்தங்கள் வாழக்கையில் ஒருவர் அடைய வேண்டிய நான்கு குறிக்கோள்கள் ஆகும்.
மக்கள் காமத்தை எவ்வாறு பாவிக்க வேண்டும் என்பது காம சூத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது[7]
ஷாதாயுர் வை புருஷோ விபஜய காலம் அன்யோன்யானுபத்தாம் பரஸ்பரசஸ்யானுபகாடகம் த்ரிவர்கம் சேவேத
பால்யே வித்யாக்ரஹணாடின் அர்தான்
காமம் ச யௌவனே
ஸ்தாவிர தர்மம் மோக்ஷம் ச
ஒரு மனிதன் இப்புருஷார்த்தங்களை வெவ்வேறுவிதமாக தங்களுடைய வெவ்வேறு காலகட்டத்தில் பாவிக்க வேண்டும்.குழந்தைப் பருவத்தில் கல்வி மற்றும் பொருள்
இளைமைப்பருவத்தில் காமம்
முதுமைப்பருவத்தில் தர்மம் மற்றும் மோட்சம்
மேலும் தர்மம் அனைத்தையும் விட சிறந்தது என காம சூத்திரம் விளம்புகிறது
பாலியல் கல்வி
[தொகு]காமசூத்திரத்தின் முதல் அத்தியாயத்திலேயே, காமத்தை அதற்குகந்த காம சாஸ்திரத்தைக்கொண்டே கற்கவேண்டும் என வாத்ஸ்யாயனார் வலியுறுத்துகிறார். இதை கீழ்க்கண்ட சுலோகத்தின் மூலமாக அவர் கூறுகிறார்.
ஸா சோபாயபிரதிபத்தி காமசூத்திராத் இதி வாத்ஸ்யாயன
மேலும் காம சாஸ்திரத்தை மற்ற எல்லாவற்றையும் போலவே அனுபவத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடியுமென்றாலும் அதை முறையாக கற்பது அவசியம் என வாத்ஸாயனார் குறிப்பிடுகிறார்.
வித்தியாமுத்தேஷம் என்ற பகுதியில், வாத்சாயனார் காம சாஸ்திரத்தை கற்க வேண்டியதன் அவசியம் குறித்துக் கூறுகிறார்.
காமம் குறித்த கல்வியினை மற்ற கல்விகளைப்போல அனைவரும் கற்க வேண்டும் எனக்கூறும் வாத்சாயனர், காம சாஸ்திரம் பெண்களும் கற்க வேண்டுமென வலியுறுத்துகிறார். திருமணமான பின்பும் பெண்கள் தங்கள் கணவனின் அனுமதியுடன் காமக்கல்வி கற்கலாம் எனக்கூறியுள்ளார்.
தர்மார்தாங்கவித்யாகாலான் அனுபரோத்யான் காமசூத்ரம் ததாங்கவித்யாஸ் ச புருஷோ தீயீத
ப்ரக்-யௌவனாத் ஸ்த்ரீ ப்ரத்த ச பத்யுர் அபிப்ராயாத்
மேற்குறிப்பிடப்பட்டுள்ள சுலோகங்கள் இக்கருத்தை வலியுறுத்துகின்றன
தற்பால்சேர்க்கை
[தொகு]இந்தியாவில் பண்டைக்காலத்திலேயே தற்பால்சேர்க்கை இருந்ததற்கான ஆதாரம் காம சூத்திரத்தில் காணப்படுகிறது. வாய்வழிப் பாலுறவு நிலைகளை விளக்கும் காம சூத்திரத்தின் இரண்டாம் அதிகாரம் ஒன்பதாவது அத்தியாயத்தில் இவ்வாறான செயல்பாடுகள் குறிப்பிடப்படுகின்றன. அதில் இவ்வாறான வாய்வழிப்பாலுறவை ஆண் பணியாட்களுடன் அவர்கள் முதலாளிகளும், மிகுந்த அன்யோன்யம் உடைய மனிதர்கள் தங்களுக்குள்ளும், பெண்கள் பிற பெண்களுடன் செய்து கொள்வதாக கூறப்பட்டுள்ளது.
மொழி பெயர்ப்புகள்
[தொகு]வாத்சாயனர் எழுதிய காமசூத்திரம் எனும் சிற்றின்பக் கலையை விளக்கும் நூலை, தூனிசியா நாட்டின் ஷேக் நெஃப்சவோய் என்பவர் 15-ஆம் நூற்றாண்டில் அரபு மொழியில் நறுமணம் வீசும் பூந்தோட்டம் எனும் தலைப்பில் மொழி பெயர்த்தார். 1883ல் சர் ரிச்சர்ட் பர்ட்டன் என்பவர், இந்நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து The Perfumed Garden எனப் பெயரிட்டார். (அரபி மூலத்திலிருந்து பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட நூலை, சர் ரிச்சர்ட் பர்ட்டன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்).[8]
இன்னொரு மொழி பெயர்ப்பு, இந்திர சின்ஹாவால் 1980இல் வெளியிடப்பட்டது. 1990களில் இந்நூலின் பாலியல் சம்மந்தமாக பகுதிகள் மட்டும் பெருமளவு புழக்கத்தில் இருந்ததால், இன்றும் கூட பலர் அது மட்டுமே காம சூத்திரம் என நம்புகின்றனர்.[9]
ஆலாய் டேனியேலோ என்பவர் முழுமையான காம சூத்திரம் என்று மூல உரையுடன் இணைந்த மொழிபெயர்ப்பை 1994இல் வெளியிட்டார்.
2002இல் இப்புத்தகம் வெண்டி டோனிகர் என்ற பேராசிரியராலும் சுதி காகர் என்ற மனோவியல் நிபுணராலும் மனோரீதியான கண்ணோட்டத்துடன் மொழிபெயர்க்கப்பட்டது.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ காமசூத்திரம் முதல் பகுதி
- ↑ காம சாஸ்திரங்களில் முக்கியமானது காம சூத்திரம் காண்க: Flood (1996), பக்கம். 65.
- ↑ காம சூத்திரம் முதல் அத்தியாயம்.8வது சுலோகம்
- ↑ காம சூத்திரம் இயற்றப்பட்ட காலம், காண்க: Keay, pp. 81, 103.
- ↑ MW சமஸ்கிருத மின் அகராதி
- ↑ காம சூத்திரம். இரண்டாம் அத்தியாயம் 11ஆம் சுலோகம்
- ↑ காம சூத்திரம், முதல் அத்தியாயம், சுலோகம் 2-5
- ↑ பழங்கால அரபு மொழியின் காமசூத்திரம்
- ↑ Sinha, p. 33.
வெளி இணைப்புகள்
[தொகு]- மின்னூல்கள்
- காம சூத்திரத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு, pdf வடிவம் (Portable Document File)
- காம சூத்திரம் மூல நூல்